ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நாகூர் ரூமி


————————————————–

(மைலாஞ்சி (கவிதைகள்). ஹெச்.ஜி.ரசூல். சரம் வெளியீடு. தக்கலை. விலை ரு.50)

வார்த்தைகளின் வலிமை மறுபடியும் நிரூபணமாகிவிட்டது. எதிர்ப்பு அலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஊருக்கு ஊர் நேருக்கு நேர் என்று பலவாறு கவ்ிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அக்கினிப் பிரவேசங்கள். ஜுலை – ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் அவருக்கு நேர்ந்து கொண்டிருந்த இன்னல்களைப் பற்றி அவர் மூலமாகவே அறிய வரும்போது மனம் வேதனையடைகிறது.

எனினும் நான் ஒரு முஸ்லிம் என்ற முறையிலும் கவிஞன் என்ற முறையிலும், உணர்ச்சி கலக்காமல் பாரபட்ச முறையிலும் கவிதைகளை அணுகிப் பார்த்தபோது, பட்டதைப் பகிர்ந்துகொள்வதே இம்மதிப்புரையின் நோக்கம்

மைலாஞ்சியில் 71 தலைப்பிடப்பட்ட கவிதைகளும் சில தலைப்பிடப்படாதவைகளும் உள்ளன. இவை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கின்ற இஸ்லாமியர்களின் வாழ்முறையை, நம்பிக்கைகளை, கலாச்சாரத்தை, அவர்களுடைய மொழியிலேயே விவரிக்கின்ற ஒரு டாகுமெண்ட்ரி போல உள்ளன. இந்த டாகுமெண்ட்ரி காட்டுகின்ற உலகம் சின்னதுதான் என்றால் மிகையாகாது.

ஆனால் கவிதைகளின் அடிநாதமாக இருப்பது கவிதைமாந்தரின் அகவாழ்வு பற்றிய அக்கறையே. கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளுமே அகஉலகம் என்ற புள்ளியை நோக்கியே பிரயாணம் செய்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாததினால்தான் இவ்வளவு கொதிப்புகளும் ஃபத்வாக்களும் என்பது என் கருத்து.

ஹெச்.ஜி.ரசூல் என்ற மனிதரை நானறியேன். மைலாஞ்சியில் வெளியிப்படும் கவிஞரையும் அவர் எழுப்பும் கேள்விகளையும் வைத்துப்பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. அது, இது சல்மான் ருஷ்டி விவகாரமல்ல என்பதுதான். அவன் ஒரு ஆங்கிலமறிந்த அயோக்கியன். அவனுடைய ‘சாத்தானின் கவிதைகள் ‘ அசிங்கமான உள் நோக்கம் கொண்டது என்பது அவனிடைய நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தாலே புரிந்துவிடும்.

ஆனால் மைலாஞ்சி அதற்கு நேர்மாறானது. முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதன், ஒரு கவிஞனாகவும் துணிச்சல் கொண்ட சிந்தனையாகளனாகவும் இருக்கும் பட்சம் அவனுள்ளே சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுவது இயற்கையானதே. அவற்றை அவன் மைலாஞ்சி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பதே உண்மை.

இந்த நேர்மைக்கான ஆதாரங்கள் நிறையவே கவிதைகளில் உள்ளன. உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியோ அல்லது திருக்குரான் பற்றியோ கவிதையிலோ அடிக்குறிப்பிலோ குறிப்பிடும்போது, எந்த இடத்திலும் ஒரு மரியாதைக்குறைவான சொல்லோ அல்லது கிண்டலான சொல்லோ கிடையாது. உதாரணம்.

ஆயிஷா நாயகி : அண்ணல் நபிகளின் மனைவிகளில் இளையவர். ( பக்கம் 6) ஆமினா : நபிகள் நாயகத்தின் தாயார் ( பக்கம் 11)

கவிதைகளை ஒரு முறை வாசித்து விட்டாலே இந்த தெளிவு ஏற்பட்டுவிடும். அதன் அடிப்படையில் கவிதைகளை விமர்சிப்பதே ரோக்கியமான அணுகுமுறையாகும்.

