பயணம் – ஒரு மைக்ரோ கதை

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

கே ஆர் விஜய் (ஆங்கிலத்தில் – கெளரவ் சப்னிஸ்)


வழக்கம்போல இந்தமுறையும் ஜன்னலருகே இடம்பிடித்ததில் ஆனந்தனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சுற்றியுள்ள வயல்வெளிகள் வழக்கம் போல் பசுமையாக இல்லாதிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது.

வழக்கமாக பதட்டத்துடன் தென்படும் தன் சக பயணிகள் ஆற அமர உட்கார்ந்திருந்தார்கள். எவருடைய முகத்திலும் ஒரு அவசரத்தின் அறிகுறி கூட இல்லை. மாறாக அமைதியே மலர்ந்திருந்தது. ஒருவரும் மற்றொருவருடன் பேசிக் கொள்ளாமல் பேருந்தில் மயான அமைதி நிலவியது. மதியப் பொழுது கிட்டத்தட்ட நள்ளிரவுக்கான அனைத்து குணங்களையும் கொண்டு ஆனந்தனுக்குக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

‘பேருந்து முழுக்க கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்குமென்றும் – மக்கள் ஆங்காங்கே இறங்குவதற்காக தவித்துக் கொண்டிருப்பார்களென்றும் ‘- நினைத்திருந்த அவனது கற்பனை ஒரு நிமிடத்தில் தவிடுபொடியானது. மூன்று மணி நேரமாக இந்த வெயிலில் ஜெய்ப்பூர் செல்வதற்காக காத்திருந்த இவனுக்கு கடைசியில் இந்தப் பேருந்தில் இடம் கிடைத்தது. ‘டெல்லி -ஜெய்ப்பூர் ‘ சாலையை விரைவு சாலை என்று மக்கள் அழைத்தாலும் ‘மும்பை -பூனே ‘ சாலையைப் போல் ஆனந்தனை இது கவரவில்லை. ஏனெனில் மும்பை-புனே சாலையில் பேருந்துகள் வழுக்கிக் கொண்டு செல்லும். சாலையின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென சில இடங்களும் அடுக்குமாடி கட்டிடங்களுமாகக் கண்களுக்கு விருந்து படைக்கும். ஆனால் இந்த சாலையோ காட்டு வழி மாதிரி தெரிந்தது. இருந்தாலும் எந்தப் பேருந்தும் இவனுக்காக நிற்கவில்லை. மூன்று மணி நேரம் பேருந்துக்காகக் காத்துக் கொண்டே இருந்தது தான் மிச்சம்.

பின்னர் குறிப்பிட்ட இந்தப் பேருந்து வந்து கொண்டிருந்தது. சொல்லப் போனால் இந்தப் பேருந்து இதற்கு முன் சென்ற பேருந்துகளை விட அதி விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆக, இதுவும் தனக்காக நிற்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம் ! வண்டி திடாரென தனது வேகத்தை முழுமையாகக் குறைத்து இவனை நோக்கி நகர்ந்தது. பயத்தில் ஆனந்தன் சில அடிகள் பின்னோக்கி வைத்தான்.வண்டி ஆனந்தனை அருகில் சென்று அணைத்தது. பிறகு திடாரென நின்றது. வண்டியின் திடார் நிறுத்தம் ஆனந்தனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஒருகணம் வண்டி மணிக்கு 100 கி.மீ பறந்த மாதிரியும் அடுத்த கணம் அப்படியே நிற்பது போன்றும் தோன்றியது.

ஆனந்தன் கதவைத் திறந்து வண்டியில் நுழைந்தான். வண்டியில் முன்னிரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருந்தது. வழக்கம் போல ஆனந்தன் ஜன்னலக்கருகே அமர்ந்ததும் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசத் தொடங்கினான். தன் பேச்சுக்கு யாரும் பதில் பேசாததால், அங்கே இங்கே சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு அன்று மாலை செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.

சற்று தூரத்திற்குப் பின், நேராக யாரோ ஒருவர் சாலையில் நின்று கொண்டிருப்பது ஆனந்தனின் கண்களுக்குத் தெரிந்தது. பேருந்துக்கும் அந்த மனிதருக்கும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும். திடாரென வண்டியில் ஒரு சலசலப்பு. ஒரு வேளை அவர் நின்று கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துவிட்டார்கள் போல. சிலர் அவரைப் பார்த்து வேடிக்கையாக சிரிக்க ஆரம்பித்தார்கள் – சிலர் சத்தமாக பேசினார்கள் – சிலர் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஆனந்தனின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஓர் ஆசாமி ஆனந்தனின் சட்டையைப் பிடித்திழுத்து காதருகே ‘ கடைசி இருக்கைக்கும் ஆள் வந்தாச்சு .. கடைசி இருக்கைக்கும் ஆள் வந்தாச்சு ..அவர் உன் பக்கத்துல தான் உட்காரப் போகிறார் ‘ என்று முணுமுணுத்தார்.

அவர் சொன்னதன் விளக்கம் எதுவும் புரியாமல் ஆனந்தன் முழித்துக் கிடந்தான். இதற்குள்,டிரைவர் முன்னை விட அதிக வேகத்தில் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். சூறாவளி போன்ற காற்று ஆனந்தனின் காதுகளைக் கிழித்து சத்தமெழுப்பியது. இப்போது தூரத்தில் தெரிந்த அந்த நபர் மிக அருகிலே தெரிந்தார். அந்த நபர் ஒரு பெண். அந்தப் பெண் பேருந்தை நிறுத்துவதற்காகக் கையசைத்துக் கொண்டிருந்தாள். பேருந்து அவளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் அந்த இடம் ரத்தமயமாகக் காட்சியளித்தது. பேருந்து மோதியதும் பயத்தில் ஆனந்தன் கதறி அழுதான். பேருந்திலிருந்த மற்றவர்கள் அனைவரும் அந்தப் பெண் இறந்ததைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வேகமாக வந்த பேருந்து அந்தப் பெண்ணின் மீது மோத அவள் 50 மீட்டருக்கும் மேலாக பறந்து பின், சாலையோரம் இருந்த சாக்கடையில் பிணமாகி விழுந்தாள். பின் பேருந்து மெல்ல நின்றது. கதவு திறந்தது. ஆனந்தன் படிகட்டின் வழியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் இப்போது புன்னகை செய்து கொண்டே பேருந்துக்குள் நுழைந்து ஆனந்தனின் அருகில் அமர்ந்து கொண்டாள். ஆனந்தனின் முகம் ஒரு கணம் உறைந்து போயிருந்தது.

அவள் சிரித்துக் கொண்டே ஆனந்தனைப் பார்த்தவாறு பெருமூச்சுடன் ‘ஒருவழியாக.. பேருந்தில் எனக்கும் இடம் கிடைத்துவிட்டது ? ‘ என்றாள்.

‘எங்கே செல்கிறது இந்தப் பேருந்து ? ‘

‘எங்கே செல்கிறது இந்தப் பயணம் ? ‘ என்று கத்தி அழுதவாறு ஆனந்தன் உடைந்து போனான்.

‘எங்கே செல்கிறது இந்தப் பயணம் ? ‘

…..

vijaygct@yahoo.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்