“பிற்பகல் வெயில்”

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

கே.பாலமுருகன்


1
பிற்பகல் வெயில் அறையைப் பிள‎ந்தபடியே ஊடுருவி உடலின் வலிமையை மெல்ல இழக்கச் செய்து கொண்டிருந்தது. சாரளரத்தினோரமாக அமர்ந்துகொண்டு வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகுநேரமாக வெளியின் சிறு புள்ளியாக என் வீட்டை நெருங்கி வந்துகொண்டிருக்கும் அவரை அவதானித்துக் கொள்ளத் துவங்கினேன். சிறுக சிறுக தூரம் தொலைந்து கொண்டிருக்க சாரளத்தைக் கொஞ்சம் தாராளமாகத் திறந்துவிட்டுக் கொண்டேன்.
அவரின் தோற்றத்தைச் சடாரென பார்க்கும் யாராகிலும் அவர் துவண்டு போயிருக்கிறார் என்றோ பசியால் தளர்ந்து போயிருகிறார் என்றோ சொல்லிவிட முடியும். உடல் தொங்கியிருந்தது. அவரின் பார்வை கூர்மையடைந்து இரும்பு கதவையே பார்த்தவாறு இருந்தன.
சாரளத்தின் கம்பிகளினூடே அவரை நன்றாக உற்றுக் கவனித்தேன். எங்கேயோ பார்த்ததைப் போன்ற ஞாபகம். பக்கத்து கம்பத்திலிருந்தோ அல்லது காயு பாலா என்கிற பலகைத் தொழிற்சாலையின் வீட்டுப் பகுதியிலிருந்தோ வந்திருக்கலாம் போல. அவர் இங்கு வந்து சேர்வதற்காக நடந்த வந்த பாதையின் தூரம் குறைந்தது 5 கிலோ மீட்டர் இருக்கலாம். உடலில் வலிந்தொழுகிய வியர்வையும் பிசுபிசுவென உச்சந்தலையில் மிதந்து கொண்டிருக்கும் வெயிலின் வெக்கையும் அப்படியான தூரத்திலிருந்துதான் அவர் வெயிலுடன் நடந்து வந்திருக்கக்கூடும் என்று தோன்றியது.
சாக்கடையின் பிளந்த வாயினருகே வந்து நின்றபோது அவரின் முகத்தை மேலும் அருகாமையில் பார்க்க முடிந்தது. முகத்தில் சில வெட்டுக் காயங்கள் தென்பட்டன. நெற்றியில் ஒரு சின்ன வெட்டும், தவடையில் இரண்டு வெட்டும் கன்னத்தில் ஒரு காயத்தின் காய்ந்த சுவடும் தெரிய ஏதோ அகோரியின் முகம் போல காட்சியளித்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் அவரை யாரோ கம்பத்தில் வைத்து வெட்டியிருக்கலாம். அனேகமாக வெட்டுக் கத்தியைப் பயன்படுத்தியவன் தமது வலது கையைத்தான் பயன்படுத்தியிருக்கக்கூடும். வெட்டுக் காயங்கள் முகத்தின் இடது பக்கத்தில்தான் பதிந்திருந்தன. அல்லது, 2 மாதங்களுக்கு முன் கடன் தொல்லையில் யாரிடமோ பிளவு ஏற்பட்டு அது சண்டையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம். வட்டிக்குக் கொடுக்கும் எவனோ அந்தப் பெரியவரை ஆள் வைத்து வெட்டியிருக்கலாம், அல்லது குடும்ப தகறாரில் அவரது மருமகனோ அல்லது சகோதரனோ சண்டையின் உக்கிரத்தில் கொதிப்படைந்து அவரை வெட்டியிருக்கலாம்.
