தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

புதுவை சரவணன்


காரைக்குடியில் தனது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் வள்ளல் அழகப்ப செட்டியார். வள்ளல் அழகப்ப செட்டியார் ஒரு முறை சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ரயில்வே கேட்டில் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்போது அங்கு நுங்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டியிடம் நூறு ருபாய் நோட்டைக் கொடுத்து நுங்கு வாங்கினார். 100 ருபாய் நோட்டை பெற்றுக்கொண்ட மூதாட்டி ஐயா நீங்ககள் ஒரு ருபாய்க்கு தான் நுங்கு வாங்கினீர்கள். நான் 100 ருபாய் நோட்டையே பார்த்ததில்லை. சில்லைறைக்கு நான் எங்கே போவேன் என்று அலுத்துக்கொண்டாள். வள்ளல் அழகப்பச் செட்டியாரோ அம்மா நான் உங்களிடம் சில்லறை கேட்கவில்லையே 100 ருபாயையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே அந்த மூதாட்டி தன்னிடமிருந்த ருபாய் 30 மதிப்புள்ள நுங்கை ரயில்வே கேட்டில் காத்திருந்த மற்ற பயணிகளுக்கு இலவசமாக வழங்கினாள். இதனைக் கண்ட வள்ளல் அழகப்ப செட்டியார் இது பற்றி அந்த மூதாட்டியிடம் கேட்டதற்கு தர்மத்தை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிலளித்தாராம்.

பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதிகை தொலைக்காட்சியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றி ஒளிபரப்பான செய்திப்படத்தில் இந்த சம்பவத்தை ஒருவர் கூறினார். சமீபத்தில் என்னுடைய நண்பர் செல்வி சசிகலா தேவியை சந்தித்தபோது பேச்சுவாக்கில் இந்த சம்பவத்தை கூறினேன். செல்வி சசிகலா தேவி பெங்களூரில் மாதம் பல்லாயிரம் சம்பளம் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். அவருக்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்காது என்று நான் நினைத்தேன். ஆனாலும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் அவரை இரண்டு மாதங்களுக்கு பிறகு நான் சந்திப்பதால் ஏதாவது புதிதாக செல்ல வேண்டுமே என்பதற்காக இந்த சம்பவத்தை சொன்னேன். நான் இந்த சம்பவத்தை சொன்னதும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா ? என்று கேட்டுவிட்டு அவர்கள் பற்றிய பல சுவையான தகவல்களை கூற ஆரம்பித்தார். செல்வி சசிகலா தேவி என்னுடன் பகிர்ந்து கொண்ட நகரத்தார் வரலாற்றை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இயற்கையாக எழுந்த ஆவலில் இதை எழுதுகிறேன்.

நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ஆரம்பத்தில் தொண்டை மண்டலத்தில் வசித்தவர்கள். தொண்டை மண்டல மன்னர்களின் கொடுமை தாங்காமல் அவர்கள் சோழநாட்டின் துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தில்( பூம்புகார்) குடியேறினார்கள். பூம்புகாரில் நகரத்தார்கள் பெரு வணிகம் செய்து சீரும் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த சமயத்தில் சோழ மன்னன் வழி வந்த ஒரு மன்னன் நகரத்தார் வீட்டு பெண்களை மானபங்கம் செய்து கொடுமை படுத்தினான்.

தம்குல பெண்கள் சோழ மன்னனால் மானபங்கம் செய்யப்படுவதை சகிக்க முடியாமல் வேதனையில் வெந்த நகரத்தார்கள் தங்கள் ஆண் பிள்ளைகளைகளையும், சொத்துக்களையும் அவர்களின் குலகுருவாக இருந்த ஆத்ம சாஸ்திரியாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்ற அனைவரும் தீக்குளித்து மாண்டனர். அந்த காலகட்டத்தில் சுமார் 8000 நகரத்தார் குடும்பங்கள் இருந்தன. ஆத்ம சாஸ்திரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1502 நகரத்தார் ஆண் குழந்தைகளைத் தவிர மற்ற அனைத்து நகரத்தார்களும் தீக்குளித்து உயிர் துறந்தனர். இந்த 1502 குழந்தைகளும் ஆத்ம சாஸ்திரியாரிடம் வளர்ந்தனர்.