ஒரு வசதிக்காக நான் மைலாஞ்சி கவிதைகளை இரண்டாகப் பிரிக்கிறேன். (1) ஆட்சேபனைக்குர்ிய கவிதைகள். (2) மற்றவை. முதல் வகைக்கவிதைகள் அளவுக்கு அதிகமாக சமைத்து தீய்ந்துபோன உணவு மாதிரி. அல்லது மருதாணி அதிகமாகச் சிவந்து கறுத்த விரல்கள் மாதிரி. மற்றவைகளில் அழகாகச் சிவந்த விரல்களூம் உண்டு. சரியாகச் சிவக்காதவையும் உண்டு.

பதின்மூன்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் மொத்தமாகவோ சில வாக்கியங்களிலோ முதல் வகையைச் சேர்ந்தவை. ஆனால் அவை எந்த அளவுக்கு ஆட்சேபனைக்குரியவை என்பதை விரிவாகப் பார்க்கவேண்டியது அவசியம்.

முதல் கவிதையே பிரச்சனையைக் கிளப்புவதாக உள்ளது.

ஆதம் நபிக்கும்

ஹவ்வாவிற்கும்

உடல் இச்சையக் கிளப்பிய

அந்த விருட்ச மரத்தின் கனியை

ருசித்துப் பார்க்கவேண்டும் (பக். 1 )

முதல் மனிதர் ஆதமுக்கும் அவர் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்ட முதல் மனுஷி ஹவ்வாவிற்கும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை சுவைத்தபிறகுதான் காம இச்சை வந்தது என்ற கூற்றுக்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. (பார்க்க திருக்குரான் 2 : 28-37). அது கிறிஸ்தவத்தின் கூற்று.

பாலுணர்வும் உடலுறவுமின்றி மனித இனம் பல்கிப்பெருகுவதெப்படி ? எனவே கனியை ருசித்தால்தான் இனப்பெருக்கம் சாத்தியம் எனில் அப்படியொரு காரியம் செய்ததற்காக இறைவன் அவர்களை தண்டித்தான் என்பது அபத்தமாகும்.

இஸ்லாத்தின் பார்வையில், அவர்கள் தண்டிக்கப்பட்டதன் காரணம் இறைக்கட்டளையை மீறினார்கள் என்பதுதான். எனவே, தவறான ஒரு தளத்தில் நின்று இயங்கும் இந்த கவிதையை அலட்சியப் படுத்திவிடுவதே சிறப்பு.

அன்னை ஆமினாவின் கவலை

எதுவாயிருந்திருக்கும்

அனாதையாகிப்போன

அண்ணல் நபிக்கு

அமுதூட்டி வளர்த்த

ஹலீமாவின் மார்பகங்களுக்கு

நன்றி சொல்ல முடியாமல் போனதுதான் (பக்.11)

இந்த கவிதையும் ஒரு தவறான தளத்தின்மீது எழுப்பப்பட்ட தேவையற்ற கற்பனையாக உள்ளது. முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பே அவருடைய தந்தை இறந்துவிடுகிறார். ஆனால் அவருக்கு ஆறு வயதாகும்வரை அன்னை ஆமினா உயிரோடுதான் இருந்தார். அந்தக்கால வழக்கப்படி பிள்ளைக்கு பாலூட்டி வளர்க்க ஹலீமா நியமிக்கப் பட்டார்.

தாயும் தந்தையுமில்லாத குழந்தையைத்தானே அனாதை என்று சொல்ல முடியும் ? சரி, ஒரு வாதத்துக்காக கவிதை சொல்கிறபடியே இரண்டு பேருமே இறந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இறந்துவிட்ட ஆமினா எப்படி ஹலீமா பற்றிக் கவலை கொள்ள முடியும் ? முஹம்மது அனாதையாகவும் ஆகவில்லை. செவிலித்தாய் நியமிக்கும் அரேபியப் பழக்கத்தில் கவலை கொள்வதற்கும் ஏதுமில்லை. வரலாறு சார்ந்த இந்த அர்த்தமற்ற கற்பனையில் கவிஞரின் கவலை என்னவென்று புரியவில்லை ! இது போலிப் பெண்ணியச் சிந்தனையோ என்ற ஐயம் எழுகிறது.

‘வெவ்வேறு ‘ என்ற ஒரு கவிதை இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறது. ஒரு காரணம் கருதி அந்த அர்த்தமற்றதை இங்கே முழுமையாகத் தருகிறேன் :

கிண்ண நேர்ச்சை

நேற்று பிறந்த குழந்தைக்கும்

வந்தேறிகளாய் முத்திரை குத்தப்பட்டு

எங்களுக்கு மட்டும் கை நேர்ச்சை

நூறு வருஷ எங்களின் பாரம்பரியத்தை

மசுராகக்கூட மதிக்காதவன் நீ

பெண் என்றால் ஒரு ஆடு

ஆண் என்றால் ரெண்டு ஆடு

அகீகா கொடுப்பதற்கு

குழந்தை வாழ்வையும்

விட்டுவைக்கவில்லை

உன் பாரபட்சம் (பக்.59)

இரண்டாம் பகுதியில் உள்ள ‘அகீகா ‘வை பாரபட்சம் என விமர்சனம் செய்யும் வரிகள்தான் கண்டனப் பிரசாரங்களால் மேற்கோள் காட்டப்பட்டவை. ஆனல் முதல் பகுதியோடு இணைத்துப் பார்த்தால், தனிப்பட்ட மோதலில் எதிரிமீது எறியப்பட்ட வெறுப்பு வார்த்தைகள் இவை என்பது புரியும்.

‘கை நேர்ச்சை ‘யை மட்டமாக நினைப்பவனை அல்லது ‘கிண்ண நேர்ச்சை ‘க்காரனைத்தான் ‘மசுராகக்கூட மதிக்காதவன் ‘ என்று ஏசுகிறார் முதல்பகுதியில். பிற்பகுதியில் வரும் ‘உன் பாரபட்சம் ‘ என்பது முற்பகுதியில் ஏசப்படும் எதிரிகளைத்தானே குறிக்கும் ? பொதுவாக இஸ்லாமிய சட்டத்தை குறைகூறுவதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் ? ஏனென்றால்

புனிதச் சட்டங்களை வளைத்து

முதுகு சொறிந்து கொள்கிறாய் (பக். 30)

என்பது கவிஞரின் தெளிவான குரலாக — இன்னொரு கவிதையில் — ஒலிக்கிறதே ? இஸ்லாமிய சட்டங்களை புனிதமானது என்று ஒத்துக்கொண்டும் ஆனால் அகீகா பற்றியது மட்டும் பாரபட்சமானது என்று சொல்வாரேயானால் அது குழப்பத்தையோ முரண்பாட்டையோதான் குறிக்கும். பெண்களுக்கான கவிஞரின் வரிந்துகட்டுதலில் போலித்தனமிருக்குமோ என்ற ஐயப்பாட்டை இந்த முரண்பாடு மேலும் அதிகப்படுத்துகிறது.

‘அல்லாவின் மொழி ‘ என்ற கவிதை கவிஞருக்கு தர்க்கத்தின் மீதுள்ள பிரியத்தைக்காட்டுகிறது :

ஆண் தன்மையும் பெண் தன்மையுமற்ற

என் அல்லாவை

எப்படி அழைப்பேன்

என் தமிழில் ( பக். 60 )

என்ற கேள்வி சரியாகப் புரிந்துகொண்ட ஒரு முஸ்லிமுக்கு வராது. அல்லாஹ்வைத் தமிழில் அழைக்க வேண்டிய அவசியமென்ன ? இறைவனை அழைப்பதற்கு ஒரு மொழி அவசியம்தான் எனில் ஊமைகள் என்ன செய்வார்கள் ?

தமிழில் ‘மனிதன் ‘ என்றாலும் ஆங்கிலத்தில் ‘மேன் ‘ என்றாலும் அது ஆணையும் பெண்ணையும் சேர்த்தே குறிக்கும். இது தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறப்புகளில் ஒன்று. ‘இறைவன் ‘ என்ற சொல்லும் இப்படிப்பட்டதே. ‘இறைவ ‘னை விட சிறந்த சொல் ‘கடவுள் ‘. இது ஆணையோ பெண்ணையோ குறிக்காது. எனினும் இதற்கு பன்மை உண்டு.

இறைவனைக் குறிக்க ஒரு சொல்தான் தேவை என்றால் அதற்கு ‘அல்லாஹ் ‘ என்ற அரபிச்சொல்லை விட சிறந்த சொல் இல்லை. ஏனெனில் ‘அல்லாஹ் ‘ என்ற சொல்லுக்கு பன்மை கிடையாது. அது ஆணையோ பெண்ணையோ குறிக்காது.

எனவே உருவமற்ற ஓரிறையைக் குறிப்பதற்கு, பாலும் பன்மையுமற்ற ‘அல்லாஹ் ‘வை விட சிறந்த சொல் ஒரு முஸ்லிமுக்கு இருக்க முடியாது. எனவே இந்த கவிதையில் கவிஞரின் மொழிப்பற்று ஒரு அபத்தமான தர்க்க நெருடலாக முடிகிறது.

உயிர் என்ற அடிப்படையில் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஒன்றுதான் எனினும் மனிதனுக்குத் தரும் மரியாதையை ஒரு ஆட்டுக்கோ அல்லது எறும்புக்கோ தரவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது.

உயிரின் அடையாளம் ஒன்றென்றாலும்

யாரும் தொழுவதில்லை

மைக்குட்டிகளுக்காக

ஜனாஸா தொழுகை ( பக். 79)

ஸஜ்தா செய்த நெற்றி

அழுதும் பயனில்லை

எறும்பின் ஜனாஸா (பக். 44)

‘ஜனாஸா ‘ என்ற சொல் இறந்த மனித உடலைத்தான் குறிக்கும். எறும்புகள் மற்றும் மைக்குட்டிகளின் மரணத்திற்கு மனிதர்கள் மரியாதை செய்வதில்லை என்று வருத்தப்படுவதோ கிண்டலடிப்பதோ அபத்தமானது.

ஆனால் இதைவிட ஒரு படி மேலே போய், ஆடுகளை அறுத்து ‘குர்பானி ‘ கொடுத்த பிறகு,

பீறிட்டுச் சிதறிக்கிடக்கும்

ரத்தத் துளிகளில் தெறிகிறார்கள்

இபுராஹீம் நபியும் இஸ்மாயீல் நபியும் ( பக். 98 )

என்று சொல்வது அவமரியாதை செய்கின்ற அளவுக்கு தீவிரமானது. ஆனால் இந்த சாகபட்சிணித்தனமான பரிவுக்கு கவிதா நியாயம்கூட இல்லை. காரணம்

மதியச் சாப்பாட்டுக்கு

இறைச்சிபோட்ட மஞ்சச்சோறும்

தொட்டுகிட புளித்துவையலும் (பக். 57 )

என்று இறைச்சி போட்ட சோற்றின் சுவையை சிலாகிப்பவரும் இவரே !

பெண்களுடைய பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் சார்பாக ஓங்கி ஒலிக்கின்ற ஆண்குரலாக, பெண்களின் சேவைகள், நம்பிக்கைகள் ஆகியவைகளை வெளிச்சப்படுத்துவதாக பல கவிதைகள் உள்ளன. மறவணை, உயிர் வாழ்தலின் கணங்கள், வார்த்தை, உம்மம்மா, பீரும்மா, முத்துருவிதாயி ஆகியவை உதாரணங்கள். ஆனால் கவிஞரின் நேர்மையை சந்தேகிக்கச் சொல்லும் வகையில் சில கவிதைகள் உள்ளன. குறிப்பாக இரண்டு கவிதைகள் :

தொழுகை கூடாது என்றாய்…

விதவிதமான கட்டளைகள்

வீட்டைவிட்டும் உன்னைவிட்டும்

அசுத்தப் பீடையென பட்டம் சூட்டி

என்னை விட்டே

என்னையும் அன்னியமாக்கினாய் ( பக். 63 )

மாதவிடாய் காலத்தில் முஸ்லிம் பெண்கள் தொழவும் குரான் ஓதவும் கூடாது என்பது உண்மைதான். ஆனால் இது பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற மாபெரிய அநீதி மாதிரியான ஒரு தொனி கவிதையில் உள்ளது. இது தவறு. ஏனெனில் எந்தக்காரியத்தையும் மன ஒருமைப்பாட்டுடன் செய்யவேண்டும் என்றுதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. தொழும்போதோ ஓதும்போதோ கீழே வடிய ரம்பித்தால் மனம் எதில் செல்லும் ?

எனவேதான் அந்த நேரத்தில் அந்த காரியங்களைச் செய்யவேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. உடலுக்கும் மனதுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை மனிதன் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அது. அது பாராட்டுக்குரியதே. அன்றி, அனாவசியமாகக் கூக்குரலலெழுப்புவதற்கு உரியதல்ல.

மாதவிடாய் காலங்களில் மனைவிகளோடு வீடுகூடக் கூடாதென்று இறைவனே கணவர்களுக்கு தன் திருமறையில் கட்டளையிடுகிறான். ஆண்களுக்குக்கூட இதையொத்த சட்டங்கள் உண்டு. உதாரணமாக, தொழுகையில் நிற்கும்போது காற்று பிரிந்துவிட்டால் தொழுகை முறிந்துவிடும். மறுபடியும் போய் ‘ஒளு ‘ (சுத்தம்) செய்துவிட்டு வரவேண்டும். இது ஆண்களையும் கட்டுப்படுத்தும் நிபந்தனையாகும்.

மேலும் இந்த ‘கேர்ஃப்ரீ ‘ காலத்தில் எந்த முஸ்லிம் வீட்டிலும் விடாய்ப்பெண்களை தனியாக விலக்கிவைப்பதில்லை. அசுத்தம், பீடை என யாரும் திட்டுவதில்லை. எந்தக்காலத்திலுமே. உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியை கவிதையாக்கியதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.

செல்ல மகள் கேட்டாள்

இத்தனை இத்தனை

ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை

ஒரு பெண் நபி ( பக். 62)

செல்ல மகள் கேட்கலாம். ஆனால் செல்ல வாப்பா அதை கவிதையாக்கியதுதான் பிரச்சனை. 1, 24, 000 நபிமார்களில் பெண்கள் இருந்திருக்கலாம். அல்லது சமுதாயத்திற்கு வழிகாட்ட, மாதவிடாய் வரக்கூடிய, கர்ப்பிணியாகக்கூடிய பெண்கள் ஏன் லாயக்கில்லை என கல்லடியும் சொல்லடியும் கற்பனைக்கு எட்டாத சித்ரவதைகளையும் அனுபவித்த ஆண் நபிமார்களை ஒப்பிட்டுப் பார்த்து சிந்தித்திருக்கலாம். எப்படியிருப்பினும் இது அல்லாஹ்வைக் கேட்க வேண்டிய கேள்விதான். அவசரப்பட்டுவிட்டார்.

ஏழாவது நரகத்தின் வாசலின்

அடிவாரத்தில் உட்கார்ந்து

அழுதுகொண்டிருந்த

அண்ணல் நபியை ( பக். 107 )

நோக்கம் எதுவாக இருந்தாலும் கவிதா சுதந்திரம் எனும் எல்லையை தாண்டிய கற்பனை இது. முஹம்மது நபி நரகத்திலிருப்பதாக தாந்தே தன் ‘தெய்வீக இன்பியல் ‘ எனும் கவிதையில் எழுதினான். அதற்குப் பிறகு முஹம்மதின் பேரைக்கொண்ட ஹெச்.ஜி.ரசூல் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். இது சாதனையா வேதனையா என்பதை காலம்தான் அவருக்கு உணர்த்தும்.

அற்புதங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட

மூஸா நபி வைத்திருந்த

அஸாவைக் காணவில்லை (பக்.42)

என்ற கவிதையும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. ஆனால் இது ஒரு அருமையான கற்பனையின் வெளிப்பாடு. பிரச்சனைகளைத் தீர்க்கவல்ல ஒரு மாபெரும் அற்புத சக்தியை மனிதன் இழந்துவிட்டான் அல்லது தொலைத்துவிட்டான் என்பதை இந்த வரிகள் அழகாகச் சொல்லுகின்றன. மூஸா நபியின் அஸா ஒரு குறியீடாகச் செயல்படுகிறதே தவிர அதன்மீது கவிஞருக்கு எந்தவித வெறுப்போ பகையோ இல்லை என்பது தெளிவு.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, தெளிவின்மை, முரண்பாடு, அசட்டுத் துணிச்சல், உண்மைக்குப் புறம்பான கற்பனை ஆகியவற்றின் தொகுப்புதான் ஆட்சேபனைக்குரிய மைலாஞ்சி என்றால் அது மிகையாகாது.

2

மைலாஞ்சியின் பலவீனம் இரண்டு வகையானது. ஒன்று ஆட்சேபணைக்குறிய கவிதைகள். இரண்டு, வெறும் தகவல்களின் அடுக்காக வரும் நீண்ட கவிதைகள். மரணம் பற்றி குறைந்தது ஏழு கவிதகள் உள்ளன. ‘நாளைய கபுறாளிகள் செய்தார்கள் நேற்றைய கபுறாளிகளுக்கு ‘ (பக்.54) என்ற இரண்டு வரிகளைத் தவிர உருப்படியான எதுவும் இல்லை. படுவளம், ஒடுக்கத்துப் புதன், பீரும்மா, சுன்னத், முத்துருவிதாயி போன்ற கவிதைகளும் உப்புச் சப்பின்றியே உள்ளன.

மைலாஞ்சியின் பலம் மூன்று வகைப்பட்டது. 1. அதன் மொழி 2. (சில கவிதைகளில் தெறிக்கும்) அதன் உண்மை. 3. அதன் கற்பனை விரிக்கும் உள் ஓவியங்கள்.

தொகுதியின் தலை முதல் பாதம்வரை தொடர்கின்ற தமிழ், அரபி, ஃபார்சி, உர்து கலந்த முஸ்லிம் வட்டார வழக்கு மொழி ஒரு புதிய உலகத்தின் அனுபவத்தை உணர்ந்து கொள்ள அவசியமானதும்கூட. கவிதை மொழி வார்த்தை விரல்களுக்கு இட்ட மைலாஞ்சியாய் அழகு கூட்டுகிறது.

கவிதைகளில் ஆங்காங்கு தெறித்து விழும் உண்மைகள் நமது கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் உரியவை. தலைப்பிடப்படாத சிறிய கவிதைகளே இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த வகை உண்மைகள் மனிதர்களின் மனக்குகைகளில் டார்ச் அடித்துக் காட்டுகின்றன. உதாரணமாக,

பொட்டுவச்சுப் பார்க்க

எனக்கும் ஆசை

உம்மா திட்டுவாளோ (பக்.9)

இந்த நிதர்சனமான நடைமுறை உண்மையை யார் மறுக்க முடியும் ?

என்ன செய்வது

முன்பு உம்மாவைப் பிரிந்து வாப்பா

இப்போதெல்லாம் உன்னைப் பிரிந்து நான் (பக். 7)

முஸ்லிம்களின் வாழ்முறையின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்ட வயிற்றுக்கான வெளி நாட்டுப்பயணம், அதன் விளைவாய் தலைமுறை தலைமுறையாய் தொடரும் உறவுகளின் பிரிவு. அதன் சோகத்தை இதைவிட சிறப்பாகச் சொல்ல முடியுமா ?

சுமையாக்களின் பெண்ணுறுப்பில்

அம்பெய்து கொள்ளும் அபூஜஹில்கள்

படுக்கைகள் தோறும் (பக்.33)

இந்த தொகுதியின் மிகச்சிறந்த கவிதையாக இந்த மூன்று வரிகளையும் சொல்லலாம். இவை சொல்லும் உண்மையும் அதை உணர்த்த விரியும் படிமத்தின் தீவிரமும் அற்புதமானவை. ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை இவ்வளவு சுருக்கமாகவும் வலிமையாகவும் இதுவரை நானறிந்த முஸ்லிம் கவிஞர்கள் யாரும் சொன்னதில்லை. இஸ்லாமிய வரலாற்றையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது இந்த கற்பனை.

சுமய்யா என்ற வயதான அடிமைப்பெண் இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்காக அவரை நிர்வாணமாக்கி பாலை மணலில் நிற்க வைத்து பலவாறு துன்புறுத்தினர் அரேபிய ஆண்களில் சிலர். அப்பக்கமாக அப்போது வந்த அபூஜஹில், அவர்கள் கொடுத்த சித்ரவதைகளில் திருப்தியுறாமல் சுமய்யாவின் பெண்குறியில் அம்பெய்து கொன்றான். இஸ்லாத்திற்காக உயிர் துறந்த முதல் தியாகப் பெண்மணி அன்னை சுமய்யா. இது வரலாற்றில் ஒரு பக்கம்.

‘படுக்கைகள் தோறும் ‘ என்ற ஒரு சொல்லின் மூலம் அம்புகள் ஆண்குறிகளாய் பரிணமித்து, திருமணம், உடலுறவு, பெண்ணின் சார்பு நிலை, வரதட்சிணை போன்ற பல விஷயங்களையும் அவை சார்ந்த கொடுமைகளையும் காட்சியாக்குகிறது கவிதை.

ஆனாலும் எல்லாப் பெண்களும் சுமைய்யாக்களல்ல. எல்லா ஆண்களும் அபூஜஹில்களில்லை. மேலும் அவன் சுமய்யாவின் கணவனுமல்ல. பெண்களிலும் அபூஜஹில்கள் உண்டு. ஆண்களிலும் சுமைய்யாக்கள் உண்டு. இதுவும் நடைமுறையில் உள்ளதுதான்.

மைலாஞ்சி கவிதைகள் பெரும்பாலும் பிரச்சினைகளைப் பேசுகின்றன. அல்லது பிரச்சினைக்குறியதாகி விடுகின்றன. என்றாலும் பிரச்சனைகள் சாராத மென்மையான பக்கங்களும் இல்லமாலில்லை. மைலாஞ்சி என்ற தலைப்புக் கவிதையே நல்ல உதாரணம்.

முடிந்தவரை ஒவ்வொரு கவிதைக்கும் அடிக்குறிப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஒருசில தவறுகள் உள்ளன. உதாரணமாக, ‘சஹாபி ‘ என்பதற்கு ‘நபிவழியை பின்பற்றி வாழ்பவர் ‘ என்றுள்ளது. அப்படி வாழும் இன்றைய முஸ்லிம்களை சஹாபி என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. சஹாபி என்றால் நபித்தோழர். அதாவது முஹம்மது நபியின் காலத்தில் வாழ்ந்து, அவரோடு நெருங்கிப் பழகி, அவரைப் பின்பற்றிய தோழர்கள் என்று அர்த்தம்.

கவிஞரின் பின்னுரை எரிச்சலூட்டுவதாகவும் அதிகப் பிரசங்கித்தனமாகவும் உள்ளது. கவிஞன் என்ற முறையில் எது கவிதை அல்ல என்பது பற்றி நான் ஒரு தெளிவான முடிவோடிருக்கிறேன். அது வெளிப்படையான கருத்து எதுவும் கவிதையாகாது என்பதுதான். இதை வைத்து மைலாஞ்சியை அணுகும்போது முக்கால்வாசிக் கவிதைகள் வெறும் கருத்துக்களாகவும் குழப்பங்களாகவும் கேள்விகளாகவும் தகவல்களாகவும் நின்று போகின்றன.

திறமையிருக்கிறது. ஆனால் அடக்கி வாசிப்பது கவிதைக்கும் கவிஞருக்கும் அழகு.

(புது எழுத்து – 4, 2002)

———————————-

ruminagore@yahoo.com

திண்ணை பக்கங்களில் நாகூர் ரூமி

  • மார்க் ட்வெய்ன்

    Series Navigation

  • நாகூர் ரூமி

    நாகூர் ரூமி