இரண்டு கால்களையும் அகல பரப்பி சாக்கடையின் வாயில் தமது பிட்டத்தை வைத்து உட்கார்ந்துகொண்டார். அது அவருக்கு வசதி அளித்திருக்கக்கூடும் போல. முகத்தின் சுபாவங்கள் மெல்ல மாறி, இப்பொழுது அவர் தமது முடியைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தார். தலையிலிருந்த கொஞ்சம் மூடியும் வியர்வையில் ஒட்டிப் போயிருந்தது. அடிக்கும் வெயிலுக்கு அவரின் மண்டை வெடித்துவிடும் போல. சன்னமாகக் கேட்கும்படி ஏதோ ஒரு தமிழ்ப்பாடலை முணுமுணுக்கத் துவங்கினார். பாடலின் வரியை உள்னாங்கிக் கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது.
அவருடைய உடல் கூட்டிலிருந்து வரக்கூடிய ஒலி ரொம்பவே முதிர்ந்து போயிருந்தது. உடைந்த சொற்களாய் அது சிவாஜி கணேசன் படத்தில் சௌளந்தர்ராஜன் பாடிய பாடல் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அப்படியென்றால் அவர் சிவாஜி கணேசனின் இரசிகராகவோ அல்லது சௌளந்தர்ராஜனின் பாடல்/குரலிலுள்ள இனிமையின் வசீகரராகவோ இருக்கலாம். அந்தப் பாடலை உச்சரிக்கும் போது அவரின் முகத்தில் உருவாகும் மகிழ்ச்சி எல்லையைக் கடந்து பரவசத்தில் உதிர்ந்து மீண்டும் அதே பரவசத்தில் பறப்பதுமாகத் திடீரென உதிர்ந்து விழும் மெல்லிய கொண்டாட்டங்களாக உடல் தொனியை தமது வசதிகேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார்.
அவர் இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பதற்கு அநேகமாக அவரின் மனைவியோ அல்லது உடன்பிறப்புகளோ காரணமாக இருக்கலாம். வீட்டைவிட்டுத் துரத்தியடிக்கப்பட்டவரின் குணாதிசயங்களாக அவரின் முகத் தோற்றமும் அதில் கரைந்து ஒழுகும் விரக்தியும் தெரிந்தன. அவர் எப்பொழுது வீட்டிலிருந்து துரட்டியடிகப்பட்டிருப்பார்? நேற்றைய இரவில் அவரின் மகன்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டிருக்கலாம். ஏகாந்த நிலையாய் பரவசக் களிப்பில் கொஞ்சமாய் மது அருந்தி விரட்டியடித்தலைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டு, தெருவில் அலைந்து திரிந்த மனிதரைப் போல வானத்தை அன்னாந்து பார்த்துவிட்டு சுயமாகச் சிரித்துக் கொண்டார். அந்தச் சிரிப்பு யாரையோ மிகத் துல்லியமாக தமது அலட்சியப் பிரதியாகப் பதிவு செய்ய வேண்டும் போன்ற நிலையில் அதிர்ந்தது.
“வீரமகா காளி”
திடீர் நாம உச்சாடனம்.
“அம்மா காளி”
வெயிலைச் சீண்டுவது போல எழுந்து நின்று மீண்டும் அன்னாந்து பார்த்துவிட்டு குதிகாலிட்டு அமர்ந்து கொண்டவர் என் சாரளத்தையும் அதனுள்ளே பம்மாத்துப் பொம்மைப் போல உட்காந்திருக்கும் என்னையும் பார்க்கத் துவங்கினார்.
2
பிற்பகல் வெயிலில் இப்படி நடப்பது வெகுவான சோர்வை மிக எளிதாகக் கொடுத்துவிடுகிறது. சாலை வெயிலின் உக்கிரத்தில் தகித்துக் கொண்டிருந்தது. காலில் செருப்பு அணிந்திருப்பது சாலையின் தரையில் ஊரும் கானலின் தீண்டுதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவாது பயன்படுகிறதே.
தூரத்தில் தெரியும் எல்லாமும் மங்கலான காட்சி படிமத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நெருங்கிப் பார்க்க கால்கள் துடிக்கின்றன. என்னால் முடிந்தவரை முன்னகர்ந்து அடியெடுத்து வைத்துப் பார்க்கிறேன். கால்களால் நகர முடிகின்றன. ஆசுவாசமாய் சாலையைக் கடந்து அந்தக் குடியிருப்பில் பாதி வளர்ந்து நீண்டிருக்கும் நிழலைக் கண்டபோது, தொப்பென அங்குப் போய் விழ வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததும் நடக்கத் துவங்கினேன் புது தெம்பு கிடைத்தது போல.
