விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

புதியமாதவி, மும்பை


பொன்முட்டையிடும் வாத்து கதை எல்லோருக்கும் தெரியும்தானே. அந்தக் கதைதான் எங்கள் மும்பை பருத்தி, பாலியெஸ்டர் நூற்பாலைகளின் கதை. நூற்பாலைகள் என்று சொன்னால் நடிகர் வடிவேலு டயலாக்கில் தமிங்கலிஷில் சொன்னமாதிரி இருக்கு. எல்லோருக்கும் புரிகிறமாதிரி மும்பையின் மில்கள் (Mills) என்றே சொல்லிவிடுகிறேன்.

இந்த மில்கள் தான் மும்பையை இந்தியாவின் வணிகத்தலைநகரமாக்கிய வித்தையைச் செய்தவை. இந்த மில்கள் தான் மும்பைக்கு ஒரு காஸ்மோபாலிட்டன் அந்தஸ்த்தைக் கொடுத்தவை. இந்த மில்கள் தான் இன்றைக்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அம்பானிகளுக்கு அட்ரஸ் கொடுத்தவை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மில்கள் தான் சமூகத் தளத்திலும் இலக்கிய தளத்திலும் தலித்தியத்திற்கு தனி அடையாளம் தந்தவை. இந்த மில்களில் வேலைப்பார்க்கத்தான் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் தென்னிந்தியாவில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் மும்பையை நோக்கி வந்தார்கள். மில்களை ஒட்டிய தீக்குச்சி பெட்டிகளை அடுக்கி வைத்தது போலிருக்கும் சால்களில் இவர்கள் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். இந்த மில்களில் இவர்கள் சம்பாதித்த பணம் இவர்கள் சேமிப்பு இவர்கள் பிறந்த மண்ணில் இவர்களின் தலைவிதியை மாற்றிக்காட்டும் கலகக்குரலுக்கு வித்திட்டது.

சாலையோரங்களில் சாய் கடைகளில் பத்திரிகை வாசிப்பது இலக்கியம் பேசுவதாக தெருக்கூத்து நடுத்துவதாக சிறுபத்திரிகை நடத்துவதாக இப்படியாக படிப்படியான பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்தது. இந்த மில்களில் தான் மார்க்சியத்தின் செங்கோடி உயர்ந்து பறந்தது. இந்த மில்களால்தான் ஒடுக்கப்பட்ட மில்தொழிலாளர்களின் அடுத்த தலைமுறை கல்வி கற்றது. எந்த ஒரு மராட்டிய அல்லது மும்பை எழுத்துகளை எடுத்துக் கொண்டாலும் அதில் உயிருள்ள ஜீவனாக வாழ்ந்தவை இந்த மில்களின் சிம்னிகளும் சைரன் ஒலிகளும் சால்களும் சாக்கடைகளும். இந்த மில்கள் மும்பையின் கலாச்சார அடையாளம். இந்த மில்கள் மும்பையின் வரலாற்றை எழுதியிருக்கும் கல்வெட்டுகள். ஆனால் இன்று, இந்த மில்களின் நிலை என்ன?

1982களில் நீண்ட கால மில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், குறிப்பாக தத்தாசாமந்த் தொழிற்சங்கத்தின் நீண்ட கால வேலைநிறுத்தமும் தத்தாசாமந்தின் தொழிற்சங்கத்தை அடக்க அரசு கையாண்ட முறைகளும் மில்களின் கதவடைப்புக்கு காரணமாயின. அதன் பின் பேய் குடியிருக்கும் பங்களா போல இந்த மில்கள் பூட்டிக்கிடந்தன. தீவு பகுதியான மும்பையில் நிலவளவு குறைவாகவும் மக்கள் தொகை பெருத்தும் இருக்கும் சூழலில் மும்பை மாநகரத்தின் பணமுதலைகளுக்கு பூட்டிக்கிடக்கும் மில்களை விட அந்த மில்களின் நிலங்கள் கறுப்பும் வெள்ளையுமாய் பணத்தைப் பூட்டி வைத்திருக்கும் அலிபாபாவின் குகைகளைப் போல காட்சியளித்தன. அதன் பின் அரங்கேறின எல்லா நாடகங்களும். இந்தி சினிமாக்களில் தாதாக்களைப் பற்றி காட்டுவது எல்லாம் என்னவோ கற்பனை என்று நினைக்காதீர்கள். உண்மையில் நடந்ததில் ஒரு சில காட்சிகளைத்தான் சினிமாக்காரர்கள் கதையாக்கி காசு சம்பாதித்தார்களே தவிர இந்த நிலம் கைப்பற்றுவதில் நடந்த தில்லுமுல்லுகள் நம்மால் கற்பனை செய்யமுடியாதவை.

