விதிகள்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

முத்துவிதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கிறதா? தண்டனை என்பது என்ன? இதுபோன்ற சில அதிமுக்கியமான கேள்விகள் என் தலையைக் குடைவது எதற்காக? கேள்விகள் சில சமயங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக்கொண்டு, கடும் புகை கக்கிச் செல்லும் தொடர்வண்டியாகின்றன. பல சமயங்களில் அந்த புகை பெறும்பாலும் ஆக்ஸ்சிஜனாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ஒரு வீட்டில் ஒன்றாய், இரத்த பந்தங்களாய் வாழ்பவர்களே பல சமயங்களில் விட்டுக் கொடுக்க மறக்கிறார்கள், மறுக்கிறார்கள். அவர்கள் ஒருமித்த ஒத்தக் கருத்தை அடைவது என்பது பெரும்பாலும் பகற்கனவே. பகற்கனவு பலிக்காதா என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். பலிக்காதுதான் அதுதான் விதி. கற்பிதம். அவ்வாறு இருக்க யாரோ ஒருவர் எப்பொழுதோ விதித்த விதிகளை அனைத்து மக்களும் ஒருசேரக் கட்டிப்பிடித்து கடைப்பற்ற அல்லது கடைப்பிடிக்க ஒத்துக்கொள்வது எவ்வாறு சாத்தியமாகிறது? தீர விசாரித்துப் பார்த்து அதன் ரிஷிமூலத்தைத் தொடர்ந்தோமேயானால், அந்த விதி யாரால் எப்பொழுது இடப்பட்டது, என்பதே புரியாமல், தெரியாமல், ஐன்ஸ்டினின் ரிலேடிவிட்டித் தியரியை ஸ்பெசல் டியூசன் வைத்து படித்தும் புரியாமல் முழிக்கும் மாணவனைப் போன்றே முழிக்க வேண்டிவரும்.

காலங்கள் மாறுகின்றன. தெய்வங்களும் தான். அந்தக் காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். கொற்றவை என்ற தெய்வம் இப்பொழுது எங்கே இருக்கிறது?

தூய்மைக்கு அளவுகோல் எதேனும் உண்டா? அவ்வாறு அளவுகோலைத் தயாரிக்க வேண்டுமெனில் தூய்மையை விளக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? தூய்மை வெறும் பறத்தூய்மை மட்டுமா? அல்லது அகத்தூய்மையையும் சேர்த்தது தானா?

சப்பானியர்களிடம் சொல்லி, மனிதன் அருகில் வந்தவுடன், அவன் தூய்மையை கண்டுபிடித்து, மூக்கைப் பிடித்துக் கொள்ளும், அல்லது வாந்தி எடுக்கும் அல்லது ஒரே ஓட்டம் பிடிக்கும் ரோபோட்டுகளை செய்யச் சொல்லலாம் தான். அதை வாங்கி தமிழகத்தில் மற்றும் கேரளாவில் இருக்கும் அனைத்துக் கோவில்களுக்கும் கொடுத்து விடலாம் தான். அதையும் மீறி அசுத்தமான மனிதனோ, மனுசியோ அல்லது நடிகையோ நுழைந்து விட்டாலும், அந்த தோஷத்தைப் போக்க, உடனுக்குடன் என்ன யாகம் செய்யலாம், எத்தனை அபராதம் விதிகலாம் என்று சொல்லும் ரோபோவையும் செய்யச் சொல்வது தான் அதி முக்கியம். அவ்வாறு செய்வதால் அசுத்தமான யாவரும் கோவிலுக்குள் புகாமல் தடுத்துவிடல்லம் தான். ஆனால் மனத்தூய்மையை எவ்வாறு அளப்பது? விதிகள்? அதுசரி, சில கண்ணப்பநாயனார்களை வைத்துக் கொண்டு புறத்தூய்மையையே விளக்க அல்லது வகுக்க முடியாமல் திணறும் பொழுது, அகத்தூய்மையின் விதிகளை யார் அளப்பது?

கோவிலுக்குச் செல்லும் பொழுது அனைவரும் ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்று சட்டம் இயற்றலாம். அப்படி செய்தால் சில் மீரா ஜாஸ்மின்களை கோவிலுகுள் புகுந்துவிடாமல் தடுத்துவிடலாம் தான், ஆனால் ரேஷன் கார்டில் அடையாளத்திற்கு புகைப்படம் கிடையாதே? மீரா ஜாஸ்மின், நயந்தாராவின் ரேஷன்கார்டை காண்பித்தால் என்ன செய்வது? அது சரி, நயன் தாராவை யாராவது தெரியாமல் இருப்பார்களா என்ன?

பேசாமல், இப்படிச் செய்தால் என்ன? வாக்களர் அடையாள அட்டை? ஏன் சிரிக்கிரீர்கள்?

பின் குறிப்பு:
மீராஜாஸ்மீன் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராயினும் :
அஞ்சப்பர் உணவு விடுதியில், மட்டன் சுக்காவை ஒரு கட்டு கட்டிவிட்டு, நேரே சிவன் கோவிலுக்குச் செல்லும், சிவனின் கண்மூடித்தனமான பக்தன் ஒருவன் எங்கள் ரூமில் இருக்கிறான். கேட்டால் கண்ணப்பனாயனாரைக் காட்டுகிறான். வந்தால் கேஸ் ஒன்று நிச்சயம். ஆனால் ஒன்று, அவன் நடிகையோ, நடிகனோ இல்லை!

http://kuralvalai.blogspot.com/2006/07/blog-post_03.html

Series Navigation

முத்து

முத்து