வெற்றிடம்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

திலகபாமா


காலியாய் கிடந்த பள்ளி அரங்கு.அலங்காரங்களினாலும், இருக்கைகளாலும் நிரம்பிக் கிடந்தாலும் வேலியில்லா காட்டுக்குள் நுழைதலாய், நீக்கமற நிறைந்திருந்த மரங்கள் இருப்பினும், தனிமையாய் நினைக்க வைத்த காடாய், வெற்றிடமாய் நினைக்க வைத்தது, மனிதர்கள் இல்லாததால்.

மாறுவேடப்போட்டிக்கென்று எனது அரும்பிய மொட்டொன்றை அணைத்தபடி நடந்தேன் . பூட்டிக் கிடந்த அறைகளில் பூக்களின் சலசலப்பு.மெல்லக் கதவில் கைவைக்க திறந்து கொண்ட கதவு ‘உள்ளே வா ‘ என்றது. உள்ளேயிருந்த விழிகளில் சில ஏன் வந்தாய் ? என்ன வேண்டும் என்பதாய் விழியுயர்த்தி வினா தொடுக்க,அலட்சியம் செய்து, அழைக்கும் அன்பு நெஞ்சங்களை தேடியபடி உள்புகுந்தோம்

ஐந்து வயது மழலைகளுக்கான மாறுவேடப்போட்டி. குழந்தைகளை விட பெரியவர்கள் அதிகம் இருந்தனர்.அலங்காரம் செய்து விடவும், செய்பவருக்கு துணை யெனவும் நிரம்பி வழிந்த அறை.

துக்கங்களை மறைத்து சந்தோசமாயும், சந்தோசங்களை மறைத்து சோகமாயும், இருப்பதை மறைத்து இல்லாதாயும், இல்லாததை மறைத்து இருப்பாதாயும் தினம் தினம் பொய் முகம் காண்பிக்கும் பெரியவர்களுக்கு குழந்தைகளுக்கு மாறு வேட மிடுவது கொஞ்சம் சிரமமான காரியமாய் இரு ந்தது போலும்

நிரம்பி வழிந்த அறையிலும் கொஞ்சம் வெற்றிடம் தேடியபடி பெஞ்ச் ஒன்றை தேர்ந்தெடுத்து என் பையனுக்கு அலங்காரம் சேய்ய ஆரம்பித்தேன் நானும். அழுதபடி சில குழந்தைகள்,பிரயத்தனப்பட்டு போட்ட அலங்காரத்தை அழித்து விட்டதே என மெல்லவும் முடியாது, அடிக்கவும் முடியாத சிக்கலில் சில பெற்றோர்.

தாடி மீசை இல்லாத வள்ளுவர் ,நரை முடி இல்லாத ஒளவையார், குழலோடு விளையாடியபடி சில கண்ணன்கள்,மாலை சூட மறுத்தபடி ஆண்டாள்கள், வில்தனை தோள்களீல் போட மறுத்த ஏகலைவன்,

கண்ணாடி மூக்கை அழுத்துகிறதென்றபடி அழுத காந்தி, இரகசியம் காக்கவென்று துணிபோட்டு மறைத்தபடி சில குழந்தைகள், க்ரீடம் குத்துதென சிணுங்கியபடி கட்டபொம்மன்,தொலைக்காட்சி தந்த நாயகர்களில் சிலர்.

முகத்தில் அரிதாரம் பூசுமுன், அச்சத்தை பூசியபடி விழிகளை உருட்டியபடி என் பையனும் அமர்ந்திருக்க, தலைதிருப்பி பார்த்தபடி புரியாத விசயங்களால் கேள்வி கேட்பதற்கும் புரியாது இதழ்களில் சிரிப்பா, சிந்தனையா, சிணுங்களா உணர்த்தத் தெரியாது நான் உணரவும் முடியாத படி அமர்ந்திருந்தவன் தந்த சிந்தனையோடு, எனது கூடையிலிருந்து காகிதச் சிதறல்களை நான் எடுக்க ,ஓரக்கண்ணால் பார்த்தும் பார்க்காதது போல் தொடர்ந்து கொண்டிருந்த கூட்டம்,

வாடகைக்கு எடுத்த ஆடையும், அணிகலனும் பளீரிட, என் காகித வெட்டல்கள், பொன்னுக்கிடை வைத்த பூவாய் ஏளனமாய் எல்லார் இதழ்களிலும்.

‘தம்பு,உனக்கும் அழகாய் அம்மா மேக்கப் போட்டு விடுறேன் ,திரும்பு என்று நாடி பிடித்து திருப்பி, நீதானே முதல் ப்ரைஸ் வாங்குவே, பயப்படாம செய்யணும், அவன் பாரு அழுறான்…..நீீதான் அழுகாத சமத்து .பேச்சில்யேற்றிய போதை அவன் பயம் தெளிவித்திருக்க வேண்டும் .. சுறுசுறுப்பாக அவன் வேகம் ,எனக்குள்ளும் பற்றிக் கொள்ள மின்னும் காகிதங்கள் அவன் மேனி சுற்றி கவசமாக அரைமணி நேரத்தில் அலெக்ஸாண்டராக உருமாறினான்.