மில்களின் வரலாறு:

மும்பை ஏன் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டது? என்று பூகோளப் பாடத்தில் வரும் கேள்வி ரொம்ப முக்கியமானது. அன்றக்கும் சரி இன்றும் சரி. அதற்கான கரிசல் நிலம். சீதோஷ்ண நிலை இத்தியாதி எழுதிய படித்த பதில்களை எல்லாம் இப்போது சேர்த்து வாசித்துக் கொள்ளுங்கள்! இனி, 1840 முதல் 1860 வரை மும்பை தொழில்மயமான காலக்கட்டம். அனைத்து தொழில்களும் பருத்திநூலைச் சுற்றியே பின்னப்பட்டன. 1820 ல் மில்களின் மதிப்பு அன்றைய சந்தையின் ரூபாய் 350,000 ஆக இருந்தது 1860ல் 19.3 மில்லியனாக வளர்ச்சி அடைந்தது.

(Cowasji Nanabhai Davar) கோவஷி நானாபாய் தவர் என்ற பார்சி இனத்தவர் தான் மும்பையில் 1854ல் The Bombay Spinning Mill” என்ற மில்லை ஆரம்பித்த முதல் இந்தியர். அதுவரை இருந்த மில்கள் எல்லாம் ஆங்கிலேயருக்குச் சொந்தமானவை. 1870 ல் மும்பையில் 13 மில்கள் இருந்தன. 1895ல் 70, 1915ல் 83 மில்கள் இருந்தன.

January 1865 மும்பையில் 31 வங்கிகள், 8 கம்பேனிகள், 16 காட்டன் பிரஸ்ஸிங் கம்பேனிகள், 10 ஷிப்பிங் கம்பேனிகள், 20 இன்சூரன்ஸ் கம்பேனிகள் & 62 ஜாயிண்ட் ஸ்டாக் கம்பேனிகள் இருந்தன. எனினும் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் ஏற்பட்ட பொருளாதர சரிவாலும் ஜப்பானின் டெக்ஸ்டைல் வளர்ச்சியில் ஏற்பட்ட போட்டி காரணமாகவும் 1953 முதல் மும்பையில் 53 மில்கள் இருந்தன. இந்த 53 மில்களில் 14 மில்கள் மட்டுமே ஆங்கிலேயருக்குச் சொந்தமானவை. மற்றவை அனைத்தும் இந்தியருக்குச் சொந்தமானவை என்பதில் இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