அக்காலத்தில் சோழ மன்னனுக்கு முடி சூட்டும் உரிமை நகரத்தாருக்கு மட்டுமே இருந்தது. நகரத்தார் தம்பதியுடன் வந்துதான் மன்னனுக்கு முடி சூட்ட வேண்டும். ஒரு கால கட்டத்தில் இராஜபூவிணன் என்ற சோழ மன்னனுக்கு முடி சூட்ட வேண்டிய காலம் வந்தது. ஆனால் முடி சூட்ட வேண்டிய நகரத்தார் பிள்ளைகள் வாலிப வயதை அடைந்தும் திருமணம் ஆகாமல் இருந்ததனர். இதனால் மன்னன் முடி சூட முடியாத ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. நகரத்தார் ஆண்களுக்கு திருமணம் நடக்க வேண்டும். ஆனால் நகரத்தார் பெண் குலமே அழிந்து போன நிலையில் இது எப்படி சாத்தியப்படும் ? அக்காலத்தில் கலப்பு திருமணங்கள் சாத்தியமில்லாத ஒன்று.

மன்னன் இந்த சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஈசானிய சிவாச்சாரியார் என்ற குருவிடமும் மற்ற சான்றோர்களையும் கேட்டுக்கொண்டார். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சாஸ்திரங்களையும், நீதி நூல்களையும் ஆராய்ந்தனர். அதன்படி நீதி வழுவாத, கொடுத்த வாக்கை காப்பாற்றும் பண்பு கொண்ட நகரத்தார் குல ஆண்கள் அதே பண்புகள் கொண்ட வேளாளர் குல பெண்களை மணந்து கொள்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தனர். இதன்படி கார்காத்த வேளாளர், சோழிய வேளாளர், காணியாளன் வேளாளர்(இப்போது ஆறுநாட்டு வேளாளர் என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர்) ஆகிய வேளாளர் குல பெண்களை நகரத்தார் ஆண்கள் திருமனம் செய்து கொண்டனர். பெண்களே இல்லாத நகரத்தார் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தவர்கள் இந்த வேளாளர் குல பெண்கள்தான். காவிரி பூம்பட்டினத்தில் வசித்து வந்த நகரத்தார்கள் சுனாமி போன்ற இயற்கை சீற்ரங்களினால் பாதிக்கப்பட்டு மேட்டுப்பகுதியான காரைக்குடியில் குடியேறி இருக்கிறார்கள்.

இந்த தகவல்களை செல்வி சசிகலா தேவி அ.ஷோத்ரி சர்மா எழுதிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, மா. இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு, சி.கே.சுப்பிரமணிய முதலியார் எழுதிய திருத்தொண்டர் புராணம்விரிவுரை, இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபை கட்டிட திறப்பு விழா மலர் 2001 போன்ற பல புத்தகங்களை படித்து தெரிந்து வைத்திருக்கிறார். தமிழகத்தின் மைய மாவட்டமான திருச்சி மாவட்டத்தின் சில கிராமங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி என்ற கிராமத்திலும், அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலுமாக மொத்தம் 70 ஆயிரம் நபர்களைக் கொண்ட ஆறுநாட்டு வேளாளர் சமுதாயத்தை பற்றிய அதிகமான தகவல்களை செல்வி சசிகலா தேவி என்னிடம் விரிவாக கூறினார். அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் தங்களை 36கோத்திரங்களாக(பிரிவுகள்) பிரித்துக்கொண்டு அவர்கள் பின்பற்றும் நடைமுறைகள் நமக்கு வியப்பைத் தருகின்றன. இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்து கொள்வதில்லை. இது போன்ற பல தகவல்களோடு அடுத்த முறை எழுதலாம் என்று இருக்கிறேன். இந்த கட்டுரைக்கு தேவையான தகவல்களை ஆர்வமுடன் படித்து எனக்கு சொல்லிய சாப்ட்வேர் இன்ஜினியரான எனது நண்பர் செல்வி சசிகலா தேவிக்கு நன்றி!

—-

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்