டென்ஷன்.

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

எஸ் ஜெயலட்சுமி


காலை மணி 11 ஆகியும் குளிர் விட்டபாடில்லை.
இந்த வருஷம் டில்லியில் மார்ச் பிறந்த பின்னும் கூட மழை பெய்ததால் குளிர் போக வில்லை. எதிர்பாராதவிதமாக ஸ்ரீநகரில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. வெள்ளை வெளேரென்று பஞ்சுப் பொதி போல் மரங்களி லெல்லாம் ஐஸ் படிந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்.”இந்த வருஷம் தான் இப்படி யிருக்கு. நாங்க யு.ஸ் ஏ லிருந்து வந்த அன்னிக்கு ரொம்பவே கஷ்ட்டப் பட்டோம். ஒரே குளிர் மழையாயிருந்தது” என்றாள் ரேவதி.

நான் பிப்ரவரி 25ம் தேதி ·பரீதாபாத் வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் க்ளைமேட் சுகமாக யிருந்தது. இதமான வெயிலும் லேசான குளிருமாக, ஸ்வெட்டர் இல்லாமல் வெளியே போய்வர முடிந்தது. ஒரு வார மழைக்குப் பின் அன்று நானும் என்தங்கை ரேவதியும் மார்க்கெட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். சுமார் 75 வயது மதிக்கத்தகுந்த ஒரு மூதாட்டி கையில் கம்பை ஊன்றிக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்தாள். அவளைக் கடந்தபோது ”கைஸே ஹோ?” என்று என் தங்கையை விசாரித்தாள். எனக்கும் நமஸ்தே சொன்னாள். என்ன ஆச்சு என்று ரேவதி கேட்டாள். கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இப்பொழுது குணமாகி வருகிறதாம். டாக்டரின் ஆலோசனைப்படி நடக்க வந்திருக்கிறாள். எக்ஸ்ஸர்ஸைஸ் எல்லாம் விடாமல் செய்கிறாளாம். இன்று வெயில் வந்திருப்பதால் நடக்க வெளியே கிளம்பி விட்டாளாம். தன் கொள்ளுப் பேரனைப் பார்க்க துபாய் போகப் போகிறாளாம். அதற்காகத் தன்னைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டுமாம். இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பேசியதை கேட்கவே சந்தோஷமாக யிருந்தது.

கொஞ்ச தூரம் போனதும் ரேவதி’ ‘நாளைலேர்ந்து வேலைக்காரி வர மாட்டாளாம். என்ன செய்யறதுன்னே புரியலை. நான் அமெரிக்காவி லேர்ந்து வந்தப்புறம் தான் வந்தாள். வந்து ஒரு மாசம் கூட ஆகலை. அவ கிராமத்துக்குப் போகப் போறாளாம். வேற ஆளைப் பாக்கணும். நான் ஏப்ரல் மே மாசம் சிங்கப்பூர் போகணும். மறுபடியும் யு.ஸ் போகணும். என்னவோ தெரியலை, ஒரே டென்ஷனா யிருக்கு. இந்த வேலைக்காரியாலே ஒரே டென்ஷன் தான்.” என்றாள். அவளுடைய டென்ஷனிலிருந்து பேச்சை மாற்ற விரும்பி,”காலங்கார்த்தால, உன் சம்பந்தியம்மாகூட ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே, என்ன விஷயம்? என்றேன்.

”அதையேன் கேக்கறே, ஒரே அழாத குறை தான். அவளோட ரெண்டாவது பொண்ணுக்கு ஏதோ ப்ராப்ளமாம். பீரியட்ஸ் சரியா வரலை. வயத்து வலி என்று ஏதோ சொன்னாள். ஒங்க குரல்ல சுரத்தே யில்லையேன்னு கேட்டேன். அவ்வளவு தான் ஒரே அழுகை. சம்பந்தியின் ஒன்று விட்ட அக்காவுக்கு கான்சர் இருந்து நன்னா குணமாகி விட்டதாம். ஆனாலும் மாமிக்கு ஒரே டென்ஷன். தன் பொண்ணுக்கும் கான்சர் வந்துடுமோன்னு ஒரே. பயம்.
”உன் சம்பந்தி நிறைய படிச்சவதானே, வேலை பாக்கறா இல்லியா?
”படிச்சிருந்தாலும் வேலை பார்த்தாலும் அவள் ரொம்பக் கோழை. எதுக்கெடுத்தாலும்
பயம் சந்தேகம். வேண்டாத கற்பனைகள் எல்லாம் ஜாஸ்தி. சின்னப் பிரச்சனை
என்றாலும் அவளால் ·பேஸ் பண்ண முடியாது. அவள் ஹஸ்பண்ட் வேறு அடிக்கடி டூர் போயிடறார். அதனால கூடக் கொஞ்சம் ஸ்ட்றெஸ், டென்ஷன்.”

என்ன டென்ஷனோ, என்ன ஸ்ட்றெஸ்ஸோ என்று நினைத்துக் கொண்டேன். மார்கெட் வாசலிலேயே ஒரு பெண் ‘ஆண்ட்டிஜி நமஸ்தே” என்று கை கூப்பினாள். இந்தப்பெண்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைப்பதற்குள் ”ஆண்ட்டிஜி நமஸ்தே” என்று எனக்கும் வணக்கம் சொன்னாள். அப்பொழுது தான் அவளைக் கூர்ந்து கவனித்தேன். அவளுக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று ரேவதி சொன்னது ஞாபகம் வந்தது. நான் இதற்கு முன் இரண்டு மூன்று தடவை ·ப்ரீதாபத் வந்த போது பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நன்கு உயர்ந்து, நல்ல வெயிட் போட்டிருக்கி¢றாள். நிறம் கூட மாறி நன்கு வெளுத்திருக்கிறாள். கன்னங்கள் கொஞ்சம் உப்பியிருக்கிறது! கல்யாணம் ஆன சந்தோஷமா? இல்லை தாயாகப் போகிறாளா.? ஸஹ்ரூனிக்கு ஒரு கால் ஊனம். கம்பு வைத்துக்கொண்டு விந்தி விந்தி நடப்பாள்.

ஸஹ்ரூனியின் தாயார் சமேரிக்கு ஐந்து குழந்தைகள். தகப்பனார் காலமாகிவிட்டார். ஸஹ்ரூனி ரஸியா,ஸரீஜனா என மூன்று பெண்கள்.குப்ரு, ஜமால் என இருபையன்கள். மூன்று பெண்களுமே ரேவதி வீட்டு வேலைக்கு வந்திருக்கி றார்கள். ஸரீஜனா மிகவும் அழகாக இருப்பாள். ஸஹ்ரூனியின் முன்னோர்கள் காஷ்மீர் முஸ்லீம்கள். அங்கிருந்து டில்லி, பின் ·பரீதாபாத் வந்தவர் களாம். நான் போன தடவை வந்த போது ஸரீஜனாவுக்குக் கல்யாணம் என்று சொன்னார்கள். இப்பொழுது ஸஹ்ரூனிக்கும் கல்யாணம் ஆகி விட்டது.

”தும் கைஸே ஹோ? ஷாதி ஹோ கயி? எனக்குத்
தெரிந்த அரை குறை ஹிந்தியில் கேட்டு வைத்தேன்.
ரேவதி,”ஸஹ்ரூனி,ஊரிலிருந்து வந்திருக்கியா? எத்தனை நாள் இருப்பாய்?”
என்றாள்.
”ஆண்ட்டி.நான் இங்கே தான் இருக்கேன்.ஊருக்குப் போகலை” ”எங்கேயாவது
வேலை பாக்கிறயா?
”ஒரே ஒரு வீடு தான். வேலை தேடிக்கிடிருக்கேன்”
ரேவதியின் பிரச்சனை தீருமென்று தோன்றியது
”என் வீட்டில் வேலை செய்ய வரயா?
”ஆண்ட்டி, ஒங்க வீட்டில வேலை செய்யறவ என்ன ஆனாள்? அவள் கோவிச்சுக்க
மாட்டாளா?
”அவள் ஒண்ணும் சொல்ல மாட்டாள். அவ கிராமத்துக்குப் போகப் போறாள்.
”இங்கேயே இரு, நாங்க சாமன் வாங்கிட்டு வரோம்”என்றள் ரேவதி.

நாங்கள் சாமான் வாங்கிக்கொண்டு வந்த போது ஸஹ்ரூனி யாரோ ரிக்ஷாவாலாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். எங்களைக் கண்டவுடன் ”யே மேரா ஆத்மி” என்றாள் வெட்கத்துடன்.”ஓ பையா, இதர் ஆவோ”என்றாள் ரேவதி அவனும் கொஞ்சம் கூச்சத்துடன் வந்தான். சின்னப் பையனாக முண்டாசு கட்டியிருந்தான். அவனிடம்’ ‘ஸ¤னோ, ஸஹ்ரூனி, அச்சி லட்கி ஹை. இன்கோ அச்சிதரஹ் தேக் லோ” என்றாள்.( இதப் பாரு ஸஹ்ரூனி நல்ல பெண். அவளை நன்றாகக் கவனித்துக் கொள்.) அவன் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.
”மாம் பன்னே வாலி ஹோ?
சஹ்ரூனி வெட்கத்துடன் ஐந்து மாதமாகிறது” என்றாள்.
”இவள் சாயங்காலம் சாயங்காலம் சாயங்காலம் படிக்கப் போனாளே, என்ன
ஆச்சு ?’’
என் கேள்வியை எப்படியோ புரிந்துகொண்டு ”இப்ப படிக்கலை, கையெழுத்து மட்டும் ஹிந்தியிலும் இங்லீஷிலும் போடுவேன்.”
”ஸஹ்ரூனி, ரிக்ஷா வாடகையா,சொந்தமா?” இது ரேவதி.
”ஆண்ட்டி,வாடகைதான். தெனமும் இருவது ரூபாய் வாடகையாகக் குடுக்கணும்.”
”ஒங்களுக்கு எவ்வளவு கெடைக்கும்?
”ஒவ்வொரு நாளூம் ஒவ்வொரு மாதிரி கெடைக்கும். சில சமயம் நூறோ நூத்தம்பதோ
கெடைக்கும். சில நாள் அறுபதோ எழுபதோ தான் கெடைக்கும்”
”நீ,அம்மா கூட இருக்கியா? தனியாவா?
”நான் ஏன் அம்மாகூட இருக்கணும்? தனியாத்தான்.”

வீட்டுக்கு வந்ததும் தூசி தட்டிவிட்டு
வீட்டைப் பெருக்க ஆரபித்தாள் ஸஹ்ரூனி ,”ஸஹ்ரூனி, நீங்க ஏன் மாமியார் வீட்லேர்ந்து இங்க வந்துட்டீங்க? ஸஹ்ரூனி சொன்னது கதை போலிருந்தது.

ஸஹ்ரூனியின் அம்மா சீதனமாகக் கொடுத்த படுக்கை, ரஜாய், பாத்திரங் கள் மற்ற எல்லா சாமான்களையும் அவள் மாமனார் விற்று குடித்துத் தீர்த்து விட்டாராம். மேலும் அங்கே இருந்தால் சரிப்படாது என்று தோன்றவே இருவரும் இங்கே வந்து விட்டார்கள். ஸரீஜனாவின் கணவன் மோசமானவனாகவும் சூதாடியாகவும் இருப்பதால் அவளும் இங்கே வந்துவிட்டாளாம். அவள் அங்கே இருப்பது அண்ணிக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. அம்மாவுக்கும் கஷ்டமாகத் தானே யிருக்கும்?
’’நான் ஏன் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் பாரமாக இருக்க வேண்டும். நான் என் சொந்தக் காலில் நிற்பதையே விரும்பறேன்.’’ சஹ்ரூனியின் தன்னம்பிகையும் தைரியமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸஹ்ரூனியைத்தேடி வந்த அவள் அம்மாவிடம், அவள் பெண்களைப் பற்றிப் பேசிய போது அவள் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. இதெல்லாம் சகஜம் என்பது போலிருந்தது அவள் பேச்சு.

படிப்பும் இல்லாத ஒரு காலும் ஊனமான பெண், மாமனாரால் எல்லாவற்றையும் இழந்த பின்னும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருக்கும் ஸஹ்ரூனி, இரு பெண்களின் வாழ்க்கையுமே பிரச்சனைகளுக்குள்ளான போதும் அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருக்கும் அவள் அம்மா இருவரையும் டென்ஷன் பாதிக்க வில்லை!

டென்ஷன், ஸ்ட்ற்றெஸ் என்ற வார்த்தைகள் அவர்களுக்குத் தெரியாதது காரணமாயிருக்கலாம்!

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி