வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

மத்தளராயன்


‘வணக்கம் சார் ‘

‘சொல்லுங்க. ‘

‘இலக்கியக் கூட்டம் வச்சிருக்கோம். ‘

‘யார் ‘

சொன்னேன். யார் பேசப் போகிறார்கள். என்றைக்கு. எந்த இடத்தில். எத்தனை மணிக்கு.

தொடர்ந்து எல்லாம் சொல்லியானது.

‘நீங்களும் அவசியம் கலந்துக்கிட்டா நல்லா இருக்கும் ‘.

வரேன் என்றோ வர இயலாது என்றோ பதிலும், ஒரு நன்றியுமாக வழக்கம்போல் இந்தத் தொலைபேசி உரையாடலும் முடிந்திருந்திருக்கலாம்.

அப்படி இல்லை என்று விதிக்கப்பட்டிருந்தது.

‘இப்ப என்ன எல்லாம் எழுதறீங்க ? ‘

இது அறியா வினாவா அல்லது அறிந்த வினாவா என்று தெரியாவிட்டாலும், தொப்பியைக் கழற்றி பிரிட்டாஷ் ராஜாங்க காலத்து மேசையில் வைத்துவிட்டு கையில் லாட்டிக் கம்பை உருட்டிக் கொண்டு விசாரிக்கும் வயசான போலீஸ் கான்ஸ்டேபிள் குரலில் தட்டுப்பட்டார்.

பொறுமையாகப் பதில் சொன்னேன்.

‘அப்ப என்னைத் திட்டி ஒண்ணுமே எழுதலீங்கறீங்களா ? ‘

சோட்டாணிக்கர பகவதியம்மே, எந்தா ப்ராந்தோ எனிக்கு ?

‘நான் எதுக்கு சார் உங்களைத் திட்டணும் ? ‘

புரியாமல் கேட்டேன்.

‘இப்ப நீங்க எங்கல்லாம் எழுதறீங்க ? ‘

பட்டியல் சொன்னேன்.

கடைசியாகத் திண்ணை பெயரைக் கேட்டவுடன் அவர் குரலில் மகிழ்ச்சியும் மேலதிகக் கண்டிப்பும் தென்படத் தொடர்ந்தார்.

‘அங்கே என்ன பெயர்லே எழுதறீங்க ? ‘

இந்த விளையாட்டு போர் அடித்து விட்டது எனக்கு. நேரடியாக விஷயத்து க்கு வந்தால் என்ன இவர் ?

ஆனாலும் சொன்னேன்.

‘ஆ.. அதான்.. என்னமோ நான் சோ பத்திப் பேசிட்டிருந்தேன். எல்லாரும் எழுந்து போய்ப் போண்டா சாப்பிடக் கிளம்பிட்டாங்க ‘ன்னு அங்கே எழுதினீங்களா இல்லியா ?

இது நிஜமான மொட்டைத்தலை – முழங்கால் அல்லது உள்ளங்கை போண்டா விவகாரம்.

நான் அண்மையில் போன இலக்கியக் கூட்டத்தில் தொடக்க உரையாக இவர் பேசியதில் ஆரம்பித்து, வேறு யாரெல்லாமோ அப்புறம் வரிசையாகப் பேசிக் கொண்டிருக்கக் காராபூந்தி மெல்லும் இரைச்சலில் ஏதும் காதில் விழவில்லை என்று தொடர்ந்து, இலக்கிய விழாவில் சிற்றுண்டி வ்ிநியோகம் நடத்திக் கவனத்தைச் சிதறச் செய்ததை விமர்சித்து முடித்திருந்த ‘வாரபலன் ‘ கட்டுரையை நானே மறந்து போய்விட்டேன்.

அதை யாரோ சிரத்தையாக இவரிடம் தலையையும் வாலையும் மட்டும் ஒட்ட வைத்து நடுவில் இருக்கும் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக நீக்கி விட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

‘ஏன் என்மீது விஷத்தைப் பொழிகிறாய் ? ‘ என்றார் சடாரென்று ஆங்கிலத்துக்குத் தாவி.

