“வந்திட்டியா ராசு!”

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

ரெ.கார்த்திகேசு


சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிடந்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டாஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும்.

சிலாங்கூர் மேன்சன் கொஞ்சம் பழுப்பேறிக் கிடந்தது. நுழைவாயிலில் கலவையான மணங்கள் வந்தன. மக்கிய மணம். குவாலா லும்பூரின் பரபரப்பான நகர மத்தியில் இருந்தாலும் இது ஒரு நவீன குந்துகுடிசைப் பகுதிதான். கட்டிய காலத்தில் நவீனம். ஆனால் காலம் இந்தக் கட்டிடத்தைக் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டது. நகர வாழ்வின் மினுமினுப்புக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் ஆனால் விட்டுப் போகவும் முடியாமல் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வியாபாரிகளும் மனிதர்களும் அடைந்து கொள்ளும் கட்டிடம்.

லிஃப்டுக்குக் காத்திருக்க முடியாது. உடனே வரும் என்று நம்ப முடியாது. நான்கு மாடிகள்தான் ஏறவேண்டும். சுந்தரராஜு கையில் வைத்திருந்த ஃபைல்கள் அடங்கிய பிரிஃப் கேஸ் கனக்க வேர்க்க வேர்க்க ஓடினான். ஒரு வேளை இன்று மானேஜரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு லேட்டாக வரக்கூடும் என்ற நப்பாசை ஒன்று எழுந்து விரைவில் புதைந்தது. ‘கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள் ‘ என்று போர்டு போட்ட கதவைத் தள்ளி உள்ளே சென்றான்.

புதிய நியான் விளக்குகளின் ஒளியில் வரவேற்பறை பளிச்சென்றிருந்தது. மலர் கெளன்டரைத் துடைத்துப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். வண்ண வண்ணமான லேபெல்களில் ஷம்பூக்கள், மேனியை வெளுப்பாக்கும் கிரீம்கள், எண்ணெய்கள். மானேஜரின் கதவு மூடியிருந்தது. ‘வந்திட்டாரா மலர் ? ‘ என்று இரைக்க இரைக்கக் கேட்டான்.

‘இருக்காரு. உங்களைக் கேட்டாரு. வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னாரு ‘ என்றாள். அவள் முகத்தில் இருந்த கடுகடுப்பு மானேஜரின் மனநிலையைச் சொல்லாமல் சொல்லியது.

பிரிஃப் கேஸைத் தனது மேஜையில் வைத்துவிட்டு டையைத் தளர்த்திக் கழுத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்தான். டை ஒரு சனியன். இந்த வியாபார டம்பத்துக்கு இதையும் கட்டிக் கொண்டு ஆடவேண்டி இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டுதான் போக வேண்டும். தாமதமாக வந்ததற்குக் காரணம் தயாரிக்க வேண்டும்.

பினாங்குக் கிளை அலுவலகத்திலிருந்து இந்தத் தலை நகர் அலுவலகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஊரே இன்னும் சரிவரப் பிடிபடவில்லை. பினாங்கு சொந்த ஊர். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். இதமான ஊர். ஓர் அன்னையைப் போல. கடல் உண்டு, காற்று உண்டு, மலை உண்டு, நல்ல மனிதர்கள் உண்டு. முக்கியமாக இதமான மனித உணர்வுகள் கொண்ட, விடாமல் இலக்கியம் பேசுகின்ற நண்பன் மணியம் உண்டு. சந்திக்கும் நேரத்திலெல்லாம் “வந்திட்டியா ராசு!” என்று வாய் நிறைய வரவேற்பான். எல்லாவற்றையும் விட்டு இந்த முரட்டு ஊருக்கு வரக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.

மாற்ற வேண்டாமென பினாங்கு அலுவலக மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. ‘மன்னிச்சிக்க சுந்தரராஜு! வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க! நம்பாளுங்க பளக்கமே அதுதானே! ஆப்பக் கட ஒருத்தர் போட்டா பக்கத்தில தோசக்கட போட்டிடுவாங்க! ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க!”

எல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான். இப்போது அந்த விளையாட்டை மற்றவர்கள் இன்னும் வெற்றிகரமாக ஆடுகிறார்கள்.

“குவால லும்பூர் வட்டாரத்திலதான் வியாபாரம் நல்லா இருக்காம். அங்கதான் இனி மார்க்கெட்டிங் அதிகரிக்கணும்னு கம்பெனியில முடிவு பண்ணிட்டாங்க. நீ போகலைன்னா இப்ப உள்ள நிலமையில ஆளே தேவையில்லைன்னு சொல்லிடுவாங்க. போ சுந்தர்ராஜு! சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது ? சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம்! ‘ என்று முதுகைத் தட்டி அனுப்பி வைத்தார்.

வயதான தாய் இருக்கிறார். தான்தான் காப்பாற்ற வேண்டும். கணவனை இழந்த அக்காள் குளுகோர் மார்க்கெட் பக்கத்தில் ஒட்டுக் கடை போட்டு வடை சுட்டு விற்கிறார். நிச்சயமில்லாத வருமானம். ஆகவே தன்னை நம்பித்தான் இருந்தார்கள்.

மணியத்திடம்தான் சொல்லி அழுதான். ‘பரவாயில்ல போ ராசு! மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல ‘ன்னு சொல்லியிருக்காங்கள்ள! ‘

எதற்கும் ஒரு இலக்கிய எடுத்துக்காட்டு காண்பிப்பான். தமிழ்ப் பள்ளியில் படித்து தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அதில் முற்றாகத்த் தோய்ந்து போனவன். தனக்கும் அந்தப் பித்தை ஊட்டிவிட்டவன் அவன்தான். தன்னோடு ஒன்றாகத்தான் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினான். இருவருக்கும் சுமாரான தேர்வுதான். பல்கலைக் கழகம் போகும் அளவுக்கு அது இருக்கவில்லை. மணியம் தமிழாசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகிவிட்டான். பினாங்கிலேயே ஒரு பள்ளியில் அவனுக்கு போஸ்டிங் கிடைத்து அங்கேயே ஆனந்தமாகத் தங்கி விட்டான்.

தனக்குத்தான் ஆசிரியர் வேலையில் நம்பிக்கை இல்லை. மீண்டும் எஸ்டிபிஎம் எழுதிப் பல்கலைக் கழகத்துக்குப் போயே ஆவது என உறுதி கொண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் வர்த்தகத் துறைக்குப் போனால் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கலாம் எனப் பல தன்முனைப்புக் கருத்தரங்கங்களில் கேட்ட பிரச்சாரப் பேச்சுக்கள் திசை மாற்றிவிட்டன.

கொஞ்ச காலம் இன்சுரன்சு, கொஞ்சகாலம் பொருள்கள் நேரடி விற்பனை என மாற்றி மாற்றிச் செய்து ஒன்றும் சரியாக வராமல் ‘கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள் ‘ பினாங்கில் ஏக தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட போது அதில் சேர்ந்துவிட்டான். அப்போது தீவிரமாக விளம்பரம் செய்தார்கள். மார்க்கெட்டில் அவர்கள் கொடி பறந்தது. ஒரு வருடத்தில் போட்டி மிகுந்துவிட்டது. பினாங்கு வியாபாரம் எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை. அதனால்தான் குவாலா லும்பூர் மாற்றம்.

குவாலா லும்பூர் கொடூரமாக இருந்தது. ஒரு மாதம் கழித்தும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இங்கு சுந்தரராஜுவுக்கு எதைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. போக்குவரத்து நெறிசலில் அவனுடைய பழைய டாட்சன் கார் மூச்சுத் திணறுகிறது. எப்போது ரேடியேட்டர் வெடித்துச் சிதறப்போகிறதோ என்ற கவலையாக இருக்கிறது. சாலையில் மோட்டாரோட்டிகள் அவன் பக்கம் திரும்புவதே இல்லை. முன்னால் நோக்கியபடி விறைத்துப் போயிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாலும் முறைப்பது தவிர புன்னகைப்பதில்லை.

குவால லும்பூர் சிலாங்கூர் மேன்சன் அலுவலகத்துக்கு வந்த அன்றே மேலாளர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார். அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஆவலோடு உள்ளே போனவனை அவர் உட்காரக் கூடச் சொல்லவில்லை. ‘தோ பாருங்க சுந்தர்ராஜ். நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல. வியாபாரம் ரொம்ப தட்டையாய்ப் போச்சி. அதுக்கு காரணம் நாம் மார்கெட்டிங்கில காட்ர தீவிரம் போதாது. முதலாளி ஆள்களைக் குறைச்சி செலவைக் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ஆனா நாந்தான் அவரைத் தடுத்து வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்தில சரக்குகள் விற்பனைய 50% அதிகரிச்சிக் காட்றேன்னு அவருக்கு உறுதி குடுத்திருக்கேன். ஆகவே எனக்கு எந்த சமாதானமும் சொல்லாம சரக்குகள் விற்பனைய அதிகப் படுத்திற வழிய நீங்கள் பாக்கணும்.

“கிள்ளான்ல புதிய ரிடெய்ல் கடைகள் அதிகமா இருக்கு. எல்லாக் கடைக்கும் போங்க. நல்லாப் பேசுங்க. நம்ப சரக்கோட நன்மைய எடுத்துச் சொல்லுங்க. பத்துப் பெட்டி கொடுக்கிற எடத்தில 15 பெட்டி கொடுக்கிற மாதிரி பாருங்க. நீங்களே கொஞ்ச நேரம் கடையில நின்னு வர்ர வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கப் பாருங்க. அப்பதான் வியாபாரம் வளரும். கடைப் பையங்ககிட்டயும் பேசி நம்ம சரக்க முன்னுக்குத் தள்ளச் சொல்லுங்க. எல்லாம் உங்க பொருப்பு. இங்க உள்ள எவனும் சரியா வேலை செய்றதில்ல. சொன்னாலும் மாடு மாதிரி நிக்கிறாங்க. அதுக்காகத்தான் புது ஆள் வேணுமின்னு உங்களைத் தருவிச்சிருக்கேன். உங்க வேலையோட தெரவிசப் பாக்கணும். பாத்தபிறகுதான் சம்பள உயர்வு. அதுவரைக்கும் உங்களுக்குப் பினாங்கில குடுத்த சம்பளம்தான். ஆனா விற்பனை உயர்வைக் காட்டினிங்கன்னா நீங்க வானத்து அளவுக்கு உயரலாம். எங்களோட சேர்ந்து நீங்கள் வளரலாம். ஆனா உங்கள் முயற்சியின்மையினால வியாபாரம் கொறைஞ்சா இது மூழ்கிற படகாயிடும். கனத்தைக் குறைக்கிறதுக்கு கடல்ல தூக்கியெறியப் படக்கூடிய முதல் ஆளும் நீங்கதான். சரியா ? உங்கள நான் கவனிச்சிக்கிட்டே இருப்பேன். ‘

ஆசாமி பல ஊக்குவிப்பு கருத்தரங்கங்களுக்குப் போய்வந்த ஆளாக இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி வியாபார வெற்றியையே முதன்மைப்படுத்தும் பேச்சாக அது இருந்தது.

மணியத்திடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொன்னான். ‘உங்க மேலாளர் ரொம்பத் திறமையானவர் ராசு! வியாபாரத்துக்கு ஏற்ற குணங்கள் உள்ள மனிதர். அரம் போல கூர்மையான புத்தியுள்ள மனிதர் ‘ என்றான் மணியம்.

‘என்ன மணியம்! நான் என்னோட கவலைகளைச் சொன்னா நீ அவரைப் புகழ ஆரம்பிச்சிட்டியே! ‘

‘நான் என்ன புகழ்றது ? வள்ளுவரே புகழ்ந்திருக்காரு! தேடிப்பாரேன்! ‘

அன்று இரவு தேடிப் பார்த்தான். பினாங்கிலிருந்து சுமந்து வந்த புத்தகங்கள் கொஞ்சம்தான் என்றாலும் அதில் ஒரு திருக்குறள் இருந்தது. ‘மரம் போலும் மக்கட் பண்பில்லாதவர் ‘ என்று பார்த்துத் தன் மன நிலையை அப்படியே வள்ளுவர் பிரதிபலித்திருப்பதைக் கண்டபோது மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.

இப்படித்தான் மணியம். எப்போதும் ஒரு இலக்கிய வாக்கு அவன் நுனிநாவில் நிற்கும். இப்போதே போய் மணியத்திடம் பேச வேண்டும் போல் ஒரு ஆசை எழுந்தது.

‘என்ன அப்படியே உக்கார்ந்திட்டிங்க ? போய் பாத்திருங்க! இல்லன்னா நாந்தான் சொல்லலன்னு என் மேல பாய்வாங்க! ‘ என்று மலர் உசுப்பினாள். எழுந்து உள்ளே போனான்.

*** *** ***

‘கிள்ளான்ல சரக்கு ஆறு டஜன் கேட்டிருந்தாங்களாமில்ல, ஏன் நேத்து கொண்டி குடுக்கல ? ‘

முகத்தில் முட்டையை உடைத்து ஊத்தினால் பொரிந்துவிடும் சூடு இருந்தது.

‘டெலிவரிக்குப் போன வேன் வரல! ரிப்பேர் ஆயிடிச்சின்னு சொல்லிட்டாங்க! ‘

‘அத நேத்தே சொல்றதுக்கு என்ன ? ‘

‘வேன் வந்திரும் வந்திரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்க. ராத்திரி எட்டு மணி வரைக்கும் எனக்குத் தகவல் தெரியில! ‘

‘வேன் இல்லைன்னா நீ உன் கார்ல போய் கொடுத்திருக்கக் கூடாதா ? அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது ? இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது ? நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது ? ‘

‘நீங்கள் ‘ என்ற மரியாதை கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே போய்விட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மசிர் புதிதாக முளைத்திருக்கிறது. சென்ற சில வாரங்களாகவே சிலவற்றைப் பிடுங்குவதும் சிலவற்றை முளைய வைப்பதுமாகத்தான் இருக்கிறார். சொல்ல ஏதும் இல்லாததால் மெளனமாக இருந்தான்.

‘இப்பவே ஒரு ஆறு டஜன் எடுத்துக் கார்ல போட்டு கிள்ளான்ல போய் டெலிவெரி குடுத்துட்டு வா. வேன் டிரைவர் வந்ததும் நான் பாத்துக்கிறேன்! ‘

தலை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தான். ‘இன்னைக்கு ரெண்டு மூணு கிளையன்ட் வர்ரதாகச் சொல்லியிருக்காங்க … காலையில! ‘

‘எல்லாம் நான் பாத்துக்கிறேன் போ! இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது! போய் இருக்கிற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு! ‘

தலை குனிந்து வெளியே வந்தான். தலை விண் விண் என வலிக்கத் தொடங்கியிருந்தது. ‘டெலிவெரி என் வேலையில்லை! ‘ என்று சொல்லியிருக்கலாம். அதைவிட கிள்ளானுக்கு அவன் காரோட்டிப் போனதேயில்லை. வேனில் ஒருமுறை போய் வந்திருக்கிறான். சரியாக வழி தெரியாது. ஆனால் இதெல்லாம் சொன்னால் ஏற்கனவே உடைபடும் மரியாதை மேலும் தூளாகும் எனத் தெரிந்தது.

‘என்ன சொன்னாரு ? ‘ என்று கேட்டாள் மலர். அறைக்குள் பேசுவது எல்லாம் வெளியே கேட்கும். இருந்தாலும் இன்னொரு முறை அவன் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று நினைத்திருப்பாள். அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக வீடியோ டேப்பில் பார்த்த பெண்ணை நிர்வாணமாக்கி ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள்.

‘ஆறு டஜன் சரக்கு எடுத்து வைங்க மலர்! கிள்ளானுக்குக் கொண்டு போகணும்! ‘

‘யாரு நீங்களா ? ஏன் ? டெலிவரி வேன் என்ன ஆச்சு ? ‘

மேலும் கதை பிடுங்கினாள். ‘எடுத்து வைங்க மலர்! உடனே போகணும்! ‘

*** *** ***

ஆறு டஜன் புட்டிகள் அடங்கிய பெரிய அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லிஃப்டைப் பிடித்து இறங்கி காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி நடந்தான். குவாலா லும்பூரின் உஷ்ணம் தகிக்கத் தொடங்கியிருந்தது. பல்லாயிரம் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பஸ்களும் லோரிகளும் இந்த பட்டணத்துக்குச் சூடேற்றிக்கொண்டிருந்தன. மனிதர்கள் வெந்துகொண்டிருந்தார்கள். கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கலாம் என்றால் இரண்டு கைகளும் அட்டைப் பெட்டியைத் தாங்கிக்கொண்டிருந்தன. தொப்புளுக்கும் பெட்டிக்கும் இடையில் டை கசங்கியது.

விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் கார்கள் வரிசைக்குள் இடைவெளி கண்டுபிடித்து பெருநடைப் போட்டி வீரனைப் போல நடந்து அவனுடைய காரை அடைந்த போது பன்டார்ராயா போக்குவரத்துக் காவலர் ஒரு சம்மன் எழுதி வைத்துவிட்டு அப்போதுதான் அப்பால் நடந்து கொண்டிருந்தார். போச்சு! இது ஐம்பது வெள்ளியா எழுபது வெள்ளியா தெரியவில்லை. இங்கே கொடுக்கிற எழுநூறு வெள்ளிச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது வெள்ளி வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடவும் அம்மாவுக்குக் காசு அனுப்பவும்தான் சரியாக இருக்கிறது. சினிமா கூட பார்க்க மனம் வருவதில்லை. போன வாரம் புத்தகக் கடைக்குப் போய் சில புதுக்கவிதைப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியது ஒன்றுதான் அவனுடைய உல்லாசச் செலவு.

இங்கு வேலைக்கு இருக்கும் பலபேர் கடையிலேயே தங்கிக் கொள்கிறார்கள். தான் வேலை பார்க்கும் கடையில் தங்கிக் கொள்ள இடம் தந்தார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே டிரைவரும் இரண்டு டெலிவெரி பையன்களுமாக மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள். காலைச் சடங்குகளுக்கு பொதுக் குளியலறையை நாட வேண்டும். எங்கும் எப்போதும் தனிமை கிடைக்காது. சக வேலைக்காரர்களுக்கு என்னாளும் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க விடமாட்டார்கள்.

புத்தகம் படிக்காமல் ஒரு வாழ்வா ? பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், வண்ணதாசன், அண்மையில் வெளிவந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைத் தொகுப்புகள், மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக்கதைகள், சிவாவின் “வீடும் விழுதுகளும்”, பீர் முகம்மதுவின் “மண்ணும் மனிதர்களும்,” மா. இராமையாவின் “அமாவாசை நிலவு” இளவழகுவின் “மீட்சி” ரெ.கா.வின் “மனசுக்குள்” எல்லாவற்றிலும் படித்து முடிக்காத பகுதிகளும் திரும்பப் படிக்க வேண்டிய பகுதிகளும் ஏராளமாக இருந்தன. இதற்காகத்தான் தூரமாக இருந்தாலும் பழைய கிள்ளான் சாலையில் இருநூற்று ஐம்பது வெள்ளியில் தனியறை தேடிக்கொண்டது. ஆனால் அங்கேயும் வீட்டுக்காரர் ஒரே ஒரு நாற்பது வாட் பல்புதான் போட்டிருந்தார். இருட்டில் கண்ணைச் சுருக்கிக் கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது.

சாவியைப் போட்டு கதவைத் திறந்து அட்டைப் பெட்டியை தனது சீட்டுக்குப் பக்கத்தில் போட்டான். வைப்பரில் செருகி வைக்கப்பட்டிருந்த அபராதக் கடிதத்தை ஆத்திரத்துடன் பிய்த்து எடுத்தான். பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டப் போகும் நேரத்தில் ஒரு லோரி வந்து அடைத்துக் கொண்டு நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சாமானை இறக்கினான்.

ஹோர்னை அடித்து அவனை கிளப்பச் சொல்லலாமா என நினைத்து வேண்டாம் என்ற முடிவு செய்தான். ஹோர்னை அடிப்பதை பலர் தங்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். “நீ பெரிய இவனா ?” என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். “நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா ?” என்று வாதம் செய்வார்கள். வாதம் முற்றினால்… சில பேர் வண்டிக்குள் மண்வெட்டிக் கணைகளை வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அமைதியாகக் காத்திருந்து போவதே நல்லது என உட்கார்ந்து விட்டான்.

இயலாமையும் எரிச்சலும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காத்திருக்கும் கணத்தில்தான் பளீரென அந்த எண்ணம் வந்தது. இந்த வேலையையும் இந்த சனியன் பிடித்த நகரையும் விட்டுவிட்டு பினாங்குக்கே போய்விட்டால் என்ன ? இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு – அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் – போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள் ? மணியம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திலேயே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். அந்த நினைவே ஆனந்தமாக இருந்தது.

ஆனால் அது ஒரு பெரிய அவமானம் என்றும் தோன்றியது. இங்கு நான் வர்த்தக உலகத்தில் வெல்ல வந்தேன். இந்த ஒரு முசுடு மேனஜருக்காக எல்லாவற்றையும் விட்டு ஓடுவது என்பது வெட்கக்கேடு. ஊர் சிரிக்கும். ஊர் என்றால் யார் ? உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ ? அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

லோரிக்காரன் நகர்ந்தான். இவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுப் போனான். இங்கும்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள். மானேஜர் வாய் நாறத் திட்டிவிட்டு அவன் திரும்பியதும் அவனுடைய பயங்கொள்ளி முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார். அவன் அறைக்குள் திட்டு வாங்கும்போது மலர் வெளியிலிருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரிக்கிறாள். நான் இந்த நகரில் நடக்கும்போதும் ஒட்டுக்கடைகளில் சாப்பிடும்போதும் வீட்டுக்குள் நுழையும்போதும் எல்லோரின் உதடுகளிலும் ஏளனச்சிரிப்பு இருக்கிறது. நான் இந்த பட்டினத்திற்குப் பொருத்தமானவனில்லை எனபது போல! இவன் ஏன் இங்கு வந்தான் என்பது போல!

மீண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தொலைந்து பினாங்குக்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழுந்து அடங்கியது.

காரைக் கிளப்பி வெளியேறியபோது எந்தப் பக்கமாகப் போனால் கிள்ளானுக்குப் போகும் சாலையில் போய்ச் சேரலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஜாலான் பூனுசைக் கடந்து சாட்டர்ட் பேங்கின் பக்கமாக கிள்ளான் ஆற்றின் மீது போகும் சிறிய பாலத்தில் ஏறி வந்தவுடன் அம்பாங் சாலையில் இருக்கக் கண்டான். அப்புறம் ?

நின்று யோசிக்க முடியாது. பின்னால் கார்கள் ஓநாய்களாகத் துரத்திக் கொண்டிருந்தன. அவற்றை ஓட்டும் ஒவ்வொருவரின் முகத்திலும் உள்ள கண்கள் தீப்பிழம்புகளாகத் தெரிந்தன. காரை ஓட்டிக்கொண்டேதான் யோசிக்க வேண்டும்.

இந்த நகரில் சாலைகள் ஒரு ராட்சதக் கணவாயின் கால்களைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றன. சுற்றுகின்றன. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. மேடான் அது,லொரொங் இது, திங்காட், லெபோ. சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு லேனிலிருந்து இன்னொரு லேனுக்குப் போக முடியவில்லை. யாரும் இடம் தரவில்லை. முயன்றபோது ஒரு லோரியிலிருந்து ஒரு காட்டுப்பூனை சீறியது. முடியாமல் அதே லேனில் நேராகப் போனான்.

அரை மணி நேரத்துக்குப் பின் பெட்டாலிங் ஜயா என்ற அம்புக்குறி பார்த்து திரும்பினான். பி.ஜே. போய்விட்டால் அங்கிருந்து கிள்ளான் போய்விடலாம். எப்படியோ ஜாலான் கூச்சிங் வந்தது. போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நின்றான். எந்த லேன் சரியான லேன் எனத் தெரியவில்லை. இரண்டு வேன்களுக்கு மத்தியில் தான் நின்றிருந்த லேனில் வேறு பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்த போது ஜாலான் பார்லிமென்டில் இருந்தான். ஜாலான் துன் பேராக் வந்த போது திரும்ப நகருக்குள் நுழைவதாகத் தெரிந்தது.

இது எப்படி ? மீண்டும் ஜாலான் அம்பாங்கை நோக்கியா ? புடுவை நோக்கியா ? இப்படியே போய்.. ? தயங்கிய போது பின்னால் ஒரு சிங்கம் – சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் – “ப்ரோங்” என்று கர்ஜித்தது. ஒடுங்கிப் போனான்.

போ, போ, போய்க்கொண்டே இரு. நிற்காதே… எதாகிலும் ஒரு திக்கில்… திக்கு முக்கியம் அல்ல. ஊர்தல் நகருதல் முக்கியம். நகர்ந்து கொண்டே இரு.

வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. காரில் பொருத்தியிருந்த குளிர் சாதனக் கருவி புராதனமானது. இந்த வெயிலில் அதற்கும் சூடேறிவிட்டிருந்தது. புடுவில் மாபெரும் சாலை வட்டம் வந்தது. இதைச் சுற்ற வேண்டும். இது தலை நகர அசுரனின் கோயில் கருவறை. இதை வலம் வர வேண்டும். ஆனால் இங்கு பல கோர தேவதைகளும் சுற்றுகின்றன. இவற்றினிடையே பயபக்தியாக இவற்றின் பிருஷ்டங்களுக்கிடையே முகம் நுழைத்து வணங்கி, பல்லிளித்து, சுற்றி தன் வழியைப் பிடிக்க வேண்டும்.

எல்லாக் கோர தேவதைகளும் சிரிக்கிறார்கள். அடேடே யாரிவன் கத்துக்குட்டி! யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள் ? ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார்! நடுங்குவதைப் பார்! ஹே ஹே ஹே! புடு ராயா பஸ் நிலையம் முழுவதும் அவர்கள் கோரச் சிரிப்பு எதிரொலித்தது.

கிள்ளான் பஸ் நிலையம். புகுந்தால் ஜாலான் துன் எச்.எஸ்.லீ. அங்கு பழைய ஹை ஸ்த்ரீட் மகா மாரியம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.

சுற்றிக் கொண்டே இருந்தான். எப்படியோ, எந்தத் தெய்வமோ, வழி விட்டது. மாரியம்மனாகத்தான் இருக்க வேண்டும். மெர்டேக்கா வட்டம். விஸ்மா துன் சம்பந்தன். ஜாலான் சையட் புத்ராவில் இருந்தான். இனி நேராகப் போனால் பி.ஜே. போகலாம். ஓரத்து லேனில் இருந்தான். பக்கத்தில் மிருகங்கள் சீறிப் போகின்றன. பின்னால் ஒரு கரிய யானை “ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறாய் ?” எனப் பிளிறித் துரத்தியது.

ஏன் இவைகளோடு தன் வாழ வேண்டும் ? ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும் ? பினாங்கு போய்விட வேண்டும் எப்படியும் பிழைக்கலாம். மணியத்தின் பக்கத்தில் நிம்மதியாக இருக்கலாம். போகத்தான் வேண்டும். இந்த கிள்ளான் வேலை முடிந்ததும். இந்தா உன் வேலையை நீயே வைத்துக்கொள். வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் பொய்யும் புரட்டும் சொல்லி உன் வியாபாரத்தை நடத்திக் கொள். உன்னிடம் வேலை செய்யும் ஏஜண்டுகளை பயனீட்டாளர்கள்போல் நடிக்க வைத்து ஏமாற்றிக் கொள். கூந்தலில் தைலம் தடவுவதால் சொரி, சிரங்கு, காசநோய், புற்றுநோய் அனைத்தும் நீங்கும் எனச் சொல்லிக் கொள். காசுக்காக எல்லாம் செய்யலாம். “பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை” அந்த அரைக்குறள் உங்களுக்கெல்லாம் போதும்.

“ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..“ கைத்தொலை பேசி அலறியது.

கார் ஓட்டும்போது பேசலாமா ? போலிஸ்காரன் இருந்தால் பிடித்துக் கொள்வானே. காலையில் வாங்கிய ஒரு சம்மன் போதாதா ?

“ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..“விடாமல் அலறியது. மானேஜர் கூப்பிடுகிறானா ? கூப்பிட்டு மீண்டும் மயிர் மட்டை என்று திட்டப்போகிறானா ?

“ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..“ அம்மா கூப்பிடுகிறாரோ ? எதாகிலும் அவசரமாக இருக்குமா ?

எடுத்துக் காதில் வைத்து “ஹலோ” என்றான்.

“ஹலோ, அங்க யாரு சுந்தரராசா பேசிறது ?”

யாரோ புதிய குரல். “ஆமாங்க. யாரு பேசிறிங்க ?”

ஸ்டியரிங் ஆடியது. வேகத்தைக் குறைத்தான். பின்னால் சில கழுதைகள் அலறின. ஓர் ஒரமாக நிறுத்தினான்.

“இங்க மணியம் வீட்டில இருந்து பேசிறோம்”

“மணியமா ? எந்த மணியம்”

“அதான் வாத்தியாரு. ஒங்க நண்பர்”

“ஆமா, மணியம்!”

“அவரு நேத்து ஒரு ஆக்சிடன்டில தவறிட்டாருங்க!”

புரியவில்லை. “தவறிட்டாருன்னா… ?”

“செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!”

“எப்படி ? என்ன சொல்றிங்க…”

“இன்னைக்கு மூணு மணிக்கு அடக்கம் பண்றாங்க!”

ஒன்றும் பேசத் தெரியவில்லை. தொலைபேசியைப் பிடித்திருந்த கை நடுங்கியது.

“ஹலோ… கேக்குதுங்குளா ? ஹலோ! ஹலோ!… இந்தச் சனியன் ஹென்ட் ஃபோன் எப்பவும் இப்பிடித்தான். ஹலோ!”

“கேக்குது. நேத்தே ஏன் சொல்லல ?”

“அது எனக்குத் தெரியாதுங்க! சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்பத்தான் அவுங்க அம்மா உங்க நம்பர் குடுத்து பேசச் சொன்னாங்க. சரியா மூணு மணிக்கு! “

“நீங்க யாரு ? மணியம் அம்மா எங்க ?”

“சொந்தக்காரங்க! அவங்க உடைஞ்சு போய்க் கிடக்கிறாங்க. மூணு மணிக்கு. வச்சிட்றன்!”

“மூணு மணி” மட்டும் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. இப்போ மணி என்ன ? பதினொன்றரை. மூன்று மணிக்குப் பினாங்கு போய்ச் சேர முடியுமா ?

போக வேண்டும். போகதான் வேண்டும். போகாமல் எப்படி ? என்ன சொன்னார்கள் ?

“செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!”

நிறுத்தியிருந்த இடத்திலிருந்து காரை எடுக்க முடியவில்லை. கைகாலெல்லாம் நடுங்கிற்று. புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள், யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் அவனைப் பார்த்துச் சீறிவிட்டுத் தொடர்ந்து ஓடின. அவற்றுக்கு அவசரம். எங்கோ பெரிய வேட்டைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவன் சிறிய எலி. சீச்சீ குறுக்கே வராதே. உனக்கு இங்கென்ன வேலை ?

ஆனால் நான் போகத்தான் வேண்டும். இங்கேயே நின்று கொண்டிருந்தால் கேசாபிவிருத்தி மூலிகைத் தைலத்தை யார் கிள்ளான் கொண்டு சேர்ப்பார்கள் ? எத்தனை பேர் இதை எதிர் பார்த்துச் சொரி சிறங்குகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

நான் போகலாம். நான் நினைத்தால் என் வாகனம் பறக்கும். நான் நினைத்தால் இதே வியாபார உலகத்தில் புகுந்து நுழைந்து தில்லுமுல்லுகள் செய்து ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்க முடியும்.

யார் என்னைத் தடுப்பவர்கள் ? இந்தத் திமிர் பிடித்த மானேஜரும் இந்த மலர் என்ற அரைகுறையாகப் படித்த விற்பனைப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா ? என்னை யார் என்று நினைத்தீர்கள் ? என்னால் முடியும். என்னால் பறக்க முடியும்.

நான் யார் ? நான்தான் பாரதியார் சொன்ன அக்கினிக் குஞ்சு. எரிபவனும் நான்தான். எரிப்பவனும் நான்தான். எரியும் குஞ்சில் எந்தக் குஞ்சு சின்னக் குஞ்சு ?

காரை வேகமாகச் சாலையை நோக்கித் திருப்பினான். புலிகளும் சிங்கங்களும் மருண்டு சிதறி ஓடின. காலைத் தரையில் ஊன்ற முனைந்து சருக்கிக் கொண்டு ஓடிச் சாலைத் தடுப்பில் முட்டிச் சிதறின. முகங்களும் பிருஷ்டங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி நசுங்குவது வேடிக்கையாக இருந்தது. கேசாபிவிருத்தி மூலிகைத் தைலம் சாலையில் ஊற்றித் தீப்பிடித்து எரிந்தது.

இப்போது சிரித்தான். இப்போது தெரிகிறதா நான் யாரென்று ?

“வந்திட்டியா ராசு! என்ன இப்படி பண்ணிட்ட ?” என்றான் மணியம்.

****

Series Navigation