ஒற்றுமை

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


“என்னால் முடியாதண்ணா”.

சகாதேவன் போட்ட சப்தத்தில் சோலைக் கிளிகள் அதிர்ந்தன. சிறகடித்துச் சடாரெனப் பறந்தன. சிட்டுக்குருவிகளின் சிருங்கார நாதம் பட்டென நின்று போயிற்று. காகங்கள் கூடக் கரையவில்லை. காது முட்டிய அமைதி. தர்மன் பீமன் அருச்சினன் நகுலன்..எல்லோரும் சிலையாய்ச் சமைந்தார்கள். அநாதியான வேத வித்துக்களை அநாதையாகப் போக விடாமல் காத்த பெருந்தகை வியாச முனிவரும் அங்கு இருந்தார். ஒருவரும் எதிர்பார்க்கவில்லை – கடைக்குட்டி சகாதேவன் இப்படிச் சொல்வானென்று.

தம்பி நீ என்ன சொல்கிறாய் என்று நகுலன் கேட்டான்.

“நாம் ஐவரும் திரெளபதையைத் திருமணம் செய்து கொள்வதென்ற முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே அண்ணா. ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறத் தர்மத்திற்கு இது இழுக்கு. மகாமேரு போன்ற பாரம்பரியமுள்ள நம் சந்திர வம்சத்திற்கு மாறாத பழி வந்து விடுமே”

பீமனுக்கு ஆத்திரம் வந்தது. அடக்கி வாசிப்பது நல்லதென்ற ஞுானமும் அவசரமாய் பின்னால் வந்தது.

“தர்மத்தின் தலைமகன் நம் மூத்தவர். அவரே ஏற்றுக் கொண்ட பின்னர் நீயேன் தயங்க வேண்டும் ? இந்த முடிவினால் மூலைக்கொன்றாய் சிதறிப் போன நெல்லிக்காய்களென எதிரிகளே எம்மை எள்ளி நகையாடுவதற்கு இடம் கொடுக்கப் போகிறாயா சகாதேவா ?”

அருச்சினன் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தான். தம்பியின் அறிவு ஏற்கக்கூடிய நியாயங்கள் இப்போது தேவை. அவை கிடைக்கும் வரை அவனது முதலைப்பிடி தளராது. நிதானமாய்க் குறி வைத்தால்தான் இவனை விழுத்த முடியும்.. .. .. சகாதேவனை ஆறுதலாக அணுகினான் காண்டாப வீரன்.

“தம்பி நீ அறிவில் இமயம். உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. திரெளபதையை சுயம்வரத்திலே நான் பெற்ற வெற்றி எங்கள் ஐவரின் ஒருமித்த வெற்றியென்பது உனக்குத் தெரியாதா ? எண்ணற்ற தியாகத் தழும்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறோம் கெளரவர்களை வெற்றி கொள்ளப் போகும் நாள் வெகு தூரத்திலில்லை. இந்நேரத்தில் இப்படியொரு முரண்பாடு நமக்குள் வரவேண்டுமா தம்பி ? ”

எதற்குமே அசையாத தலைமகன் தர்மன் இன்று சிறிது ஆட்டம் கண்டு போனான். கண்களின் கடையோரம் கசிந்தன. கையேந்திய பிச்சைக்காரனைப் போல் தம்பியின் கைகளைப் பற்றினான்.

“தம்பி நடந்ததை எண்ணிப் பார். கொண்டு வந்ததை ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என் செல்வங்களே என்று நம் அன்னை சொன்னார். நாம் கொண்டு வந்தது திரெளபதை என்று தெரிந்து கொண்டதும் சத்தியம் தவறி விட்டேனே என்று மனம் பதை பதைத்துப் போனார். தம்பி, தர்மத்திற்குப் புறம்பான சிந்தனைகள் என் மனத்துள் நுழைய நான் என்றுமே இடம் தந்ததில்லை. அந்தப் புனிதமான நிலையிலிருந்து உனக்கு ஒன்று சொல்கிறேன். என்றுமே சத்தியம் தவறாத நம் அன்னையின் கவலையை நாம் போக்க வேண்டும். தாயின் எந்தவொரு சொல்லும் சத்தியம்தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இதனால் என்ன பாபம் வந்து சேர்ந்தாலும் சரி, சந்தோசமாய் ஏற்றுக் கொள்வோம் தம்பி”

சகாதேவன் வானத்தை பார்த்தான். மண்ணைப் பார்த்தான். மூத்த அண்ணனைப் பார்க்கக் கூச்சப்பட்டான். மரியாதை கருதி மூத்தவருடன் அவன் நிமிர்ந்து பேசுவதில்லை. ஆனால் இப்போது பேசியாக வேண்டும்.

