வினை

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


“பிள்ளை உன்ர காலைப் பிடிச்சுக் கும்பிடுறன் கை விட்டிராதையம்மா. மகன் மூச்சுப் பேச்சில்லாமக் கிடக்கிறான.; செலேன் ஏத்தி மூக்கு நாக்கெல்லாம் குழாய் ஓடுது. ஐயாட கை பட்டா பிழைச்சிருவான். கொஞ்சம் எழுப்பி விடம்மா”

“நடுச்சாமந்தான் வந்து படுத்தவர். அதுக்குள்ள வந்திற்றீங்களா. ஒரு நிமிசம் நிம்மதியாப் படுக்க விடுங்கோவன். ஆஸ்பத்திரியில அவர் மட்டுமா டாக்டர். போய் டாஎம்ஓ வோட கதையுங்க”

சுலோசனாவிடம் முட்டுக் காலிட்ட சரணாகதியில் கண்ணீர் விட்ட கிழவரின் குரல் காதுக்குள் தயிர் கடைந்தாற் போல் குடைந்தது. அதிகாலைக் கருக்கலில் எலாம் அடித்த மாதிரி அவசரக்குரல். கம்பளிச்சட்டையை காது வரை உயர்த்திக் கொண்டு நடந்தார் சர்ஜன் அருணோதயன்.

நித்திரைக் குறைவால் சிவந்த கண்கள். நார் நாராய் கிழித்துப் போட்ட அலுப்பு. இருந்தும் அதிகாலையில் கடற்கரையோரம் ஒரு நடை நடக்காவிட்டால் அவருக்குப் பத்தியப்படாது. நடக்க நடக்க உடலில் உஷ்ணம் கவிந்து சுவாசம் விரிந்து மேலெல்லாம் வியர்த்து வழியும். மனசின் இறுக்கம் இளகி கலங்கிய கிணறு தெளிவதைப் போன்ற ஆறுதல் சுரக்கும்.

சந்தி வரை நடக்கத் தொடங்கும் போதே சூரியன் கிழக்கு வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து முதுகை மெலிதாய் தட்டத் தொடங்கி விடுவார். அவரது ஸ்ப்ரிசம் பட்ட பின்னர்தான் நரம்பு நாளங்கள் விறுவிறுப்படைவதும் சிந்தனைகள் நேராகித் தெளிவடைவதும்.

இவ்வளவிற்கும் சிவந்திருக்க வேண்டிய கீழ்வானம் பனிச்சோகை பிடித்து மந்தித்துக் கிடந்தது. பல்திசையிலும் பாய்ந்திருக்க வேண்டிய பகலவனின் ஒளிக்கதிர்கள் அடங்காத பனிமூட்டத்துள் சிறைப்பட்டிருந்தன. காகங்குருவிகளைக் கலைய விடாமல் கட்டிப் பிடித்து வைத்திருக்கும் மதமதத்த குளிர். அவரது தோள் மூட்டு ஒரு முறை சிலிர்த்துக் குலுங்கிற்று. போய்க் குளிச்சிட்டு நல்லாப் போர்த்துக் கொண்டு படுக்க வேனும் என்று எண்ணிக் கொண்டார்.

“குட் மோர்னிங் டொக்டர் கனநாளாக் காணேல்லை இந்தப் பக்கம்”

கடற்கரைப் பக்கமிருந்து ஓடி வந்து நெடுஞ்சாலையில் அவரோடு பக்கம் பக்கமாக நடையில் சேர்ந்து கொண்டார் கணபதிமுத்து. பெரிய உத்தியோகம். பெரிய உடம்பு. அவ்வப்போது நேர்கிற கடற்கரை நடையில் முளைவிட்ட வாயளவு நட்பு.

“சரியான பிசி மிஸ்டர் கணபதி”

“கேள்விப்பட்டனான். கிளப்பில டாஎம்ஓ சொன்னார். அம்புலன்சில கொழும்புக்கு ஏத்த வேண்டிய கேசை நீங்க காப்பாத்திற்றீங்களாம் ”

“என்னுடைய டிய+ட்டிதானே மிஸ்டர் கணபதி”

“நோ நோ அப்பிடியில்லை. கடவுளே கை விட்ட கேசை இழுத்துப் பிடிக்கிறது டிய+ட்டி மட்டுமில்லை. அது உங்கட சொந்தத் திறமை. எல்லாருக்கும் உங்கட கைராசி வராது. ஐ ரியலி மீன் இற் டொக்டர்”

மூடிய உதடுகளில் வெட்கம் பின்னிய புன்முறுவல் அவரின் கூற்றை மறுதலிப்பது போல் வெறும் சாடை காட்டினாலும் மனம் முகஸ்துதியில் மயங்கிற்று. புகழ்மாலையை இரகசியமாய் ஏற்று அணிந்து கொண்டது. தலை தாழ்ந்து புற்களில் படுத்திருந்த பனித்துளிகளை பார்த்துக் கொண்டே நடந்தார் அருணோதயன்.

“யானையின் பலம் யானைக்குத் தெரியாது என்று படிச்சிருக்கிறன். நீங்களும் அப்பிடித்தான் இருக்கிறீங்க. எனி வே> ய+ ஆர் ரியலி கிறேட். நான் வரட்டா டொக்டர். இன்றைக்கு ஒரு கொன்பரன்ஸ் இருக்கு. குட் டே டொக்டர்”

கணபதி அடுத்த கணமே ஓடத் தொடங்கினார். பெரிய தொந்தி. டாக்டரோடு கதைத்துக் கொண்டே நடந்தால் தன்னுடைய தொந்தி கரையப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

சொல்வதற்கு ஒரு முக்கிய நிகழ்ச்சி நாக்கு நுனியில் முட்டிக் கொண்டு நிற்க> அவர் அரைகுறையில் பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது சிறிது ஏமாற்றந்தான்.

நீங்க மட்டும் இல்லையென்டா பிள்ளையைப் புதைச்ச இடத்தில புல்லுக் கூட முளைச்சிருக்கும். நீங்கள் எங்களுக்குக் கடவுள் மாதிரி என்று சென்ற மாதந்தான் ஒரு பெண் சொல்லி விட்டுப் போனாள். அந்தப் அட்சரங்கள் மனதிற்குள் ப+ச்சரமாய் சொரிய அவர் ஒருவித கர்வக் குதூகலத்தில் மிதந்தார்.

எல்லாரும் சொல்றது உண்மைதான். என் கை பட்டா குணமாகும் என்றது சரிதான்

சந்திக்கு வந்ததும் திரும்பி நின்று வானத்தைப் பார்த்தார். முதுகை நிமிர்த்தினார். தோளை உயர்த்தி கைகளை அகல விசுக்கினார். கடல் மடியில் தவழ்ந்து வந்து மெலிதாய் அணைத்த சீதளத் தென்றலை இழுத்து உள் வாங்கினார். மீண்டும் மீண்டும் குனிந்து கால்விரல்களைத் தொட்டார். அடித்துப் போட்ட அலுப்பு போன இடம் தெரியவில்லை. திரும்பி நடக்கத் தொடங்கினார்.

தாய்மடியில் தூக்கம் கலைந்த பச்சிளம் குழந்தையாய் கிழக்கு வானம் இப்போது சிரிக்கத் தொடங்கியிருந்தது. கருக்கலைக் கிழித்துக் கொண்டு ஆதவன் முகம் காட்ட ஒளிக்கதிர்கள் நெற்றியைத் தழுவிச் சூடேற்றின. கழுத்தில் கசிந்த வியர்வை பனி பட்டுக் குளிர்ந்தது.

மார்கழி மழையில் மதாளித்து பச்சைக் காடாயிருந்த தெருவோர வேம்பும் வாகையும் ப+வரசும் சுவாமிக்குப் பிடிக்கும் கோயில் குடைகளாகத் தோன்றின. கடும் கோடையில் அவைகள் இலவசமாய் அள்ளிவழங்கிய நிழலில் எத்தனை நாட்கள் நின்று இளைப்பாறியிருப்பார்! வேப்ப மரத்தில் கிளை பறித்து பல் தீட்டிய இளமை நாட்கள் ஞுாபகத்தில் தட்டின.

காகங்குருவிகளின் சடசடப்பு காதில் இனிமையாய் விழுந்தது. இருட்டுக்குள் இயக்கமற்றுக் கிடந்த வாயில்லா ஜீவன்கள் சூரியனைக் கண்டதும் சிலிர்த்துப் பறப்பது எப்படி! அவருக்கும் அவைகளுக்கும் என்ன பந்தம்! எப்படிச் சொந்தம்!

நடையை வேகமாக்க சுவாசம் சீராகி தெளிவான கோட்டில் மனம் பயணிப்பது போலிருந்தது.

இடப்பக்கமாய் நீண்டு கிடந்த நீலக்கடலில் ஒளிக்கிரணங்கள் வெள்ளிப் பாயை விரித்து விட்டிருந்தன. நாலைந்து மீனவர்கள் தோளில் துடுப்பு வலைகளோடு அன்றைய சீவியத்துக்காக மணலில் இறங்கி புதைந்து நடந்தார்கள்.

வாருங்;கோ என் பிள்ளைகளே வந்து வலை நிறைய அள்ளிக் கொண்டு போங்கோ என்று சொல்வது போலவே மெல்லிய அலைகளை விட்டு அவர்களின் கால்களை அளைந்து வரவேற்றாள் கடலன்னை.

வலப்பக்கமாய் ஆனை நெருஞ்சிப் பற்றைக்குள் மறைந்திருந்த மயான வளவின் வடக்கு மூலையில் இரவு முழுக்க எரிந்த நெஞ்சாங்கட்டையின் கடைசிப் புகை காற்றில் கலைவது தெரிந்தது.

கண்களைக் கூச வைக்காத இளஞ்சூரியனை நிமிர்ந்து நேராகப் பார்த்தார் அருணோதயன். அகிலம் முழுமைக்கும் ஒளி கொடுக்கும் ஆதவனை இமை மூடாமல் பார்த்தார். அவரையுமறியாமல் கண்ணீர்ப் பொட்டுகள் கன்னத்தில் சரிந்தன.

நீங்கள் வந்துதான் இந்த உலகம் விடிய வேண்டும். இருள் விலகி ஓட வேண்டும். பனி பஞ்சாய்ப் பறக்க வேண்டும். அத்தனை ஜீவன்களும் புத்துயிர் பெற்றுப் புறப்பட வேண்டும். கோடான கோடிக் காலங்களாய் கோடு பிரளாத ஓட்டம். முடிவில்லாத பயணம். இத்தனைக்கும் என்னால்தான் எல்லாம் என்று எப்போதாவது உரிமை பாராட்டியிருப்பீங்களாய்யா!

இதயம் கனிந்து கசிய அதில் கரைந்து கொண்டிருந்தார் அருணோதயன்.

உண்மையைச் சொல் அருண் – உன் கை பட்டதால் தானா உன் பேஷண்ட்கள் உயிர் வாழ்கிறார்கள் ?

வழக்கத்தை விட இப்போது வண்டியாய் வியர்த்தது. வியர்க்க வியர்க்க அவர் வழித்து எறிந்தார்.

சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆயிரம் பேர் சொன்னாலும் உளியெல்லாம் தச்சனாகி விட முடியுமா ? வாளெல்லாம் வீரனாகி விட இயலுமா ? யாரோ உசுப்பி விட்ட சொற்ப நேரத்துள் அறிவு மயங்கி ஆணவச் சேற்றைப் ப+சிக் கொண்டேனே!

மலம் காலில் ஒட்டிக் கொண்ட அருவருப்பில் நெளிந்தார் அருணோதயன்.

வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு உடனே புறப்படத் தயாரானார். சுலோசனா சொன்னாள்.

“கொஞ்ச நேரம் படுத்து எழும்புங்கோவன் ”

சிரித்தபடியே காரில் ஏறினார் அருணோதயன். காலையில் வந்து அவளிடம் அழுது விட்டுப் போன கிழவனின் அவசரம் மட்டுமே இப்போது இதயத்தில் இருந்தது.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்