வேப்பமரம்

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

கோகுலன்


மாலையில் அண்ணனுடன் பேசியதிலிருந்தே மனதில் அதே எண்ணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயது முதலே நான் அண்ணன் உட்பட எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத்திடல் என்றால் அந்த வேப்பமரத்தடியும் அதை ஒட்டிய பெரிய காலிமனையும்தான். அந்த மரத்தடியில், அதன் கிளைகளில் விளையாடிய விளையாட்டுகள் இன்றும் எனக்கு மறக்காமல் பசுமையாகவே இருக்கின்றன.

கிராமத்து வீட்டை நினைத்தாலே முதலில் ஞாபகம் வருவது அந்த மரம்தான். வீட்டிற்கு முன்னால் மிகவும் அழகாக பசுமையாக இருக்கும். கொஞ்சமாய் வாசல் மறைத்தபடி நிற்கும். எங்கள் கிராமத்தில் வேப்பமரங்கள் அதிகம். அந்தத்தெருவிலே இத்துடன் சேர்த்து ஐந்தாறு மரங்கள் இருந்தாலும் இந்த மரம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக இருக்கும்.

வீடு பழைய ஓட்டுவீடாக இருந்தபொழுது கூரையிலும் இப்பொழுது மொட்டிமாடியிலும் காய்ந்த இலைகளும் பழங்களும் அதிகமாய் சேர்ந்துவிடும். நிறைய பறவைகள் கூடிகட்டியிருக்கும். மார்ச் மாதத்தில் மரம் முழுவதும் பூக்களாக இருக்கும். அதன் மிக மெல்லிய நறுமணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பூ உதிரும் காலத்தில் அம்மா கூரைமேல் துணி விரித்து அவற்றை சுத்தமாக சேகரிப்பாள். பூக்களை கொண்டு தேங்காய்த்துருவல் அதிகமாயிட்டு பொரியல் செய்வாள். சில நேரங்களில் ரசம் செய்வதற்கும் பயன்படுத்துவாள். எனக்கும் அப்பாவுக்கும் வேப்பம்பூ ரசம் மிகவும் பிடிக்கும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் காலத்தில் மரத்தில் இருக்கும் பழங்களைத் தின்பதற்கெனவே எங்கிருந்தோ விதவிதமான பறவைகள் வரும். சில சமயங்களில் தேனடைகள் கூட அந்த மரத்தில் இருந்திருக்கின்றன.

அந்த மரம் எப்பொழுது நடப்பட்டது , யார் நட்டது என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஏன், அப்பாவுக்கே கூடத்தெரியாது. ஆனால் அது அவருடைய சிறு வயதிலிருந்தே அங்கு இருக்கிறது என்று கூறுவார். பழைய ஓட்டுவீட்டை இடித்து மாடியெடுத்து கட்டியபோதும் மரத்தை வெட்டவேண்டாமென முடிவு செய்து ஒரு கிளையைக்கூட வெட்டாமலேயே வீட்டையும் கட்டிமுடித்தார் அப்பா.

வாசல் விட்டிறங்கி நடக்க முடியாத சித்திரை வெயிலில் கூட அந்த மரத்தடியில் கயிற்றுக் கட்டில்போட்டு அமரலாம். அவ்வளவு குளுமையாக இருக்கும். மாலை நேரங்களில் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அம்மாவும் அப்பாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இரவில் திண்ணையிலோ மொட்டைமாடியிலோ என அந்த மரத்துடனே சாப்பிட்ட நிலாச்சோறும் கணக்கற்றவை.

அந்த மரத்தின் கிளைகள் மிகத்தாழ்வாக அமைந்திருப்பதால் ஏணி ஏறுவது போலவே சுலபமாக ஏறிவிடலாம். மரம் ஏறத்தெரியாதவர்கள் கூட ஏறும்படியாக இலகுவாக இருக்கும். நானும் அண்ணனும் மரம்வழியே மொட்டைமாடிக்கு ஏறிப்போவதும், அதன் கிளைகளைப்பிடித்தே இறங்கி வருவதும் அடிக்கடி நடக்கும்.

அந்த மரத்திற்குத்தான் இப்பொழுது பிரச்சினை வந்திருக்கிறது. கிராமம் இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டதால் அது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அதை வெட்டச்சொல்லி பஞ்சாயத்து பரிந்துரை செய்வதாகவும் அண்ணன் சொன்னார். மேலும் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட இருப்பதால் அதற்கும் மரம் இடையூறாக இருப்பதாகவும் அதை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னார்.

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருப்பது முழுவதும் மறந்து கிராமத்து வேப்பமரத்தின் நினைவில் மூழ்கிக்கிடந்தேன். ‘என்னங்க, சாம்பார் சட்னி ரெடி, நீங்க பசிக்குதுன்னா சொல்லுங்க, தோசை ஊத்த ஆரம்பிக்கிறேன்’ என்றபடி என் கவனத்தை கலைத்தாள் விஜி. கடந்த எட்டு வருடங்களாக என் சுகத்திலும் துக்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்ட அன்பு மனைவி.

எனக்கு அருகிலிருந்த அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தான் அருண். ஆறு வயது நிரம்பிய ஆசை மகன். அவன்கூட இவ்வளவு நேரம் என் கவனத்தை கலைக்காமலிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவனது நோட்டுப்புத்தகத்தை எடுத்து பார்த்தேன். அவன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துப்பயிற்சி உட்பட அனைத்தையும் முடித்திருந்தான். விஜியிடம் தோசை ஊற்றச் சொல்லிவிட்டு அருணின் புத்தகங்களை அடுக்கி வைக்க உதவிசெய்தேன்.

‘விஜி, உனக்கு விசயம் தெரியுமா? நம்ம வீட்டு முன்னாடி இருக்குற வேப்பமரத்தை வெட்டப்போறாங்களாம்’

‘ஏங்க, என்னாச்சு?, யாரு சொன்னா?’

‘சாயந்தரம் அண்ணங்கிட்ட பேசினேன். அவர்தான் சொன்னாரு’

‘எவ்ளோ பெரிய மரம். வீட்டு வாசல்ல ரொம்ப நல்லா இருக்கும். காத்தும் சிலுசிலுன்னு வரும். ஏன் இப்போ ஏங்க அத வெட்டணும்? அதுபாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே’ அருண் தட்டில் சாம்பார் ஊற்றியபடி சொன்னாள் விஜி.

‘அத வெட்டுறதுல வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லதான். இருந்தாலும் அந்த வழியா வாய்க்கால் வருதாம், அப்புறமா ரோடும் அகலப்படுத்தி தார் போடறாங்களாம். நம்மால ஏன் அடுத்தவங்களுக்கு இடைஞ்சல்? ஸோ, வெட்டிறதுதான் நல்லது’.

‘அத வெட்டிட்டா வீடும் வாசலும் வெறிச்சோடிப்போகும்’ விஜியில் குரலில் அனுதாபம் இருந்தது. விஜியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணமே அவளது இரக்க குணம்தான். தெருவில் யாராவது வயதானவர்களையோ பிச்சைக்காரர்களையோ பார்த்தால்கூட வீட்டிற்கு வந்தும் அவர்களைப்பற்றியே புலம்பிக்கொண்டிருப்பாள். நான் இல்லாத சமயங்களில் கூட பிச்சை கேட்டு வருபவர்களுக்கு பின்வாசலில் வைத்து வாழை இலைவெட்டி சோறு போடுவாள்.

இரவு உணவு முடித்து சிறிதுநேரம் அருணுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அதன்பின், அவன் தூங்குவதற்காய் அவனறையில் சிறிதுநேரம் கதை வாசித்துவிட்டு அவன் தூங்கியவுடன் என் படுக்கையறைக்குச் சென்றேன். விஜி அடுக்களையில் பாத்திரம் தேய்த்துவிட்டு வந்திருந்தாள். சிறிது நேரம் அவளுடைய அலுவலக வேலை குறித்து பேசிக்கொண்டிருந்தாள். மிக மெல்லிய சத்தத்துடன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க சற்றுநேரத்தில் எல்லாம் அவளும் தூங்கிப்போனாள். நான் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தேன்.

சென்னையில் குடியேறி சுமார் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல உத்தியோகம். விஜியும் வேலைக்கு செல்கிறாள். நகரின் ஒதுக்குப்புறமாய் வாங்கிய வீட்டிற்காக வங்கிக்கடன் செலுத்துவதும் சிரமமாக இல்லை. அப்பாவும் அம்மாவும் இன்னும் கிராமத்தில்தான் வசிக்கிறார்கள். அண்ணன் கிராமத்தின் அருகிலுள்ள நகரில் வசிப்பதால் அடிக்கடி சென்று பார்த்துக்கொள்கிறார். அம்மா அப்பாவை இங்கு அழைத்துவந்த போதும் நகர வாழ்க்கைபிடிக்காமல் மீண்டும் கிராமத்திற்கே திரும்பி விட்டார்கள்.

இந்த பத்து வருடங்களும், அதற்கு முன்னால் கல்லூரி வாழ்க்கையுமே நான் கிராமத்தை பிரிந்த காலம். அப்பொழுதும்கூட மாதம் ஒருமுறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ விடுமுறையில் கிராமத்திற்கு சென்று வருவது வழக்கம். சாயங்கால நேரம் வாசலில் மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் அமர்வது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அருணுக்கும் கூட அதே மரத்தடியில் நிறைய கதைகள் கூறியிருக்கிறாள் அம்மா.

அம்மா அடிக்கடி சொல்லுவாள். ‘எந்த ஊருக்குப்போனாலும் நம்ம ஊரு மாதிரி இல்லடா.. நம்ம வீட்டு திண்ணையில அப்பாடான்னு உக்காந்தது போல இல்லடா..’ என்று. எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டேன். இருந்தும் வேலைக்காகவும் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளுக்காகவும் கிராமத்தை பிரிவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். கிராமத்தைப் பற்றியும் வேப்ப மரத்தைப்பற்றியும் ஏதேதோ யோசித்தபடியே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்தபோது கடிகாரம் மணி ஆறு முப்பது எனக் காட்டியது. விஜி பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். அருண் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அருகில் சென்று மெதுவாய் தலையை வருட விழித்துக்கொண்டான். ‘குட்மார்னிங் டாடி’ என்றான். அவன் காலைநேர முதல் வார்த்தை சற்று கரகரப்பாக இருந்தாலும் மிகவிம் இனிமையாக இருந்தது.

‘சனிக்கிழம லீவுநாள் தானே, அவன எழுப்பாட்டிதான் என்ன’ என்றாள் விஜி. எனக்கு அதில் உடன்பாடில்லை. காலையில் சீக்கிரமாக எழும் பழக்கத்தை அவனுக்கு கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். பாத்ரூம் சென்று பல்தேய்த்து முகம் அலம்பிவந்து தண்ணீர் குடித்தவுடன், விஜி சூடாய் தேனீர் தந்தாள். பேப்பர் படிக்க அப்பொழுது எனக்கு ஆர்வமில்லை.

‘விஜி, வாசல் பக்கம் அரளிச்செடிக்குப் பக்கத்துல ஒரு வேப்பமரம் வச்சா என்ன?’ விஜியிடம் கேட்டேன்.

‘ம்ம்.. வைக்கலாமே.. மரம் வளந்தா ரொம்ப நல்லாருக்கும்’ என்றாள். ‘நமக்கேன் இவ்ளோ நாளா இந்த எண்ணம் வரவேயில்ல?’ என்றாள்.

காம்பவுண்டுக்குள் அமைந்த சிறிய தோட்டத்திலே கொய்யா, மாதுளை மற்றும் வாழை உள்ளது. இருந்தும் முன்னால் ஒரு வேப்பமரம் வைக்கலாம் என்ற எண்ணம் இப்பொழுதான் வந்திருக்கிறது.

தேனீர் குடித்துவிட்டு, பின்வாசல்சென்று மண்வெட்டி எடுத்துக்கொண்டு வேப்பங்கன்றுக்கு குழிவெட்ட ஆரம்பித்தேன். நந்தியாவட்டைக்கும் அரளிக்கும் நடுவில் இரண்டுக்கு இரண்டு என சற்று அகலமாகவே குழி அமைந்தது.

விஜி டிபன் சமைத்து முடித்திருந்தாள். குளித்து சாப்பிட்டுவிட்டு, அருணை அழைத்துக்கொண்டு வேப்பங்கன்று வாங்கச்சென்றேன். இரண்டு மூன்று நர்சரிகள் அலைந்து எங்கும் வேம்பு கிடைக்கவில்லை. கிராமத்தில் வீட்டைசுற்றிலும் களைபோல வளர்ந்துகிடக்கும் வேப்பங்கன்றுகள். கடைசியாக பூந்தமல்லி சாலையில் ஒரு நர்சரியில் ஒரே ஒரு கன்று கிடைத்தது. இரண்டடிக்கு மேலே இருந்தது. அருண் தனக்குப் பிடித்ததாய் சொன்ன இரண்டு பூச்செடிகளும் வாங்கிக்கொண்டேன். பைக்கில் வரும்போது அவன் பள்ளியில் இருக்கும் மரங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தான். புதிய கன்றும் பூச்செடிகளும் வாங்கியது அவனுக்கு உற்சாகமாய் இருந்தது.

அருணிடம் கன்றைக்கொடுத்து குழியில் நடச்சொன்னேன். அவன் பிஞ்சுக்கைகளால் செடியை நட்டான். நான் சுற்றியுள்ள மண்ணை நன்றாக சீரமைத்து தண்ணீர் தேங்கும்டி பள்ளம் அமைத்தேன். அவன் கோப்பைகளில் கொண்டுவந்த நீரை ஊற்றினான். அவனும் தோட்டவேலைகளில் ஆர்வமாய் ஈடுபட்டது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. வாசலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் விஜி. வெட்டப்போகும் மரத்துக்கு பதிலாக ஒரு மரம் நட்டியாச்சு என்றாள். நட்டது மட்டும் போதாது. நன்றாக நீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்றேன்.

‘ஏன் டாடி, என்னைய நட்டுவைக்கச் சொன்னீங்க?’ இன்னும் மாறாத அவன் மழலை பேச்சில் அருண் கேட்டான். ‘மரத்துக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்’ என்றேன். அவன் கொஞ்சம் வெட்கம் கலந்து அழகாய் சிரித்தான். மேலும், ‘மரத்தோட உண்டான அனுபவங்கள் வாழ்நாள் முழுதும் பசுமையாவே இருக்கும்’ என்றேன். விஜியும் என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.

நான் இரண்டாவதாய் கூறியது அவனுக்கு அப்பொழுது புரிந்திருக்காது. இருந்தும் ஒருநாள் நிச்சயம் புரியாமல் போகாது.


Series Navigation

கோகுலன்

கோகுலன்