அகலப் பாதை!

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

சபீர்


நல்ல பிள்ளையென
நீண்டு
பூமி துளைத்து
சிலதும்
சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்….
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்…
நினைவில் மிச்சங்கள்!

மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும்
நிலையம் வந்து…
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்…
மறையாது நினைவுகள்!

அதே
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை…
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!

தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில்
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை…!

க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச

அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!

-sabeer

sabeer.abushahruk@gmail.com

Series Navigation

சபீர்

சபீர்