வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தீபச்செல்வன்


01.
நான் மீட்டும் இசை
நிலவு தென்னைமரம்
மணல் கும்பி இவைகள்
நிரம்பிய நகரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும்
காலத்தை நீ வெளியிட
மறுத்த பிறகு
எனது புல்லாங்குழலின் இசை
அடந்த இரவில்
தடுமாறிப்போகிறது.

02
வெளிகள் நோக்கிய
தருணம் ஒன்றில்
நானும் தோழர்களும்
தயராகிறோம்.

03
ஆனாலும் நான் இனி
உன் நிழல் தேடி வரமாட்டேன்
உனது இசை தீர்ந்த
நிழலில்
பயங்கரமும் துரோகமும்
நிரம்பி வழிகின்றது.
அமைதியின் வேரை
உன்னில் தொலைத்த பிறகு தான்
அசுரநிழலில்
நீ இசைத்த பாடலின்
அர்த்தம் உணர்ந்தேன்.
முகமில்லாத
இரவுகளில் தான்
உனது பாடலை கேட்டு
திரியமுடிகின்றது।

04
நீயும் நானும்
ஆதியில் சந்தித்துக் கொண்ட
தெருக்களெல்லாம்
விகாரமுற்று
தொலைந்து விட்டன.
நாம் சந்தித்த
சருகு வெளி கதைகளையெல்லாம்
புதைத்து விட்டு
ஏத்தனை முறை உயிர்த்தெழுந்தேன்
ஓவ்வொரு தருணத்திலும்
ஊன்னை புதிய குணமாய்
எதிர்பார்த்தேன்
நீ மாறவே இல்லை
பயங்கத்திலும் துரோகத்திலும்

05
இப்போது இந்த நகரம்
புதிதாக கட்டப்பட்டது
நாம் முன்பு கூடிக்கொண்ட
நகரங்களைப்போல இது இல்லை
உனது நிழலை
எதிர்பார்க்க சந்தர்ப்பம் இல்லை
புல்லாங்குழலின்
இசையின் சூழல்
நகரத்தின் அடியில் கிடக்கின்றது
நீயும் நானும்
புதைந்த அந்த அழகிய
இசையின் சூழலை
மீட்டெடுக்கவும் முடியும்
அதற்காக நீ சிறகுகளோடு
வருவாய் என்றே
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எதிர்பார்த்திருந்தேன்
ஆனால் அந்த
இடைவெளியில்
எனக்கு முளைத்த சிறகுகளை
கத்தரிக்கவே
உனது பறப்பும் பயணமும்
நிகழ்ந்தது.

06
தனி ஒருவனாய்
எனது வாக்கு மூலம்
ஒலித்துக்கொண்டு இருக்கின்றது
நீ எப்பொழுதும் போலவே
மௌனமாய் இருக்கின்றாய்
உனது மௌனத்தை விட
அதிக பயங்கரம் எதுவுமில்லை
அதிக அசுரம் எதுவுமில்லை
உனது மௌனத்தை
உலுப்பி புன்னகைத்த
ஒவ்வொரு தருணத்திலும்
நான் எனது
இசையின் சூழல் வாழும்
வனங்களை
இழந்து வந்தேன்
பயங்கரத்தை
அபிவிருத்தி செய்யும்
அசுரத்தை பகிர்ந்தளிக்கும்
உனது சமரச புன்னகையை
இப்போது எனது நகரம்
கிறுக்கி வைத்திருக்கின்றது.

நீ நோக்கிய பயணத்தில்
அதிகம் ஆக்கிரமிக்க விரும்புது
எனது நகரத்தை தானே
ஒரு முறை இந்த நகரத்தை
நீ வேரோடு பிடுங்கி எறிந்தாய்
பட்டுப்போன மரமாயும்
புதைந்த நகரமாயும்
நீ ஆக்கிய ஆக்கிரமிப்பு காலம்
புதைந்த மீண்டும்மொரு நகரம்
இனி நிச்சயம் ஏமாற மாட்டாது
உனது கால்களை
திருகும் திறன் என்னிடம் உள்ளது.

07
எனக்குப் பிடித்த
பாதையின் அர்த்தம் பற்றி
கலந்துரையாடிய
எத்தனை நிலவின் இரவுகளை
நீ கொலை செய்திருக்கிறாய்
உனக்காக நான் செய்துவைத்த
எத்தனை சிறகுகளை
நீ புறக்கணித்திருக்கிறாய்
நான் கட்டிய
எத்தனை வீடுகளை
நீ குழப்பி வந்திருக்கிறாய்.
நீ அம்புகளை செய்து
அறிவித்த ஒவ்வொரு தருணத்தையும்
அன்பின் தருணமாக
நான் நம்பினேன்
நீயும் நானும் கிடக்கும்
சிறைகளுக்காக வேண்டியிருக்கிறேன்
எல்லை தாண்டி போவதற்குள்
நீ எத்தனை தடவை
உன் அம்புகளால்
என்னை கிழித்திருக்கிறாய்
வனங்களை அழித்திருக்கிறாய்
மீண்டும் மீண்டும்
உன்னால் சிறைக்குள்ளே
அசுர வெளிகளை
ஏற்படுத்தவே முடிகிறது.
மீண்டும் நான்உன்னிடமிருந்து
உர்த்தெழுந்திருக்கிறேன்
நான் இனி என்
புல்லாங்குழலின் இசையை
புறக்கணிக்கலாம்
உனது நிழலை
புறக்கணிக்கலாம்
இனி நீ எந்த அம்புகளையும்
எடுத்துவர தேவையில்லை
எனக்கென்று
நல்ல வனமும் நகரமும்
என்னிடம் இருக்கிறது
நீ பறப்பதற்கான
வெளிகளும் என்னிடம் இருக்கிறது
உனக்கு எந்த சிறகுகள்
பொருத்தம்
எந்த வெளிகள் பொருத்தம்
என்பதை நான்
உணர்ந்திருக்கிறேன்;.

