கனடாவில் வீடு

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

அ.முத்துலிங்கம்


நான் வீடு வாங்கியபோது அதற்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரர் இருந்தார். இது எனக்கு தெரியாது. வீட்டு ஏஜண்ட் இதை என்னிடம் இருந்து மறைத்துவிட்டார். வீட்டின் முந்திய சொந்தக்காரர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். வீட்டுப்பத்திரம் எழுதிய சட்டத்தரணியும் மற்றவர்களும் சேர்ந்து செய்த சதி என்றே நினைக்கிறேன்.

என்னுடைய மாமா கனடாவில் பல வருடங்கள் வாழ்ந்தவர். அதி புத்திசாலி. வந்து இரண்டு வருடங்கள் முடிவதற்கிடையில் Mississauga, Saskatchewan போன்ற இடங்களின் பெயர்களை ஒருவர் உதவியுமின்றி ஸ்பெல்லிங் பிழை இல்லாமல் எழுதப் பழகிக்கொண்டவர். அப்படி என்றால் பாருங்கள். அவர்தான் எனக்கு வீடு வாங்கும் எண்ணத்தை விதைத்தார். ‘வீடுவரை உறவு ‘ என்றும் உபதேசித்தார். வீடு இல்லாவிட்டால் உறவுக்காரர்கள் தகுதி கருதி வரமாட்டார்களாம்.

நான் வீடு வாங்கி குடிவந்து இரண்டு நாட்களாக ஒரு உறவினரும் வரவில்லை. என் வீட்டு பின் தோட்டத்தில் அசைவில் வேலை செய்யும் ஒரு லைட் இருந்தது. மூன்றாம் நாள் இரவு இந்த லைட் திடாரென்று பற்றி எரிந்தது. எட்டிப் பார்த்தபோது தெரிந்தது மின்னும் மஞ்சள் கண்களுடன் ஒரு விலங்கு. ஒரு தாயும் இரண்டு குட்டிகளும். வாலிலே வரிபோட்ட கறுப்பு நிற ஸ்கங். இவைதான் நான் அறியாமல் என் வீட்டுக்கு அடியில் குடியிருந்தவை.

பகலில் அவை போய் வளையில் தூங்கும். அந்த நேரம் நான் தோட்டத்தை எட்டிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவேன். இரவில் அவை வேட்டைக்கு புறப்படும். நான் படுக்கைக்கு போவேன். ஏதோ அவைதான் வீட்டு உடமைக்காரர் போலவும், நான் வாடகைக்கு வந்தவன் போலவும் காரியங்கள் நடந்தன. ஆனால் வீட்டு வரியில் ஒரு சிறிய பகுதியைக்கூட கட்டுவதற்கு அந்த விலங்கு சம்மதிக்கவில்லை.

எனக்கும் சில உரிமைகள் இருந்தன. அதை நிலைநாட்டுவதில் நான் குறியாயிருந்தேன். தயிர் வரும் காலி பிளாஸ்டிக் குவளைகளில் என் மனைவி வளர்த்த செடிகளை எல்லாம் இரவு நேரத்தில் இவை நாசம் செய்தன. தோட்டத்தில் கண்ட கண்ட இடங்களில் கிண்டி வைத்தன.

கடைசியில் ஒரு நாள் தொல்லை தாங்காமல் விலங்கு வதை தடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். என்னால் தோட்டப் பக்கம் போகமுடியவில்லை. அவைகள் காற்றிலே பரப்பி விடும் நாற்றம் சகிக்க முடியாதது. என்னையோ என் குடும்பத்தினரையோ இல்லை விருந்தாளிகளையோ கடித்துவிடும் அபாயம் இருக்கிறது என்று புலம்பினேன்.

‘ஐயா, அவை காயம் பட்டிருக்கின்றனவா ? ‘

‘இல்லை. ‘

‘உயிராபத்தில் இருக்கின்றனவா ? ‘

‘இல்லை. ‘

‘அவற்றிற்கு தீங்கிழைக்க யாராவது முயற்சிக்கிறார்களா ? ‘

‘இல்லை. ‘

‘அப்படி என்றால் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அவைகளுக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் நாங்கள் வந்து அவற்றை சேமமான இடத்துக்கு நகர்த்தி விடுவோம். ‘

‘நன்றி ஐயா நன்றி. ஆபத்தில் இருப்பது நான். வீட்டு வரி கட்டுவதும் நான் அல்லவோ. ‘

அதிகாரியின் நாற்காலி எப்போதும் நிலத்தை தொடுவதில்லை. அவருடைய வார்த்தையில் அசட்டைத்தனம் கூடிக்கொண்டு போனது. என்னுடைய பதிலும் மிகவும் தரக்குறைவானதாக இறங்கும் அபாயம் நெருங்கியது.

மனித வதை தடுப்பு சங்கம் என்று ஒன்றிருக்கிறதா ? அப்படி என்றால் அதற்கு தொலைபேசி செய்யலாம். தோட்டத்தை ஸ்கங் ஆக்கிரமித்துக் கொள்ளட்டும். சரி. வீட்டையாவது முழுவதுமாக அனுபவிக்கலாம் என்று நான் நினைத்தால் அதற்கு இன்னும் பெரிய தடை ஒன்று இருந்தது.

இங்கே நான் மிக வேகமாகப் படித்த பாடம் ஒன்று உண்டு. இது எங்கள் சரித்திர ஆசிரியர் கற்றுத் தந்ததற்கு நேர் மாறானது. ஆதி காலத்தில் இருந்து மனித நாகரிகம் வளர்வதற்கு காரணம் அவன் இயற்கையை வசப்படுத்தியதுதான் என்று அவர் சொல்வார். மழை நீரை தேக்கி விவசாயம் செய்தான். வெய்யிலிலே உணவைப் பதப்படுத்தி நீண்ட நாள் சேமித்து வைத்தான். காற்றை மறித்து ஆலைகள் கட்டினான். ஆற்றை அடைத்து மின்சாரம் உண்டாக்கினான்.

ஆனால் கனடாவில் எல்லாம் நேர்மாறாக நடந்தது. இயற்கை எனக்கு போதிய வேலைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருந்தது. நீலமான வானம் சடுதியாக நிறம் மாறி பனிக்கட்டிகளை கொட்டும். நான் அவற்றை கொத்தி அப்புறப்படுத்த வேண்டும். மழையும் வெய்யிலும் மாறி மாறி வேலை செய்து புல்லை வளர்க்கும். நான் அவை வளர வளர வெட்டவேண்டும். மரத்தில் உள்ள இலைகள் இடையறாது கொட்டும். நான் அவற்றை அள்ளியபடியே இருக்கவேண்டும். இப்படி வீட்டை பராமரிப்பதில் என் அருமையான நேரம் முழுவதையும் செலவு செய்தேன். அப்படியும் பணி முடிவு பெறுவதில்லை.

என்னுடைய வீட்டு வாசலில் இடது பக்கம் ஐந்து ஸ்விட்சுகள் இருக்கும். அவற்றில் வேலை செய்ய வேண்டிய ஐந்து பல்புகள் எக்குத்தப்பாக வீட்டின் பல பாகங்களில் இருந்தன. எந்த ஸ்விட்சைப் போட்டால் எந்த பல்ப் எரியும் என்பதை என் மனைவி இரண்டு நாளில் படித்துவிட்டாள்.

அதிகாலையில் நான் எழும்பும்போது சொல்வாள் இந்த ஸ்விட்ச் பல்ப் வேலை செய்யவில்லை என்று. இவளுக்கு மாத்திரம் எப்படி முதலில் தெரிந்துவிடுகிறது. இந்த கதவு துளையில் சாவி போக மறுக்கிறது. இது எப்படி ? நடு இரவில் சாவி வந்து காதிலே ரகஸ்யமாக சொன்னதா ?

நாற்காலிக்கு கால்கள் நாலு என்பது உலகம் முழுக்க தெரிந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட நாற்காலிக்கு மூன்று கால்கள் உண்டான செய்தி அவளுக்கு எப்படியோ முதலில் கிடைத்துவிடுகிறது.

