பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேம்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

Fig. 1
Arjun War Tank

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

Fig. 1A
Indian Developed Rockets

இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்·ப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ஆம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.


Fig. 2
Agni-2 Missile

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


Fig. 3
Indian Radar to Spot Missiles

1. நாக தாக்குகணை – ராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எ·குக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன்
நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

Fig. 4
Field Artillery Firing

3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)


Fig. 5
Indian ICBM

5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ஆம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ஆரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.


Fig. 6
Surya Rocket Assembly

(தொடரும்)

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2007)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா