பிறந்த மண்ணுக்கு..- 1

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

அ முகம்மது இஸ்மாயில்


1.

முன் கதை:

சூரியன் கண் விழிக்காத அதிகாலை நேரம். பேருந்து ஒன்று போன தேர்தல் வந்த பொழுது போடப்பட்ட சாலையில் பள்ளிக்கூடம் விட்ட பள்ளி மாணவனை போல் வேகமாக வந்து நின்றது. பேருந்திலிருந்து முதல் நபராக அவன் இறங்கினான். இந்த கதையின் நாயகனின் தந்தை என்பதால் இவனைப் பற்றி இங்கே குறிப்பிடுவது நல்லது.

இவன் பெயர் தாமோதரன். சிறு வயதில் தாயையும் தந்தையும் இழந்து விட்டான். படிக்க வேண்டும் என்ற ஆவலை தன் ஒரே அண்ணன் நடேசனிடம் சொல்ல அவர் கஷ்டப்பட்டு தன் தம்பியை படிக்க வைத்தார். தாமோதரன் தனது அண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான். அண்ணனை போல் அண்ணி மல்லிகாவும் அன்பு மழை பொழிய ஆனந்த நீராடினான். அண்ணனையும் அண்ணியையும் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தான். தனது பள்ளியின் இறுதி ஆண்டில் மாநிலத்தில் ஐந்தாவதாக தேர்ச்சி பெற்றவன். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற Indian Institute of Managementல் M.B.A. படித்து பேராசிரியர்களின் பெருமதிப்பையும் பெற்றான். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அவனை தன் நிறுவனத்தில் பணிபுரிய அழைத்த போது, “வளர்ந்த நிறுவனங்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை நொடிந்து போன நிறுவனங்களில் சேர்ந்து என் திறமை என்ன ? என் பங்கு என்ன ? என்பதை பார்க்க தான் நான் ஆசைப்படுகிறேன்” என்பதே இவன் அளித்த பதிலாக இருந்தது. சொன்னது போலவே சாதாரண நிறுவனதில் சம்பளத்தை எதிர்பார்க்காமல் போய் சேர்ந்தான். வளர்ச்சியோ வளர்ச்சி. அவனது திறமையால் நிறுவனம் வளர்ந்தது ஆனால் ‘நிறுவனத்தால் தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக’ கூறி வந்தான். “அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறாண்டா” என்று நண்பர் வட்டாரம் இவனை கிண்டலடித்ததும் உண்டு.

தாமோதரன் அலுவல் புரிந்த நிறுவனத்தின் தலைவர் அவனை அணுகி தன் ஒரே மகளை மணமுடிக்குமாறும் நிறுவனத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் வேண்டவே தன் அண்ணனிடம் கேட்டு தான் தன் முடிவை சொல்லுவேன் என்று கூறி தன் சொந்த ஊருக்கு வந்திறங்கியிருக்கிறான்.

வழியில் ஒரு தேநீர் கடை. கடையின் முதலாளி முத்து தாமோதரனை பார்த்ததும்

“போறது யாரு நடேசன்ட தம்பியா ?” என்றார்.

தாமோதரன் கடைக்குள் வந்து “ஆமாண்ணே நல்லா இருக்கீங்களா ?” என்றான்.

அவர் “இருக்கேன்ப்பா நீ நல்லா படிச்சு பெரிய ஆளாயிட்டே.. ஆனா அது கூட பெருசில்ல.. எப்போதும் போல சாதாரணமா இருக்கியே அது தான்ப்பா பெருசு” என்றார்.

தாமோதரன், “என்னண்ணே இப்படி சொல்றீங்க நா ஒரு கம்பெனில வேல பார்க்குறேன் ஆனால் நீங்க சொந்தமா தொழில் வைச்சிருக்கீங்க நீங்க யாருக்கும் கொறஞ்சவரில்லண்ணே” என்றான்.

கடை முதலாளி முத்து தாமோதரனிடம் “அந்த ஆண்டவன் தான் உனக்கு இந்த நல்ல புத்திய கொடுத்திருக்கான் சரி டா போட்டு தர்ரேன் குடிச்சுட்டு போயேன்” என்று அவனது பதிலுக்கு எதிர்பார்க்காமல் தேநீர் போட ஆரம்பித்தார்.

சுவையாக போட்டு ஆற்றிக் கொண்டே “எத்தனை நாள் இங்கே தங்குவே.. ஏதாவது விஷேசம் இருக்கா ?” என்றார்.

தாமோதரன், “அண்ணே.. ஒரு நல்ல சேதிக்காக தான் வந்திருக்கேன் மொதல்ல அண்ணண்ட்ட தான் சொல்லணும்னு ஆசைப்படறேன்” என்றான். முதலாளியான அவர் தாமோதரன் அவனது அண்ணன் மீது வைத்திருந்த பாசத்தை புரிந்துக் கொண்டு, “கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா நடேசன் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.. தம்பி எந்த நல்ல காரியமா இருந்தாலும் நடேசன்ட்ட தான் மொதல்ல சொல்லணும் அவர் சம்மத்தோட தான் தம்பி செய்யணும் நீ நல்லா இருப்பே தம்பி” என்றார்.

தாமோதரன் தேநீரை வாங்கி அருந்தி விட்டு நன்றி கூறி விடை பெற்றான்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் அடுப்படியில் வேலையாக இருந்த தாமோதரனின் அண்ணி மல்லிகா வேலையை அப்படியே போட்டு விட்டு “தாமு வாயேன் எப்படி இருக்கே ? நல்லா இருக்கியா ? ஒரு தகவலும் இல்லாம வந்திருக்கீயே ?” என்றார்.

தாமோதரன் “ஆமாண்ணி வந்திருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க அண்ணி.. அண்ணன் எங்கே ?” என்றான்.

மல்லிகா, “இன்னும் எந்திரிக்கலையே” என்று கூற, நடேசன் “ஏன் இந்த வர்ரேன்” என்று அறையிலிருந்து வெளியே வந்தார். தாமோதரன் நடேசன் காலை தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டான்.

நடேசன் “வேண்டாம் வேண்டாம்..” என்று தடுத்து “நல்லா இரு..” என்றார்.

நடேசன் மல்லிகா தம்பதிகளுக்கு குழந்தை இல்லை தாமோதரனை தான் குழந்தையை போல் நினைத்தனர்.

தாமோதரன் “உடம்பெல்லாம் நல்லா இருக்காண்ணே” என்றான்.

நடேசன் “ம்.. எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று சிரித்தார்.

மல்லிகா “எத்தனை நாளக்கி தங்குவே ?” என்று கேட்டார்.

மல்லிகாவை விட நடேசன் பதிலை தெரிந்துக் கொள்ள ஆர்வமானார். தாமோதரன் நடேசனுக்கு தெரியாமல் மல்லிகாவிடம் ‘அப்புறம் சொல்றேன்’ என்பது போல் சைகை காட்டினான்.

மல்லிகா சமாளிக்கும் விதமாக “சரி அப்புறம் பேசிக்கலாம் நீ மொதல்ல கை கால் அழம்பிட்டு வாயேன்” என்றார்.

அவர்களின் சமாளித்தல் நடேசனுக்கு விளங்காமல் இல்லை.

குளித்து விட்டு சாப்பிட அமர்ந்தான் தாமோதரன். அவனுக்கு பிடித்த கோழி குழம்பு மற்றும் கோழி பொறியலை சுவைக்கத் துவங்கினான்.

சாப்பிட்டு முடித்ததும், “அண்ணி உங்க கைக்கு வைரத்துல தான் வளையல் செஞ்சு போடனும்” என்றான்.

மல்லிகா சிரித்துக் கொண்டே “என்ன இது, திடார்னு ஊட்டி மலைய என் தல மேல வக்கிறே.. என்ன விஷயம்” என்றார்.

தாமோதரன் தயங்கியவாறே “இல்லண்ணி ஒரு விஷயம் சொல்றேன்.. நீங்க தான் அண்ணண்ட கேட்டு சொல்லணும்” என்றான்.

மல்லிகா புரியாமல் “எனக்கு ஒண்ணும் விளங்கலையே எத்தனை நாள் தங்குவேன்னு கேட்டதுக்கு அப்படியே மழுப்புனே- என்ன தான் சொல்றே நீ..” என்றார் ஆர்வமாக.

தாமோதரன் “எனக்கு..” என்று நிறுத்தினான்.

மல்லிகா “உனக்கு..” என்றார்.

தாமோதரன் “நான்..” என்றான்.

மல்லிகா “நீ..” என்றார்.

தாமோதரன் “இல்ல எனக்கு..” என்றான் மறுபடியும்.

மல்லிகா “நீ ஒண்ணும் சொல்ல வேணாம் நான்.. நீ.. எனக்கு.. என்ன இதெல்லாம்” என்று விலகி செல்ல முற்பட தாமோதரன் பின்னாடியே குழந்தையை போல் “அண்ணி அண்ணி” என்று கத்திக் கொண்டே ஓடினான். மல்லிகா, “ஒழுங்கா சொல்றதா இருந்தா நான் கேப்பேன் இல்லன்னா..” என்றார்.

தாமோதரன் “இல்லண்ணி எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை.. வார்த்தை வாய் வரைக்கும் தான் வருது அதுக்கு மேல வரமாட்டேங்குது..” என்றான்.

மல்லிகா கோபப்படுவது போல் “அதெல்லாம் எனக்கு தெரியாது இப்ப சொல்ல போறீயா இல்லையா ?” என்றார்.

தாமோதரன், “சரி.. சரி சொல்லிடறேன்” என்று ஒரு வழியாக திருமண செய்தியை சொல்ல ஆரம்பித்தான்.. “அண்ணன் அண்ணி என்னா சொல்றாங்களோ அதை தான் நான் செய்வேன் என்று தெளிவா சொல்லிட்டு வந்துட்டேன்” என்று முடித்தான்.

அண்ணி உளம் மகிழ்ந்து “ரொம்ப நல்ல செய்தி தான்.. பொண்ணை நீ பார்த்திருக்கியா நல்லா இருக்குமா ? பேர் என்ன ?” என்று வினவினார்.

தாமோதரன், “பார்த்திருக்கேன் அழகா தான் இருக்கும்.. பேரு மாலதி அண்ணி..” என்று வெட்கப்பட்டு திரும்பி கொண்டான்.

மல்லிகா “அப்ப உனக்கும் பிடிச்சு தான் போயிருக்கு” என்றார்.

தாமோதரன், “நீங்க தான் அண்ணி எப்படியாவது அண்ணண்ட்ட கேட்டு சொல்லணும்” என்று ஒரு வித பதட்டத்துடன் கூறினான்.

மல்லிகா விஷயத்தை நயமாக நடேசனிடம் எடுத்து சொன்னவுடன் நடேசன் கேட்டார், “பெரிய எடம்.. படிச்ச பொண்ணு.. எல்லாம் சரி தான் ஆனால் நீ தான் இந்த ஊரோட இருக்க முடியாது.. இல்ல ?” என்று.

மல்லிகா, “இந்த பொண்ணை கல்யாணம் கட்டிகாட்டி மட்டும் இந்த கிராமத்துலயா இருப்பான் ?.. எங்க இருந்தா என்ன நல்லா இருக்கணும் அதானே நமக்கு வேணும்” என்றார்.

நடேசன், “அது சரி தான்.. ஆனால் நம்ம ஊருக்கு..” என்று ஏதோ சொல்ல வந்து முழுசாக சொல்லாமல் நிறுத்தினார்.

மல்லிகா, “சம்மதம்னு தான் உங்க வாயாலே சொல்லிடுங்களேன் புள்ள சந்தோஷப்படுவான்ல..” என்று தாமோதரனை திரும்பி பார்த்தார்.

நடேசன், “..அம்.. சம்மதம் தான்..” என்றார்.

தாமோதரன் தயங்கியபடி “ஏண்ணே.. நீங்களும்..” என்று இழுக்க

நடேசன், “என்ன.. என்னயும் உன் கூட வந்து பட்டணத்துல தங்க சொல்றீயா ? எனக்கு இந்த ஊர் தான்.. எனக்கு வேற எங்கேயும் புடிக்க மாட்டேங்குது” என்று பெருமையுடன் கூறினார்.

பெண் வீட்டார்கள் வந்தார்கள் பெண்ணையும் அழைத்துக் கொண்டு. நற்குணங்கங்கள் நிரம்பிய அந்த பெண் மாலதி, தாமோதரனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவே அறிந்தார்கள். நிச்சயிக்கப்பட்ட மறுநாளே மாப்பிள்ளையின் சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. அமைதியான வாழ்க்கை. முதலாம் ஆண்டு- ஆண் குழந்தை பிறந்தது- பெயர் ரவிக்குமார். இரண்டாவது பிரசவம் தான் கொஞ்சம் பயங்கரமானது. ஈருயிரில் ஓருயிர் மட்டுமே பிழைத்தது- அது இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தை. தாமோதரன் குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை. அன்பு மனைவியின் மறைவுக்கு அழுது துடித்தான். ஆறுதல் சொல்ல வழியின்றி அனைவருமே தவித்தனர். யாருமே இந்த துயரத்தை எதிர்பார்க்க வில்லை. ஒரு பாவமும் அறியாத அந்த பச்சிளம் குழந்தை மல்லிகாவின் கையில் அழகாக உறங்கிக் கொண்டிருந்தது.

அழகாக உறங்கிக் கொண்டிருந்ததே அந்த குழந்தையின் பெயர் தமிழ்வாணன். நம் கதையின் நாயகன். பிறந்தவுடன் தாயை இழந்து தன் பெரிய தந்தையின் ஆதரவில் கிராமத்தில் வளர்ந்து வருபவன். அவனது அண்ணன் ரவிக்குமார் அப்பா தாமோதரனுடன் வளர்கிறான். நாம் இந்த வரியை படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்வாணன் கிராமத்தில் நாட்டுத் தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். ஒழுங்காக படித்தான் என்றால் அப்பாவை விட சிறப்பாக தான் படிப்பான் ஆனால் என்ன செய்ய ? விளையாட்டு புத்தி தெருவில் தன்னை விட அதிக வயதுடையவர்களிடம் சேர்ந்து அவர்கள் விளையாடும் விளையாட்டில் பங்கேற்பான். சரியான சேட்டை. அவன் யாருக்கும் பயப்பட்டதுமில்லை யாருக்கும் கட்டுப்பட்டதுமில்லை.

தொடரும்

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்