வீடுகளைக் கடந்து நடப்பதென்பது ஒவ்வொரு மனிதர்களின் சுவாச சப்தங்களையும் தீராத இரைச்சல்களையும் கடந்து போவது போலவே இருக்கின்றன. ஒரு வீட்டின் முன் வந்து நின்றபோது, அந்த வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதைப் பார்த்தேன். உள்ளே நுழைய திராணியில்லாததால், வெளியே வாய்ப் பிளந்த சாக்கடையின் ஓரமாகப் போய் அமர்ந்துகொண்டேன். அநேகமாக அந்த வீட்டின் முதலாளி வெளியே செல்லும் அவசரத்தில் வீட்டின் கதவைப் பூட்டாமல் சென்றிருக்கலாம் அல்லது வீட்டினுள்ளே ஒரு கொலை நடந்திருக்கலாம். கொலை நிகழும் வீடுகள் தம்மீதான சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக இப்படிக் கதவைத் திறந்து போட்டு செயற்கையான யதார்த்தத்தைக் காட்டுவது போலவே இருக்கின்றன. யார் இந்த வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்?
சாக்கடையிலிருந்து அகன்று வந்து வானத்தைப் பார்த்தேன். வெயில் மெல்ல தலைக்கு நேராக வந்து உச்சந்தலையில் களிங்கனின் நர்த்தனம் போல ஆடிக் கொண்டிருந்தது.
“வீரமகா காளி”
குதிகாலிட்டு அமர்ந்து கொண்டு அந்த வீட்டின் சாரளத்தை எக்கினேன். யாரோ உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்தது. அந்த முகம் இருளில் பரிதவிக்கும் ஆன்மாவின் சாயலைப் பெற்றிருந்தது. ஒருவேளை அந்தச் சாரளத்தினோரமாக அமர்ந்திருப்பவன் ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும். பிற்பகல் வெயில் உச்சிக்கு ஏறியதும் தம்மை அறைக்குள் சிறைப்படுத்திக் கொள்வான் போல. அவ‎னின் கண்கள் இழந்த பொழுதுகளுக்காக ஏங்கிக் கொண்டிருப்பது பொன்றதொரு பிம்பத்தைப் பெற்றிருந்தன. அவன் பார்வையில்லாதவனாக இருக்கலாம். வெறுமனே வெளியைத் தம் முகத்தில் படும் வெயிலின் தீண்டுதல் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறான் போல. அந்தச் சாரளம் அவ்வளவு நல்லதாகத் தோன்றவில்லை எனக்கு. யாரோ பில்லி சூன்யம் வைத்து அவனை அதைக்குள்ளாகவே பூட்டி வைத்துவிட்டார்களோ? அல்லது பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டு விரக்தியின் இறுதி விளிம்பில் அமர்ந்திருக்கிறானோ? இன்னும் 5 நிமிடத்தில் அவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிடுவான் போல. இருக்கலாம். அவனுடையை இருளுக்குள்ளான அந்த இருப்பு அதை வலுவாக உறுதிபடுத்திக் கொண்டிருப்பது போல பட்டது.
இல்லை. இருக்கவே வாய்ப்பில்லை. தூக்குப் போட்டுக் கொண்டு இறக்க நினைப்பவன் கண்டிப்பாக வீட்டின் வாசல் கதவைத் திறந்து வைத்திருக்க மாட்டான். ஒருவேளை இவன் கோழையாக இருக்கலாம். தக்குறி பையளாகக் கூட இருக்கலா. எல்லாம் இயலாமைகளையும் தனது அறைக்குள்ளே அடைத்துக் கொண்டு வெளி உலகத்தைக் காண திராணியில்லாமல் இப்படி குறுகலான அறைக்குள் கிடக்கிறான் போல.
“அம்மா காளி”
எழுந்து மீண்டும் வானத்தைப் பார்த்துவிட்டு நடக்கத் துவங்கினேன்.

ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation