வாழைஇலை

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

வே பிச்சுமணி


நகரின் 2வது தெருவில், வாடகை வீட்டில் வசிக்கும் சங்கர் தனது வீட்டினை நோக்கி விரைவாக வருவதை தூரத்திலே பார்த்துவிட்ட பாஸ்கர், வாசலிருந்து இறங்கி, கேட் அருகே வரவும், சங்கரும் கேட் அருகே வரவும் சரியாக இருந்தது.
அவரிடம். என்ன விஷயம் என பாஸ்கர் கேட்பதற்கு முன்

அவர் “என்ன சார், இந்த கண்ணன் செய்தது சரியா.”
நகரில் இரண்டு கண்ணன் இருப்பதால் எந்த கண்ணன் என பாஸ்கர் வினவதற்கு முன்

சங்கரே “இந்த வீட்டில் இருக்கும் கண்ணன், என எதிர் வீட்டினை காண்பித்துவாறு, சார், காலையில் எங்க வீட்டின் கேட்டை திறந்து, விறு விறு என உள்ளே நுழைந்து, பின் பக்கம் இருந்த வாழை மரத்தில் இருந்து இரண்டு வாழைஇலைகளை பறித்து விட்டு வந்து விட்டார். என்னங்க இப்படி செய்றீங்க, கேட்டுட்டு இலை அறுக்கலாம் இல்லையா என கேட்டதற்கு, எங்க வீட்டு ஒனரோடு தம்பி வீடுதானே, ஓனர் கேட்டால் சொல்லி கொள்கிறேன் என சொல்லி கொண்டே ஒரு மரியாதைக்கு கூட நின்னு பேசமால் வந்து விட்டார், என்னனு கேளுங்க சார்” என்றார் சங்கர்.

பாஸ்கர் இது என்னடா வம்பா இருக்கு. அவர், நகரின குடியிருப்போர் சங்க தலைவர் பதவியில் இல்லை. ராமசாமி தான் தலைவர் என்று எல்லாருக்கும் பலமுறை சொல்லினாலும் பாஸ்கடமே வந்து எல்லாரும் ஆவலாதி சொல்லிகிறார்களே என நினைத்து கொண்டே,“சரி, சார் நான் கேட்கிறேன்” என்று பாஸ்கர் சொன்னார்.

“இல்லை சார் இப்பவே கேளுங்க“ என்று மீண்டும் வலியுறுத்தினார் சங்கர்

“சார் விடுங்க சின்ன விஷயத்தை பெரிது படுத்தாதீங்க“ என்று சங்கரை சமாதானபடுத்தி பாஸ்கர் அனுப்பினார்.

அவரோ திருப்தியில்லாத மாதிரி, பாஸ்கர் வீடு இருக்கும் தெருமுனையினை தாண்டுவதற்குள், நாலைந்து பேரிடம் இந்த சங்கதியை சொல்லிய வண்ணம் அவருடைய வீட்டுக்கு திரும்பி சென்றார்., உடனே கண்ணனை கூப்பிட்டு கேட்காததால், பாஸ்கர் மீது சங்கருக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கலாம். இந்த கண்ணன் ஏன் இப்படி செய்கிறார்.

இதே மாதிரி தான்., ஒரு ஆடி மாதம் பாஸ்கரின் வீட்டிற்கு பின்புறம், ஏதோ நிழல் ஆடுவது போல் தெரிய, பின் பக்கம் போய் பார்த்தால், பாஸ்கர் வீட்டு முருங்கை மரத்தில் சுற்றுசுவருக்கு பின்பக்கம் இருந்து, கண்ணன், முருங்கை கீரையை பறித்து கொண்டிருந்ததை பார்தது, பாஸ்கருக்கு கோபம் வந்தாலும், தெரிந்தவர் ஆயிற்றே என்று வீட்டுக்குள் வந்து
, ”இந்த கண்ணனுக்கு அதான் இந்த செல்வி அப்பாவுக்கு கொஞ்சம் கூட, இதே கிடையாதா நம்மிடம் கேட்காமல் முருங்ககீரை பறிச்சா என்ன அர்த்தம்“ பாஸ்கர் அவரது மனைவியிடம் கோபமாக சொன்னதும்,

“விடுங்க, அம்மனுக்கு கூழ் ஊற்றதான் பறிக்கிறாப்பல பறிச்சுட்டு போட்டும்“என்று அவரின் மனைவி அவரை அனறைக்கு சமாதனப்படுத்தியதும் பாஸகருக்கு நினைவுக்கு வந்தது.

அன்று மாலையே சங்கர், அவரது வீட்டுஒனர் குருவின் வீட்டுக்கு சென்று, கண்ணன் வாழை இலை பறித்த விபரத்தை விலாவாரியாக விவரித்து சொல்ல, அதனால் அடுத்தநாள் சங்கரின் வீட்டு ஒனர் குரு, மின்தொடர்வண்டி நிலையத்தில் வண்டிக்காக காத்திருந்த கண்ணனை தேடி கண்டு பிடித்து கண்ணனிடம்,

“ நீ என்ன பெரிய இவனா, யாரையும் கேட்காமல் என் வீட்டில் போய் வாழை இலை அறுத்து இருக்கிறாய்“ என கேட்க,

அந்த நேரத்தில் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக,

“பாஸ்கா சாரிடம் சொல்லி விட்டுதான் பறித்தேன்” என கண்ணன் ஒரு பொய்யை சொல்ல

அதற்கு குரு ”பாஸ்கர் என்ன பெரிய மயிரா அவனிடம் கேட்டேன் என்கிறாய்” என்று சத்தம் போட்டு கண்ணனின் சட்டையை பிடிக்க அருகிலிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தை கண்ணன், தனது மனைவியிடம் சொல்ல, கண்ணன் மனைவி வழியாக, அது பாஸ்கரின் மனைவியின் காதில் வந்து விழுந்தது.

பாஸ்கரின் மனைவி பாஸ்கரிடம் அவள் கேட்டதை அப்படியே ஒப்பித்து விட்டு,“என்னங்க இப்படி உங்களை திட்டி இருக்கிறான்” என்றாள்.

”சரி விடுஎன்ன செய்ய, நம்ம வேண்டானும் போனலும், நம்மட்ட வந்து குறையை சொல்லி, கெட்ட பெயரும் வாங்கி தந்து விடுகிறார்கள்”என பாஸ்கர் அதங்கப்பட்டார்.ஆனால் பாஸ்கர் மனதுக்குள் இவன் எப்படி அவரை பெரிய மயிரு என கூறலாம் என்று குரு மீது அவருக்கு கோபம் வந்தது அதனை அப்படியே அடிமனதில் போட்டு வைத்தார். அதற்குபின் குருவை பார்த்தால் மனதுக்குள் கோபத்துடன், பார்க்காத மாதிரி போய்விட பழகி கொண்டார். ஆனாலும் மனதுக்குள் குரு மீதுள்ள கோபம் குறைந்தபாடில்லை.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து , கண்ணனின் வீட்டு ஒனர் ராமன் , இன்னொரு புதிய வீடு கட்டினார். அந்த வீட்டில் இரண்டு போர்ஷன். இரண்டு போர்ஷனுக்கும் ஒரு பொது வழி, அந்த வழியாகத்தான் இரு போர்ஷன்காரர்களும் தங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதில் ஒரு போர்ஷனில், கண்ணன் பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டதால் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு ஏற்கெனவே இருந்த பழைய வீட்டில் படுப்பது சிரமமாக இருக்கிறது, என குடியேறினார். இன்னொரு போர்ஷனில் சங்கரின் சொந்தகாரர், சுரேஷ்மேனன் குடியேறினார். சுரேஷ்மேனன் வீட்டை சுற்றி சில செடிகளுக்கான கன்றையும், இரண்டு வாழை கன்றுகளையும், காரமணி விதையும் போட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார். கண்ணனும் அவரது பங்குக்கு பூஞ்செடிகளை நட்டு வளர்த்தார். இரண்டு வீட்டு பிள்ளைகளும் பூக்களை பறித்து உபயோகித்தனர். ஒற்றுமையாக, வீட்டுஒனர் அதிகமாக வசூலிக்கும் மின்கட்டனத்தை பற்றி வருத்தங்கள் கோபங்கள் இவற்றை பகிர்நது கொண்டு நல்லபடியாக, ஒற்றுமையாக பழகி வந்தனர்.