அட்டைக் கத்தி இடுப்பில் செருக வீரமும், சுற்றியிருந்தவர்கள் பார்த்த பார்வையில் வெட்கமும் பற்றிக் கொள்ள நடைதனில் ஒரு மிதப்பு வந்தது.

மேடையிலிருந்து அழைப்பு வர அச்சம் வெட்கம் எல்லாம் தொலைத்து அரங்கு திருவிழா கூட்டமாய் கலகலக்க,போட்டிக்கான எண்களைத் தாங்கிய படி சிறுவர்களும்,சிறுவர்களுக்கு அதிகமான பெரியவர்களும் போட்டிகள் யாருக்கென்று புரியாது போனது.

நூற்றுக்கணக்கில் பணச்செலவு, மாதக்கணக்கில் நேரச் செலவு,எல்லாம் பரிசுக்காக .கடல் பூதங்களும், கொள்ளைக்காரர்களூம் மேடையேற வேசப்பொருத்தத்தின் பாந்தத்தில் வெறுப்பும் அரங்கேறியது. வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள் பற்றி கைகாட்டாமல் இருளுக்குள் போகும் பாதை காண்பிக்க வென்று ஒரு போட்டியா ? நொந்த படி வென்ற பரிசின் சந்தோசத்துடன் வெளியேறினோம்.

வென்றவர்கள், தோற்றவர்கள் வித்தியாசம் மனதிற்குள் புகுந்திடாது அரங்கு விட்டு கட்டுக்குள் அடங்கியிருந்த காகிதங்கள் காற்றில் பறத்தலாய் வெளியேறிய குழந்தைகள்.

ஒரு கையில் பரிசும், மறுகையில் எனது விரலும் பற்றியபடி பெருமையுடன் துள்ளல் நடை போட்டபடி என் பையனும். பள்ளியில் எல்லையை ஒட்டிய கருவேலங்காட்டுக்குள் முந்தின இரவு மாதிரிக்கென பட்டாசு கடைக்காரர்கள் வெடித்துத் துப்பிய வண்ண உருளைகளை சேகரித்தபடி கொஞ்சம் பிள்ளைகள். அவிழ்ந்து விழும் டவுசரை இடது கையால் அலட்சியமாய் பற்றியபடி, கோலாகலமாய் திரும்பிய எங்களை, கண்கள் திரும்பிப்பார்த்த படி சக தோழனிடன் பேசியதை தொடர்ந்து கொண்டிருந்த வாயுரைத்தது

‘ நேற்று இங்கெல்லாம் தீபாவளி போலடா, ராத்திரி பெரிய பெரிய பூவா மின்னுச்சு வானத்தில ‘ சொன்னபோது அவன் முகத்தில் வான வேடிக்கை காண முடிந்தது.ஓர் ஆள் மட்டுமே மழைக்காகவோ, வெயிலுக்காகவோ ஒதுங்கக்கூடிய அளவிலான கூடாரத்துளிருந்து வெளிவந்த வாட்ச் மேன்,

‘ நாளை பள்ளிக் கூடம் போகணும். வீட்டுக்குப் போய் பாடத்தை எழுதடா என விரட்ட

‘ உங்கள் பையனா அண்ணே, எங்க படிக்கிறான் ‘ நான் கேட்க

‘நகராட்சி பள்ளியில் படிக்கிறான்மா ‘ என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கருவேலங்காட்டுக்குள் நின்றிருந்த கரிசல் குயிலுக்குள்ளிருந்து பதில் வந்தது. ‘

போப்பா நீ மட்டும் அழகா யூனிபார்ம் போட்டிருக்கே என் யூனி பார்ம் கிழிஞ்சு இருக்கு .புதுசு இருந்தாத்தான் போவேன் ‘ என பதிலுரைக்க

‘ அவனுக்கு மேக்கப் போடலையா ? என எனது பையன் போட்டிக்கு அவன் வாராததை அவன் மொழியில் கேட்க பதில் சொல்ல முடியாது வாட்ச்மேனை நான் பார்க்க அவர் என் குழந்தையை பார்க்க , அவனுக்குள் ஏதோ வெற்றிடம் தோன்றியிருக்க வேண்டும். நெஞ்சோடு,பெருமையோடு அணைத்திருந்த பரிசை அலட்சியமாக்கி விரல்களில் சரிய விட்டு மெளனமாய் நடக்க, நானும் தொடர்ந்தேன் அவனை கலைக்க விரும்பாது

அரங்கின் ஆரம்பத்தில் பொருள்களால் நிரம்பியிருந்தும் தோன்றிய வெற்றிடம் தற்போது தெருவெல்லாம் ஆட்கள் நிரம்பியிருப்பினும் வெற்றிடத்தில் நடப்பதாய் உணர்த்த மெல்ல நடந்தோம்…..வீடு வரை

Series Navigation

திலகபாமா

திலகபாமா