விமரிசனம்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

கோமதி நடராஜன்


பசி-
வயிற்றைக் கிள்ளியது
கண்களை சுழற்றியது,
செவிகள் அடைத்தது.
கால்கள் தள்ளாடி,
மயங்கி
விழுந்தேன், சாலையில்.
நினைவு திரும்பி
எழுந்து எழுதினேன்,
ஒரு கவிதை,
‘பசி ‘ என்று பெயரிட்டேன்.
வட்டச் சம்மணமிட்டுத்
தலை வாழை இலை போட்டு
வக்கணையாய்ப் பரிமாறி
வயிறு முட்டச்
சாப்பிட்டவன் கண்ணில்,
பட்டது என் கவிதை
வாசித்தான்,
பசியின்
கொடுமை அறியாதவன்,
வயிறு வலிக்கச்
சிரித்தான்.
‘இது என்ன பேத்தல் ? ‘
‘யார் எழுதிய புலம்பல் ? ‘
என்று காற்றில்,
பறக்க விட்டான்
காகிதத்தை.
பறந்து சென்று விழுந்தது
ஏழை ஒருவன் கரங்களிலே.
பல நாள்
உணவின் வாசனை
காணாதவன்,
பஞ்சடைந்த கண்கள்
சுருக்கி,
வாசித்தான்,என் கவிதையை.
விழியோரம் நீர் கசிய
வாய் வழியே விம்மல் தெறிக்க
‘ஆஹா அற்புதம் ‘,என்றான்
‘இதுவல்லவோ கவிதை ‘என்றான்.
யார் சொல்வதை நம்புவது ?
என் எழுத்து,
பேத்தலா கவிதையா ?
புலம்பலா புதுக்கவிதையா ?
புரியவில்லை,எனக்கு.
===============================

komal@ambalam.com

Series Navigation