விஷம் என்ற பெயரில் நான் ஒரு காலத்தில் கணையாழியில் குறு நாவல் எழுதியிருக்கிறேன். அந்த வருஷம் பரிசு பெற்ற குறுநாவல் எல்லாமே பெயர் விஷயத்தில் ஒற்றுமை கொண்டவை (நண்பர் ஜெயமோகனின் ‘சவுக்கு ‘ மட்டும் நினைவு இருக்கிறது அவற்றில்). மற்றப்படி விஷத்தைப் பொழிய, குறைந்த பட்சம் ஸ்ப்ரே செய்யக்கூட என்னிடம் உபகரணம் எதுவும் இல்லை.

‘நீங்க நான் என்ன எழுதினேன்னு படிச்சீங்களா சார் ? ‘

‘இல்லே, யாரோ வந்து சொன்னார்கள். ஆமா, ஏன் என்மீது விஷத்தைப் பொழிகிறாய் ? ‘

‘நீங்க படிக்காமே எப்படி சார் நான் எழுதினதைப் பத்திக் கருத்துச் சொல்ல முடியும் ? ‘

இலக்கியப் பத்திரிகை என்றால் தேடி எடுத்து ஜெராக்ஸ் எடுத்து நாலாக மடித்துக் கவரில் போட்டு அனுப்பி வைக்கலாம். திண்ணை இணையப் பத்திரிகை.

‘இல்லை. ஆனால், நீ என்மீது விஷத்தைப் பொழிந்திருக்கிறாய் ‘.

‘சார் நீங்க நாளைக்கு நடக்கப் போற விழாவுக்கு வாங்க. நான் திண்ணையிலே வந்ததை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வரேன். நீங்களே படிச்சுப் பாத்துட்டுச் சொல்லுங்க ‘.

‘பாக்கலாம். ஆமா, ஏன் மீது விஷ ‘

ஜனகராஜ் (என்ன ஆச்சு அவருக்கு ? அற்புதமான குணச்சித்திர நடிகர் இல்லையா ?) படத்தில் வரும் ‘தங்காச்சியை நாய் கடிச்சுடுச்சு ‘ நினைவுக்கு வர சிரிப்போடு தொலைபேசியை வைத்தேன்.

‘தெலுங்குக் கவிஞர்கள் தங்களைப் படு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள் ‘ என்று வந்த இலக்கிய விமர்சனத்தை இரண்டு வாரம் முன்னால் இந்தப் பகுதியில் மேற்கோள் காட்டியிருந்தேன்.

நம் இலக்கிய விமர்சகர்களைப் பற்றி எல்லாம் இப்படி யாரும் நாக்கின் மேல் பல்லுப்போட்டுச் சொல்ல முடியாது. சொல்லவும் வேண்டாம். இவர்கள் இடதுசாரியாக இருந்து விட்டுப் போகட்டும். இல்லை, வலதுசாரியாக இருந்தால்தான் நமக்கு என்ன ? பேசாமல் ஒதுங்கிப் போவதே நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், அடுத்த மாதம் இன்னொரு இலக்கியக் கூட்டம் வரும். எல்லோரையும் அழைக்க வேண்டி இருக்கும். அதற்குள் இதையும் வெட்டி ஒட்டிப் போட்டுக் கொடுத்திருப்பார்கள் (ஆஹா, வாரபலனால் பிரயோஜனம் இல்லை, நிறுத்தி விடலாம் என்று நினைத்தது தப்பாப் போச்சே!).

‘வணக்கம் சார், இலக்கியக் கூட்டம் வச்சிருக்கேன் ‘.

‘அது இருக்கட்டும். இவரு வலம் போனா என்ன, இடம் போனா என்னன்னு என்னைப் பத்தி எழுதியிருந்தியா ? ‘

******************************************************************************

******************************************************************************

‘புலிநகக் கொன்றை ‘ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணனோடு ஒரு இலக்கியச் சந்திப்பு.

திருவான்மியூரில் ஸ்ரீராம் நகர் முதல் குறுக்குத் தெருவுக்கு வந்துவிடுங்கள் என்று நண்பர்களிடம் தொலைபேசியபோது, ‘இடத்தைச் சரியாச் சொல்லு ‘ என்றார்கள் எல்லோரும்.

இத்தனை வருடம் சென்னையில் இருந்தாலும், இந்த விஷயத்தில் (இதில் மட்டும்தானா ?) நான் ஞான சூனியம். லண்டனும் பாங்காக்கும் தான் எனக்குச் சுமாராகத் தெரிந்த நகரங்கள் என்றால் நீங்க நம்பப் போவதில்லை – ‘போய்யா பெரிய பிஸ்தா ‘.

ஆர்தர் கானண்டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸுக்குப் பத்தொன்பதாவது நூற்றாண்டு லண்டன் மாநகரத்தின் மூலை, முடுக்கு, சந்து பொந்தெல்லாம் தெரியும் என்பது போல், கடந்த ஐம்பது வருட சென்னையை முழுக்க அறிந்தவர்கள் எனக்குத் தெரிந்து மூன்று பேர் – மதராஸ் மிசல்லெனி முத்தையா, ராண்டார்கை மற்றும் அசோகமித்திரன்.

இலக்கியக் கூட்டம். அதுவும் எல்லோருக்கும் நண்பரான பி.ஏ.கிருஷ்ணனோடு சந்திப்பு என்பதால் இந்த மூவரில் அசோகமித்திரனுக்குத் தொலைபேச, அவரால் வர இயலாது என்று தெரிந்தது. கொஞ்சம் ஆர்வக் கோளாறோடு இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களான நானும், நண்பர்கள் வெங்கடேஷும் பா.ராகவனும் இன்னார் வரக்கூடும் என்ற பட்டியலை முன்கூட்டியே ஒப்பித்ததிற்கும் இதற்கும் தொடர்பில்லைதான்.

‘தனியாக திருவான்மியூர் வரைக்கும் போய்த் திரும்ப சிரமம் ‘ என்றார் இந்திரா பார்த்தசாரதி.

‘நான் கூட்டிட்டுப் போறேன் சார் ‘ என்று சொல்லி ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் அவர் வீட்டுக்குப் போனேன். மகாத்மா காந்தி விஜயம் செய்த, மாதாமாதம் இலக்கியச் சிந்தனைக் கூட்டம் நடக்கிற,சுஜாதாவின் எழுத்தால் பிரபலமான தெரு இது ( ‘அன்றாடம் சென்னைத் தெருக்களில் பள்ளம் தோண்டி வேலை செய்யும் மாநில, மத்திய அரசுத் துறை எதிலாவது ஒரு நாள் வேலை இல்லாமல் இருந்தால், உடனே போய் அம்புஜம்மா தெருவிலே தோண்டுங்கய்யா என்று உத்தரவு போட்டு அனுப்புவார்கள் ‘).

சுஜாதா தற்போது அங்கே இல்லை. தெருக் கோடி வீட்டில் கணையாழி கஸ்தூரிரங்கனும் அங்கே இல்லை. அவர் வீட்டில் காந்தி பாதம் பட்ட இடத்தில் அதைப் பதித்து மண்டபம் எழுப்பிக் காந்தி சிலை வைத்திருந்ததும் காணாமல் போய் அங்கே மிலிட்டரி ஓட்டல் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அம்புஜம்மாள் தெரு வழக்கம் போலவே குண்டும் குழியும், அதில் முந்தின நாள் அதிகாலை மழைத் தண்ணீருமாக அப்படியே இருக்கிறது. சென்னையில் மழைநீர் சேகரிப்பில் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு போக சகல தகுதியும் வாய்ந்த தெருவாக்கும் அது.

இ.பாவோடு காரில் திருவான்மியூர் போய்க்கொண்டிருந்தபோது, அவருக்கு அமெரிக்காவில் சிகாகோ விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். வெள்ளை அல்லாத தோலைப் பார்த்தால் அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பயமும் அதிஜாக்கிரதை உணர்வும் இன்னும் நீங்கவில்லை என்று புரிந்தது.

‘என்னை ஏன் குற்றவாளி போல் நிறுத்திக் கேள்வி கேட்கிறாய்(Why do you treat me like a convict on parole) ? ‘ என்று அவர் அமைதியான ஆங்கிலத்தில் கேட்க, இமிகிரேஷன் பெண்மணி அவர் சொன்னதில் கான்விக்ட் என்பதை மட்டும் கிரகித்து இன்னும் நாலு அதிகாரிகளைக் கொண்டு வந்து நிறுத்தியதை சுவாரசியமாக எடுத்துச் சொன்னார். செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிராணிகளைப் போல், செப்டம்பர் பதினொன்று பீதியும், புஷ் அரசின் பூச்சாண்டி வரான் பயமுறுத்தல்களும் சராசரி அமெரிக்கக் குடிமக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

பின் லாடனுக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் வித்தியாசம் என்னெல்லாம் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி மெனக்கெடுவதை விடப் போண்டா விநியோகிக்கப்படும் இலக்கியக் கூட்டத்துக்குப் போய் அதைப் பற்றி இங்கே ரிப்போர்ட் எழுதலாம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கத் தற்காப்பு குறித்த பேச்சு, இந்த வாரம் ரத்தப் புற்றுநோயால் காலமான பாலஸ்தீனியரும் அமெரிக்காவை வசிப்படமாகக் கொண்டவருமான இலக்கிய விமர்சகர் எட்வர்ட் சையத் பற்றித் திரும்பியது. சியோனிச எதிர்ப்பாளரும், அதே நேரத்தில் யாசர் அராபத்தின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டவருமான சையத் தான் பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையேயான ஓஸ்லோ சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அடிகோலியவர். அந்தப் பேச்சுவார்த்தை சியோனிச ஆதரவுத் தளத்திலேயே இஸ்ரேலுக்குப் பட்சமாக முன்னேற அதைக் கடுமையாக விமர்சித்தவரும் அவர்தான்.

எட்வர்ட் சையட் பற்றிக் கிட்டத்தட்ட முழுப்பக்கம் இந்து பத்திரிகை எழுதியதை சிலாகித்த இ.பாவிடம், இது ராம் அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டதன் விளைவா என்று கேட்க நினைத்தேன்.

ஆனாலும், நூற்று இருபத்தைந்து வருட வரலாறு கொண்ட இந்து சென்னையில் இருந்தும் தமிழ் இலக்கியத்தைக் கண்டுகொள்வதே இல்லை என்ற குறைச்சலை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

இந்து ராம் விரைவில் ஆவன செய்ய முயற்சி எடுப்பார் என்று தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.

‘இதானே திருவான்மியூர். நாம எங்கே போகணும் ? ‘

இ.பா மறந்து விடாமல் கேட்டார்.

மொபைல் ஒலித்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன். அவரும் அதே கேள்வியோடு. பக்கத்தில் எங்கோ இருக்கிறார். அப்புறம் வழக்கறிஞர் விஜயனின் அழைப்பு. தொடர்ந்து இலக்கிய விமர்சகர் இந்திரனின் குரல்.

‘எங்கேப்பா அந்த ஸ்ரீராம் நகர் முதல் குறுக்குத் தெரு ? ‘

‘இருங்க. கண்டு பிடிச்சுச் சொல்றேன் ‘.

******************************************************************************

******************************************************************************

சார்போ, எதிரோ, எல்லா எஸ்டாபிலிஷ்மெண்டுகளையும் நிராகரித்த எட்வர்ட் சையத்.

இ.பாவோடு பேசியதை அசை போட்டுக்கொண்டே ஸ்ரீராம் நகர் முதல் குறுக்குத் தெருவில் நுழைந்து, இலக்கிய அன்பர் விஜயராகவனின் மனம் போல் விசாலமான இல்லத்தில் நண்பர்களோடு கம்பள விரிப்பில் உட்கார, நடுநாயகமாகப் புலிநகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்.

பி.ஏ.கேயும் எட்வர்ட் சையத் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு ஆரம்பித்தார்.

நான் கூட்டத்தைப் பார்க்க, பின்னால் இ.பா, திரைப்பட வரலாற்றாளர் தியோடர் பாஸ்கரன். மாலன். பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயண். வழிகண்டு பிடித்து வந்து சேர்ந்த மனுஷ்யபுத்திரன். விஜயன். இந்திரன். ராயர் காப்பி கிளப் நண்பர்கள் வெங்கடேஷ், கவியோகி வேதம், கவிஞர் சேவியர், ஓவியர் நாகராஜன். வாஞ்சிநாதன். தாமதமாக வந்து நுழைந்த பா.ராகவன். கூடவே ஆசாத், ஐகாரஸ் பிரகாஷ், வெங்கடேஷின், ராகவனின் பத்திரிகைத்துறை நண்பர்கள். வீட்டுக் கூடம் நிறைந்து விட்டிருந்தது.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை பற்றிய கலந்துரையாடல் அவர் தயாரித்த இந்தியன் மாகசீன் தமிழ் இலக்கியச் சிறப்பிதழ் (அக்டோபர் வெளியீடு) பற்றிய குறிப்போடு தொடங்கியது.

இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் அதிக நூல்கள் வெளியாவதாகச் சொன்ன கிருஷ்ணன், பதினைந்து படைப்பாளிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் புத்தகங்களை மதிப்பீடு செய்து எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு அது என்றார். அந்தக் கட்டுரைகள், அதில் இடம் பெற்ற நூல்கள் பற்றித் தான் எழுதிய அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.

இந்தப் புத்தகங்களில் இலங்கையைச் சேர்ந்த ரபேல் எழுதிய ‘காபி டேபிள் புத்தகம் ‘ ஆன தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றி தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டு அதன் பொருட் செறிவு மற்றும் தரம் பற்றிக் கேள்வி எழுப்பினார். அது தமிழில் வந்த அம்மாதிரியான முதல் புத்தகம் என்றார் மாலன்.

தமிழ் – வடமொழி இலக்கிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட கிருஷ்ணன், சில வடமொழி, பிராகிருதக் கவிதைகளை உள்வாங்கிக் கொண்டு வேறு தளத்தில் சிறப்பாக விரியும் சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார். ‘காடா குன்றோ மிசையா குன்றோ ‘ என்ற அவ்வையின் பாடலையும் அதனோடு தொடர்பு இல்லாத ஆனால் பாதிப்பு இருக்கலாம் என்று தோன்றும் வடமொழிப் பாடலையும் அவர் சொன்னார்.

தொடர்ந்து இ.பாவும், தியோடர் பாஸ்கரனும், மாலனும், நானும் மற்றவர்களும் மேலே நடத்திப் போன விவாதம் கவிதையை ரசிக்க அது தோன்றிய சமுதாய, கலாச்சார, வரலாற்றுப் பின்புலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய, வேண்டாத அவசியங்களையும், பேசி எழுதிப் பழகும் மொழியான தமிழும், எழுத்து மட்டுமேயான வடமொழியும் கொண்ட உறவு, வடமொழியாதிக்கம் போன்றவற்றைத் தொட்டு நீண்டு ஜெயமோகனின் சங்கச் சித்திரங்களைப் பார்வையிட்டுத் திரும்பியது.

கதா சிறந்த சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிட்டால் மற்ற பல மொழிப் படைப்புக்கள் கீழேதான் என்றார் கிருஷ்ணன்.

எனக்கென்னமோ இது அந்தந்த மொழிக்கான கதைத் தேர்வாளர்களின் அக்கறையின்மையினால் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு மலையாள இலக்கிய வளர்ச்சியை ஒப்பிட்டால் – என்னத்துக்கு வம்பு – புதுமைப்பித்தனுக்குப் பிடித்த குரங்கு தான் எனக்கும் பிடிக்கும்.

ஓவர் டு புலிநகக் கொன்றை.

******************************************************************************

******************************************************************************

புலிநகக் கொன்றையைத் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுத என்ன காரணம் என்று நான் கேட்டேன். மனதுக்குள் கான்ஸ்டபிள் லாட்டியை உருட்டியபடி என்னைப் பிரியமாகப் பார்த்தார்.

பி.ஏ.கே பொறுமையாகப் பதில் சொன்னார். முறையாகத் தமிழ் படித்திருந்தாலும், தமிழில் இத்தனை நாள் கழித்து எழுதத் தயக்கமாக இருந்தது என்றும் அதை விரட்டியவர்கள் இ.பாவும் சு.ராவும் என்றும்.

நாவல் இயல்பாக நீட்சியடைந்து முழுமை கொள்ளாமல் பாத்திர வார்ப்புக்கள் சில கேரிக்கேச்சர்களாக நிற்பதாகக் கெளரி ராம்நாராயண் கருத்துச் சொன்னார். மதுரகவி பாத்திரம் உருப்பெற்று எழாமலேயே கலைந்து போவதை நான் குறிப்பிட்டேன்.

பி.ஏ.கே இந்த நாவலின் களத்தையும், நீளத்தையும் மனதில் நிர்ணயித்துக் கொண்டே எழுத அமர்ந்ததாகவும், ஒரு திருநெல்வேலி தென்கலை வைணவக் குடும்பத்தில் தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் ஒத்திசைவை, முரண்பாடுகளைக் குவிமையத்தில் வைப்பதே தன் நோக்கம் என்றும் இந்த முயற்சியில் சில பாத்திரங்கள் கேரிகேச்சர் தன்மையோடு அமைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். மதுரகவியின் பாத்திரம் மற்றவர்கள் பார்வையில் வெளிப்படுவதையே கதையாடல் உத்தியாகத் தான் அமைத்ததை விளக்கினார் கிருஷ்ணன்.

எறும்புகள் ஊறும், பொன்னா பாட்டிக்கு நாலாயிரமும் மறந்து போனதில் தொடங்கும் முதல் அத்தியாயம் ஆங்கில வாசகர்களை மனதில் வைத்து எழுதப் பட்டிருக்கலாம் என்றார் மாலன். சரிதான் என்றார் பி.ஏ.கே.

இந்த நாவலில் நம்மாழ்வார் திரும்பி வராமலே போயிருந்தால் கதைப் போக்கில் பெரிய மாறுதல் ஏதும் நிகழ்ந்திருக்குமா என்று கேட்டேன். அது வேறு கதையாகியிருக்கும் என்றார் மாலன். இதை ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று விசாரித்தார் இ.பா. பி.ஏ.கேவுக்கே இந்த ஆல்டர்நேட் நாவல் பற்றி ஊகிக்க முடிந்திருக்கும் என்று தோன்றவில்லை.

நாவலில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கு மிதமாகவே காணப்படுகிறது என்றார் மாலன். பி.ஏ.கே என்னைக் காட்டி, இவர் சொல்றார் அதுவே அதிகம்னு என்றார். பின்னே, பெரியாரையே நெல்லைத் தமிழ் பேச வச்சுட்டாங்களே நீங்க என்றேன்.

நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதை தான் அனுபவித்துச் செய்ததாகக் குறிப்பிட்டார் பி.ஏ.கே. வைணவக் குடும்பங்களில் வழங்கும் அரை மரியாதை விளியான ‘நீர் ‘, ஜீயர் மடத்துப் பரிபாஷை மற்றும் தமிழ் வேதமான பாசுரங்கள் அங்கங்கே பேச்சில் கலந்து இயல்பாக வருவது – இதெல்லாம் ஆங்கிலத்தில் அப்படியே கொண்டு வருவது இயலாத காரியம் என்றார் அவர். தமிழாக்கியதில் அவருக்கு இருக்கும் ஆனந்தம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

நாவலில் இடைகலந்து வரும் வரலாற்றுச் செய்திகள் பற்றிய விவாதம் தொடர்ந்தது. ராஜாஜியைச் சந்தித்து முன்னுரை கேட்கத் தன் கந்தர்வ கானம் புத்தகத்தோடு வரும் கவிஞர் திருலோகசீத்தாராம் எப்படி இதற்குள் வந்தார் என்று பி.ஏ.கேயைக் கேட்டேன். அது உண்மையில் நடந்ததாகவும், குடும்ப நண்பரான திருலோக சீத்தாராமே சொன்னதாகவும் தெரிவித்த கிருஷ்ணன், ராஜாஜி எழுதிய ஆங்கிலக் கவிதை, அது பற்றிய கடிதம், ராஜாஜியின் பதில் கடிதம் எல்லாம் மெய்யாலுமே நடந்ததுதான் என்றார். நான் மதுரை லாட்ஜ் பற்றிக் கேட்கவில்லை.

கூட்டம் முடிந்தபோது நான் கையில் திண்ணை வாரபலன் பகுதியைப் பிரிண்ட் அவுட் செய்து வைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

‘தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் – விமர்ச்கர்கள் இடையே நல்லிணக்கமும் நேசமும் இருக்கிறது. ஓவியக் கலையுலகில் இது அபூர்வம் ‘ என்றார் கிளம்பிக் கொண்டிருந்த இந்திரன்.

நான் ஜனகராஜ் போல் அவரைப் பார்த்துக் கோணலாகச் சிரித்தது ஏன் என்று சத்தியமாக இந்திரனுக்குப் புரிந்திருக்காது.

**

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்