வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

சாரங்கா தயாநந்தன்


மழை. திடார்ப்பாய்ச்சல் தான். முன்னறிவிப்பு ஏதுமின்றி. வானப்பெண் முந்தானைக்குள் சேர்த்து வைத்த நீர் விசிறியிருக்க வேண்டும். மழை துளிநிலையிலில்லை. அடர்ந்தது. மண் தொட்டதும் ‘வெள்ளம் ‘ என்றாகிப் பள்ளம் பார்த்துப் பாய்ந்தோடிற்று. நடை பிடிக்காத ஓட்டம். சின்ன எறும்புகளைக் காவியது. அவற்றின் சின்ன வாயில் தீன் காவியிருந்தன. தேடிய உணவைத் தின்னாதே முக்குளித்தன. கொடுமை. காய்ஞ்ச மண் குளிர்ந்ததாகத் தோட்டக் காரனின் ஆயாசம். கணனி வகுப்பை வழிமறித்ததாய் பன்னிரண்டு வயதுச் சிறுமியின் சோகம். நாசமாய்ப் போவதற்கான வைதல்களையும் நல்லாயிருப்பதற்கான வாழ்த்தல்களையும் சமமெனக் கருதி ஒருங்கே தூக்கி வீசிய மழை கிருஷ்ண பரமாத்மா சொல்லிய கீதை வழியில் யோகி ஆயிற்று. ஞான ஒளியாய் நெளிந்தோடிற்று.

நாடு தன்பாட்டுக்கு அமைதியாய்க்கிடந்தது. அழகிய ஒற்றை ரோஜா இதழின் வடிவமுடைய நாடு. கூறிடத் துடிக்கும் கரங்களின் அமைதிப் பொழுது. அதனால் அது ,சிறுபூவுக்குக் காற்றுச் சொல்லும் பாடலை ரசித்துக் கொண்டிருந்தது. ஒருகை தட்டாதிருப்பதாயும் மறுகை மட்டும் தட்ட முயற்சிப்பதில் யுத்த இடி கேட்கவில்லை என்றும் மக்கள் கதைத்தார்கள். இருகையும் ஓய்ந்து யுத்த இடி தொலையும் காலம் தொலைவிலற்றதாய் நப்பாசைப்பட்டார்கள். இருபக்கத்துருப்புக்களும் உறங்குநிலையிலான பாசாங்கு .மறைவில் கைவிடப் படாத போராயத்தங்கள்.

மழையின் வரவோடு பெரும் பட்டாளமாய்க் கிளம்பின ஈசல்கள். ஊடுபுகவிடும் தகவுடை மென்சிறகுப் பூச்சி வகை. தொட்டால் இறகுதிர்த்தன. தப்பியோடின. அப்பால் போய் இனி இறக்குமோ ? நூறாய் ஆயிரமாய்… அதன் மடங்காய் ஈசல்கள் பெருகின. மழை தொடர்ந்து கொண்டிருந்தது. பல இறக்கை தொலைத்து அங்கவீனமாய்த் தப்பியோடின.உயிர் எஞ்சியதால் வாழ்வு தொடரும் பிடிப்பு. யாருக்குத்தான் இல்லை ? இறப்பு நீண்டு நீண்டு பெருகிற்று. சடலங்கள் மிகுந்த சிதைந்த மண். குழந்தைகளுக்கு வியப்பு. பெரியவர்களுக்கு எரிச்சல். அறிவுக் கலப்பற்ற பிள்ளைகளின் முட்டாள்தனமான மழைவலுப்புக் கோஷங்கள், மழையண்டாப் பகுதியிலிருந்து காட்சி ரசித்து. இது ஏன் ? இந்த ஈசல்களுக்குப் பிறப்பின் தொடர்வில் ஒரு படி ஏற்றமோ அல்லது இறக்கந்தானோ ? மழை வலுக்க ,புழுப்போல் நெளிந்து தத்தளித்தன. யோகமுடையவை அக்கணத்தில் இறந்து பட்டன. அல்லாதன அங்கவீனமாய்த் தப்பியோடின. பூமியில் நரகங் காண விதிக்கப்பட்டவை அவை. மழையின் ஊழிநர்த்தனம் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒய்ந்திருந்த கைகள் அசைந்தன. மண் அதிர, தொடங்கியது யுத்தம். இளைஞர்களாலும் யுவதிகளாலும் ஆன கூட்டங்கள் பொருதின. சன்னத் துளைப்பில் காயமுற்றன. அப்பால் போய் இறக்குமோ ? நூறாய் ஆயிரமாய் அதன் மடங்காய்ப் பொருதுவோர் பெருகினர். யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. பல கைகால் தொலைத்து அங்கவீனமாய் நடந்தன. உயிர் எஞ்சியதால் வாழ்வு தொடரும் விருப்பு. யாருக்குத்தான் இல்லை ? இறப்பு நீண்டு நீண்டு பெருகிற்று. சடலங்கள் மிகுந்த சிதைந்த மண். குழந்தைகளுக்கு வியப்பு. பெரியவர்களுக்கு எரிச்சல்.அறிவுக்கலப்பற்ற முட்டாள்தனமான யுத்தவலுப்புக் கோஷங்கள், யுத்தமண்டாப் பகுதிகளிலிருந்து காட்சி ரசித்து. இது ஏன் ? பிறப்பின் தொடர்வில் ஒரு படி ஏற்றமோ ? அல்லது இறக்கந்தானோ ?மழை வலுக்க, புழுப்போல் நெளிந்து துடித்தன. யோகமுடையன அக்கணத்தில் இறந்து பட்டன. அல்லாதன கை கால்கள் அற்றுத் தவழ்ந்தன. கண்கள் தொலைத்துக் கதறின. பூமியில் நரகம் காண விதிக்கப் பட்டவை அவை. யுத்தத்தின் ஊழிநர்த்தனம் தொடர்ந்து கொண்டிருந்தது.

****

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்