08
ஒரு பொழுதும் நாம்
சிறைகளுக்குள்
சிறகுகளை பரிமாற முடியாது
பறக்கவும் முடியாது
வலிகளால் தைத்த
சிறகுகளும்
அசுரத்தால் தைத்த
சிறகுகளும்
உச்சிக்கொண்டிருக்கும்
நிழலில் எனது வனங்கள்
கருகுவதற்கு அனுமதியில்லை.

கருகிய வனங்களுக்குள்
கருகிப்போன
புல்லாங்குழலை மீட்டி
கருகிப்போன
இசையின் போதையில்
இரவு தடுமாறவும் முடியாது
எனக்குள்ளிருந்து
வெளிவரும் எல்லா இசையையும்
வி~மாக வேண்டுமென்று
நீ விரும்புகிறாய்
எல்லோரும் என்னை
புறக்கணிக்கும்
ஏதிரொலியை நீ விடுகிறாய்

09
முன்பெல்லாம்
நான் குழலில்வார்க்கும்
இசையில்
என் வனங்கள் செழிக்கும்
அமுதைப்போல காற்றில் இசை பரவி
நகரமே இனித்தது
எப்போது நீ என் நகருக்குள்
அனுமதியின்றி நுழைந்தாயோ
அப்போதே எல்லாம்
இயல்பு குலைந்தன
நீ எப்போது
உன் அசுரத்தலையை
எனது நகரில் விழுத்தினாயோ
அப்போதே
எனது நிழல் கருகத் தொடங்கியது.
உனது அசுரம் பிரண்ட
முகத்தில்
சாவின் புன்னகையை
மன்னித்து
வரவேற்றுப் பிழைத்த நிமிடங்கள்
ஒவ்வொன்றிலும்
என் அமைதியின் வேரை
நீ பறித்தாய்.
எத்தனை மன்றுகளில்
கால் வலிக்கநடந்து
குரல் வலிக்க பேசியிருப்பேன்
நீ சிலுவை பற்றி
பேசிய பொழுதெல்லாம்
மன்னித்திருக்கிறேன்
நீண்டு வலிந்த முரனை
வரணளித்து
ஒவ்வொரு கண்ணீரின்
தருணத்திலும்
உனது மாளிகை
சிரித்துக்கொண்டிருந்தது
நான் கண்ணீரைப்பற்றியும்
குருதியைப்பற்றியும்
வியர்ந்த ஒவ்வொரு சொல்லிலும்
நீ ஏளனத்தைப் பரிசளித்தாய்.

10
ஆதியிலிருந்து உன்னால்
திருகப்பட்ட
எனது அமைதியின் வேரை
உன்னிடமிருந்து
எடுத்துக்கொள்ளப் போகிறேன்
நீயும் நானும்
நமக்கென்று இருக்கின்ற
நகரங்களில் திரிவோம்
வனங்களை ஆளுவோம்.
நெருப்பில் எனது முகமும்
சூழ்ச்சியில்
உனது முகமும்
முரண்பட்டுக்கிடக்கிறது
எரிந்து கொண்டிருக்கும்
நெடுந் துயரில்
அழிக்கப்பட்ட கிராமங்களின்
எண்ணிக்கையில்
துயரங்களின் அடுக்கில்
உனது பெயரை இனி
நிறுத்தி
புன்னகைக்க முடியாது.
நீ அழிவின் சிறையை
உன்னை சூழ
வார்க்கிறாய்
நான் என்னை சூழ்ந்திருக்கும்
துயரின் சிறையை
உடைக்கப் போகிறேன்
நம்மை தாண்டிய வெளிகளில்
வாழும் இசையை
தழுவப் போகிறேன்
தோல்வியின் பிறகேனும்
நீ பறப்பதற்கு முயற்சி செய்.

11
எனக்கான நகரம்
எனக்கான சிறகுகள்
எனக்கான வனங்கள்
எனக்கான சொற்கள்
எல்லாம்
உன்னிடமிருந்து மீட்கப்பட்ட
புதிய தருணத்தில்
வெளிகளால் கட்டப்பட்டிருக்கும்
வீட்டில் இனி
நாங்கள் வாழுவோம்

சிறகுகளை விரித்து
பறக்கத்தொடங்கியிருக்கிறோம்.

01.02.2006


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்