வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

சாரங்கா தயாநந்தன்


அவர்கள் இவர்களை விட தங்கத்தை நேசித்தார்கள். தங்கம் மட்டுமல்ல, லட்சங்களும் அவர்களின் லட்சியம். அவர்கள் ராஜகுமாரர்கள் தான். தனித்தனி முடி சூடிக்கொள்ளாத போதிலும் கூட. அவர்களின் ஆண்மை செறிந்த வயதுகள் இவர்களின் எட்டாக்கனிகள். இவர்கள் முதிர்கன்னிகள். இவர்களின் ஏக்க விழிகள் துயரில் கனப்பன. ஒவ்வொரு குடிசையிலும் எவ்வொரு ஏழைத்தாயும் மகனின் வரவில் மகிழ்ந்தனள். அவனது ஏறும் வயதில் பூரித்தனள். ஆயின் பெண்களின் வரவும் வயதும் வெறுப்பு வட்டத்துள் துள்ளி விழுந்தன. வயதேற வனப்பிழக்கும் சுமைகள்.

சிறுபெண்கள் மொட்டவிழ்ந்த சேதியில் இவர்களின் இதயங் குலுங்கிற்று. புதிய போட்டியாளர்களின் முகிழ்ப்பு. பொன்னாக மினுமினுக்கும் அவர்களின் மேனியில், பூக்கும் வசந்தத்தின் கெக்கலிப்பு. இவர்களின் காதுகளை அறையும் அச்சிறு பெண்களின் கலகலத்த சிரிப்பொலி. ஒவ்வொரு பெண் பூக்கும் பொழுதிலும் ராஜகுமாரர்களின் கேள்வி அதிகரிப்பு. நடையின் கம்பீர அதிகரிப்பு. உயர்த்திய கழுத்தில் வடிகிற மிடுக்கு. விழிப் பெருமிதம். சிறு கடையில் பொட்டலம் மடிக்கும் பையனிடம் கூடக் குடியேறி விடுகின்ற மிடுக்கு. ‘ ‘ஆண்கள் எல்லாரும் இந்நாட்டு மன்னர் ‘ ‘ பிடிபட்டிருக்கும் அவனுக்கும்.

இவர்களின் நீண்ட கூந்தல் காடாய்க் கிடக்கிறது, புருஷன் சூட்டப் போகும் பூச்சுமப்புக்கனவுகள் வழிய. கருங்காட்டில் ஆங்காங்கே வெள்ளிச் சிற்றோடைகள். நரை நெளி முடிகள். இவர்களின் இதயப் படபடப்பை எகிற வைப்பன. வம்புப் பெண்களின் வாய்க்கவல் தூவல். கவனமாக மறைத்தாக வேண்டும். நரைக்காத கூந்தலுக்கு வரமளித்திருக்கலாம் இறை .கூடவே பருவத்தின் செழிப்புக்கப்பால் கரையாத வயதும் சுருங்காத தோலும்.

ராஜகுமாரர்களின் கம்பீர நடை பவனி. சமுதாய வெளியில். அவர்கள் கைகளில் அதிகம் பூக்கள். ஆனாலும் அவற்றைக் கொடுக்கத் தயங்கும் கவனக்காரர்கள் அவர்கள். வரும் தட்சணை கருதி வாடியிருக்கும் கொக்குகள். பூத்தவம் புரியாத பாவனை அவர்களது. இவர்களின் கூந்தல் இன்னமும் விரித்துத் தான் கிடக்கிறது. எவனிடம் இரக்கமுடியும், ஏற்குமாறு இனி ? இவர்களை ‘ஏற்பதும் இகழ்ச்சி ‘ யோ அவர்களுக்கு, ஊர்வாய்ப்படி ?