“அண்ணா தர்மத்தை ஐயந்திரிபற உணர்ந்தவர் தாங்கள். அண்ணன் அருச்சினனை கணவராக அடைய விரதம் காத்தவர் திரெளபதை. இன்று நமக்காக தன்னுடைய இளமைக்கனவுகளை மனதின் அடியில் ஆழப் புதைத்துவிட்டார். அவருடைய இதயத் துடிப்பை யாராவது எண்ணிப் பார்த்தோமா ? கெளரவர்களோடு உரிமைக்காகப் போராடும் நாம் நம்மை நம்பி வந்த பெண்ணின் உரிமையைப் புறக்கணித்து விட்டோம். இது நியாயமா அண்ணா ? ”

வியாச முனிவர் சகாதேவனை தீட்சண்யமாகப் பார்த்தார்.

“மகனே, திரெளபதை உத்தமமான புருசனை அடைய வேண்டி போன பிறப்பில் ஐந்து தடவைகள் பெரும் விரதம் காத்து சிவபெருமானை வழிபட்டாள் என்பதை நான் அறிவேன். இப்பிறப்பில் ஐந்து நற்குணம் வாய்ந்த கணவர்களை மணம் செய்து கொள்ள அவளுக்கு அருளப்பட்டிருக்கிறது. அதற்கான தகுதி உங்கள் ஐவரைத் தவிர இப்ப+வுலகில் வேறு எவருக்குமில்லை. உங்களது ப+ர்வஜென்ம வினைகளும் அவளையே பொது மனையாளாக்கிக் கொள்ள இடம் தருகிறது. எனவே இந்த அப+ர்வ இல்லறக் கலப்பை சாஸ்வதமாக்க நீ ஒத்துழைக்க வேண்டும்.”

சகாதேவன் தலைகுனிந்தபடியே சொன்னான்.

“குருதேவா உங்கள் வாயிலிருந்து உதிரும் தெய்வீக வார்த்தைகளை நான் மறுதலிக்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். இந்த நாகரிக சமுதாயம் கண்டும் கேட்டுமிராத புதியதொரு உறவுச் சிக்கல் இது. ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய நெறியை ப+ர்வ ஜென்ம வினைகளைக் காரணம் காட்டி நியாயப் படுத்துவது அடுக்குமா சுவாமி. திரெளபதையின் கற்பு என்னாவது ? ”

தாடியை ஒரு முறை தடவி விட்டுக் கொண்டார் குருதேவர். விளக்க விளக்கப் புதிதாகத் தோன்றும் விணாக்கள்! கல்வி கேள்வியில் ஒப்புயர்வற்ற ராஜகுமாரனல்லவா ? நிதானமாகத்தான் அணுக வேண்டும்.

“சகாதேவா, மனதின் புனிதத்தை ஒட்டியது தான் கற்புநெறி. திரெளபதையின் மனம் பரிசுத்தமானது. அவளின் கற்பு நெறியைக் கெடுக்க யாராலும் முடியாது. பவித்திரமான மனம் ஐந்து புலன்களுக்கும் விசுவாசமான சேவையை ஆற்றவில்லையா ? அது போல தன் கற்பு நெறிக்கு களங்கம் ஏற்படாமல் கணவர்களுக்குத் தொண்டு செய்வாள் திரெளபதை, கவலையை விடு மகனே”

திருப்தியுறாத சகாதேவன் மீண்டும் கேட்டான்.

“சுவாமி மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர்களும் பின்பற்றுகிறார்களல்லவா. அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறதல்லவா. அப்படியானால் தர்மத்தின் காவலரான எங்கள் அண்ணன் தலைமேற்கொண்டு ஆற்ற முனையும் இந்தப் புதுமை உறவை மற்ற மனிதர்களும் பின்பற்றத் தலைப்பட்டு விட்டால் இந்தப் ப+வுலகம் தாங்குமா சுவாமி ?”

“சகாதேவா வேறெந்த மனிதரும் இப் பிரமாணத்தைப் பின்பற்றக் கூடாது மட்டுமல்ல எவராலும் முடியாது என்பதும் என் கருத்து. ஏன் தெரியுமா ? உயர்ந்த நெறிகளையுடைய சகோதரர்களோடு ஏற்றத்தாழ்வு காட்டாமல் பிணக்கில்லாத மனைவியாக இருக்க திரெளபதை போன்ற உயர்ந்த கற்புக்கரசியால் மட்டுமே முடியும். அது போலவே தமது ஆசாபாசங்களை தாபங்களைக் கட்டுப்படுத்தி ஆளுக்காள் விட்டுக் கொடுத்து நேர்மையான இல்லறம் நடத்த பாண்டவர்களால் மட்டுமே முடியும். அறிவில் உயர்ந்தவனே, ஒன்று சொல்வேன். இது எல்லாமறிந்த இறைவன் இட்ட கட்டளை. எதை நினைத்தும் நீ துன்பம் கொள்ளத் தேவையில்லை. காரண காரியங்களைப் போட்டுக் குழப்பி வீணாக மண்டையை உடைத்துக் கொள்ளாதே., பிரார்த்தனைக்கு நாழியாகிறது நான் வருகிறேன்”

என்று கூறியபடியே முனிவர் இடத்தை விட்டு அகலத் தொடங்கினார்.

குருதேவரின் பதிலோடு தம்பி மனம் மாறி விடுவானென்ற நம்பிக்கை ப+க்க மூத்தவர் நால்வரும் குருதேவரோடு அந்தச் சோலையை விட்டு அகன்றனர். ஓரு தனிக்குயில் அரச மர உச்சியிலிருந்து கூவ் கூவ் கூவ் என்று கூவிக் கேட்டது.

அறிவும் ஆற்றலும் நிறைந்த அண்ணன்மார் சொல்லி விட்டார்கள். ஐம்புலனின் ஓட்டத்தைத் தடுத்தாட் கொண்ட முனிவர் எல்லாம் கூறியாயிற்று. சகாதேவனின் மனம் அடங்கியபாடில்லை. அலைக்கழித்த இந்திரியங்கள். வசப்பட்ட மனம். வேலை நிறுத்தம் செய்த விவேகம். நியாயங்களை நிறுக்க முடியாத புத்தி. குழம்பிப் போனான் சகாதேவன். எண்ணங்களின் பேயோட்டத்தைக் நிறுத்தி எதையுமே நினைக்காமல் ஒரு கணமாவது சும்மாயிருக்க அவன் பேராசைப்பட்டான். காட்டுக் குதிரை நின்றால் தானே!

மந்தமான மாலை. கருமுகிற் கூட்டங்களை நிறையப் போர்த்துக் கொண்ட களைப்பில் மயங்கிக் கிடந்தது மேகம். சோலையை அண்டியிருந்த ஆறு அடங்கிப் படுத்திருக்க ஆற்றுக்கு அந்தப் பக்கம் பளிச்சென்ற பச்சைப் புல்வெளி பாய் விரித்திருந்தது. அதன் வனப்பினூடே ஏகச்சக்கர நகரம் இருளில் இலேசாகத் தேய்ந்து கொண்டிருந்ததை சகாதேவன் பார்த்தான். ஆற்றின் கரையோரம் இருந்த ஒரேயொரு படகில் படகோட்டி மட்டும் இருந்தான். வாடிக்கையில்லாததால் கண் அயர்ந்திருந்தான்.

“அக்கரைக்கு வருகிறாயா ? ”

திடுக்கிட்டு விழித்தவன் ஒன்றும் கூறாமல் பணிவுடன் தோள்த்துண்டை இடுப்பில் கட்டினான். துடுப்புகளை நேராக்கிக் கொண்டான். படகு ஊர்ந்தது. இரண்டொரு கணங்கள் நீர் கிழிந்த அழகில் லயித்து விட்டு மீண்டும் விடை காண முடியாத சூனியப் பிரதேசத்தில் பிரவேசித்தான் சகாதேவன். கொளுத்தும் வெய்யிலில் வெறும் கால்களுடன் நடந்த தவிப்பு.

ஏனம்மா அவிழ்க்க முடியாத இந்த முடிச்சைப் போட்டாய். எந்தத் தாயாவது இப்படியொரு சிக்கலைக் கொடுத்திருப்பாளா ? இதென்ன சிறு பி;ள்ளைகள் நடத்தும் விளையாட்டுக் கல்யாணமா ? ஐந்து பேரும் சேர்ந்து ஒரே பெண்ணை!’

அவனுடைய சலிப்பு வெளியேயும் கேட்டது.

“என்னய்யா”

படகோட்டி பயந்து போய்க் கேட்டான். அவன் பள்ளியின் படி கூட ஏறிப் பார்த்திராதவன். நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்களை அங்குமிங்கும் ஏற்றியிறக்கும் சாமானியன். மீசை மட்டுமே பெரிதாக வைத்திருந்தான். துடுப்புகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு கை கட்டி அடக்கத்தோடு கேட்டான்.

“தர்மராசாவோட கடைசித் தம்பி உங்களுக்கு என்ன கலக்கம் ? நாங்கெல்லாம் உங்களையே மலை போல நம்பியிருக்கோம். நீங்க வாடியிருக்கலாமா சாமி ? ”

பொல பொலவென விடியும் நேரம் – தூரத்தில் மெலிதாகக் கேட்கும் சேவலின் கூவலாக இனிமையாக இருந்தது அவன் பேச்சும் கிராமத்தனமும். தானுண்டு தன் படகுண்டு தன் ஆற்றங்கரையென்னும் குறுகிய உலகமுண்டு என்று இருக்கும் இந்த ஏழைத் தொழிலாளியிடம் என் பிரச்னையைப் புலம்புவதால் என்ன பயன் விளையப் போகிறது ? பெரிய இடத்து விசயம் இது என்று பேசாமலே இருந்து விடுவான்.

படகின் இயக்கம் தொடர்ந்தது. கீழே என்ன நடந்தாலும் எனக்கு ஒன்றுமில்லையென்று மேகம் இருண்டு கொண்டே வந்தது.

“மகாராசா, எனக்குப் புரிஞ்சு போச்சு”

படகோட்டி கண்டு பிடித்து வாய் விட்டுக் கத்தினான்.

என்ன என்று கேட்டபடி ஆர்வமில்லாமல் சகாதேவன் தலை நிமிர்ந்தான்.

“உங்க நாட்டை உங்க வீட்டை உங்க உரிமைகளை உங்க சுதந்திரத்தை அவங்க பறிச்சு எடுத்திட்டாங்கன்னுதானே கவலைப்படுறீங்க. கவலையை விடுங்க சாமி. நேர்மையும் வீரமும் ஒத்துமையும் இருக்கிற வரைக்கும் எந்தக் கொம்பனாலும் உங்களை அசைக்க முடியாது சாமி. துக்கத்தைத் தூக்கியெறிஞ்சிட்டு சந்தோசமா இருங்கையா”

“என்னை இப்போது வாட்டுகிற பிரச்னை அதுவல்ல நண்பனே”

“பின்ன வேறென்னய்யா”

சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது. இவ்வளவு விசுவாசம் காட்டும் இவனிடம் கூறாமல் எப்படி! சகாதேவன் எல்லாம் சொன்னான். அன்னை கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்ந்த அன்பினைச் சொன்னான். அண்ணன்மார் காலால் இட்டதை தலையால் ஏந்திய பாசத்தைச் சொன்னான். கெளரவர்கள் அடுக்கடுக்காக அநியாயம் செய்த போதெல்லாம் நிலைகுலையாது ஒன்றாக நின்றதைச் சொன்னான். இப்போது திரெளபதை என்ற புதிய பிரச்சனை. அதையும் சொன்னான்.

படகோட்டி வாய் பிளந்திருந்தான். கேட்பதில் வல்லவனாய் கிரகிப்பதில் தேர்ந்தவனாயிருந்தான் அவன். காலங்காலமாக ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றின் ஆழமான நாதங்களையெல்லாம் அன்றாடம் கேட்டுப் பழகிப் போனவன். ஆயிரமாயிரம் மக்களின் மன எழுச்சி வீழ்ச்சிகளின் கீதங்களையெல்லாம் அமைதியாகக் கேட்டுத் தனக்குள்ளே ப+ட்டிக் கொண்டவன். சகாதேவன் சொல்லி முடித்த போது படகு காற்றிற்கு அசைந்து அசைந்து கரையைச் சமீபித்து விட்டதை இருவரும் கண்டனர்.

“மகாராசா. திரெளபதை அம்மாவை நீங்க ஐஞ்சு பேரும்.”

அவன் தயக்கத்தோடு செருமினான்.