ஆறு மாதம் கழித்து ஒருநாள் பாஸ்கர், கொஞ்சம் அலுவலக வேலை அதிகமாக இருந்தால், 7.20 மின்தொடர் வண்டியை பிடித்து வழக்கமாக வீட்டுக்கு வருவதை விட, ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்தான். பாஸ்கர் மனைவி
“என்னங்க ஏன் லேட்” என வாசலில் வைத்து கேட்க,

“வேலை இருந்தது” என கூறிய வண்ணம்,பாஸகர் வீட்டுக்குள் நுழைந்து, சாப்பாட்டு பையை அதனை வழக்கமாக வைக்குமிடத்தில வைத்து விட்டு, பாத்ரூம் சென்று கை கால் கழுவிவிட்டு, துண்டை எடுத்து முகத்தை துடைத்து கொண்டே, தொலைகாட்சியில், சி.என்.என்.ஐ.பி.என் சானலை வைத்து விட்டு அமர்ந்தார்.தொலைகாட்சியை பார்த்து கொண்டே,

அவரது மகளிடம்“என்னம்மா, காலேஜ் பஸ்ஸில் இன்றைக்காவது உட்கார இடம் கிடைத்ததா, இல்லையா”. என கேட்டார்.

“இன்றைக்கு நின்றுக்கிட்டு தான் செல்ல வேண்டியது ஆகிவிட்டது” என சொல்லிகொண்டே அவரது மகள் டிரையிங்கை வரைவதற்கான ஆயுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள். இனி அவளை தொந்தரவு செய்ய கூடாது என தொலைகாட்சியை, நிறுத்தி விட்டு வெளியே வாசலில் காற்றாட வந்து பாஸ்கர் அமர்ந்தார். அவரது மனைவியும் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்தாள்.

பாஸ்கர், “நல்ல காற்று அடிக்குதில்ல,” என மனைவியிடம் சொன்னார்“

“ஆமாங்க இந்த நகரில் வேறு என்ன வசதியிருக்கு” என அங்கலாய்த்தவாறு, “எங்க, ஒரு விஷயம் தெரியுமா, இன்றைக்கு அம்மாவாசையில்லையா, நம்ம செல்வியோட அப்பா, அதாங்க கண்ணன், செல்வியை அவங்க வீட்டுக்கு பின்னால் உள்ள வாழைமரத்தில் இலையை பறித்து வர சொல்லியிருக்கிறார். அந்த பிள்ளை எப்படி பறிப்பதுன்னு தெரியாம, எல்லா இலையையும் கிழித்து வைச்சிட்டாளாம், அதானல் சுரேஷ்மேனன் கோபத்தில் கண்ணன் போர்ஷன் சுவர் பக்கம் அவர் வைத்திருந்த காரமணி செடி, அவர் வைத்த மற்ற செடிகளை கோபத்தில் பிய்த்து போட்டுட்டு,

அவருடைய மனைவியிடம்,“அவர் வேலைக்கு போகும் வரை செல்வி வாசல் பக்கம் வரக்கூடாது. அந்த பிள்ளை முகத்தில் முழிக்க பிடிக்கலை என்றும்,அவருக்கு இருக்கிற கோபத்தில் என்ன செய்வேன் என தெரியாது”எனவும் சொல்லியிருக்கிறார்.

சுரேஷ்மேனன் மனைவியும், செல்வியிடம் அவளை “அவர் போகும் வரை வெளியே வாரதே”என சொல்லி இருக்காங்க.

அவங்க போர்ஷன் சுவரிலிருந்து மேற்கு காமபவுண்ட் சுவா பக்கம் வரை உள்ள இடத்தில கண்ணன் வீட்டுகாரங்க புழங்க கூடாதாம், கண்ணன் போர்ஷன் சுவரிலிருந்து கிழக்கு காமபவுண்ட் சுவா பக்கம் வரை உள்ள இடத்தில சுரேஷ்மேனன் வீட்டுகாரங்க வரமாட்டார்களாம். சின்ன பிள்ளைதானங்க, வாழை இலையை கிழித்தற்கு போய், முஞ்சியில முழிக்ககூடாதுன்னு எப்படி சொல்லலாம், வாடகை வீட்டியே, இவருடைய சொந்த வீடு மாதிரி, இந்த பக்கம் வரக்கூடாது அந்த பக்கம் போகக்கூடாதுனு எப்படி அதிகாரம் பண்ணலாம்.

சாயுங்காலம், செல்விஅம்மா இந்த விஷயத்திற்காக செல்வியை நாயை அடிபபோல் பின்னி எடுத்து விட்டாள். பாவம் சின்ன பிள்ளை. இந்த ஆளு எங்க இப்படி இருக்கார். சரியான சைக்கோவாக இருப்பார் போல, நீங்களே சொல்லுங்க” என பாஸ்கரை நீதிபதி ஸ்தானத்தில் வைத்து கேட்டாள்.

பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது இது நமக்கு எதுக்கு ஏற்கெனவே ஒரு தடவை ஒன்னும் சொல்லாததற்கே பெரிய மயிரானு பெயர் வாங்கியாச்சு என நினைத்து அமைதியாக இருந்தான்.

பாஸ்கர் மனைவியோ “அவனிடம் என்னங்க ஒன்றும் சொல்லாம இருக்கிங்க” என்றாள்.

“என்ன சொல்லனும்” என சற்று கோபத்துடன் பாஸ்கர் கேட்டான்.

“அதாங்க அந்த ஆள் ஏன் அப்படி சைக்கோ மாதிரி செய்தார்.” என்றாள்.“

“அவரை பற்றி உனக்கு என்ன தெரியும். அவர் வைத்த வாழை மரத்தில் அவரிடம் கேட்காமல் வாழை இலையினை அறுத்ததுமில்லாமல் எல்லா இலையையும், கிழித்து வைத்தால் கோபம் வராதா. கோபத்தில் ஏதோ சொல்லி விட்டார் .விடும்மா.” என்றார் பாஸ்கர்.

“இல்ல, சின்ன பிள்ளை அடி வாங்க வைத்து விட்டார். சின்ன பிள்ளையை முஞ்சியில் முழிக்ககூடாதுன்னு யாரும் பார்த்து சொல்ல மாட்டார்கள்” என பாஸ்கர் மனைவி வாதமிட்டார்.

பாஸ்கர் வாதம் வழுப்பதை பார்த்து நிதானமாக ”அப்படி பார்த்தால் எல்லோரும் சைக்கோ தான். நம்ம வீட்டுக்கு பினபக்கம் தேன்சிட்டு ஒன்றுடன்ஒன்றாக நான்கைந்து எலுமிச்சை இலைகளை வெள்ளையாய் பசை போன்ற பொருளால் ஒட்டி, சின்னதாக கூடு செய்து, அதில் ஐந்து முடடையிட்டு, குஞ்சுகள் பொறித்து, இறக்கை முழுவதும் முளைக்காத குஞ்சுகளுக்கு ஒரே இடத்திலே நிற்பதுபோல் இறக்கைகளை வேகமாக அடித்து பறந்து கொண்டே, இரை ஊட்டும் அழகையும், தேன்சிட்டு இரை ஊட்டி விட்டு போன பின் நைசாக போய், எலுமிச்சை இலைகளை ஒதுக்கி அந்த குஞசுகளின் செவ்வாயினையும் தினமும் பார்த்து ரசித்த நாம், நாளைக்கு குஞ்சுகள் பறந்துவிடும் என நாம நினைத்திருக்க, காலையில் சன்னலை திறந்து நாம் பார்த்து போது, கூடு பிய்க்கபட்டு குஞ்சுகளின் இறக்கைகள் அங்காங்கு சிதறி கிடப்பதை பார்த்து, இதனை பூனைதான் செய்திருக்கும் என நினைத்து, நம்வீட்டு பக்கம் எந்த பூனை வந்தாலும், கம்பால் துரத்துகிறோமே அது சைக்கோதனமா இல்லையா .” என பாஸ்கர் கேட்டான்.

“பிள்ளையும் பூனையும் ஒன்னாகுமா” என சமாதானமாகமல் பாஸ்கர் மனைவி மீண்டும் கேட்டாள்.

“ஆமாம் எல்லாருக்கும் அவங்க உயிர், அவங்க உடமையைவிட பெரிது.ஆனால் அவங்க உடமை, அடுத்தவங்க உயிரைவிட பெரிது” என்று சொல்லி கொண்டே, அடுத்து, அவர் மனைவி வேறு ஏதும் கேட்டுவிடக்கூடாது என நினைத்து வேக வேகமாக
“சரி, வயிறு பசிக்கு சாப்பாடு வைம்மா” என . மனைவியிடம் சொல்லிவாறு கையை கழுவதற்காக வாஸ்பேஷின் இருக்கும் அறைக்கு சென்றார்.


Series Navigation