முன்னொருகாலத்திலே இவர்கள் மனமெங்கும் மத்தாப்பூச் சிதறலாய்ச் சந்தோஷப் பூக்கள். வெள்ளிநாணயக் கலகலத்த சிரிப்புடைக் கன்னிமை அப்போதையது. கனவுகள் பல. ஆயின் நிகழில், அப்பூக்களெல்லாம் முட்களாக மாறிப் போயின. பெண்மன மென்கனவுகள் எல்லாமும் நெருஞ்சிகளோ ? மலர்போல் முகம் காட்டிக் காலநீர்வார்ப்பில் முள்முக தரிசனம் இடும் பொய்மாயக் கனவுகள். மனம் முள்ளான பிறகு வெறிச்சோடுவதன்றி வேறென்ன வேண்டியிருக்கிறது வாழ்க்கைக்கு ?ஆகையினால் சிரிக்க மறந்த முதிர்கன்னிகள். ராஜகுமாரர்களின் மனம் கல்லாலானது. காலிடறும் காத்திருப்புக்களைக் காளான்களாகக் கூடக் கருதாத கல்நெஞ்சக்காரர்கள். பூக்களுடனான அவர்களின் ராஜநடை தொடரும். கைப்பூக்கள் வாசமிழக்கும்,அவர்களின் இளமை காலநீரில் கரைய. அப்பால் பூக்களைக் காசோடு பரிமாற்றிக்கொள்ளுவார்கள்.

ஆனாலும் ஒரு புதிய பொழுதில் ,பெண்கள் நடப்பர். ஏக்கந் தூக்கி வீசிய விழிகளில் அலட்சியப் படர்வு மிகும்படி…பெருமூச்சு மறந்த பெண்களின் உலகு. தம் சாபங்களைத் தாமே ரட்சிக்கத்தக்க புதிய பெண்களைக் காலம் படைக்கும். படைப்பின் நிறைவில் வசீகரமாய்ச் சிரிக்கும் அது.

****

ஒரு மஞ்சள் மயக்கம்

உருண்டோடிற்று அது. பளீரிட்ட வட்டக் குற்றி. மூப்பிலான மங்கல் சற்று. முதிர்ச்சியினாலாய சோபையிழப்பு. வழமை. ஒதுக்கிற்று. அழகிழப்புக் குறைத்து விட்டிருக்காத, பெறுமதியினாலாய கர்வம் அதன் முகத்தில் கீற்றாய். சதங்கள் யாவும் செத்திருந்தன. தக்கன பிழைக்கும் நியதிப்படி, தகாதனவாகி. ஒரு ரூபாவும் இரண்டு ரூபாவும் இன்றோ நாளையோ என நாளெண்ணுவதாய்ச் சினேகமான ஒரு பொழுதில் கதை பரிமாறியிருந்தன. ரூபாய்களில் நாளை சாவு தொற்றுகையில் மூன்றாவது இலக்காக இதன் தலைதான் உருளும். சாவு அண்மித்திருக்கையிலும் வாழ்வு பற்றிக் கர்வித்திருப்பது ஒருவகைச் சுகம். அதை அது அனுபவித்திருந்தது.

முன்பொருநாள் பிறந்த பொழுதில் ‘தங்கமே நானென ‘ ப் போக்குக் காட்டிற்று, சில மனிதரைப் போல. யாரோ ஒருவரால் சின்ன மகனின் சந்தோஷத்திற்கு அன்பளிப்பாகியது. அவன் கையில் வாழ்ந்தது அவனது சிறு விழிகள் வெண்ணிறப் பாம்பு பலூனைப் பார்க்கும் வரையில் தான். அவன் அதைப் பார்த்த பொழுதில் கைமாறிற்று. பெறும் போதும் இழக்கும் போதும் சந்தோஷமான சிறுவனைப் புரியமுடியவில்லை. அதுதான் ஞானமோ ? அல்லது தேவை தணிந்த திருப்தியோ அவனது ?

பணக்காரப்பையன்களிடையே படபடவெனக் கைமாறமுடியும். வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு சிறு யூஸ் பைக்கற்றாக ,மாபிளாக,பபிள்கம்மாக மாறி அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை அப்பி விட்டு உற்சாகமாய்ப் பாயமுடியும். ஏழைச் சிறுவர்களிடம் அவ்வாறில்லை. சிலபொழுதில் சிறுதகரப் பேணியில் முடங்கிக் கிடக்கவேண்டும். அல்லது உண்டியலுக்குள் படுத்து ஒரெயொரு சிறு ஒளிக்கீற்றையும் ஒரு கொஞ்சம் காற்றையும் உறிஞ்சிக் கொண்டிருக்கவேண்டும். விட்டுவிடுதலையாகும் நாள் எண்ணுவது போலக் கஷ்டமான தொழில் உலகத்திலில்லை என்பது தான் உண்மை. வியர்க்கும் .விசிறத் தென்றலுக்கு உள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்ட சிறுதுவாரம் .விதியே என்ற படுத்துவிட வேண்டியதுதான்.கைமீறிய விடயங்களில் கவலையுறல் முட்டாள்தனம். அது மனிதர்களுக்கு மடுமே வாய்த்த பெருஞ்சொத்து. ‘களுக் ‘ என்று சிரித்தது, உருண்டோடியபடி. மனிதர்களை நினைத்துத் தான்.

ஓட்டமுடிவு. தரையுராய்வு. உராய்வற்ற ஒரு தரையில் தொடரோட்டம் போடுவதாக ஓரிரவில் கண்ட கனவுக்காக மகிழவில்லை அது. வாழ்வே மாயமோ என்ற சிந்தனை மனதில் வசித்து வருவதில் மாயமென உறுதிப்படுத்தப்பட்ட கனவுக்காகச் சிரித்துக்கொள்வது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல என்பது அதன் நம்பிக்கை. மெல்லிய ஓரம் சிறுபுல்லில் முட்டியதைக் காரணமாக்கிப் படாரெனச் சாய்ந்தது. மல்லாந்து படுத்து அரச இலச்சனை காட்டியது. பாதசாரி வாலிபனின் அலையும் பார்வை தொட்டு அடுத்த நொடியில் சொந்தங்களுடன் சேர்ந்து கடைப்பெட்டிக்குள் குலுங்கியது. அதே பொழுதில் அவன் சிகரெட்டோடு புகைந்தான்.

பெட்டிக்குள் பார்த்தபோது பக்கமெல்லாம் சொந்தக்காரர்கள். தாள்கள் நாணயங்களை ஏறெடுத்துப் பார்க்காத மமதையோடு இருப்பதாய்த் தோன்றியது. இருக்கட்டுமேன். ‘ ‘வெறும் நீர்த்துளிக்குச் சாகிற கோழைகள். ‘ ‘ மனதுள் கறுவியது. ஆனால் ஒரு ரூபாக் குற்றியின் மரியாதையான ‘ ‘அண்ணாச்சி ‘ ‘யோடு கொதி கோபங் குளிர்ந்து விட்டது. ‘ ‘பெரியவர்களுக்குப் பெரியவர்களும் சிறியவர்களுக்குச் சிறியவர்களும் உலகத்தில் வந்தே தீருவார்கள் என்று பெரியவர் ஒருவர் சொல்லியிருப்பது பற்றி வயதில் சிறியவராகிய நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? ‘ ‘ என ஒரு ரூபாவைக் கேட்டபோது அது திருதிருவென விழித்து விட்டு பதிலற்று மெளனமாகி விட்டது. மீண்டும் கேட்டபோது கேள்வியைப் பற்றிச் சிந்திப்பதாகக் கூறியது. சிறிது பொழுதில் உற்றுப் பார்க்கத் தூங்கிப் போயிருந்தது. ஆக, ஒப்பீடற்ற நிர்ச்சலனமே நிரந்தர சந்தோஷம் என்று முன்பொருநாள் காதில் விழுந்த சேதியை நினைத்தபடி தானும் தூங்கிப் போனது.

மறுநாள் யாசகனின் கையிரப்பு குரலாய் அதனை மோதியதில் விழிப்பு வந்து விட்டது. கடைக்காரனின் வேகமான இழுப்பறைத் திறப்பு. கைக்கெட்டிய நாணயம் தூக்கி வீசினான். அவனது கவனமெல்லாம் யாசகனின் தொழுநோய்ப்பாதங்கள் வாசலின் ‘பளபள ‘க் கம்பளத்தில் பதிந்திருந்ததில் மட்டும் . யாசகன் பொறுக்கினான். நெளிந்த காசுக்குடுவைக்குள் பட்டென அதன் முகம் மோதிற்று. மாலைப்பொழுதில் ஒரு குச்சுக் கடையில் அவனுக்கான தேநீர் ஆயிற்று. பிறன் பசி தீர்த்த பெருமித நிறைவில் சுகித்தது. மனிதனுக்கு ஏனில்லை இப்பண்பு ? பதிலற்ற மயக்கம். கேள்வியின் சிக்கலுக்குள் மாட்டிப் போய் அதிக நேரமாய் யோசித்துக் கொண்டிருந்தது அது.

****

nanthasaranga@gmail.com

Series Navigation