வாஜ்பாயியின் சவடாலும், வாட்டர் பற்றிய வரட்டுவாதமும்

This entry is part [part not set] of 8 in the series 20000221_Issue

சின்னக்கருப்பன்


முதலில் வாஜ்பாய். சமீபத்தில் அவர் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை திருப்பிக் கொடுத்தபின்னரே எந்த பேச்சு வார்த்தையும் ‘ என்று வாய்ச்சவடால் அடித்திருக்கிறார். இதே வாஜ்பாய் சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா தயார். ஆனால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை பற்றி மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். இப்போது மேலும் ஒரு படி தாண்டி அவர் பேச்சு வார்த்தையே பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை திருப்பிக் கொடுத்தபின்னர்தான் என்று கூறியிருக்கிறார்.

இது பெருத்த வாய்ச்சவடால் என்பதில் எந்த விதமான இரு அபிப்ராயமும் இருக்க முடியாது. காஷ்மீரை மீட்க கிடைத்த எத்தனையோ வாய்ப்புகளை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ்காரர்கள் தவற விட்டார்கள். முக்கியமாக காஷ்மீர் பிரச்னையே, நேருவும் காங்கிரஸ்காரர்களும் இந்தியாவுக்குக் கொடுத்த தானம்தான். பின்னர் வந்த இடதுசாரி, ஜனதாதளக்காரர்களும் அதை தீர்க்க முடியாமல், தீர்க்க ஒரு வழியும் கொண்டுவராமல் ஒரு உலகத்திய பார்வை அற்று அன்றாடப் பிரச்னைகளில் மூழ்கி அரசியல்நடத்திவிட்டுக் காணாமல் போனார்கள்.

இன்று வந்திருக்கும் பாரதீய ஜனதாக்காரர்களும் இதே குழறுபடியில் சிக்குகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. திமுக தன் கொள்கையாக ‘செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம் ‘ என்று அறிவித்து ஆட்சிக்கு வந்தது. அப்படி நடந்தார்களா என்று ஆராய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை இப்போது பாஜக-காரர்களுக்கு சொல்லித்தர வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

பாகிஸ்தான் தானாக தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை கொடுக்கப் போவதில்லை. அதைப் பெறுவதற்க்கு இந்தியா இதுவரை எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவின் பக்கம் இருக்கும் காஷ்மீரை கைப்பற்ற உலகமகா தகிடுதித்தங்களை பாகிஸ்தான் செய்துவருவது கிளிண்டனிலிருந்து எனது பாட்டி வரை எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்திய பிரதமர் இவ்வாறு பேசுகிறார் ?

பாகிஸ்தான் தன்னிடமிருக்கும் காஷ்மீரை கொடுத்துவிடுமா ? அல்லது கட்டாயமாக இந்தியா அந்த காஷ்மீரை கைப்பற்றிவிட்டால் காஷ்மீர் பிரச்னை தீர்ந்து விடுமா ? இந்தியா தன்னிடமுள்ள காஷ்மீரை பாகிஸ்தானிடம் கொடுத்துவிடுமா அல்லது அவ்வாறு கொடுத்து விட்டால் பாகிஸ்தான் தனது அடாவடித்தனத்தை நிறுத்திவிட்டு இந்திய ஒற்றுமைக்காக பாடுபடுமா ?

காஷ்மீர் பிரச்னை இடது சாரிகள் சொல்வது போல காஷ்மீரிகளின் சுயநிர்ணய போராட்டம் அல்ல. இதே தவறை அவர்கள் பாகிஸ்தான் பிரிவினை போதும் செய்தார்கள். இடதுசாரிகளால் வெகுவாக பாதிக்கப்பட்ட நேருவும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக ஐ.நாசபையில் பேசினார். அந்தப் பேச்சை மறக்காமல் ஒவ்வொரு மேடையிலும் பாகிஸ்தானியர்கள் முழங்குகிறார்கள்.

இன்றைக்கு மைலாப்பூர் மக்களிடம் போய் நீ தனிநாடாக போய்க்கொள்கிறாயா என்று கேட்டால் அவர்கள் கூட தனிநாடாக போய்விடுவதற்கு ஆசைப்படுவதாகத்தான் சொல்வார்கள். அப்புறம் வன்னியர்கள் தனிநாடு, தேவர்களின் தனிநாடு, தலித்துக்கள் தனிநாடு, தெலுங்கர்கள் தனிநாடு அப்புறம் மதுரையில் உள்ள செளராஷ்டிரர் தனிநாடு என்று போகலாம். அதற்கும் தத்துவார்த்த அடிப்படையையும் இங்கிருக்கும் வடக்கத்தியர்களால் நாம் நசுக்கப்படுகிறோம் என்றும் வியாக்கியானம் எழுதுவதற்கு எஸ்.வி.ராசதுரை போன்ற அறிவுஜீவிகளுக்கும் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.

தனிநாடாக போவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால் அது இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு ஓட்டுப் போடுகின்ற மக்களின் படிப்பறிவையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று நன்றாக தெரியும். உதாரணமாக, சமீபத்தில் நடந்த காவிரிப் பிரச்னை இரண்டு நாள் கலவரத்தோடு நின்றிருக்காது. இன்றைக்கு காஷ்மீர் எப்படி பிரச்னையாக இருக்கிறதோ அதைவிட மோசமாக தமிழ்தேசத்துக்கும் கன்னடதேசத்துக்கும் தினசரிப் போர் நடந்து கொண்டிருக்கும். மத்திய இந்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிற்பதாலும், இரண்டு மாநிலங்களிலும் ஏறத்தாழ அதே அரசியல்கட்சிகள் இருப்பதாலும் அவை மத்தியில் கூட்டாட்சி நடத்தவேண்டிய கட்டாயம் இருப்பதாலும் இந்த பிரச்னையை, பல முடிச்சுகள் நடுவில், இருவருக்கும் நஷ்டமேற்படாதவாறு தீர்க்க, முயற்சி எடுக்கிறார்கள் அரசியல்வாதிகள். இந்த தீர்வு நாம் ஒரே தேசமாக இருப்பதால் சாத்தியமாகிறது என்பது நமக்கு ஞாபகம் இருக்கவேண்டும்.

எனவே காஷ்மீர் பிரச்னையின் தீர்வு இவ்வாறு வாஜ்பாயியின் மேடைப்பேச்சால் தீரப்போவதில்லை.

அதற்கான ஒரே தீர்வு, இந்தியா தனது ஜனநாயகத்தை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மா வரையிலும், வடக்கே திபெத்திலிருந்து தெற்கே இலங்கை மாலத்தீவுகள் வரை நீட்டுவதிலும்தான் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட நாடுகள் இணைந்து, ஐக்கிய ஐரோப்பா மாதிரியிலோ அல்லது இந்தியாவின் மாநிலங்கள் மாதிரியிலோ ஒன்றிணைவதில்தான் அமைதிக்கான வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு ஒரு அமைப்பில் காஷ்மீர் இந்தியாவில் இருந்தால் என்ன, பாகிஸ்தானில் இருந்தால் என்ன என்ற ஒரு கேள்வி வந்துவிடும். அதுதான் காஷ்மீர் பிரச்னையின் தீர்வு.

****

வாட்டர் (தண்ணீர்) என்று தீபா மேத்தா ஒரு படம் எடுக்கிறார். காசியில் தள்ளப்பட்ட இந்து விதவைகள், பூஜாரிகளால், விபச்சாரிகளாக ஆக்கப்படுவதைப்பற்றிய படம். இதனால் இந்துமதம் இழிவுபடுத்தப்படுகிறது என்று பேசிக்கொண்டு தீவிரவாத இந்து அமைப்புகள் மத்திய அரசின் மறைமுக உதவியுடன் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன.

இந்துமதம் விமர்சனங்களை ஏற்காதா ? இந்துமதத்தைப் பற்றி இது வரை யாரும் விமர்சிக்கவில்லையா ? சார்வாகரிலிருந்து, புத்தர், பெரியார், காந்தி, முஸ்லீம், கிரிஸ்தவ இயக்கப் பிரசாரகர்களிலிருந்து ஏராளமான விமர்சனங்களை ஏற்று, விழுங்கி, செரித்து, சரியான விமர்சனங்கள் மூலம் தன்னை திருத்திக் கொண்டு, சரியற்ற விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு ஜீவிக்கிற சமுதாயம் இந்து சமுதாயம். இரண்டாயிரம் ஆண்டுகளாக அன்னியர் அரசாண்டும் இவர்கள் தங்களை இன்னும் இந்துக்களாகவே அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இந்த சமுதாயம் விதவைகளை இந்துக்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று படமெடுப்பதால் காயப்பட்டுப் போகப்போகிறதா ? இல்லை. ஆனால், இன்று இந்து சமுதாயத்தை ஒரு தீவிரவாத சமுதாயமாக மாற்றிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டது போல சில அமைப்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ‘எதிரியின் அச்சில் நானும் ‘ என்பது போல இஸ்லாமிய மக்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமாட்டேனென்கிறார் என்று சல்மான் ருஷ்டி விசயத்தில் வியாக்கியானம் பேசிய இந்து அமைப்புகள் இன்று இந்து மதத்தை விமர்சனம் செய்வது தவறென்று பேசுகிறார்கள்.

சமீபத்தில் மினிஸ்கர்ட் போடக்கூடாதென்று கான்பூரில் உள்ள ஒரு கிரிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடத்துக்கு இந்த அமைப்புக்கள் ஆணையிட்டிருக்கின்றன. பள்ளி நிர்வாகிகளும் தினசரி உடையை சல்வார் கமீசுக்கு மாற்றிவிட்டார்கள். சினிமாவில் உள்ள சென்சாரே ஜனநாயகத்துக்கு விரோதம் என்னும்போது, இந்த மக்கள் வாழ்விலும், அவர்கள் உடுத்தும் உடையிலும் குறுக்கிட்டு எது பாரத கலாச்சாரம் என்றும் எது பாரத உடை என்றும் கூறுவதற்கு இவர்கள் யார் ?

இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். இது வளர விட்டால் தமிழ்நாட்டிலும் சல்வார் கமீஸ்தான் போட வேண்டும் என்றும் இவர்கள் ஆணையிடுவார்கள். பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றும் பெண்கள் வெளியே வந்தால் முக்காடு போட்டுக் கொண்டுதான் வர வேண்டும் என்றும் ஆணைகள் வந்தால் ஆச்சரியப்படக்கூடாது.

தண்ணீர் படம் எடுப்பதற்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது அரசியல்தான் என்றாலும் இது வரவேற்கத்தகுந்த விஷயம். ஆனால், தீபா மேத்தா மத்திய அரசு மீது வழக்கு தொடுத்து, கொடுத்த வாக்கை மீறியதற்காகவும், சரியான பாதுகாப்பு கொடுக்கத்தவறியதனால் பொருள் நஷ்டத்துக்கும் ஈடும் பெற வேண்டும். அதுவே இது போல இன்னொரு சுய கலாச்சார நிர்ணய கும்பல்களை நிறுத்துவதற்கு வழி.

***

சின்னக்கருப்பன், திண்ணை, 21, ஃபெப்ரவரி, 2000

Thinnai 2000 February 21

திண்ணை

Series Navigationஜெயமோகன் கவிதைகள் >>

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்