5வது தூண் ! !

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

இரா.பிரவீன்குமார்


“ஊழலற்ற ஆட்சி” இது எல்லா அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக ஒலிக்கும், தேர்தல் நேரத்தில் மட்டும்.ஆனால், இந்த ஊழலுக்கு அவர்கள் மட்டுமா உண்மையானவர்கள்,அரசு அதிகாரிகளும்,பொதுமக்களும் தானே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.தனக்கு ஒரு வேலை விரைவாக செயல் படவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ஊழலின் பாதைக்கு செப்பனிடுகிறோம்.இந்த பாதையானது நம்மை 70வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.ஆம், ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 70வது இடத்தில் உள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுபவை,

1.பாராளுமன்றம்/சட்டமன்றம்,

2.நீதிமன்றம்,

3.நிர்வாகம்

4.பத்திரிகை

இந்த நான்கு தூண்களிலும்,அதை சார்ந்த துறைகளிலும் படிந்துள்ள ஊழல் மற்றும் லஞ்ச கரைகளை களையவும்,இந்நான்கு தூண்களில் உள்ள விரிசல்களினாலும், சரியும் நம் ஜனநாயகத்தை தாங்க ஊழலற்ற கரங்களினால் அஸ்திவாரம் இடப்பட்டு ஐந்தாவது தூண் இந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி சிங்காரச் சென்னையில் எழுப்பியாகிற்று.இந்த தன்னார்வ அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர் திரு.விஜய் ஆனந்த். ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ எனும் ஆயுதத்தை ஏந்தியுள்ளனர் இவ்வியக்கத்தினர்.இச்சட்டத்தின் வழி அரசுத்துறையின் அனைத்துச் செயல் பாடுகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் பெற முடியும் எனவும், தேசிய வளர்ச்சிக்காக இயங்கும் ஒவ்வொரு தன்னார்வ அமைப்புகளும் ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்கள் தான் என்கிறார் திரு.விஜய் ஆனந்த் அவர்கள்.இச்சட்டத்தைக் குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே முதன்மைப் பணியாகச் செய்துவருகிறது இந்த ஐந்தாவது தூண்.

ஜனநாயகத்தின் ஆயுதமான வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வது, தங்கள் வேட்பாளர்களை மதிப்பீடுச் செய்ய மக்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவை ஐந்தாவது தூணின் உடனடித் திட்டங்கள்.வாக்களிப்பதை நிச்சயம் நாம் தவிர்க்கக் கூடாது.எந்த ஒரு கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லையேல், இந்திய சட்டப்பிரிவு 49(ஒ) மூலம் நமது வாக்கை ஒருவருக்கும் இல்லை என்று பதிவுச் செய்து,நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம்.எழுத்தாளர் திரு.ஞானி அவர்களின் “ஓ போடு” கட்டுரையின் வழி இச்சட்டப்பிரிவின் மேல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பூஜ்ஜியம் (0) ரூபாய் நோட்டை அறிமுகம் செய்துள்ளது இவ்வியக்கம்.நம்மிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம் இந்த ரூபாய் தாள்களைக் கொடுத்து அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம், இந்த நோட்டில் “அண்ணல் காந்தி” அவர்களின் புகைப்படத்துடன் “நான் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன்” என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.

லஞ்சம் என்பது நமது சமூகத்தில் சாராசரி நிகழ்வாகிவிட்டது.ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது,அத்துடன் சான்றிதழை வைப்பது போல லஞ்சத்தையும் வைக்கும் பண்பாட்டிற்கு நம்மைஇட்டுசென்றுள்ளது.

இந்நிலை கட்டாயம் மாற்றப்படவேண்டும்,இந்த மாற்றம் அதிகாரிகளிடம் இருந்து தொடங்கினால் நல்ல பலனை விரைவில் காணலாம்.அதேசமயம் தனிமனித ஒழுக்கம் என்பதும் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்,தவிர்க்க இயலாத நேரத்தில் கையூட்டு கொடுக்கும் பட்சத்தில்,அந்த கையூட்டை வாங்கியவர் பற்றிய தகவலை துறை சார்ந்த அதிகாரியிடமோ, அல்லது ஐந்தாவது தூண் போன்ற தன்னார்வ அமைப்புகளிடமோ, தகவல் கொடுத்து,நமக்கு அடுத்து வருபவர்களுக்காவது நல்ல சூழலை ஏற்படுத்தலாம். இது ஓய்வு பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒருவரின் கருத்து.நிச்சயம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் சிந்தனை. உதாரணத்திற்கு தற்போதைய சூழலில் அரசு மருத்துவமனையில் அவசரப்பிரிவிற்கு வரும் ஒரு நோயாளியை காப்பாற்ற கையூட்டு கொடுக்கும் சூழலில், கையூட்டை வாங்கியவர் பற்றிய தகவலை உரிய இடத்தில் தெரிவித்து,அடுத்து வரும் நோயாளிகளுக்கு உதவலாம்.

ஐந்தாவது தூணின் சீரிய வளர்ச்சி நல்ல பாதையை நோக்கி என்பதை விளக்க ஒரு எடுத்துக்காட்டு உங்கள் பார்வைக்கு, நமக்கு நாமே திட்டத்தின் வழி சேலத்தில் இருக்கும் அரசு பள்ளியின் சுற்றுச் சுவரைக் கட்டுவதற்கு “எய்ம்ஸ் இந்தியா” அமைப்பு ரூ.43750 தொகையை 2005ல் உரிய பஞ்சாயத்து அதிகாரிகளிடம் வழங்கியது,இடையில் வழக்கமாக, கொள்கையே இல்லாத அரசியல் கட்சியின் கொள்கை மாற்றத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.இதனால் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தனர் பஞ்சாயத்து அதிகாரிகள். “எய்ம்ஸ் இந்தியா” அமைப்பின் அதிகாரிகள் 2007 ஜனவரியில் சேலம் மாவட்ட ஆட்சிதலைவரிடம் நன்கொடை பணத்தைத் திருப்பிக் கோருவதற்கான கடிதத்தைக் கொடுத்தனர்.பணத்தை உடனடியாக வழங்குமாறு ஆட்சித் தலைவரும் உத்தரவிட்டார்.ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் “எய்ம்ஸ் இந்தியா” அமைப்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்கையில் இன்று நாளை என்று பணத்தைத் தராமல் 2 மாதம் இழுத்தடிப்பு செய்தனர்.கடைசியில் ஐந்தாவது தூண் களத்தில் குதித்து சம்மந்தப்பட்ட அலுவலகத்திடம் தொடர்புக் கொண்டு, மறுநாளே ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ மூலம் மனு செய்யப் போவதாக தெரிவித்தனர். ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ எனும் பெயரைக் கேட்டதும் அப்படிச் செய்ய வேண்டாம் எனவும்,இதை உடனடியாக கவனிப்பதாகவும் உறுதி அளித்தனர்.மறுநாளே 2007 மார்ச்சு 27 தேதி காலை 10மணி அளவில்

சம்மந்தப்பட்ட அலுவலகத்திடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஐந்தாவது தூணில் அலரியது.வரைவோலை தயாராகி விட்டதாகவும் இன்னும் சில மணிநேரத்தில் அது உரியவருக்கு அனுப்பப்பட்டு விடும் எனும் தகவலோடு அலரியது, அந்தத் தொலைபேசி அழைப்பு.அதன்படி மறுநாளே “எய்ம்ஸ் இந்தியா” அமைப்பிற்கு அந்த வரைவோலை கிடைத்தது.கடந்த இரண்டு ஆண்டாகத் தீர்க்கப்படாத பிரச்சனை ஐந்தாவது தூணின் வழி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பெயரில் இரண்டு நாட்களில் தீர்க்கப்பட்டது.

ஐந்தாவது தூண் போன்ற தன்னார்வ அமைப்புகளின் வளர்ச்சி இந்தியாவை ஊழலற்ற நாடுகளின் வரிசையில் முதன்மை இடத்தை அடையச் செய்யும் என்பது நிதர்சனம். இது போன்ற தகவல்களை அச்சேற்றி, ஒரு சமூக அரசியல் மாற்றத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும், அய்யா திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் தலைமையில், மக்கள் சக்தி இயக்கத்தின் வழி வெளியாகும் “நம்பு தம்பி நம்மால் முடியும்” எனும் மாத இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவிற்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஐந்தாவது தூணின் இனையமுகவரி : www.5thpillar.org

ஐந்தாவது தூணின் மின்னஞ்சல் : ENDcorruption@5thpillar.org

இடைக்காலத்தில் முட்செடியாக இருந்த ஊழழும்,லஞ்சமும் தற்பொழுது கருவேல மரமாகியுள்ளது.அந்த மரத்தை அழிக்க ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ எனும் கோடாரியை ஏந்தியுள்ள ஐந்தாவது தூணும், “நம்பு தம்பி நம்மால் முடியும்” எனும் மாத இதழை ஏந்தியுள்ள மக்கள் சக்தி இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளின் மூலம் நாடு நல்வழியை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

“புரட்சிகள் நம்மில் ஆரம்பம்”

இதமுடன்

இரா.பிரவீன்குமார்

(praver5@gmail.com)


www.velgatamil.page.tl

Series Navigation

author

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்

Similar Posts