இவற்றுக்கெல்லாம் பரிகாரம் நானே தேடவேண்டும். தோட்டத்து வேலிகளை புதுப்பிப்பதும், கூரையை மாற்றுவதும், வாசல் வழிப் பாதையை செப்பனிடுவதும் என் வேலையே. இது தவிர எந்த நேரமும் குளிர்பெட்டியோ, சலவை யந்திரமோ, துடைப்பானோ, குளிரூட்டியோ உடைந்துவிடும் சாத்தியக்கூறு டமோகிளீஸின் கூரிய வாள் போல என் தலைக்குமேல் தொங்கியது.

அப்படியான உற்பாதம் சீக்கிரமே ஒருநாள் சம்பவித்தது.

பனிப்போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். நம்பாதீர்கள். இது தினமும் என் வீட்டில் நடக்கிறது. பனிப்புயல் வீசுகிறது. பத்து வருட முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் என் வீட்டு கார் பாதையில் கொட்டும் பனிப்பாளங்களை நான் அதிகாலை தொடங்கி மதியச் சாப்பாடு நேரம் வருவதற்கிடையில் வெட்டிச் சாய்த்து சுத்தம் செய்துவிட்டேன். அப்படிச் செய்து முடிக்கவும் என்னையே பார்த்துக்கொண்டிருந்த வானம் பின்னேரத்துக்கான பனியை கொட்டத் தொடங்கியது.

வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்க முடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள் சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டிவிட்டார்களோ, அல்லது மெசினில் ஏதோ குறைபாடோ குளிர் ஏறிக்கொண்டே போனது. உடனேயே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் இருந்து நீங்கள் பேசுவது புரியவில்லை என்று கத்தினார்கள்.

அதற்கு காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன. அவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வாசகங்களாக வெளியே வந்தன.

‘நாங்கள் நடுங்கிக்கொண்டு இருக்கிறோம். ‘ என்று சத்தம் வைத்தேன்

பல மணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியிலிருந்து பூமி அதிர மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் equator போல சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயுதங்களை அவர் தரித்திருந்தார். அவர் நடக்கும்போது அவை மணிகள்போல அசைந்து சப்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்காக சரிந்துவிட்டார். நாலு மணி நேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்கு பிறகுதான் எங்கள் ரத்தம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

அவர் தந்த பில்லை பார்த்த கணமே நான் மலைத்துவிட்டேன். ரத்தம் கொதித்தது. இதை முதலிலேயே தந்திருக்கலாம். திருத்த வேலைகளை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். இப்படி நான் சொல்ல நினைத்தேன். ஆனால் நான் சொல்லப் போவதை கேட்க யார் இருக்கிறார்கள்.

மூன்றாம் வீட்டு கிழத்தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் வீட்டை பராமரித்தபடி இருப்பார்கள். மழைக்காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு இன்ச் வீதம் வளரும் புற்களை ஓயாது வெட்டுவார்கள். வெய்யில் காலத்தில் அதே புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். காற்றடித்து கால நேரம் பாராமல் கொட்டும் இலைகளை வாரித் தள்ளுவார்கள். கையுறை மாட்டி சுவர்களுக்கு பெயின்ற் அடிப்பார்கள். கர்வம் பிடித்த ஒரு கடுமையான எசமான்போல அந்த வீடு அவர்களை விரட்டியபடியே இருக்கும்.

அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏலத்தில் மலிவாக வாங்கிய மரண ஊர்வலக் கார் ஒன்றில் அடிக்கடி வந்து பெற்றோரை வீட்டை விற்றுவிட்டு முதியவர் விடுதியில் போய் தங்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

எங்கள் பூர்வீக நாட்டில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் அது உங்களுக்கு அடிமையாக உழைக்கும். விறாந்தையில், சாய்மைனைக் கதிரையில் படுத்தபடி வெளியே ஓடிப்பிடித்து விளையாடும் அணில்களை பார்க்கலாம். வாழை மரங்கள் வளர்வதையும், முருங்கைப்பூ பூப்பதையும் பார்த்து ரசிக்கலாம். மணிகளைக் குலுக்கி திரும்பும் பசு மாடுகளைத் தடவி விடலாம். குடைக்காரன் வந்து குடை திருத்துவான்; ஈயக்காரன் வந்து ஈயம் பூசுவான். தானாகப் பழுத்த மாம்பழங்கள் தொப்பு தொப்பென்று விழும். அவற்றை கடித்து சாப்பிடலாம். ஒன்றுமே செய்யத் தேவையில்லை. இன்பலோகம்தான்.

ஆனால் இங்கே கதை வேறு. சாய்மனைக் கதிரையை கண்ணிலே காட்டக்கூடாது. வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்கவேண்டும். அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. சூரியன் மூளைக்குள் இறங்கியதுபோல ஒரு வெளிச்சம்.

உலகத்திலேயே இரவு முழுக்க திறந்து வைத்திருக்கும் இடங்கள் இரண்டே இரண்டு. உணவகம், மற்றது கேளிக்கை அரங்கம். ஆனால் இந்த உலகில் வட அமெரிக்காவில் மட்டுமே Home Depot என்னும் வீட்டு பராமரிப்பு சாமன்கள் நிறுவனம் இரவு, பகல் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதிகாலை மூன்று மணிக்குகூட எறும்புகள் சீனிக்கட்டியை தூக்குவதுபோல சாமான்களை காவியபடி சனங்கள் நிரையாகப் போய்க் கொண்டிருப்பதை காணலாம்.

ஒரு பெரிய தத்துவத்தின் சிறிய வாசல் எனக்கு அப்போது திறந்தது.

நானும் முழு ஆர்வத்தோடு சில பராமரிப்பு வேலைகளை பழகிக்கொள்வது என்று தீர்மானித்தேன். ஒரு ஆள் உதவியோடு பியூஸ் மாற்றவும், இரண்டு பேர் உதவியோடு பல்ப் பூட்டவும் செய்தேன். இப்பொழுது மூன்றுபேர் உதவியோடு பிஃல்டர் மாற்றப் பழகிக்கொண்டு வருகிறேன். மீதி வேலைகளுக்கு இரவும் பகலும் பராமரிப்புக்காரர்களை தேடவேண்டும்.

ஒரு நாள் வெளியே புறப்பட்ட நான் திடுக்கிட்டுவிட்டேன். அல்லும் பகலும் உழைத்த கிழத்தம்பதியினர் வீட்டு முகப்பில் SOLD என்று வாசகம் எழுதிய பலகை ஆடிக்கொண்டிருந்தது. இதிலே ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அப்பொழுதுகூட வீட்டு முற்றத்தில் குந்தியிருந்தபடி அவர்கள் இருவரும் புல்லிலே களை பிடுங்கிக் கொண்டிருந்ததுதான்.

அன்றே செயலில் இறங்கினேன். எங்கள் வீதியில் ஒரு சமூக நல மையம் இருந்தது. நான் வீட்டைப் பராமரிக்கும் பலவிதமான கலைகளையும் கற்றுத் தேர்ந்துவிடவேண்டும் என்ற ஆவலில் அவர்களிடம் முதலில் தச்சுவேலை வகுப்புக்கு கட்டணம் கட்டினேன்.

வகுப்புக்குள் காலடி வைத்ததும் ஈர மரத்தின் மணம் மூக்கில் பட்டது. வகுப்பில் பதினைந்து பேர் இருந்தார்கள். எங்கள் ஆசான் இளம் வயதுக்காரர். தோளிலே வார் மாட்டிய கால் சட்டையும், பனியனும் அணிந்திருந்தார். பதினாறு வயது தாண்டாத பையன் ஒருவன் முக்கோணமாக வெட்டிய சாண்ட்விச்சை விளிம்புகள் உதிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்னொருத்தன், கடுதாசி குவளையை கையினால் பிடித்து லேசாக சுற்றியபடி தேநீரை உறிஞ்சினான். முகத்தில் இருந்து எதிர் பக்கத்துக்கு வளைந்த கூந்தல் உள்ள பெண்மணி கேசம் வழியாகப் பார்த்தபடி அவசரமாக நோட் புத்தகத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். எங்கள் ஆசான் உரையாற்றினார். மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்கக் கூடியவையே. அதற்கு அவனிடம் தகுந்த ஆயுதம் இருக்க வேண்டும். இதுவே அவர் கூறிய உச்ச மந்திரத்தின் பொருள்.

பயிற்சி வகுப்பை தொடக்கினார். ஒரு தவ்வல் பிள்ளையும் செய்யக்கூடியது. ஒரு வட்டமான பலகைத்துண்டு. நாலு கால்கள். இந்தக் கால்களை அந்தப் பலகையில் சரியான இடத்தில் பொருத்தி, சரியாக ஆணி அடிக்க வேண்டும். அப்பொழுது ஒரு சரியான ஸ்டூல் உண்டாகும்.

ஓர் ஆணியை எடுத்து பலகையில் அடிப்பது மிகச் சாதாரண விஷயம் என்று உங்களில் பலர் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல. ஆணி அடிப்பதில் பதினாறு வழிவகைகள் இருக்கின்றன.

140 விதமான ஆணிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. சுத்தியல்கள் எத்தனை விதம் என்று நினைக்கிறீர்கள் ? தவறு. அதுவும் தவறு. 64 விதமான சுத்தியல்கள் உள்ளன. ( ஓர் ஒற்றுமையை கவனியுங்கள். ஆய கலைகள் 64 என்று விளம்புகிறது எங்கள் பழம் தமிழ் இலக்கியம்.) இந்த சுத்தியல்களை பிடிப்பதற்கு 217 விதமான பெருவிரல்கள் உலகத்தில் நடமாடுவதாக சொல்கிறார்கள். அவற்றை அடிக்கும்போது பெருவிரல்கள் நசுங்குவதில் எத்தனை வகைகள் இருக்கின்றன ? அது இன்னும் கணிக்கப்படவில்லை.

‘ஐயா, என்ன செய்யிறியள் ? ‘

‘ஆணி அடிக்கிறேன். ‘

‘அது என்ன ? ‘

‘பெருவிரல். ‘

‘இல்லை, கையில் என்ன வைத்திருக்கிறியள். ‘

‘ஆணி. ‘

‘மற்றக்கையில். ‘

‘சுத்தியல். ‘

‘ஐயா, அது சுத்தியல் இல்லை. போய் ஒரு அசல் சுத்தியல் கொண்டுவாங்கோ! ‘

நான் போனேன். நாலு வயது பிள்ளைகூட இனம் கண்டுபிடிக்கக்கூடிய ஆயுதத்தை தேடி. அந்தப்பக்கம் வாசல் இருந்தது. கதவும் இருந்தது. அதை தள்ளினேன். திறக்கவில்லை. ஏனென்றால் அது இழுக்கவேண்டிய கதவு. இழுத்தேன். திறந்து வழி விட்டது. அப்படியே வெளியே வந்தேன். அங்கே எனக்காக காத்துக்கொண்டு வானம் இருந்தது. காற்று குளிர்ந்துபோய் இருந்தது. பிறகு அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.

பெருவிரல் காயம் ஆறிய பிறகு ஒரு நாள் கோடைக்கால முடிவில் நான் இன்னும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்தேன். இந்தப் பட்டியலின் இரண்டாவது பக்கத்தை எழுதிக் கொண்டிருந்தபோது மூன்றாவது வீட்டில் ஏதோ அரவம் கேட்டு மனைவி சைகை செய்தாள்.

எட்டிப்பார்த்தேன். மகனுடைய மீன்வால் மரண ஊர்வலக் கார் வெளியே நின்றது. அந்த நீண்ட வாகனத்தில் முன்னுக்கும் பின்னுக்குமாக மிச்சமிருக்கும் சாமான்களை அந்த கிழத் தம்பதியினர் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் வண்டி புறப்பட்டது. அவர்களை நினைத்து எனக்கு சந்தோசமாக இருந்தது. அதே சமயம் வீட்டுக்காக இரவும் பகலும் உழைத்த அந்த மூத்தவர்களை இனிமேல் காணமாட்டேன் என்றபோது வருத்தமாகவும் இருந்தது. கைகளை அசைத்தேன். சவ ஊர்தியின் பின்னால் இருந்து இரண்டு உயிருள்ள மனிதக் கைகள் தெரு திருப்பம் வரும் வரைக்கும் ஆடிக்கொண்டே இருந்தன.

அவர்கள் எனக்கு கைகாட்டினார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் தங்கள் பழைய வீட்டுக்கு காட்டினார்கள் என்று மனைவி சொன்னாள்.

என்னுடைய பட்டியல் முடிவு பெறாமல் பல நாட்கள் அந்த மேசையிலேயே இருந்தது.

***

muttu@earthlink.net

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்