விலைபோன மில்கள்
———————-
கோடிக்கோடியாய் கொட்டிக்கொடுத்த பருத்தியும் பாலியெஸ்டரும் தீடிரென ஒரிரவில் நஷ்டமடைந்துவிட்டதாக மில் அதிபர்கள் சொன்னார்கள். நாளை முதல் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்றார்கள். தொழிற்சங்கமும் தொடர் போராட்டமும் தங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவரும் என்று தொழிலாளர்கள் நம்பினார்கள். எனக்குத் தெரிந்து அதில் சிலர் வருடக்கணக்கில் கையில் சாப்பாடை எடுத்துக் கொண்டு மில் வாசலில் காத்திருப்பதும் சைரன் ஒலிக்காதா தங்களை அழைக்காதா என்று காத்திருந்ததையும் நானறிவேன். தொழிற்சங்கத் தலைவர் தத்தாசாமந்துக்கு மிகவும் நெருக்கமான தமிழர் ஒருவர் லாரி மோதி விபத்தில் இறந்ததாகச் சொன்னார்கள். அவர் மீது லாரி எப்படி மோதியது ஏன் மோதியது என்பதெல்லாம் தான் வேலைநிறுத்தமும் தொழிற்சங்கமும் கசக்கி வீசி குப்பையில் எறியப்பட்ட கதையின் பின்புலம் என்பது இப்போது புரிகிறது. மில்களில் வேலை பார்த்த ஒவ்வொரு குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்தது. பள்ளி கூடத்தில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக சாலையோரங்களில் மின்சார வண்டிகளில் கிழிந்து தொங்கும் கால்சட்டையுடன் எதையாவது விற்று வயிற்றுப்பாட்டைக் கவனித்து ஏன் நம்பிக்கை இழந்துப் போன குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்கள்.

மில்களில் வேலைபார்த்த பலர் அதிர்ச்சியில் இறந்துப் போனதும் மனப்பிறழ்வுக்கு ஆளனதும் கடன்காரர்களாகி நோயாளிகளாகி … எப்படியும் என்றாவது நம் மில்களில் சைரன் ஒலி ஒலிக்காதா என்று காத்திருந்தார்கள். இந்தச் சூழலில் பெண்கள் தான் குடும்பத்தையும் இழப்பையும் தாங்கி நின்றார்கள். கூலிகளாக ஆயாக்களாக சமையல்காரியாக பத்துபாத்திரம் தேய்ப்பவளாக இப்படியாக மும்பை இவர்களை மாற்றியது.

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி, வைப்பு நிதிகளை முழுமையாக எந்த மில்களும் கொடுக்கவில்லை. அவைகளைக் கொடுப்பதற்காகவே மில் நிலங்களை விற்பதாக நல்லதொரு தேர்ந்தெடுத்த காரணத்தை மில் அதிபர்கள்
சொன்னார்கள்.
அப்படி விற்கப்பட்ட நிலங்கள்>:
(National Textile Corp) NTC க்குச் சொந்தமான
ஜூபிடர் மில் – 276 கோடி
அப்பலோ மில் – 180 கோடி
மும்பை டெக்ஸ்டைல் மில் – 702 கோடி
கோகினூர் மில் நம்பர் 3 – 421 கோடி.
இதில் கோகினூர் மில்லை விலைக்கு வாங்கியவர்கள் கோகினூர் புராஜெக்டின் இரண்டு அரசியல் பெரும்புள்ளிகளின் வாரிசுகள். ஒருவர் மாராட்டி மானுஷ்களின் நலன்களைப் பேண அவதாரம் எடுத்திருக்கும் ராஜ் தாக்கரே, இன்னொருவர் மனோகர் ஜோஷியின் மகன் யுன்மேஷ்ஜோஷி. (சிவசேனா 1960 களில் மில் தொழிலாளிகளிடம் சங்கம் வைத்து தன்னை வளர்த்துக் கொண்டது ஓர் அரசியல் கட்சியாக என்பதையும் நினைவு படுத்திக்கொள்ளவும்)

மில் நிலங்களை விற்பதில் (ஒன் தேர்ட் பார்முலா )- மூன்றில் ஒரு பங்கு சட்டம் எந்தளவுக்கு கடைப்பிடிக்கப் பட்டது என்பது பற்றி அரசோ நீதிமன்றமோ கவலைப் பட்டதாக தெரியவில்லை. ஒன் தேர்ட் பார்முலா என்பது DCR-58. இதில் மில்நிலம் மூன்றாக பிரிக்கப்படும்.

ஒரு பகுதி மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்திற்கு கொடுக்கப்படும். குறைந்த விலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும்
நிரந்தரமான வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் அரசின் திட்டத்திற்கு. இரண்டாவது பகுதி நிலத்தை மும்பை நகராட்சிக்கு கொடுப்பது. திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் மக்கள் சுகாதர நலம் பேணும் திட்டங்களுக்கு மூன்றாவது பகுதி நிலைத்தை மட்டுமே விலைக்கு விற்க முடியும். அப்படித்தான் சட்டம் DCR-58 ஒன் தேர்ட் பார்முலா சட்டம் சொல்கிறது. நடைமுறையில் என்ன நடந்தது / நடந்திருக்கும் என்று இந்தி சினிமா ரேஞ்சில் கற்பனை செய்து கொள்ளலாம். அது கற்பனை அல்ல உண்மை என்று கடைசியில் ஒரு போர்டு போட்டு எழுதி வைத்துக் கொள்ளலாம். ஏனேனில் DCR-58.1966ல் DCR 53 ஆகிவிட்டது. இந்த மாற்றத்தினால் மொத்த நிலத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டாமாம். (அப்படிப் போடு!!) மில் நிலத்தில் காலியாக இருக்கும் இருப்பதாக மில் அதிபர் காட்டும் நிலத்தை மட்டும் மூன்றாக பிரிக்க வேண்டுமாம். இந்தக் கணக்குப் படிப் பார்த்தால் மில் நிலத்தில் 6 விழுக்காடுதான் தேறும். மற்ற தெல்லாம் விற்கலாம்.. கறுப்பும் வெள்ளையுமா மும்பை வளர்ந்தக் கதை இது. இந்த நில பேரங்கள் தாதாக்களின் வளர்ச்சிக்கும் காரணமானது மட்டுமல்ல இந்திய அரசையே அச்சம் கொள்ள வைத்தது புகுந்து விளையாண்ட கறுப்பு பணமும் பண முதலைகளும்.

நிறைய பணக்காரர்கள் உருவானர்கள். விண் முட்டும் அடுக்குமாடி குடியிருப்புகள், பள பளக்கும் வணிதத்தளங்கள், மால்கள் என்று மும்பையின் ஒரு பக்கம் வீங்கி கொழுத்தது. மறுபக்கம் சமான்ய மனிதனின் வாழ்க்கை அவன் கண் எதிரேயே கதறக் கதற வன்கொடுமைக்குப் பலியானது.

ஒரு மால் /வணிகத்தளம் வந்தால் வளர்ச்சிதானே என்று சில ஐஐடி மேதாவிகள் கேட்கலாம். ஒரு மால்/வணிகத்தளம் ஆயிரக்கணக்கில் வேலைக் கொடுத்தால் ஒரு மில் இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும். கணினிதுறையில் சம்பாதிக்கும் டாலரை விட நம் கழநியில் விளைந்த விளைவித்த நெல்தானியங்கள் மேலானவை. அணு சோதனைகளில் கண்ட மதிப்பைவிட நம் பருத்தி நூல்களில் நம் பாலிஸ்டர்களில் நாம் கண்ட பெருமையும் மதிப்பும் போற்றுதலுக்குரியவை. டாலரை கழுதைகள் தான் சாப்பிடும். மனிதர்கள் சாப்பிட முடியாது.
அணுகுண்டு வெடித்து எவரும் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது.

நம்பிக்கை வானில்
———————-
2010, ஜனவரி 19ல் மும்பையில் மூன்று மில்கள் 30 வருடங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

NTCயின் டாடா மில்ஸ், போதார் மில்ஸ், இந்திய யுனைடெட் மில் நம்பர் 5 மூன்றையும் நடுவண் அமைச்சர் தயாநிதிமாறன் திறந்து வைத்தார். இதில் நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கின்றன எனினும் 30 வருடங்கள் கழித்து இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்திய அமைச்சர் தயாநிதி மாறனைப் பாராட்ட வேண்டும். மாறன்களுடன் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இருந்தாலும் இருக்கட்டுமே.. பாராட்டுதலுக்குரிய செயலைச் செய்யும் போது பாராட்டுவதும் நம் கடமை என்று நினைக்கிறேன்.

தரவுகளுக்கு துணைநின்றவை:

>Vanishing mill lands by ANUPAMA KATAKAM

> TOI – & frontline

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை