வையாபுரிப்பிள்ளை குறித்து

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ஜெயமோகன்


எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே.

1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ?

அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ ஐம்பதுவருடங்கள் ஆகின்றன. இத்தனைகாலம் அவரது ஆய்வுமுடிவுகள் அனைத்தும் அபப்டியே நீடித்து நிற்கும் என்று எவருமே வாதிட இயலாது. முதல்நிலைக் கோட்பாடுகளை உருவாக்கிய ஆய்வாளன்கூட அத்தனைகாலம் நீடித்திருக்கமாட்டான். காரணம் ஆய்வு தொடர்ந்து முன்னேறும் ஒரு பயணம்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுகளை நிகழ்த்தியபோது தமிழின் முக்கியக் கல்வெட்டுகள் பல படிக்கப்படவில்லை. இன்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் முதல்தள தாரமாகக் கணிக்கப்படும் பல புதைபொருள் சான்றுகள் விளக்கப்படவில்லை. மானுடவியல், வேர்ச்சொல்லியல் முதலிய பிற அறிவுத்துறைகளுடன் இலக்கிய, தொல்பொருள் சான்றுகள் உரையாடவைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நிகழ்த்தும் முறையியல் உருவாகி வரவில்லை. அவரது காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த முறைமையை கையாண்டு வையாபுரிப்பிள்ளை தன் முடிவுகளுக்கு வருகிறார். வையாபுரிப்பிள்ளையின் பல முடிவுகள் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆய்வாளராக அவரது முக்கியத்துவம் சில அடிப்படைக் காரணிகளால் அமைந்தது. ஒன்று ஆய்வுக்கு கொள்கைப்பிடிப்போ உணர்ச்சிகரமான ஈடுபாடுகளோ தடையே ஆகும் என்றும் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது புறவயமான முறைமையே என்றும் அவர் நம்பியமை. இரண்டு ஆய்வுக்குப் பின்புலமாக தமிழ்நாட்டில் அன்று இருந்த சமூக அதிகாரத்துக்கான போட்டியில் அவர் பக்கம் சாராமல் நின்றது.

இன்று அச்சூழலை புரிந்துகொள்ளும் உதாரணமாக இரு நூல்களை வாசகர்கள் பரிசீலித்து நோக்கவேண்டுமென்று எண்ணுகிறேன். சு .கி ஜெயகரன் அவர்கள் எழுதிய சமீப கால நூலான ‘ ‘ குமரி நில நீட்சி ‘ ‘ [காலச்சுவடு பதிப்பகம்.] குமரிக்கண்டம் என்ற கருதுகோள் எவ்வாறு தமிழில் உருவாகி பரப்பப்பட்டது என்பதை விவரிக்கிறது. பிரம்மஞானசங்கத்தைச் சேர்ந்த சிலர் ‘உள்ளுணர்வு ‘ மூலம் இந்துமகாசமுத்திரத்தில் ஒரு பெருங்கண்டம் இருந்ததாக ‘ கண்டடைந்து ‘ அதற்கு லெமூரியா என்று பேரிடுகிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக் கோடு பஃறுளி று முதலியவற்றை கடல்கொண்டதாக சில வரிகள் வருகின்றன. இங்குள்ள திராவிட இயக்க தமிழறிஞர்கள் இரண்டையும் எளிதாக இணைத்து குமரிக்கண்டம் என்ற பெரிய நிலப்பகுதி தமிழ்நாட்டுக்குத் தெற்கே பரந்து விரிந்துகிடந்ததாகவும், அங்குதான் தமிழ்ப்பண்பாடு பிறந்து ஓங்கியதாகவும் , மானுட இனமே அங்கே தோன்றியிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். ‘மேலைநாட்டு ‘ அறிஞர்களை மேற்கோள்காட்டி குமரிக்கண்டத்தை அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மையாகவே முன்வைத்தார்கள். அது அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு அரசு சார்பில் உலகத்தமிழ்மாநாட்டில் வெளியிடப்பட்ட செய்திப்படங்களில் கூட காண்பிக்கப்பட்டது. இன்றும் தமிழில் அது நிறுவப்பட்ட உண்மையாகவே காணப்படுகிறது. அதை ஐயப்படுவது தமிழ்துரோகமாக கணிக்கப்படுகிறது. தமிழாய்வுகள் எத்தகைய விருப்பக் கற்பனைகளாக இருந்தன என்பதற்கான ஆதாரம் இது. உண்மையில் இவர்களுடைய அப்பாவித்தனத்துக்கு உலக அளவில் கூட ஒரு சமான உதாரணம் இருக்காது.

சு கி ஜெயகரன் குமரிக்கண்டம் என்ற கருத்து எப்படி அறிவியலடிப்படையே இல்லாத ஆய்வுகள் மூலம் அபத்தமாக உருவாக்கப்பட்டது என்று விரிவாக விவரித்து அடிப்படையான சில வினாக்களை எழுப்புகிறார். இக்கருத்து தமிழில் பேசப்பட்ட இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்த எளிமையான அடிப்படைவினாக்கள் எவராலும் எழுப்பபடவில்லை என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். [உதாரணம் குமரிக்கடலில் அடித்தரை எவ்வளவு ஆழம் உள்ளது என்ற கேள்வி] அத்தகைய ஒரு விவாதத்துக்கான சூழலே இங்கே இருக்கவில்லை. இத்தகைய ஒரு நிலை கொண்ட ஆய்வுச்சூழல் தான் ஆபத்தானது ? எப்படி அது உருவாயிற்று ? இவ்வாறு குமரிக்கண்டத்தை ‘நிறுவிய ‘ அதே அறிஞர்கள்தான் எஸ் வையாபுரிப்பிள்ளையை தூக்கிக் கடாசியவர்கள் என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும் . வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு நெறி இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு முற்றிலும் எதிரானது.

இன்றும் இதேபோக்கு தொடர்வதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சை தமிழ் பலகலையைச்சேர்ந்த நெடுஞ்செழியன் எழுதிய ‘தமிழிலக்கியத்தில் உலகாயதம் ‘ என்ற ‘ஆய்வு ‘ நூல். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப்படைப்பு இது. கிரேக்க பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவை என்று சொல்லாராய்ச்சி மூலம் நிறுவும் நூல் இது. நம் மேடைகளில் இதை தினமும் காணலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பெரியார் தாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். ‘பெற்றோரொத்தல் ‘ என்ற சொல்லில் இருந்தே Betrothal என்ற ஆங்கிலச்சொல் வந்திருக்கிறதாம். வையாபுரிப்பிள்ளை போரிட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த ‘ஆய்வா ‘ளர்களுடன்தான். இன்றும் அவருக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதும் இதனால்தான். இந்த ஆய்வுகளை தமிழுணர்வின் பகுதிகளாகக் காண்பவர்கள்தான் வையாபுரிப்பிள்ளை பேரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள். கல்விநிலைய ஆய்வுகளில் அவரது ஒரு மேற்கோளைக் காட்டினாலே அவற்றை விழத்தட்டுகிறார்கள்.

இரண்டாவதாக சமூக அதிகாரப்போட்டி. அன்றைய தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போரைப்பற்றி இந்தக் குறிப்பில் கோடி காட்ட விழைகிறேன். வெள்ளையர் எடுத்த இரு மக்கள்தொகை கணக்குகள் இந்திய அளவில் பெரிய சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கின. முதல் கணக்கு சாதி அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு வருண அடிப்படையிலும் எடுக்கப்பட்டது. வருண அடிப்படையில் சாதிக்கணக்கு எடுக்கப்பட்டபோது பல வேளாண் சாதிகள் தங்களை சத்ரியர் என்று அடையாளப்படுத்தின. உதாரணமாக நாடார் மற்றும் தேவர். இது வைசியர்களாக மட்டுமே கூறத்தக்க வேளாளர் , முதலியார் போன்றவர்களை கொதிப்படையச் செய்தது. சத்ரியர் வைசியர்களைவிட மேலானவர்கள் ஆயிற்றே. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோர் இதற்கு எதிராக எப்படி வேளாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டிப் போரிடமுற்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு . ஆரிய வருணப்பிரிவை முற்றாக நிராகரித்து தங்களை மிகத்தொன்மையான ஒரு இனமாகக் அடையாளம்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது இவ்வாறுதான்.

அன்றைய சூழலில் வேளாளர், முதலியார் முதலிய பிராமணரல்லாத உயர்சாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் ஒருபக்கம். நாடார் போன்ற சாதிகள் தங்கள் இடத்தைக் கோரி நடத்திய போராட்டம் ஒருபக்கம். தலித்துக்கள் முதலியோரை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஆங்கில ஆய்வாளர் செய்த ஆய்வுகள் ஒருபக்கம் என்று மூன்று இழுவிசைகள் அன்று நிலவின. திருநாவுக்கரசரின் காலம் குறித்த கால்டுவெல்லின் ஆய்வுதான் அந்த நூற்றாண்டுகால ஆய்வுப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். அது பக்தி இயக்கம் மற்றும் சைவசித்தாந்தத்தின் காலத்தை வெகுவாக பின்னால் கொண்டுவந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு. அவருக்கு வேளாளரின் ஆதிக்கம் பிந்திய காலத்தது என்று காட்டி பறையர் சாதியினரை முதற்குடிகளாக முன்னிறுத்தும் நோக்கம் இருந்தது என்று ஆய்வாளர் வேத சகாய குமார் சொல்கிறார். அந்நூலுக்கு எதிராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை செய்த கால ஆராய்ச்சியும் மாணிக்கவாசகர் காலம் குறித்து மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியும் அக்காலத்தை வெகுவாக முற்காலத்துக்குக் கொண்டுசென்றன. அதற்குரிய தரவுகள் சேர்க்கப்பட்டன, தர்க்கங்கள் உருவாக்கபப்ட்டன . இந்த நோக்கின் நீட்சியாகவே அடுத்த கட்டத்தில் தமிழின் தொன்மையை மேலும் பின்னகர்த்தி குமரிக்கண்டத்துக்குக் கொண்டுசெல்லும் திராவிட இயக்க அலை எழுந்தது

இதில் வையாபுரிப்பிள்ளை கால்டுவெல்லையே அதிகம் சார்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவர் வேளாளராக தன்னை உணரவில்லை. அவருக்கு இருந்த ஐரோப்பிய ஆய்வுநெறிகள் மீதான நம்பிக்கையே வென்றது. அவரது முக்கியக் குறைபாடு என்னவென்றால் அவர் ஐரோப்பிய ஆய்வு முறைமை மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஆய்வாளர் மீதான நம்பிக்கையாக மாற்றிக் கொண்டார் என்பதுதான். இங்கு கால்டுவெல் பின்னகர்ந்த போது வையாபுரிப்பிள்ளையும் பின்னகர்ந்தார். ஆனால் பொதுவாக தென்தமிழகத்தின் சீரிய ஆய்வாளர்களில் கணிசமானபேருக்கு வையாபுரிப்பிள்ளை முக்கியமான முன்னோடி . கெ கெ பிள்ளை, ப.அருணாச்சலம், பேராசிரியர் ஜேசுதாசன் , அவரது மாணவர்களான அ கா பெருமாள், எம் வேத சகாயகுமார் முதலியோர் உதாரணம்.

ஆய்வுகள் முன்னகரும்தோறும் வையாபுரிப்பிள்ளையை எதிர்த்த ‘கடற்கோள்வாதிகள் ‘ மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மாறி காலக்கோளுக்கு ஆளாகி மறைவதையே காண்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவனின் நூலும் வையாபுரிப்பிள்ளையின் பாதையிலேயே நகர்கிறது. அதனாலேயே அந்த மகத்தான நூல் குறித்தும் பல தமிழறிஞர்கள் ஐயத்துக்கு இடமான மெளனம் சாதிக்கிறார்கள்.[தொன்மையான தமிழ் எழுத்துரு பிராம்மி என்பது எப்படிப்பட்ட ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கவேண்டும்! ]

வையாபுரிப்பிள்ளை சம்ஸ்கிருத ஆதரவாளரா ?

எந்த ஒரு ஆய்விலும் ஒட்டியும் வெட்டியும் தரப்புகள் விவாதிக்கவேண்டியுள்ளது . தமிழ் சம்ஸ்கிருத உறவைப் புரிந்துகொள்வதில் மூன்று சாத்தியக்கூறுகளை நாம் உருவகிக்கலாம். தமிழ் தொன்மையும் தனித்தன்மையும் உடையது. சம்ஸ்கிருத உதவி இல்லாமலேயே நிலைநிற்கும் வலிமை கொண்டது. தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பது ஒரு வரலாற்று மோசடி– இது ஒருவாதம். தமிழ் சம்ஸ்கிருதத்த்தை ஒட்டி வளர்ந்த ஒரு இரண்டாம்கட்ட மொழி என்பது இன்னொரு வாதம். தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பது மூன்றாம் தரப்பு.. மூன்று தரப்புகளும் தொடர்ந்து விவாதிக்கும்போதே ஒரு ஆய்வுச்சூழல் உருவாகிறது. இதில் வையாபுரிப்பிள்ளை நடுநிலையான தரப்பை எடுத்தார். இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்துடன் உரையாடி வளர்ந்தவை என்றும் தமிழுக்கு சம்ஸ்கிருதத்தின் கொடை மிக மிக முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார் எனலாம். சம்ஸ்கிருதம் சார்ந்த கருத்துக்கள்ளை வையாபுரிப்பிள்ளை வலுவாக முன்வைத்தமைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வாளர்களை அதிகம் சார்ந்திருந்தமைதான். அப்போது இந்தியவியலில் சம்ஸ்கிருதத்தை மையமாக்கி ஆராய்வதே பொதுவான போக்காக இருந்தது. இன்றும் அப்போக்கு வலுவாக உள்ளது.அன்று சம்ஸ்கிருத வேர்ச்சொல்லாராய்ச்சி வலுவாக இருந்தமையால் அவரது நோக்கு சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியின் சாத்தியங்களை அவர் அங்கீகரித்தார். அன்று நிலவிய பொதுவான போக்கு முதல்தரப்புதான். அது வையாபுரிப்பிள்ளைக்கு எதிராக ஒரு பெரிய காழ்ப்பு அலையை உருவாக்கி அவரை ஆரிய அடிவருடி தமிழ்த்துரோகி என்றெல்லாம் முத்திரைகுத்தச் செய்தது.

நிரூபணவாதம் சாராத அறிவுத்துறைகளில் எந்த தரப்பும் இறுதியாக நிறுவப்படுவது இல்லை, எந்தத் தரப்பும் முற்றாக அழிவதுமில்லை. ஆகவே மேலே சொன்ன மூன்று தரப்பும் எப்போதும் இருக்கும். எந்த ஒரு புது கருத்தையும் மூன்று கோணங்களும் தங்கள் நோக்கில் ஆராய்ந்து தங்களுக்குள் விவாதித்து தெளிவுபடுத்துவதே ஆரோக்கியமானதாகும். நானறிந்தவரை கேரளக் கலாச்சார ஆய்வில் தமிழ்மைய நோக்கு சம்ஸ்கிருத மைய நோக்கு என்ற இரு நோக்குகளும் ஆக்கபூர்வமான விவாதத்தையே நிகழ்த்திவருகின்றன. இவற்றின் முரணியக்கமே அங்குள்ள ஆய்வு நகரும் விசை. தமிழில் காழ்ப்பும் வசையும் மூலம் பிற தரப்புகள் அடக்கப்பட்டமையால்தான் ஆய்வுகள் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே சென்றன. [ ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது . ஆய்வுக்கோவை என்ற வருடாந்தர பிரசுரம் தமிழறிஞர்களால் வெளியிடப்படுகிறது. அதில் ஒரு கட்டுரை கண்ணகி ஒரு கன்னி என்று விரிவாக பேசி நிறுவ முயல்கிறது. அதை இந்து நாளிதழில் திறனாய்வுசெய்த இந்திரா பார்த்த்த சாரதி ‘இத்தனை ஆதாரம் காண்பித்த ஆசிரியர் ஒரு டாக்டர் சர்டிஃபிகெட்டையும் இணைத்திருக்கலாம் ‘ என்று எழுதினார்] சம்ஸ்கிருதச் சார்பு உள்ள அறிஞர்கள் பலர் மிக முக்கியமான ஆய்வுகள் செய்துள்ளனர்[ உதாரணம் பக்திகாலகட்டம் குறித்த ப அருணாச்சலம் ஆய்வு] அவை இங்கே உதாசீனம் செய்யபப்டுகின்றன.

வையாபுரிப்பிள்ளையின் தரப்பு வலுவாக நிறுவப்படவேண்டும். அது ஒரு சக்தியாக சூழலில் செயல்பட வேண்டும். அதன் மறுதரப்பு ஆரோக்கியமாக இருப்பதற்குக் கூட அது அவசியம்.

வையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன ?

என் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் எனக்கு சில ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. ஆய்வாளன் அல்ல என்பதனால் நான் அது குறித்து எழுதுவது இல்லை.

குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] நான் இப்போது எழுதும் ‘கொற்றவை ‘ என்ற நாவலில் புனைவுசார்ந்து அதை செய்ய முயல்கிறேன். ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.

தமிழ் வேர்ச்சொல்லாக்கம் பலவகையான உள்நோக்கங்களும் அசட்டுத்தனங்களும் உடையது என்றாலும் அதில் முக்கியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று எண்ணுகிறேன். பாவாணரின் வேர்ச்சொல்லாக்கமுறைமையை நான் ஐயப்படுகிறேன்.ஆனால் அவரது மொழிசார்ந்த நுண்ணுணர்வு பல வாசல்களை திறந்துள்ளது. என் மரபை புரிந்துகொள்ள அவர் மிக மிக முக்கியமானவர். வையாபுரிப்பிள்ளை அளவுக்கே முக்கியமானவர். சொல்லப்போனால் ஒரு படைப்பாளியாக எனக்கு அவர் வையாபுரிப்பிள்ளையை விடவும் முக்கியமானவர். நான் கையாளும் சொற்களை அறிய அவரை நான் சார்ந்திருக்கிறேன். அவர் வையாபுரிப்பிள்ளை மீது கொண்ட காழ்ப்பை ஒருவகை புலமைக்காய்ச்சலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது தரப்பு தமிழில் எப்போதும் வலுவாகவே இருக்கும் — இருக்க வேண்டும்.

ஆக நான் விழைவது ஒரு பெரிய விவாதப்புலத்தை. அதில் வையாபுரிப்பிள்ளையும் பாவாணரும் இரு முக்கியமான வல்லமைகள். பாவாணர்மீது இன்று குருட்டுத்தனமான பற்று கட்டப்படுகிறது. அவரது பாணியில் அசட்டு ஆய்வுகள் குவிந்து சூழல்சீர்கேட்டை உருவாக்குகின்றன. ஆகவே அவரை எதிர்த்து எழுத நேர்கிறது. வையாபுரிப்பிள்ளையின் மகத்தான சாதனைகள் கூட முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே அவரைப் பற்றி பேசவேண்டியுள்ளது அவ்வளவுதான்.

வையாபுரிப்பிள்ளை பற்றி இன்று செய்யவேண்டியது…

வியாபுரிப்பிள்ளையின் மகன் — அமெரிக்கர் என்றார்கள்– அவரது நூல்களை முழுமையாக பிரசுரிக்க முயன்று சில தொகுதிகலுடன் நின்று விட்டது. தமிழ்ச்சுடர்மணிகள் போன்ற நூல்களை இன்று மீண்டும் கொண்டுவரவேண்டும். யாரிடம் பதிப்புரிமை உள்ளது என்பது சிக்கலாக உள்ளது

வையாபுரிப்பிள்ளை குறித்து நூல் எழுத முற்றிலும் தகுதியானவர் முனைவர் அ கா பெருமாள். அவர் ஏற்கனவே எழுதிய நூலை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்றுடன் சேர்த்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் தமிழினி பிரசுரமாக நூல்வெளிவரக்கூடும்

**

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்