விடியும்!-நாவல் – (27)

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அந்தத் தனித்த இலையான் கிட்டத்தட்ட பத்து மைல்களுக்கும் கூடுதலாக தன்னோடு மிகுந்த சிநேகத்துடன் அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்த வண்ணமாய் ஒன்றாக பயணம் செய்து கொண்டிருப்பதை சூழலை மறந்து கவனித்தான் செல்வம். திருகோணமலையிலிருந்து மூதூருக்கு இரிகேசன் ஜீப்பில் புறப்பட்ட பயணம். காது மடலில் வந்து குந்துவதும், கையால் விசுக்க சிறுக்கென நாதமெழுப்பி பறப்பதும் கொஞ்சமும் இடைவெளி தராமல் அடுத்த காதில் வந்து அமர்வதுமாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த அந்த இலையானில் – பத்து நிமிடங்களாக பிரயாணம் தடைப்பட்டு காட்டு வெக்கை சட்டையில் ஒட்டிப் பிடிக்கத் தொடங்கிய போது – முதன் முறையாக அருவருப்பும் ஆத்திரமும் வந்தது. ஓ குட்டி இலையானே உனக்கு என்னை விட்டால் இந்த பரந்த தேசத்தில் வேற ஆளே இல்லையா ?

வீட்டில் மச்சம் சமைத்தால் வந்து மொய்க்கிற இலையான்களுக்கு அளவு கணக்கு இருப்பதில்லை. நண்டு, கணவாய் என்று மூக்கைத் துளைக்கிற சமையலென்றால் அன்றைக்கு கேட்கவே தேவையில்லை – குசினியை காவிக் கொண்டு போவதற்கு வந்தது போல கூட்டமாக வந்து மொய்க்கும். சாப்பிடுகிற தட்டை சரமாரியாக முற்றுகையிடும் போதெல்லாம் மொய்ப்புக்கான காரணத்தையோ அவைகளின் குணாதியங்களையோ விஸ்தாரமாக எண்ணிப் பார்க்கத் தோன்றியதில்லை. கையில் கிடைப்பதால் சும்மா விசுக்கி கலைக்கப் பிரயத்தனப்படுவதோடு சரி. வெக்கைக் காலமாயின் அவைகளுக்கு இன்னும் கொண்டாட்டம். வியர்த்து வழியும் நேரம் பார்த்து கை உரோமங்களில் ஏறி அதிலேயே கம்பியில் நடப்பது போல சர்க்கஸ் காட்டும்.

கண்ணாடியை முற்றாகத் திறந்து கையிலிருந்த பேப்பரால் விசுக்கி வெளியே துரத்தப் பார்த்தான். அதுவும் அதனிடம் செல்லாது என உறுதியான போது கெட்ட கோபம் வந்தது. வருகிற ஆத்திரத்துக்கு ஒரேயடியாக அடித்துக் கொன்று போட்டால்! அது ஆத்திரத்தின் கிளையாக சிலுப்பிக் கொண்டு வந்த எண்ணமே தவிர கொல்வது அவனுக்கு ஒத்துவராத சங்கதி.

மாரிகாலத்தில் வாசல்நிலை ஓரமாக எங்கேயோ படை எடுக்கத் திரள்வது போல புற்றெடுத்து படரும் எறும்புக் கிளையைக் கானுகிற வேளையில் – இவ்வளவு நாளும் இவை எங்கே பதுங்கியிருந்தன என்று ஆச்சரியமாயிருக்கும். தெரியாமல் மிரித்து விட்டாலோ கால்கள் பதம் பார்க்கப்படும். கடிவாங்கிய எரிச்சலில் மண்ணெண்ணை அபிஷேகம் செய்து கூண்டோடு கைலாயம் அனுப்புகிற ஆத்திரம் முகிழ்த்தாலும் செயற்படுத்த மனம் இசையாது. அம்மாவும் அவனைப் போல் அசட்டையாக இருக்க முடியுமா! அவளுடைய இளகிய மனசு இம்மாதிரி நேரங்களில் இறுக மூடிக் கொள்ளும். பாவம் என்று அப்பா சொன்னால் – விட்டா வீட்டுக்குள்ள பூந்து ராயிருட்டியில் குழந்தைகுட்டியளை கடிச்சுப் போட்டுறும் என்பாள். அம்மாளாச்சியிடம் மனதிற்குள் மன்னிப்புக் கேட்டவாறே சிரட்டையில் அள்ளிவந்த அடுப்புத்தணலைக் கொட்டி இறுதிச்சடங்கு நடத்துவதை அவன் பார்க்க விரும்புவதில்லை.

பையிலிருந்து லேஞ்சியை எடுத்து விரித்து குருட்டாம் போக்கில் விசுக்கினான். அது மீண்டும் கைகளில் வந்து ஆறுதலாக அமர்ந்து முன்னங்கால்கள் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக் கூட்டி பிசைந்து கொண்டு நின்று கை கொட்டிச் சிரிப்பது போல் கேலி செய்தது. பொறு வாறன் என்று கறுவிக் கொண்டு கையை கொஞ்சம் அசைக்க மற்றக் கைக்கு மாறி கூச்சம் காட்டிற்று. வலது கையை ஆட்டாமல் அசைக்காமல் மறைத்தவாறே மெதுவாகக் கொண்டு வந்து பளாரென இடது கையில் அறைந்து விட்டு சீற்றுக்கடியில் விழுந்திருக்குமென நம்பிக்கையுடன் தேட சிலமனைக் காணவில்லை.

தம்பலகமம் பரிசோதனைத் தரிப்பில் அநியாயத்திற்கு நீண்டிருந்த வாகனங்களின் வரிசை இலையானை அடித்துக் கொன்ற கவலையை திடாரெனக் கரைத்தது. டிரைவர் சம்சுதீன் தாமதத்தின் காரணம் அறியப் போயிருக்கிறான். இஞ்சினியர் மூர்த்தியும் டெக்னிகல் அசிஸ்டென்ட் நிமலராஜனும் கொஞ்சம் காலாறவும் பற்றை மறைவில் ஒன்றுக்கிருக்கவுமாக இறங்கினார்கள்.

நேரம் ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருந்தது. காலமைச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு ஏழு மணிக்கு வெளிக்கிட்ட பயணம். இந்த மினக்கேடு இல்லாட்டி இவ்வளவுக்கும் கந்தளாயைத் தாண்டியிருக்கலாம் என்று சம்சுதீன் அலுத்துக் கொண்டிருந்தான். கந்தளாய் தாண்டி சனசந்தடியற்ற ஒதுக்கமான மரநிழலில் சிரமபரிகாரம் செய்ய இருந்தவன் முற்றிலுமாக பொறுமை இழந்து போயிருந்தான். வயிறு கறுபுறுக்கத் தொடங்கி வெகு நேரமாகிவிட்டது.

சம்சுதீனும் நிமலராஜனும் இன்று காலையில்தான் அறிமுகமானார்கள். டிரைவருக்குப் பக்கத்தில் மூர்த்தி. பின்னுக்கு செல்வமும் நிமலராஜனும். நிமலராஜன் நெல்லியடியைச் சேர்ந்தவர். அங்கு இருக்க முடியாமல் அவரை இவரைப் பிடித்து திருமலைக்கு மாற்றலாகி வந்தவர். சம்சுதீன் மூதூர் ஆள். அவர் பாடு பரவாயில்லை. அரச பட்டாவோடு பிள்ளைகுட்டிகளைப் பார்க்க சொந்த ஊருக்குப் போகிறார். ஏறிய கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வாய்மூலமாக பூர்வீகம் புரிந்து கொண்டான் செல்வம்.

இறங்கி கால்கை நீட்டினான். தம்பலகமம் சந்தி. தமிழ்மக்கள் பாட்டன் பூட்டன் காலமாக விவசாயம் பண்ணி சீவித்த மண். அடுத்தடுத்து வந்த கலவரங்களில் காட்சிகள் மாறிப் போன கிராமம். தம்பலகாமத்து குத்தரிசிச்சோற்றை அள்ளி வாயில் போட்டால் பூப்போல வழுக்கிக் கொண்டு போகும் என்பார் அப்பா. இரட்டை மாட்டு வண்டியில் இரண்டாள் உயரத்துக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு டவுனுக்கு வந்து போகிற விவசாயிகளை அவன் கண்டிருக்கிறான். கொளுத்துகிற வெய்யிலைத் தவிர்க்க இருட்டுகிற வேளைதான் வண்டில் பூட்டத் தோதுப்படும். வழித்துணைக்கு நாலைந்து வண்டிகள் சேர்ந்து கொள்ளும். குரங்குப்பாலம் கடக்க மாடுகள் களைத்துப் போகும். பாதை ஓரமாக நிறுத்தி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு கொண்டு வந்த கட்டுச்சோறை பகிர்ந்து உண்டபின் வண்டியின் அடியில் சாக்கு விரித்து தொங்கும் லாந்தர் ஒளியில் ஒரு கண் உறங்குவார்கள். பொலபொலவென விடிய, வண்டிகள் வரிசையாக நாம்பன்களின் கழுத்துமணி ஒலிக்க டவுனுக்குள் நுழையும்.

தாய்பிள்ளை மாதிரி தவழ்ந்து கிடந்த மண்ணை – அளவுக்கு அதிகமாப் பெய்த மாணாவாரி மழையில் அடித்துக் கொண்டு போன வெள்ளாமை மாதிரி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த சனம் ஓடிச் சிதறினது – நேற்றுப் போல நிக்குது கண்ணுக்குள். ஓங்கி உயர்ந்த கோரைப்புற்கள் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த செம்பாட்டு வயல்நிலங்களை நீளத்துக்கு மறைத்துக் கொண்டு நிக்குது. தழதழவென்று தழும்புகிற தயிரைப் பார்த்தால் தம்பலகமத்து மாட்டுப்பட்டிகள்தான் மனசில் வரும். குண்டுச் சத்தங்களில் மிரண்ட பட்டிமாடுகள் திமிறிக் கொண்டு காட்டுக்குள் போய் விட்டன. அங்கு திரிகிற அரச ஊர்க்காவல்படை வெடி வைத்து சுட்டுத் தின்றது போக மிஞ்சினது கட்டாக்காலியாத் திரிகின்றன.

நெரிசலாக வந்த பஸ் பிரயாணிகளின் அட்டைகளும் முகங்களும் பைகளும் சோதிக்கப்பட்டு நகர்ந்த பின்னர் பின்னால் நின்ற லொறிகள் வேகமாக முன்னேறின. எல்லாரும் ஏறிக்கொள்ள சம்சுதின் மாட்டை விரட்டுவது போல் ஜீப்பை விரட்டினான். சோதனைச் சாவடிக்குக் கிட்டே வந்ததும் லைசென்சை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான். எந்த வாகனமாயிருந்தாலும் புத்தகத்தில் விபரம் பதியப்பட வேண்டும். இன்ன வாகனம் இன்ன நேரத்தில் இந்த வழியாகப் போனது என்பதற்கு அத்தாட்சியாக. கஷ்ட காலத்திற்கு கொழும்பில் குண்டு கிண்டு வெடித்தால் அதோ கதிதான். வாகனத்தில் போனவர்கள் விசாரனைக்கு அழைக்கப்படலாம். அழைக்கப்பட்டவரின் கிரகநிலைகளில் ராகுவோ கேதுவோ இருக்கக்கூடாத இடத்தில் இருக்கும் பட்சத்தில் விசாரனையில் அடி உதை கிடைக்கலாம். அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் நீண்ட கால சிறைவாசத்துக்கும் சித்திரவதைக்கும் உயிர் துறப்பிற்கும் ஆளாகலாம்.

அரச வாகனங்களுக்கு கொஞ்சம் மரியாதையும் சலுகையும் உண்டு. சாதாரணத்தில் பைகளை இறக்கி துளாவி ஆராய மாட்டார்கள். உத்தியோகத்தர்கள் சீற்றில் இருந்தபடியே அறிமுக அட்டைகளைக் காட்டிக் கொண்டு நகரலாம். அரசு சார்ந்த சோலியுள்ளவர்களுக்கு அடிக்கடி முகம் காட்டிய பழக்கத்தினால் அட்டை காட்டி மினக்கெடத் தேவையற்ற சலுகையும் கிடைக்கும்.

சம்சுதினின் முகம் பழகிய முகம். போகச் சொல்லித் தலையாட்டிவிட்டு அடுத்ததை வரச்சொல்லி கைகாட்டினான் பொலிஸ்காரன். ஜீப்பின் பின்னால் சோதனைக்காக நிற்கும் காரை, அதற்குள் நெஞ்சிடியோடு முழித்துக்கொண்டிருக்கும் தமிழ்க் குடும்பத்தை தலையிருந்து கால்வரை ஆறுதலாகச் சோதிக்கும் எண்ணம் அவனுக்குத் தோன்றியிருக்கலாம்.

அலுப்பூட்டும் சோதனையினின்றும் உத்தியோகத்தர்களைக் காப்பாற்றி விட்ட நிமிர்நடையோடு வந்து ஏறி ஜீப்பை ஸ்ராட் செய்தான் சம்சுதீன். பொலிஸ்காரரோடு வண்டிச் சாரதிகளுக்கு – விசேடமாக அரச வாகனங்களின் சாரதிகளுக்கு ‘உனக்கு நான் எனக்கு நீ ‘ என்கிற பிரத்தியேக ஒட்டுதல் இருப்பது சகஜம். பரஸ்பர ஒத்தாசை கருதி உண்டான உறவு அது.

தென்னிலங்கையிலிருக்கும் தனது வீட்டிற்கு விடுமுறையில் போக வேண்டி சிவில் உடுப்பில் நிற்பான் ஒரு பொலிஸ். ஐ போம் றாலாமி என வணக்கம் கூறி வாகனப்பதிவேட்டில் ஒப்பமிட வரும் டிரைவரிடம் ஆளை கொழும்பில் கொண்டு போய் விடும்படி கேட்பான் கடமையிலிருப்பவன். அதற்காகவே பிறந்து வளர்ந்து நேர்த்தி வைத்துக் காத்திருந்தவன் போல மரியாதை காட்டி அழைத்துச் செல்வான் டிரைவர். பொலிசுக்கு பஸ்காசு மிச்சம். டிரைவருக்கு அறிமுகம் மிச்சம். முன்சீற்றிலிருக்கும் உத்தியோகத்தர் – தன்னைக் கேளாமல் பொலிசை ஏற்றிக் கொண்ட அத்துமீறலை உள்ளுக்குள் சபித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளக்கூடாதென்ற உறுதியுடன் உதடு பிரியாமல் சிரித்து ஒருவித மோனநிலையில் இருப்பார்.

நாளைக்கு இந்த வழியால்தான் திரும்ப வரவேண்டும்!

சம்சுதீன் பல இடங்களிலும் அடிபட்டுத் தெளிந்தவனாகத் தெரிந்தான். பெரிய படிப்பெல்லாம் இருக்காது. மிஞ்சிப் போனால் எட்டோ ஒன்பதோ இருக்கலாம். உலகப்படிப்பு அவனிடம் நிறைய இருந்தது பேச்சில் தெரிந்தது.

அல்லைக் கந்தளாயுள் நுழைந்த போது ஒன்பதே முக்கால். திருகோணமலையில் திட்டமிட்டு அரச குடியேற்றம் நடந்த இடம் அது. 1950களில் எண்பது வீதமாக இருந்த தமிழ் மக்களை 2000ல் முப்பத்தைந்து ஆக மாற்ற அடியெடுத்துக் கொடுத்த இடம் என்று சொல்வார்கள்.

பள்ளமும் திட்டியும் குழியும் இருபக்கமும் தூர்ந்து போன ஓரமும் கொண்டதாயிருந்த அந்த காட்டுச்சாலையில் பிரயாணம் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போன மாதிரி ஒரு அலுப்பு. காட்டுவெக்கையில் முகம் காய்ந்து போயிற்று. காலை வெள்ளனையே சிடுசிடுக்கிற வீட்டுப் பெண் மாதிரி சூரியன் வேறு இன்றைக்கென்று சத்தியம் செய்து கொடுத்தது போல நெற்றிக்கு நேரே விலகாமல் நின்றார். அடர்ந்த காட்டின் நடுவில் மலைப்பாம்பு நெளிவது போல் ஓடிய செங்கல்நிற வீதியில் வாகனம் ஓட ஓட கிளர்ந்து எழுந்த புழுதி வந்த வழியை புகையடித்து மறைத்தது.

ஒரு விளா மரத்தடியில் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டை மாதிரி சொற சொறவென்று பிள்ளையார் அமர்ந்திருந்தார். தேங்காய் உடைக்கவோ மோதகம் படைக்கவோ ஆளில்லாத இடத்தில் இவருக்கென்ன வேலை! அவரை பிரதிஷ்டை பண்ணியவர்கள் அங்கு குடியேறிய சிங்கள மக்களாகத்தானிருக்கும். காட்டு யானைகள் பயிர்பட்டைகளை சேதப்படுத்துவதில் நாட்டமுடையவை. பிள்ளையாரிடம் விண்ணப்பித்தால் தூது போவார் அல்லவா!

அதன் பக்கமாக மனுசர் நடந்து நடந்து புற்கள் நசிந்து நசிந்து வழியாக மாறி காட்டுக்குள் ஓடுகிற ஒற்றையடிப் பாதையைப் பார்த்து இது பொறுக்க ‘சரியான ஆனைக்காடு ‘ என்றான் சம்சுதீன். மெதுவாகச் சொன்ன விதம் யானைகளுக்குக் கேட்டு விடாமலிருக்க ஜாக்கிரதையுடன் சொன்னது போல இருந்தது.

பெரிய காடா என்று செல்வம் கேட்டான்.

“ஐஞ்சாறு மைலுக்கு இதே சீர்தான். இங்கதான் பொடியன்மாறுவள் நிப்பானுவள்.”

இந்தக் காட்டுக்குள்ளயா என்று திகைத்துப் போய் செல்வம் கேட்க, ஓம் என்று இலேசாகச் சொன்னான் சம்சுதீன்.

“பொடியன்கள் ” என்பதை அவன் தன் பகுதி வழக்கில் அப்படிச் சொன்னான். 1983 கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் அழிக்கப்பட்டபின் இனி சாத்வீகம் செல்லாது என்ற யதார்த்தம் உறைத்ததில் ஆயுதங்களை ஏந்திய இளைஞர்களுக்கு தமிழ்மண் கொடுத்த அடைமொழி அது. இப்போது அது விடுதலைப்புலிகளைக் குறித்து நிற்கிறது. இந்தச் சொல்லின் ஓசைநயம் – பொடியள், பொடியன்கள், பொடியன்மார், போய்ஸ் என்று இடத்துக்குத் தக்கபடி மாற்றமடைவதுண்டு. போராட்டத் தொடக்கத்தில் இருபது வயதாக இருந்த பொடியன்களுக்கு – மரித்துப் போகாமல் இருந்தால் – இப்போது நாற்பதாயிருக்கும். ஆயினும் இன்னமும் ‘பொடியன்கள் ‘ எனவே அழைக்கப்படுகிறார்கள் – அந்தரங்கத்தில் ‘எங்கட பிள்ளைகள் ‘ என்ற நெருங்கிய அர்த்தத்துடன்.

நான் சென்னா நம்ப மாட்டாங்க என்ற பீடிகையோடு தொடர்ந்தான் சம்சுதீன்.

“இப்பிடித்தான் ஒரு காத்தால நேரம் மூதூரிலருந்து வந்து கொண்டிருந்தம். நினையாப்பிரகாரமா ஒரு ஏழெட்டுப் பேர் பாதையைக் குறொஸ் பண்ணி நிக்கச் சொல்லி கை காட்டினானுவள். இன்டைக்கு நாம தொலைஞ்சம் என்டு மட்டுக்கட்டாத்தன். அப்பிடிஇப்பிடி என்டு பாத்தாலும் பதினெட்டு பத்தொன்பதுக்குள்ளதான் வயசிருக்கும். நாத்துநெல்லு கொத்து மாதிரி முத்தாத மூஞ்சியள். காலைப் பாத்து என்ட அல்லாவே என்டு ஏங்கிப் போயித்தன். எல்லாப் பொடியன்மாரும் வெறுங்காலோட நிக்கிறானுவள். குதிக்கால் பொறுக்க கருங்கல்லாட்டம் கட்டி பத்தி இருந்திச்சி. காட்டில கல்லும் முள்ளும் குத்திக் கிழிச்சா என்ன பண்ணுவாங்க என்டு ஏகத்துக்கு கவலையாப் போச்சி. குடிக்கத் தண்ணியிருக்கா என்டு கேட்டானுவள். போத்திலோட எடுத்துக் கொடுத்திட்டன். கிட்ட வந்து பேசுற போது ஜீப்பில வந்த சேர்மாறுவள் மூக்கைப் பொத்திட்டாங்க. நான் பொத்தல்ல.”

“ஏன் ?”

“காட்டில தண்ணியா வெண்ணியா கன நாளா குளிச்சிருக்கமாட்டாங்க”

செல்வம் ஆடவில்லை அசையவில்லை ஊமை போலக் கேட்டுக் கொண்டிருந்தான். நெஞ்சுக் கூட்டிலிருந்து இருதயம் மெல்ல மெல்ல உருகி சொட்டுச் சொட்டாய் வடிந்து ஓடுவதாய்.. .. .. .. ..

“தம்பி இவன் எண்ணை வைக்க விடுறானில்லை. தலை பறட்டை பத்திப் போய்க்கிடக்கு என்னன்டு கேள் ”

எண்ணை வைப்பதென்றால் அவனுக்குந்தான் பிடிக்காது. தம்பிக்கானால் இருத்தி வைத்து இன்று முழுக்க புத்தி சொல்வான் – எண்ணை வைச்சால் மூளை குளிர்ச்சியடையும், தலைமுடி தளைத்து வளரும், படிப்பு நல்லாய் வரும் என்று. அண்ணன் சொன்னால் இனி என்ன செய்வதென்று தலையை நீட்டுவான் தம்பி. சின்னம்மா சொன்னதற்காக நிறையவே தேய்த்து விடப்படும். எண்ணை ஊறவிட்டுக் கொஞ்ச நேரம் சென்றிருக்கும் கிணற்றடியிலிருந்து சின்னம்மாவின் சத்தம் மீண்டும் வரும்.

“தம்பி இந்தா தேசிக்காய் தேய்க்க விடுறானில்லை என்னன்டு கேள் ”

கையில் அலுவலாயிருந்தால் இருந்த இடத்திலிருந்தே கோபக்குரல் கொடுப்பான் செல்வம்.

“டேய் இப்ப வந்தன் என்டா தெரியுமல்லோ அண்ணன்ர குணம் ”

தம்பிக்குத் தெரியாதா அண்ணனின் குணம். அம்மாவுக்குத் தெரியாதா பெற்ற பிள்ளையின் குணம். இந்தா அண்ணன் வரப் போறான் வந்தா இக்கணம் அடி விழப் போகுது என்று பயம் காட்ட அவன் திமிராமல் இருப்பான். அந்த அரிய கணத்தைப் பயன்படுத்தி சுடச்சுட அழுகல் தேசிக்காய் தேய்த்து – கண் எரியுது என்று பிள்ளை சினுங்க – இந்தா முடிஞ்சிற்றுது என்று சொன்ன கையோடு சீயக்காய் அரப்புக் குழம்பை தேய் தேய் எனத் தேய்த்து நிகத்தால் விறாண்டி ஊத்தையெல்லாம் உருவி – இஞ்ச பார் ஊத்தைப் பிராண்டல என்று அதற்கு சமாதானமும் சொல்லி – ஒருவாறு பெரிய யாகம் முடித்தாற் போல் முழுக வார்த்து கிணற்றடியை விட்டு அனுப்பி விட்டால் – தம்பி ஜெயம் மினுக்கிய குத்துவிளக்கு மாதிரி துலங்குவான். எவ்வளவு கரிசனை எவ்வளவு பார்வை – எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போயிற்றியேடா பாவி.

அந்தா பாத்தியலா அந்தா அங்கதான், இப்ப ஐஞ்சுபத்து நிமிட்டுக்கு முன்னாலதான் யானைக்கிளை போயிருக்கு என்றான் சம்சுதீன். அவன் காட்டிய இடத்தில் யானைகள் போனபோக்கில் இட்டுச் சென்ற சாணக்குவியல்கள். ஒரு குவியலில் முழு விளாம்பழக்கோது மஞ்சள் உருண்டையாய்த் தெரிந்தது. கோதிருக்கச் சுளையை ஜீரணித்திருக்கிறது யானை.

பொடியன்களை மிருகங்கள் ஒன்றும் செய்யாதா என்று மனங் கேளாமல் செல்வம் கேட்டான்.

“பாம்பு கடிக்கிறதுதான். குளவி கொட்டுறதுதான். என்ன செய்யிற. இன்னொன்டு மறந்தித்தன். காட்டில ஒரு சாதி நுளம்பு இருக்கு. இந்த இந்த சைஸ் இருக்கும். மாரிகாலத்தில அதுவளின்ட தொல்லை தாங்கவொண்ணா. மத்தப்படி பொடியன்மாறுவளால நம்மளுக்கு ஆபத்தில்லை என்ட நம்பிக்கை வந்திட்டா மிருகசாதி இணக்கமாயிரும்.”

மனுசரை விட மிருகங்களோடு சீவிக்கிறது லேசு என்றான் நிமலராஜன். நூத்துக்கு நூறு உண்மை என்று ஆமோதித்துச் சிரித்தான் சம்சுதீன். செல்வத்திற்கு சிரிப்பு வரவில்லை. வழி தொலைந்து போன இருட்டுக்காட்டில் மரங்கள் பீய்ச்சும் பச்சைச் சுவாசத்துள் அமிழ்ந்து கொண்டிருந்தான் செல்வம்.

கிரீக்.. .. .. கிரீக்.. .. .. குரங்கு கொடியிலிருந்து கிளைக்குத் தாவிற்று. மூக்கில் மஞ்சள் வரி இழுத்த கருங்கல்நிறப் பறவை காக்.. ..காக் என்று ஹலோ சொல்லி விட்டுப் பறந்தது. எதுவென்று மட்டுக்கட்ட முடியாத மிருகமொன்றின் நீட்டி முழக்கிய கொட்டாவி கேட்டுக் கொண்டேயிருந்தது.

தம்பியும் இங்க நிற்பானோ!

கிர் கிர் கிர்.. .. .. என்று காதடியில் இலையான் விண்ணென்று தெறித்துக் கொண்டு பறக்கவும் அவன் சுயநினைவுக்கு வந்தான். இவ்வளவு நேரமும் கதைப்பிராக்கில் நினைவு விடுபட்டுப் போயிருந்தாலும் அந்தக் குறுணிச்சீவனை அடித்துக் கொன்றுவிட்ட நெருடல் மட்டும் வழிநெடுக இருந்து கொண்டே வந்ததை இப்போது அவன் உணர்ந்தான்.

இலையானை உயிரோடு கண்டதும் ஆறுதலில் பெருமூச்சு வந்தது.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்