வெற்றியும் அதிர்ஷ்டமும்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

பாரி பூபாலன்


சென்ற வாரம் TOEFL தேர்வு எழுத நேர்ந்த போது ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. கட்டுரையின் தலைப்பு – ‘மனிதர்கள் வெற்றி அடைவதும் வளர்ச்சி பெறுவதும் கடின உழைப்பினால்தான். அதிர்ஷ்டத்துக்கும் வெற்றிக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ‘ இதை ஆமோதித்து அல்லது மறுத்து கட்டுரை எழுத வேண்டும். விநோதமாக, இந்தத் தலைப்பு நான் தற்சமயம் அதிகமாக யோசித்து வரும் விஷயமாக இருந்தது.

சமீப காலத்தில் வாழ்க்கையின் வெற்றிகளாய்க் கருதக்கூடியவற்றைவிட தோல்விகளாய்க் கருதக்கூடியவைகளே அதிகமாய்ச் சம்பவிப்பதாய் ஒரு தோற்றம். இப்படி தோல்விகள் மென்மேலும் ஏற்படக் காரணம் என்ன ? இந்த தோல்விகளை எப்படி வெற்றிகளாய் மாற்றுவது ? நம்மைப் போன்று இருந்து வெற்றி பல காண்பவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? என பல்வேறு எண்ணங்கள் எனக்குள்.

ஒரு மனிதன் வெற்றி அடைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் காரணம் கடின உழைப்பு மட்டுமல்ல என்று தோன்றுகிறது. இல்லையெனில், தன்னுடைய உழைப்பால் மென்மேலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே ? எவ்வளவு உழைப்பு கடின உழைப்பு. தான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், சிரமத்துடன் முயற்சி செய்தாலும், தான் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாதபோது, ஆங்கே என்ன செய்யமுடியும் எனத் தோன்றவில்லை. சரி, உழைப்புடன் சிறிது புத்திசாலித்தனத்தையும் சேர்ப்போம். இருந்தாலும் அங்கே வெற்றியினை காண முடிவதில்லை. அப்படியெனில் இவற்றுக்கும் மேலாக ஏதோ ஒன்று தேவைப் படுவதாகத் தோன்றுகிறது. அது அதிர்ஷ்டமாக இருக்குமோ ? கடவுள் அருளோ ? பிறவிப்பயனோ ? சரி, சாமி கும்பிட்டால் ஏதேனும் நடக்குமா ? எப்படிக் கும்பிட்டாலும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட முடிகிறது. தன்னால் இவற்றை உருவாக்க முடிகிறது. ஆனால் அதிர்ஷ்டத்தை எப்படி உருவாக்குவது ? அதனை அளவிட முடியும் எனத் தோன்றவில்லை. இப்படி அது அளவிட முடியாத அம்சமாய் இருப்பதால் வேறு ஏதேனும் காரனம் கிடைக்காத நிலையில் அதனை காரணமாய் எடுத்துக் கொள்ள முடிகிறது. தன்னை விட முட்டாளாகத் தோன்றக்கூடிய அடுத்தவன் அந்த நிலையை அடையும் போது அதிர்ஷ்டத்தைத் தவிர வேறு எதையும் காரணமாகக் கருதத் தோன்றவில்லை. வெற்றி பெருகிறவரைக் கண்டால் ‘அவன் அதிர்ஷ்டக்காரன் ‘ என சொல்லிக்கொள்ள வைக்கிறது. ஆதலால் ‘மனிதர்கள் வெற்றி அடைவதும் வளர்ச்சி பெறுவதும் கடின உழைப்பினால் மட்டுமல்ல. அதிர்ஷ்டம் நிச்சயமாக வேண்டும். ‘ என்றே அந்த கட்டுரையை எழுதி வைத்தேன்.

மேலும் சிறிது யோசித்துப் பார்க்கையில், வெற்றி என்பதை எப்படி வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயமாக இருந்தது. வெற்றியின் அளவுகோல் எது ? பணம் ? பதவி ? வாழும் முறை ? வசிக்கும் இடம் ? மனதின் மகிழ்ச்சி ? மன நிறைவு ? அளவுகோல் எதுவாக இருந்தாலும் அதனில் வெற்றியின் அளவீடு எது ? அளவுகோல் பணம் என்றால் அளவீடு எவ்வளவு ? ஒரு லட்சம் ? ஒரு கோடி ? ? அளவுகோல் வசிக்கும் இடம் என்றால் அளவீடு எது ? இரண்டு அறை கொண்ட வீடு ? இரண்டு மாடி கொண்ட வீடு ? வெற்றியை வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயம்தான்.

இப்படி வெற்றியை வரையறுப்பது என்பது ஒரு சிக்கலான விஷயமாக இருப்பதனால், அதனை நமக்கு சாதகமாக, நமக்கு ஒரு தன்னிறைவு கிடைக்கத்தக்க வகையில் வரையறுப்பது சுலபமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதற்கு, கடின முயற்சி துணை புரிந்தாலும், அந்த முயற்சியுடன் புத்திசாலித்தனம் இணையும் போது, வெற்றி கிடைப்பது எளிதாகிறது.

அமெரிக்காவில் வேலை கிடைத்து இங்கு வந்த போது, அது ஒரு வெற்றியாகத் தோன்றினாலும், தற்சமயம் அந்த வெற்றி ஒரு போலியானதாகவும், உண்மையில் அது ஒரு தோல்வியாகவும்தான் தோன்றுகிறது.

(தொடரும்)

Series Navigation