பொங்கல் வாழ்த்துக்கள்
Published January 17, 2008 • By
ரஜித்
ரஜித்

பெரிய முள் உழைப்பு
சிறிய முள் மக்கள்
கடிகாரம் சிங்கை
திருத்திக் கொள்கின்றனர்
நேரத்தை
உலகத் தமிழர்கள்
எம் சிங்கைக்
கடிகாரம் பார்த்து
வெள்ளிக் காசை
வியர்வைத்
துளிகளால் வாங்கும்
சிங்கை மண்ணுக்கு
எம் பொங்கல் வாழ்த்துக்கள்
rajid_ahamed@yahoo.com.sg
பொங்கல் வாழ்த்துக்கள்
கவிஞர் புகாரி

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது
—-
buhari@gmail.com