விண்ணில் ஒரு நதியாய்…

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

அரியநாச்சி


அவசர அவசரமாக ஒரு கவிதை.
கனவிலேயே எழுத்து
அச்சாகத் தொடங்கிவிட்டது.
தொடக்கச் சொல் தெருவிளக்கில் ஆரம்பிக்க,
இடையிடையே ‘அம்மா தாயே!’ வருகிறது,
அடிக்கடி.
இறுதி வரி மட்டும்
மனதிற்குள்ளாகவே அதிர
வெளியே சொல்வதற்கான ஒலி
ஒரு மிகஉயரமான
சுவர்விளிம்பில் நின்று குழப்புகிறது,
‘நான் இந்தப் பக்கம் விழட்டுமா?
அந்தப் பக்கம் விழட்டுமா?’ என.
அதை ஞாபகப்படுத்தும்போது
சாக்கடைக்கருகே விழுந்துவிட்டேன்.
எழுந்திருக்க வேண்டும்.
கழிவறையைத் தாண்டியுள்ள
சாமியறைக்குச் செல்லவேண்டும்.
ஊதுவத்தி வாசனையை முகர்வதற்கு.
அல்லது
எல்லோருக்குமாக கொளுத்துவதற்கு.
போட்டிக்காக இதை எழுதுகிறேன்.
நிச்சயம் வென்றுவிடவேண்டும்.

பட்டுச்சொக்கா வாங்குவதற்கு அல்ல
பாட்டிலை கவிழ்த்துக்கொள்வதற்கு அல்ல

பகட்டுக்கு அல்ல
பல்லிளித்து பள்ளம் தோண்டுவதற்கு அல்ல

பரபரப்புக்கு அல்ல
படோடபமும் அல்ல.

பாசாங்கில்லாமல் ஒரு கணம்
கையை உயர்த்தி ஆராவாரம் செய்ய.
என்ன எனக்கு வெளியே நிறுத்தி ஒரு கணம் வேடிக்கைப் பார்க்க.
என்னை மறந்து எதுவாகவோ ஒரு கணம் மாறிப்போக.

அரியநாச்சி
ஜூன் 24

Series Navigation

அரியநாச்சி

அரியநாச்சி