“திரெளபதை அம்மாவை நீங்க ஐஞ்சு பேரும் கல்யாணம் செய்யிறது நூத்துக்கு ஐந்நூறு வீதம் சரி சாமி”

“என்ன. என்ன சொல்கிறாய் நீ”

“உங்க அம்மாவோட சொல்லுக்கு எதிர்ச் சொல்லு இருக்க முடியாதுன்னு சொல்றேன். உங்க அம்மாவை என்ன நினைச்சீங்க சாமி. அவங்களைப் போல ஒரு தாயை வேறெங்காவது காணுவீங்களா ? தான் பெற்ற குஞ்சுகள் – நாடிழந்ததை வீடிழந்ததை மானமிழந்ததை உரிமையெல்லாம் இழந்ததை இந்தத் தள்ளாத வயசில தன் கண்ணாலேயே கண்டு ரத்தக்கண்ணீர் வடிச்சாங்களே. அவங்களோட உறுதி குலைஞ்சிட்டுதா சாமி. எப்பவாவது ஒரு நாள் என் கண்மணிகள் இழந்த எல்லாத்தையும் திரும்ப எடுப்பாங்க என்கிற நம்பிக்கை அவங்களோட நெஞ்சில நிரந்தரமா நிலைச்சிட்டுது சாமி. அது மட்டுமில்லை, இன்னும் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள அவ ஆயத்தமாயிருக்கா. இதுக்கெல்லாம் ஆதாரம் என்ன தெரியுமா சாமி”

சகாதேவன் கூர்ந்து கவனித்தான்.

“அதுதான் சாமி உங்க ஐஞ்சு பேரோட ஒத்துமை. யாராலும் உங்களைப் பிரிக்க முடியாதென்கிற ஜீவனுள்ள நம்பிக்கை. யாரேனும் உங்ளைப் பிரிச்சிரக் கூடாதே என்கிற இடைவிடாத பிரார்த்தனை. அந்த நம்பிக்கையும் வேண்டுதலும் அவ ரத்தத்தில நரம்பில பேச்சில மூச்சில இரண்டறக் கலந்து போச்சு. உங்க ஐஞ்சு பேரையும் வேற வேறயாப் பிரிச்சுப் பாக்க அவங்களால முடியலே. தன் பிள்ளைகளை ஒரு இம்மியளவும் சிதறவிடாமல் கட்டிப் போடும் அச்சாணியாக திரெளபதை அம்மாவை அவ நம்பிட்டாங்க சாமி. சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு கோஷ்டியாகப் பிரிஞ்சு அடிபட்டு மொத்தமா அழிஞ்சு போன எத்தனையோ சகோதரங்களை அவ கண்டிருக்கிறா. அதனால தான் உங்களைப் பிரிக்கக் கூடிய துரும்பைக் கூட அவ நுழைய விடமாட்டா. அப்படியான அற்புதமான தாய் நீங்க பெண்ணையல்ல பேயைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் ஒத்துமையா பங்கு போடத்தான் சொல்லுவாங்க சாமி. எத்தனை பிறவி எடுத்தாலும் இப்படியொரு தாயைக் காண முடியாது. அதனாலதான் சொல்றேன்”

அவனுக்குத் தொண்டை கம்மியது. பெரிதாக இருமினானன்.

“அவவோட சொல்லைக் காப்பாத்த வேண்டியது உங்க எல்லாருடைய கட்டாயமான கடமை. அதில தவறினீங்கன்னா”

எச்சரிக்கையோடு நிறுத்திக் கொண்டான்.

அவனால் முடிக்க முடியவில்லை. பச்சைக் குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதான். மூக்கைச் சீறினான். ஆற்று நீரை அள்ளி முகத்தைக் கழுவினான். மீசையைச் சரி செய்து நிமிர்ந்து, பிழையிருந்தா என்னை மன்னிச்சிருங்க சாமி என்றான். துடுப்புகளை இழுத்து ஓரம் வைத்தான். நீரில் இறங்கி படகைக் கரையோரம் இழுத்தான்.

சகாதேவனில் அசைவில்லை. சாதாரணக் குடிமகன் ஒருவனின் இதய ஆழத்தை இன்றுதான் அவன் நேரிலே கண்டான், கேட்டான். அந்தப் புதிய அனுபவத்தில் கண்கள் பனிக்க படகோட்டியை நன்றியோடு பார்த்தான்.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்