“ஹால் டிக்கெட்”

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


சார் டிக்கெட் ! . கண்டக்டர் ஞாபகப் படுத்தவும், கையில் கிடைத்த சில்லறையை எடுத்துக் கொடுத்தேன். எவ்வளவோ காச நோய்க்காரர்கள், தொழு நோய்க்காரர்கள் மற்றும் உடலின் பாகங்களை, ஓட்டைகளைத் துழாவியவர் அந்தப் பித்தளைக் காசுகள தொட்டுத் துழாவியிருக்கவேண்டும். பூதக் கண்ணாடி மூலம் பார்த்தால் விண்வெளியிலிருந்து வரும் எரி நட்சத்திரங்களில் இருக்கும் பாக்டாரியாக்களை விட அதிகம் இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். இதிலேயே ஆராய்ச்சி செய்து “டிகிரி” வாங்கலாமே ?.

ரஜினி ஸ்டைலில் “டிக் ! டிக்” ! கண்ணாடி முன்னால் சொடக்கிப் பார்த்தேன். டிக்கெட்டிற்கும் எனக்கும் உள்ளத் தொடர்பினை எண்ணிப் பார்த்தேன்.

முதன் முதல் எட்டாம் வகுப்புப் பொது தேர்விற்கு, பள்ளிக் கூட கிளார்க்குகள் ஈர சாக்பீஸால் ஒரு நம்பரை உடைந்த மர மேசையின் மீது எழுதிவிட்டு, மக்கிப் போன ஒரு பழுப்புக் காகிதத்தில் என் பெயரைத் தப்பாக “டைப்” அடித்துவிட்டு, ஹால் டிக்கெட் மூலையில் அந்த நம்பரை “பந்தாவாக”க் கொட்டை வடிவத்தில் டைப் அடித்துக் கொடுப்பார்கள்.

கைகள் நடுங்க எல்லைக் காளியம்மன், எல்லையம்மன், சுந்தரமூர்த்தி விநாயகர், வினை தீர்க்கும் கற்பக விநாயகர் முதலோரைத் துணைக்கு அழைத்து ஹால் டிக்கெட்டை டாச்சரிடமிருந்து வாங்கி, பத்திரமாகப் புத்தகத்தில் வைப்பேன். “தொலைத்தையோ 8ம் வகுப்பில் தொலைந்தாய். பரீட்சை எழுத முடியாது என்று டாச்சர் பயமுறுத்தியிருந்தார்.

ஹால் டிக்கெட்டை கெட்டியாகப் பிடித்தவாறு ரோடில் மாட்டுச் சாணத்தைக் கூட மிதிக்க முடியாமல், அதையும் தாண்டி வீட்டிற்குப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தேன். ரிப்போர்ட் கார்டு மாதிரி ஹால் டிக்கெட்டை அம்மா, அப்பா, அக்கா, அண்ணா என்று அனைவரிடமும் காண்பித்தேன். வீட்டில் சிறிய பர பரப்பு அலை பரவியது. அம்மாவிற்குப் பெருமிதம். “கண்ணா, ஹால் டிக்கெட்டை” “உம்மாச்சி” காலில் வைத்துப் பிறகு பரீட்சைக்குக் கொண்டு போப்பா!” என்பாள். “உம்மாச்சி” என்று எனக்கு 3 வயதில் சாமியைப் பார்த்துக் காண்பித்துக் கொடுத்தவள் எனக்கு 13 வயதானாலும் அப்படியே கூறியது வேடிக்கையாக இருந்தது.

பழுப்புக்காகிதத்தினால் வெக்கப் பட்டோ என்னவோ எங்கள் பள்ளி கிளார்க் அழகாக பூப் போட்ட ( டைப்ரைட்டரில் * “கீ”) “பார்டர்” போட்டு ஹால்டிக்கெடை அலங்கரித்திருந்தாள். முதல் பரீட்சை “தமிழில்”. ஹால் டிக்கெட் அழகாக ஆங்கிலத்தில் இருந்தது. நானோ ஆங்கில மீடியம். எனக்கு தமிழாசிரியர் பெயர் அகத்தியர். இரண்டாயிரம் வருடங்களாக மாற்றுதல்களோடு வாழும் தமிழை அழிக்க என்னை நன்ராகத் (“நன்றாக” என்று சில வருடங்களுக்குப் பின் தான் நன்றாக எழுதக் கற்றுக் கொண்டேன் !) தயாரித்திருந்தார். அதனால் தான் என்னவோ, எனக்கு

ஹால் டிக்கெட் ஆங்கிலத்தில். இப்படியெல்லாம் ஹால் டிக்கெட்டைக் கிண்டல் செய்யக் கூடாது என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு சரஸ்வதியின் (படிப்புக் கடவுள்) காலில் போட்டு விட்டுத் தமிழைப் படிக்கலானேன்.

தமிழ் விழுந்து விழுந்து படித்து தேர்வை எழுதிவிட, அந்த அகத்தியர் சுழித்து, அடித்துப் பிழைத்திருத்தினார். கடைசியில் 55 அல்லது 60 மார்க் வாங்கும் காட்சி எனக்கு இப்போதே தெரிந்திருந்தது. பிரெஞ்சு எடுத்திருக்கணும். ஆங்கிலத்தில் எழுதி தப்பிக்கலாம்.

தேர்வு போகும்போதே “தமிழ் ஒழுங்காகப் படித்தாயா ?” என்று கேக்காமல் பரீட்சை நாளன்று அப்பா, “ஹால் டிக்கெட்” எடுத்துக் கிட்டியா ?” என்றார். அம்மா “ஹால் டிக்கெட்ட் (கொஞ்சம் அழுத்தியே கேட்டாள்) ?”. அன்றாள். அக்கா “ஹால் டிக்கெட் மறக்கப் போறே” என்றாள். அண்ணா, “பேப்பருக்குப் பதிலா, ஹால் டிக்கெட் கொடுக்கப் போறான்” என்றான். ஹால்டிக்கெட் வினாத்தாள், விடைத்தாள் மாதிரி கொஞ்சம் பழுப்பு நிறத்திலிருந்தாலும் இப்படியா ?.

“சரி ! சரி” யென்று பதைபதைப்புடன் பாக்கெட்டில் ஹால் டிக்கெட்டைப் போட்டுக் கொண்டேன். என் பேனா கொஞ்சம் இங்க் ஒழுகும். ஹால் டிக்கெட் அதன் பக்கத்தில் இருந்ததால், நீல “பிரில் இங்க்” ஊறி இந்தியா “மேப்” பரவியிருந்தது. என் பெயரில் குமார் “குxர்” என்றாகியிருந்தது. என் ஹால் நம்பரும் 6 எழுத்திலிருந்து 5 ஆகியிருந்தது. ஏற்கனவே ஈர சாக்பிசில் கிறுக்கப்பட்ட நம்பர்கள் சாந்தி முகூர்த்தப் படுக்கை போலக் கலைந்து விட்டிருந்தது. (எந்த இடத்தில் எதை பற்றிக் கற்பனை வருது பாருங்கள் !). எனக்கு படு “டென்ஷன்”. (சாந்தி முகூர்த்தப் படுக்கை கலையவில்லையென்றால் நம் பெருசுகளுக்கு ஒரு “டென்ஷன்” வருமே ! அதைப் போல ).

வாழ்க்கை போய் விட்டதா ?.

கலைந்தது அவ்வளவு தானா ? திருப்பி வராதா ?.

நான் ஹால் டிக்கெட்டைப் பற்றித் தான் பேசுகின்றேன்.

உவமை சரியில்லாததால் தான் அன்றைய தமிழ் தாள் 1 சுமார் 55/100 மட்டுமே வாங்கினேன்.

ஒரு வழியாகப் பள்ளி கிளார்க் வந்தாள். கண்ணாடியைச் சரி பார்த்து ரிஜிஸ்டரில் என் பெயரைப் பார்த்து விட்டு மீண்டும் திருத்திய ஹால் டிக்கெட்டைக் கொடுத்து விட்டுப் போனாள். அதற்குள் டென்ஷனில் வினாத்தாள், விடைத்தாள், ஹால்டிக்கெட் அனைத்திலும் பேனா மூலம் இங்க் பொட்டுக்கள் வைத்திருந்தேன். இங்க் பொட்டுக்கள் உறியப்பட்டு மஞ்சள், நீலமாகப் பேப்பரை அடித்திருந்தது.

இல்லாமல் வாழ்க்கையைத் தொலைக்கும் சினிமாக்களைப் பார்த்து விட்டு வீட்டுப் பெருசுகளும் நம்மைப் பயமுறுத்த, பரீட்சைக்குப் போகும் போது ஹால் டிக்கெட்டைத் தவறவிட்டு பல்லவன் பஸ்ஸின் பின்னால் “கோவெ”என்று கதறியபடி ஓடும் காட்சிகள் வந்து பயமுறுத்தும். தடுக்கி விழ பாக்கெட்டிலிருந்து ஹால் டிக்கெட் பறக்க ஒரு அழகானப் பெண்ணின் காலில் விழ அவள் எடுத்துக் கொடுத்து நம் வாழ்க்கையையும் காப்பாற்ற ஹால் டிக்கெட்கள் நெஞ்சமற நிறைந்து நம்முடன் வாழ்ந்திருக்கின்றன.

முதன் முதலாகப் பச்சைக் காகிதத்தில் ஹால் டிக்கெட்டுக்கள் ரயில்வே ரிசர்வேஷன் பேப்பர் டிக்கெட் போன்று கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் போடப் பட்டு கொடுக்கப்பட்ட போது நவ நாகரீக உலகத்தில் கால் எடுத்து வைப்பதாக உணர்ந்தேன். அப்ப தான் உறைத்தது. ஹால் டிக்கெட் வைத்து வேலை கிடைக்கும், ஹால் டிக்கெட் வைத்து பணம் கிடைக்கும் என்பதெல்லாம் ஒரளவு உண்மை தான். அது வரவில்லையென்றால் நம்மை உள்ளே விடமாட்டார்கள். வாயிலிலே எமனின் தூதர்கள் நின்று விரட்டியடிக்க கூடும்.

ஹால் டிக்கெட் வாராதா என்று எங்கள் வீட்டருகே நிற்கும் போஸ்ட் ஆபிஸிற்குப் போய் காலை 9 மணிக்கெல்லாம் எங்கள் வீட்டிற்குவரும் போஸ்ட் காரரரிடம் கொஞ்சலாக “போஸ்ட் கார் ! போஸ்ட் கார் ! உனக்கும் ஃபாஸ்ட் கார் வாங்கித் தரோம். என் ஹால் டிக்கெட் வந்திருக்கிறதா ?” என்று அப்பாவியாகவும் கேப்போம்.

மெதுவாக மதியம் தூங்கும் போது வீட்டிற்குள் வந்து ஹால்டிக்கெட் “பொத்”தென்று வந்து விழும். அம்மா தொட்டுத் தூக்கத்திலிருந்து எழுப்புவாள் “ எழுந்திரு ! ஹால் டிக்கெட் ! ஹால்டிக்கெட் என்று பரபரப்பியே !” வந்திருக்கு ! படிக்க ஆரம்பி! “ என்று அடுத்த ஆயுதம் வந்து விழும். ஹால் டிக்கெட் யுத்தம் ஆரம்பிக்கும் போது வீரர்கள் விடும் எரி அம்புக்கள் போல வீட்டில் விழ புத்தகங்களுடன் நம் யுத்தம் ஆரம்பிக்கும்.

வேலை கிடக்கும் முன்னால், பாங்க் பரீட்சை எழுதப் போகும் முன்னால் ஹால் டிக்கெட்டைப் பார்த்த மாத்திரத்தில் வேலையே கிடைத்து விட்டது போல நினைக்கும் அப்பாவிகள் பலர். அது வேலை “ஆர்டர்” இல்லையடா ! ஹால் டிக்கெட் !

ஐ.ஏ.எஸ். எழுதப் போகும் போது கலெக்டராகவே ஆகும் தெம்பைக் கொடுக்கும் சில ஹால் டிக்கெட்டுக்கள்.

தேர்வின் முடிவுகள் ஒட்டப் பட்டிருக்கும். பதை பதைக்க நம் பழைய ஹால்டிக்கெட்டுக்களைக் கையில் வைத்து, போர்டு முன்னால் நின்று ஏமாந்த சோனகிரிக்களாக நின்று கொண்டிருப்போம்.

இந்த ஹால் டிக்கெட் வாங்க எத்தனை போஸ்டல் ஆர்டர்கள் அனுப்பியிருப்பேன் ?. எண்ணிப் பார்க்கிறேன். தேர்வுகள் முடிந்தவுடன் ஹால் டிக்கெட்டுக்களை பேப்பர் அம்புகளாக்கிப் பறக்க விடுவோம். நண்பர்களின் ஹால் டிக்கெட்டுக்களைப் பிடுங்கிக் கொண்டு அழ வைப்போம்.

மற்றவரின் ஹால் டிக்கெட்டுக்களை வைத்து நாம் தேர்வுகள் மற்றவர்களுக்குப் பதிலாகத் தேர்வுகள் எழுதுவோம். போட்டோக்கள் இல்லாத ஹால் டிக்கெட்டுக்கள் இதில் சுலபம். இந்தப் பழக்கம் தான் ஓட்டுப் போடுவதிலும் வருகின்றது. சும்மா வோட்டர் லிஸ்டில் பெயரைக் கொடுத்து விட்டு ஓட்டு போட்டு வந்தேன். இப்போதெல்லாம் போட்டோ ஒட்டுவதனாலேயே, கள்ள ஓட்டு போட முடிவதில்லையாம். நல்ல வேளை, எட்டாம் வகுப்பிற்குப் போட்டோ கேக்க வில்லை !

ஹால் டிக்கெட் உதவி பண்ணும் சாக்கில் ஆண்கள் பெண்களின் பெயரைக் கண்டு கொண்டு எந்த வகுப்பு, எந்த செக்ஷன் படிக்கின்றாள் என்ற விவரங்களை அள்ளிக் கண்டுபிடிக்க வாய்ப்பு அளிப்பதே ஹால் டிக்கெட்டுக்கள் தான். காலேஜில் ஒரு கிளார்க் கொஞ்சம் அழகாகயிருந்து விட்டால் போதும் சந்தேகங்கள் கேக்க அனைவரும் கிளார்கிடம் குவிந்து விடுவர். கிளார்க் ஆனாக இருக்கலாம். பெண்ணாகயிருக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

கையைப் பிசைந்து கொண்டு எந்த ஹால், எந்த பாம்பு எந்தப் புற்றிலோ என்று பெண்கள் கலவரப்படும் நேரத்தில் ஆபத்பாந்தனாய, அபயக் கரமளிக்கும் ஆண்களுக்கு ஹால் டிக்கெட் ஒரு ஆயுதம். அம்மாஞ்சியாக இருக்கும் அழகு “சூர்யாக்களை” அள்ளி விட கடலை போடும் பெண்கள், ஹால் டிக்கெட் கேளிவ் கேக்கும் தோரணையில் பக்கத்தில் வந்து பார்த்து, பேசிவிட்டுப் போகும் போது பக்கத்தில் பல “ஹால் டிக்கெட்டுக்கள்” அர்த்தப் புன்னகைகளோடு பற்கள் தெரிய இளிக்கும் காட்சிகளைக் கல்லூரிகளில் காணலாம்.

“ஹால் டிக்கெட் வரலைடா ! அந்த வாத்யார் என் மேலே தனி “காண்டு” தான். வர்ராமா போகட்டும்! இருக்கு அவனுக்கு . . . “ போன்ற பொறுமல்கள் ஹால் டிக்கெட்டுக்கள் சம்பந்தப்பட்ட துவந்த யுத்தங்களுக்கு அறிகுறி.

“இங்கில்ல, அந்தப் பக்கம் ஹாலிருக்கு ! நானும் அங்கே தான் போகிறேன். ஆமா நான் பி.எஸ்.ஸி முதல் ஆண்டு. நீங்கள் ? மூன்றாம் ஆண்டா ? “ என்று ஆர்வத்துடன் கேட்டு காதலிக்க “அப்ளை” பண்ண வைக்கும் ஹால் டிக்கெட்டைக் கும்பிட வேண்டும். அதற்குத் தான் பிள்ளையாரின் காலில் வைத்துவிட்டு தேர்விற்குப் போகிறோமோ ?.

அழகான ரோஜா நிறத்தில் இருந்த கைப்பையில் ஹால் டிக்கெட் இருக்க, திடாரென்று ஒரு திருடன் அதைப் பறித்துச் செல்ல, பக்கத்திலிருந்த கதாநாயகன் அவனைத் துரத்தி அனைவர் முன்னாலும் சைக்கிள் செயின் சுழற்றி அடித்து, மூக்கில் ரத்தம் வரவைத்து, ரோஜாபையைப் பிடுங்கி, பெண்ணிடம் கொடுக்க அவள் “தாங்க்ஸ்” என்று நன்றியுடன் அன்பு ததும்பும் கண்களால் பார்க்க . . . ஹால் டிக்கெட் உபயத்தில் “காதல் முளைத்தது! “. (ஐயா, நிறைய தமிழ், தெலுங்கு படங்கள் பார்ப்பேனுங்க !)

நினைத்துப் பார்க்கையில் காதலர் தினத்தில், காதலிக்கு லெட்டர் கொடுப்பதே “ஹால் டிக்கெட்” மாதிரி மடித்து பயந்து பயந்து தான் கொடுக்கிறோம். அந்த மாதிரி லவ் லெட்டர் எழுதி அதைக் கொடுப்பதற்குள், ஹால் டிக்கெட்டை மாற்றிக் கொடுத்து காதலில் தோல்வியுற்ற காதலனொருவனைப் பற்றி . . .

“என்னது ?”

“என் இதயத்தைக் கொட்டியிருக்கேன் – இதில. படிக்காம கிழிக்காதே! ?”

என்ன “லவ் லெட்டரா ?” என்று தைரியமாக ஒரு பெண் கேட்டு விட்டாள்.

பதில் சொல்லுவதற்குள் “டர் . . . டர் “ மடித்துக் கொடுத்த கடிதம் கிழிக்கப்பட்டது.

“இல்லை! ஹால் டிக்கெட்!” என்று அசட்டுக் கோபம் வழியக் கிழிந்ததைத் திருப்பி வாங்கிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன் !

மீண்டும் லவ் லெட்டரை பையில் கைவிட்டு அவளுக்கு எடுத்துக் கொடுக்கு முன் . . .

“டிக்கெட் ! டிக்கெட் !” என்று கண்டக்டர் சொடுக்க முற்கண்ட பெண்ணால் கிழிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பணத்திற்குப் பதிலாகப் பையிலிருந்து எடுத்துக் கொடுக்க, கண்டக்டர் கண் சிவக்க மண் சிவக்குமுன் . . .

தப்பிக்க ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே குதித்தேன்.

பின்னால் வந்த ஸ்கூட்டர்காரன் “சொல்லிட்டு வந்தியா ! சாவுக் கிராக்கி மேலே டிக்கெட் எடுத்துட்டியா ?” என்று கேட்டான்.

நான் பய பக்தியுடன் பையிலிருந்த கிழிந்த ஹால் டிக்கெட்டைப் பிடித்துக் கொண்டே

மற்றொரு நுழைவுத் தேர்வெழுதப் போகும் ஹாலைத் தேடி நடக்கலானேன்.

—-

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா