27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

கேதார் சோமன்


1680இல் சிவாஜி மறைந்ததும், அரசகுலத்தில் சற்றுகாலம் யார் அடுத்த பேரரசர் என்ற சண்டை நடந்து அதன் முடிவில் ஷாம்பாஜி பேரரசரானார். இந்த நேரத்தில் அவுரங்கசீப் தனது வடக்குப் பிரச்னைகளை முடித்துவிட்டு தக்காணத்தில் நுழைந்து முழு இந்தியாவையும் கைப்பற்ற திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
1681இல் ஷாம்பாஜி ஜஞ்ஜீராவை தாக்கினார். இந்த முதல் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவுரங்கசீப்பின் தளபதிகளில் ஒருவரான ஹூசேன் அலி கான் வடக்கு கொங்கண் பிரதேசத்தை தாக்கினார். ஷாம்பாஜி ஜஞ்ஜீரா தாக்குதலை நிறுத்திவிட்டு ஹூசேன் அலி கானை தாக்கினார். அவரை அஹ்மதுநகர் வரை பின்வாங்க வைத்தார். இந்த நேரத்தில் 1682இன் பருவகாலம் ஆரம்பித்தது. மழையினால் இரண்டு புறத்திலும் போரை நிறுத்திவிட்டனர். ஆனால், அவுரங்கசீப் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. போர்ச்சுக்கீசியருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு முகலாய கப்பல்கள் கோவாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டார். இது தக்காணத்துக்கு தனது தளவாடங்களை கடல் மூலம் அனுப்ப வசதியை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த செய்தி ஷாம்பாஜியை அடைந்தது. அவர் உடனே போர்ச்சுக்கீசியர்களது நிலங்களை தாக்கி கோவாக்குள் ஆழமாக நுழைந்தார். ஆனால் வைசிராய் அல்வோர் போர்ச்சுக்கீசியரின் தலைமை இடங்களை காப்பாற்றிக்கொண்டார்.
இதே நேரத்தில் முகலாய ராணுவம் தக்காணத்தின் எல்லைகளில் குவிய ஆரம்பித்தது. தென்னிந்தியா ஒரு பெரிய போராட்டத்துக்கு தயாராவது தெளிவாக ஆரம்பிக்கிறது.
இதனால், ஷாம்பாஜி போர்ச்சுக்கீசியர்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1683இன் இறுதியில், அவுரங்கசீப் அஹ்மதுநகருக்கு குடிபெயர்ந்தார். தன்னுடைய ராணுவத்தை இரண்டாக பிரித்து தனது இரண்டு மகன்களில் தலைமையில் கொண்டுவந்தார். ஒன்று ஷா ஆலம். மற்றொன்று ஆஜம் ஷா. ஷா ஆலம் கர்னாடகா எல்லை வழியாக தெற்கு கொங்கணத்தை தாக்கவேண்டும். ஆஜம் ஷா கந்தேஷ், வடக்கு மராத்தா நிலங்களை தாக்க வேண்டும். கத்திரி வியூகத்தின் மூலம் இந்த இரண்டு பிரிவுகளும் மராத்தாக்களை தெற்கிலும் வடக்கிலும் சுற்றி வளைத்து தனிமைப்படுத்த வேண்டும்.
போரின் ஆரம்பம் அவுரங்கசீப்புக்கு சிறப்பாக சென்றது. ஷா ஆலம் கிருஷ்ணா நதியை தாண்டி பெல்காமில் நுழைந்தார். அங்கிருந்து அவர் கோவாக்கு சென்று கொங்கண் வழியே வடக்குக்கு செல்ல ஆரம்பித்தார். மேலும் மேலும் அவர் செல்ல செல்ல, அவரை மராத்தாக்கள் துன்புறுத்திகொண்டே இருந்தனர். அவரது தளவாட உணவு வண்டிகள் மீது தாக்குதல்களை தொடுத்தனர். இதனால், ஷா ஆலமின் போர்வீரர்கள் பட்டினி கிடக்க வேண்டியிருந்தது. இறுதியில் அவுரங்கசீப் ருஹுல்லா கானை அனுப்பி ஷா ஆலத்தை காப்பாற்றி அஹ்மதுநகருக்கு கூட்டிவந்தார். கத்திரியின் முதல் முயற்சி தோல்வியடைந்தது.
1684இன் மழைப்பருவகாலத்தின் பின்னர் , அவுரங்கசீப்பின் மற்றொரு தளபதி ஷஹாபுதீன் கான் நேரடியாக மராத்தா தலைநகரான ராய்காட் கோட்டையை தாக்கினார். ராய்காட் கோட்டையை மராத்தா தளபதிகள் வெற்றிகரமாக பாதுகாத்தனர். அவுரங்கசீப் கான் ஜெஹானை உதவிக்கு அனுப்பினார். ஆனால், மராத்தா ராணுவத்தின் தலைமை தளபதி ஹம்பீர் ராவ் மோஹிதே அவரை பட்டாடியில் கடுமையான போரில் தோற்கடித்தார். மராத்தா ராணுவத்தின் மற்றொரு பிரிவு ஷஹாபுதீன் கானை பச்சாட் என்னுமிடத்தில் தாக்கியது. இங்கு முகலாய ராணுவத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.
1685இன் ஆரம்பத்தில், ஷா ஆலம் மீண்டும் தெற்கை தாக்கினார். இப்போது கோகக்- தார்வார் சாலையின் வழியே நுழைந்தார். ஆனால், ஷாம்பாஜியின் படைகள் அவரை தொடர்ந்து தாக்கியதால், இறுதியாக அந்த முயற்சியை கைவிடவேண்டியதாக ஆயிற்று. இரண்டாம் முறையாக கத்திரி வியூகம் தோல்வியடைந்தது.
ஏப்ரல் 1685இல் அவுரங்கசீப் தனது போர்திட்டத்தை மாற்றியமைத்தார்.தெற்கில் தனது ஆட்சியை உறுதிப்படுத்த கோல்கொண்டா பிஜப்பூர் சுல்தானேட்டுகள் மீதே படையெடுத்தார். இரண்டு சுல்தானேட்டுகளும் ஷியா முஸ்லீம் அரசர்கள். அவுரங்கசீப் அவர்களையும் காபிர்கள் என்றே கருதினார். இதனால், அவர்களோடு ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு அவர்கள் மீதே படையெடுத்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மராத்தாக்கள், வடக்கு கடற்கரை மீது படையெடுத்து பாருச்சை தாக்கினர். அவர்களை தாக்க அனுப்பப்பட்ட முகலாய ராணுவத்தின் கையில் சிக்காமல் தாக்குதலை முடித்துவிட்டு மிகக்குறைந்த இழப்புடன் திரும்பினர்.
அவுரங்கசீப்பின் புதிய தெற்கு போர்முனையில், வெற்றிகள் துரிதமாக கிடைத்தன. பிஜாப்பூர் செப்டம்பர் 1686இல் வீழ்ந்தது. சிக்கந்தர் ஷா பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். கோல்கொண்டா ஏராளமான கப்பத்தை கட்டுவதாக ஒப்புக்கொண்டது. பணம் கைக்கு வந்ததும், மீண்டும் ஒப்பந்தத்தை முறித்து, அவுரங்கசீப் கோல்கொண்டாவை தாக்கினார். வெகுவிரைவிலேயே கோல்கொண்டாவும் வீழ்ந்தது. கோல்கொண்டாவின் அரசர் அபு ஹூசேன் பிடிக்கப்பட்டு சிக்கந்தர் ஷாவுக்கு நிகழ்ந்ததே அவருக்கும் நடந்தது.
மைசூரை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள பேச்சுவார்த்தை மூலம் மராத்தாக்கள் முயன்றனர். கேசோபாந்த் பிங்க்ளே (மோரோபாந்த் பிங்களேயின் சகோதரர்) பேச்சுவார்த்தை நடத்தினார். முகலாயரிடம் பிஜாப்பூர் வீழ்ந்ததும் மைசூர் மராத்தாக்களுடன் சேர தயங்கியது. ஆயினும் ஷாம்பாஜி பல பிஜாப்பூர் சர்தார்களை மராத்திய ராணுவத்தில் சேர அழைத்து இணைத்துக்கொண்டார்.
பிஜாப்பூரும், கோல்கொண்டாவும் வீழ்ந்ததும், மீண்டும் அவுரங்கசீப் தனது கவனத்தை தனது முக்கிய எதிரியான மராத்தாக்களிடம் திருப்பினார். முதல் சில முயற்சிகள் பெரும் விளைவை ஏற்படுத்த முடியாமல் தோல்வியடைந்தன. ஆனால், 1688இல் அவுரங்கசீப்புக்கு பெரும் ஜாக்பாட் கிடைத்தது. சங்கமேஷ்வரில் ஷாம்பாஜி பிடிக்கப்பட்டார். ஷாம்பாஜி தன் அலட்சியத்தாலும், தன்னைச் சுற்றியிருந்தவர்களின் துரோகத்தினாலும் பிடிபட்டார். அவுரங்கசீப் அவரை இஸ்லாமுக்கு மதம் மாற சொன்னார். ஷாம்பாஜி மறுத்தார். அதனால், வெற்றிகளால் குருடான அவுரங்கசீப் ஷாம்பாஜிக்கு மிகவும் மோசமான தண்டனையை அளித்தார். ஷாம்பாஜி கழுதை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, அவரது நாக்கு வெட்டப்பட்டது. அவரது கண்கள் தோண்டியெடுக்கப்பட்டன. அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு நாய்களுக்கு போடப்பட்டது.
ஷாம்பாஜியை பிடிக்காதவர்கள் நிறையபேர்கள் இருந்தார்கள். அதனால் அவர்கள் முகலாயர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், இந்த காட்டிமிராண்டித்தனமான செயல், எல்லோரையும் கடுங்கோபத்தில் ஆழ்த்தியது. மராத்தா தளபதிகள் ராய்காட்டில் குழுமினர். எடுத்த முடிவு ஒருமித்த முடிவு. எல்லா சமாதான முயற்சிகளும் வாபஸ் பெறப்படவேண்டும். முகலாயர்களை என்ன விலை கொடுத்தாலும் தோற்கடிக்க வேண்டும். ராஜாராம் அடுத்த அரசராக ஆனார். ராய்காட்டில் உணர்ச்சி கொந்தளிக்கும் வீர உரை மூலம் தனது ஆட்சியை ஆரம்பித்தார். எல்லா மராத்தா தளபதிகளும், பிரதிநிதிகளும் புதிய அரசரின் கொடியின் கீழ் ஒருமித்தனர். ஆகவே இவ்வாறாக இந்த மாபெரும் போரின் இரண்டாம் பகுதி தொடங்கியது.
(தொடரும்)

Series Navigation

author

கேதார் சோமன்

கேதார் சோமன்

Similar Posts