வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

எஸ். இராமச்சந்திரன்இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இக் கல்வெட்டில் உமையண்ண மணியக்காரன் வெடிகுண்டினால் இறந்து சிவலோக பதவியடைந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெடிகுண்டுத் தாக்குதலால் என்று பொருள் கொள்ள இயலாது என்றும், ஜமீன்தாருடன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது தவறுதலாய்த் துப்பாக்கியைக் கையாண்டு குண்டு பட்டுச் செத்தார் என்பதே அவரின் சந்ததிகளால் சொல்லப்பட்டு வரும் கதை என்றும் கவி குறிப்பிட்டுள்ளார். இக் கல்வெட்டு அவ்வாறு தற்செயலாக மரணமடைந்த ஒருவருக்காகப் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். எனது வாதத்திற்கான அடிப்படைகள் பின்வருமாறு:

1. “சாலிக்குளம் சிறைக்காடு காவலுக்குப் போயிருந்த மணியக்காரன்” என்றே கல்வெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மணியக்காரர்களின் காவற் பணியென்பது காட்டுப் பகுதியில் சமூக விரோதச் செயல்களோ, அரசுக்கு எதிரான ராஜதுரோகச் செயல்களோ நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் இருக்கலாம். கோட்டைகளுக்கு அல்லது கோநகர்களுக்குக் காவல் அரண்களாக மிளை என்ற பெயரிலும், சிறை என்ற பெயரிலும் காவல் காடுகள் வளர்த்துப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இத்தகைய சிறைக்காடு புறநானூற்றில் (17:28) குறிப்பிடப்படுகிறது. இத்தகைய சிறைக்காடுகளையே அரணாகக் கொண்டமைந்த குடியிருப்புகள் அருப்பம் என்ற பெயரிலும் (புறநானூறு 17:28) குறிப்பிடப்பட்டன. அருப்புக்கோட்டை என்ற ஊர்ப்பெயர் இப்பொருளின் அடிப்படையில் தோன்றியதாகவே தெரிகின்றது (ஹரப்பா என்ற சிந்து சமவெளி நகரத்துக்கும், அருப்பம் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தொடர்புண்டா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதுவும் ஆய்வுக்குரியதே). இத்தகைய காடுகளை மிக அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளைப் போன்று நாம் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், இத்தகைய காவற் காடுகள் மறைந்திருந்து எதிரியைத் தாக்குவதற்கும், எதிரி தம் பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்கும் உரிய அரண்களாகப் பயன்பட்டன. இத்தகைய காடுகளில் அரசுக்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இப்பகுதியிலுள்ள மணியக்காரர்களுக்கு இருந்துள்ளது.

2. இப்பகுதியில் வாழ்கின்ற ‘மணியக்காரத் தேவர்’ என்ற சமூகத்தவர் எட்டையபுரம் ஜமீன்தாரரின் சாதியாகிய கம்பளத்து நாயக்கர் சமூகத்துக்கும், மறவர் சமூகத்துக்குமான கலப்பு மணத்தில் தோன்றியவர்களாவர். புரட்சியணிப் பாளையக்காரர்களுக்கு வெடிமருந்து வழங்கியது தொடர்பாக, மணியக்காரத் தேவர் சமூகத்தவருள் திருநெல்வேலியைச் சேர்ந்த நாகராஜ மணியக்காரர் என்பவரின் பெயரும், தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் பெயருடன் சேர்த்தே ஆங்கிலேயர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மணியக்காரத் தேவர் சமூகத்தவர் வெடிமருந்து, வெடிகுண்டு போன்றவற்றைக் கையாள்வதில் அனுபவம் உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும், உமையண்ண மணியக்காரர் வசம் துப்பாக்கி இருந்திருப்பின் அவர் அதற்கு ஆங்கிலேயரிடம் லைசென்ஸ் பெற்றிருந்தாரா, ஆங்கிலேயரின் ஆதரவாளர்கள் என்பதால் எட்டையபுரம் சமஸ்தானத்து மணியக்காரர்களுக்கு மட்டும் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்ததா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இக் காலகட்டத்தில் முழுமையான, அதிகாரம் மிக்க காவல் துறை (Police Department) உருவாகி விட்டது. 1860ஆம் ஆண்டு வரைதான் கிராமத் தலையாரியை Village Police Peon என்ற அளவில் ஆங்கிலேய அரசாங்கம் அங்கீகரித்திருந்தது. 1860ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று Castes and Tribes of Southern India, Vol VII என்ற நூலில் பக்கம் 2இல் Edgar Thurston குறிப்பிடுகிறார். எனவே, உமையண்ண மணியக்காரர் துப்பாக்கியுடன் காவலுக்குச் சென்றாரா என்பதே ஐயத்துக்குரியது. அதே வேளையில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரித்தல், வெடிகுண்டுகள் தயாரித்தல் போன்ற செயல்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வந்தன எனத் தெரிகிறது. உமையண்ண மணியக்காரர் இறந்ததற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1911ஆம் ஆண்டில் இப் பகுதியிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில்தான் வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், ஓட்டப்பிடாரத்தில் பிறந்த வ.உ. சிதம்பரனார், உமையண்ண மணியக்காரன் இறந்த ஆண்டில் (1899) 27 வயதுடைய இளைஞராக இருந்தார். சட்ட அறிவும், வரலாற்று அறிவும், தமிழ் இலக்கியப் புலமையும் கொண்ட வ.உ. சிதம்பரனார் தம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றி இப்பகுதி மக்கள் பலரிடம் எடுத்துக் கூறி, சுதந்திர ஆவேசத்தையும், புரட்சி மனப்பான்மையையும் தூண்டியிருக்கவும் வாய்ப்புண்டு. 1876ஆம் ஆண்டிலிருந்தே தூத்துக்குடி ரயில் வண்டித் தடம் செயல்படத் தொடங்கி விட்டது. எனவே, சுதந்திரப் போராட்டத்திற்கான தலைமறைவு இயக்கங்கள் இப்பகுதியில் தம்முள் உறுதியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டிருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. (மதராஸ் ராஜதானியின் காவல் துறை ஆவணங்களை ஆராய்ந்தால் உமையண்ண மணியக்காரனின் மரணம் குறித்த வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.)

3. வேட்டைத் துப்பாக்கிகள் நரி, முயல் போன்றவற்றையும், பறவைகளையும் சுட்டுக் கொல்வதற்குரிய ரவைகளை (Pellets)ப் பயன்படுத்துவதற்குரிய துப்பாக்கிகளே ஆகும். புலி, சிறுத்தை போன்ற கொடுமையான விலங்குகளை வேட்டையாடுவதற்குத்தான் தோட்டா பயன்படுத்தப்படும் துப்பாக்கி தேவைப்படும். ரவை பயன்படுத்தப்படும் பழங்காலத் துப்பாக்கியால் அபூர்வமாகத்தான் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். இத்தகைய ஒரு துப்பாக்கியைக் கூடப் பயன்படுத்தத் தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி அதனால் இறந்து போயிருந்தால் அது உமையண்ண மணியக்காரரின் புகழுக்கு இழுக்கையே தேடித்தரும். எனவே, அதைக் கல்லில் பொறித்து வைத்திருப்பார்களா என்பது ஐயத்துக்குரியதே.

4. இக் கல்வெட்டில் உமையண்ண மணியக்காரரின் உருவம் பொறிக்கப்படாவிட்டால் கூட, இது ஒரு சமாதிக் கல்வெட்டு போன்று ஜனன மரண நாட்குறிப்பை மட்டும் விவரிக்கிற கல்வெட்டன்று. பழங்கால நடுகல் மரபில் அமைந்த ஒரு கல்வெட்டு இது எனக் கொள்வதில் தவறில்லை. கள்வர்களிடமிருந்தோ, கொடிய வன விலங்குகளிடமிருந்தோ, எதிரிகளிடமிருந்தோ ஊரைக் காத்து வீழ்ந்த வீரர்களுக்கும், ஆநிரைகளை மீட்டு அல்லது பெண்டிரின் மானத்தைக் காத்துப் போரிட்டு வீழ்ந்த குடி காவலர்களுக்கும் எடுக்கப்படுவனவே நடுகற்களாகும். ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள இளவேலங்காலில் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இவ்வூரின் பெயர் இளவழங்கல் என்பதாகும். “இளவழங்கலான இராச கண்டிய நல்லூர்” என்பது கல்வெட்டுக் குறிப்பு) கி.பி. 1547இல் வெங்கலராசா வடுகப்படையுடன் படையெடுத்து வந்தபோது திருநெல்வேலிப் பெருமாள் என்ற பாண்டிய மன்னனின் சார்பாக ஊரைக் காப்பதற்குப் போரிட்டு மடிந்த குண்டையன் கோட்டை மறவர்கள் பதின்மர்க்கு அவ்வூரில் நடுகற்கள் எடுக்கப்பட்டன. இந் நடுகற்கள் தற்போது திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காவற் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, எதிரியின் மறைமுகமான தாக்குதலால் வீழ்ந்தாலும் அதுவும் வீரச் செயலாகவே கருதப்படும். எனவே வெள்ளாரம் கல்வெட்டு, காவல் பணியின் போது தாக்கப்பட்டு அல்லது போரிட்டு இறந்த ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு என்று கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

maanilavan@gmail.com

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்