வாய் தந்தனவும் மறை தந்தனவும்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

எஸ். ஜெயலட்சுமி


’’யாகா வாராயினும் நா காக்க’’

என்கிறார் வள்ளுவர். காக்கா விட்டால் என்ன நடக்கும்?
’சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்று எச்சரிக்கிறார்.

சிலர் கோபம் கொள்ளும் போது நாவடக்கம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி விடுகி
றார்கள். கோபம் தணிந்த பிறகு நானா அப்படிப் பேசி னேன் என்று கேட்பார்கள். ஆனால் பேசியது பேசியது தான். மாற்ற முடியாது. எங்கள் பாட்டியும் அம்மாவும்
“மடியிலிருந்து விழுந்து விட்டால் எடுத்து மடியில் போட்டுக் கொள்ளலாம் ஆனால் வாயிலிருந்து வார்த்தை விழுந்து விட்டால் எடுத்து வாயில் போட்டுக்
கொள்ள முடியாது. அதனால் கோபத்தில் வார்த்தை களைக் கொட்டக் கூடாது” என்று அறிவுரை சொல் வார்கள். அதனால் தான்

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்

என்று வள்ளுவரும் அறிவுறுத்துகிறார். அவரே இனிய சொற்களை எப்படிச் சொல்ல வேண்டுமென்றும் கற்றுத் தருகிறார்.

சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல்
அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

இப்படி, இரண்டு விதமாக,
சினமும் அதைத் தணிவிக்கும் இனிய சொற்களையும் எப்படி இலக்குவனும் ராமனும் பேசுகிறார்கள் என்ப தைக் கம்பன் அழகாகக் காட்டுகிறான். இருவருமே வேதம் கற்றவர்கள் தான். இலக்குவன் சினம் என்னும் சிகரமேறி நிற்கிறான். ராமனோ அந்தச் சினமென்னும்
தீயைக் குளிர்விக்க வந்த மேகமென அருள் மழை பொழிந்து கோபத் தீயைக் குளிர்விக்கிறான்.

சினம் என்னும் சிகரம்
ஏறி நின்றான்.

கைகேயி தன் இரு வரங்களால் தன் மகன் பரதனுக்கு அரசாட்சியையும், இராமனுக்கு வனவாசமும் அளிக்கிறாள். இச் செய்தியைக் கேட்ட இலக்குவன் பிரளய காலத்தில் உண்டாகும் பெரு நெருப்பு என எழுகிறான். அவனுடைய தோற்றமே அச்ச

மூட்டுவதாக இருக்கிறது. கண்களில் நெருப்புச் சிந்து கிறது. உடம்பு பூராவும் வியர்வைத் துளி வெள்ளம்
போல் வெளிப்படுகிறது. கண்களிலிருந்து வரும் நெருப்புப் பொறியில் புருவ மயிர் பொசுங்குகிறது. ஆகாயத்திலுள்ள சூரியனே இலக்குவன் உருவில் வந்து விட்டானோ என்று தோன்றுகிறது! அவ்வளவு வெப்பம்!
ஆதிசேஷனே சீற்றத்தோடு வந்து விட்டானோ என்று தோன்றும் படி காட்சியளிக்கிறான்

சிங்கக் குருளையும்
நாய்க்குட்டியும்.

”கைகேயியின் அறிவுத்திறம் தான் என்னே! சிங்கக் குட்டிக்குக்(ராமனுக்கு) கொடுக்க வேண் டிய ஊனை நாயின் சிறு குட்டிக்குக் (பரதன்) கொடுத் தது போல் இந்த நாட்டைக் கொடுக்க நினைத்தாளே!” என்று ஏளனம் செய்து கை கொட்டிச் சிரிக்கிறான். பின் இடையில் வாளைச் செருகி வில்லும் அம்பும் எடுத்துக்
கட்டி, கவசமும் அணிந்து கொண்டு கிளம்புகிறான். காலில் வீரக் கழல்கள் ஒலிக்க மேருமலையும் நாணும் படி யுத்த சன்னத்தனாக வருகிறான். தன் வில் நாணின் பலத்தைச் சோதித்துப் பார்க்கிறான். ஐம்பெரும் பூதங்க
ளும் வீழ்ந்து பட்டதோ? என்று மூவுலகங்களிலும் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள்.

”நான் பூபாரம் குறைக்கப்
போகிறேன்.என்னோடு போர் செய்ய வருபவர்களை
யெல்லாம் அழித்து அவர்களது உடல்களை மலை போலக் குவிப்பேன். என் தலைவனான ராமனுக்கு மகுடம் சூட்டவும் முன்னிற்பேன். இதை யார் தடுக்க நினைக்கிறார்களோ அவர்கள் தடுத்துப் பார்க்கட்டும்.” என்று சவால் விட்டு நிற்கிறான்.”எந்த உலகத்திலுள்ள வர்கள் என்றாலும் வரட்டும். எவர் வந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், கைகேயியின் எண்ணம் மட்டும் நிறைவேறப் போவதில்லை. நிறைவேறவும் விடமாட்டேன்” என்று அறைகூவல் விடுத்து அயோத்தி நகர வீதியில் சுற்றி வருகிறான்.

அஞ்சன மேகம்.

சுமித்திரையிடம் சென்று கோசலை யைத் தேற்றும்படி சொல்வதற்காகச் சென்ற ராமன் இலக்குவனின் நாணொலியைக் கேட்கிறான். இலக்கு வனிடம் விரைந்து செல்கிறான்.

அதிக வெப்பமாக இருக்கும் பொழுது அதிகமாகப் புழுக்கம் ஏற்படும் அப்படியிருந் தால் மழை வரும் என்று சொல்வார்கள். மின்னல் தோன்றும். பின் மண்வாசனையோடு மழைத்துளிகள்

விழும். இங்கே இலக்குவன் என்ற கோபத்தீயை, வெப்
பத்தைத் தணிக்கும் மழைத்துளியாக ராமன் வருகிறான்.
எப்படி வருகிறான்?

வீறு ஆக்கிய பொற்கலன் வில்லிட
ஆரம் மின்ன
மாறாத் தனிச்சொல் மாரி
வழங்கி வந்தான்
கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து
கனன்று பொங்கும்
ஆறாக்கனல் ஆற்றும் ஓர்
அஞ்சன மேகம் என்ன

இலக்குவனை நெருங்குகிறான்.

மழைத்துளியும் அனலும்.

“லக்ஷ்மணா! எப்போதும் சிறிதும் கோபமே கொள்ளாத நீ இப்போது யுத்த சன்னத்தனாகி இப்படி நிற்கிறாயே! இது என்ன போர்க்கோலம்? இதன் காரணம் என்ன?” இராமன் அமைதியாகக் கேட்கிறான். பளீரென்று பதில் வருகிறது. ” சத்தியத்தை அழித்து, உன் உரிமையைப் பறித்த மைபோல் கரிய நெஞ்சை உடைய கைகேசிக்கு ஆதரவாக, உனக்குரிய மகுடத்தை நீ அடை

வதற்கு எதிராக அந்தத் தேவர்களே வந்தாலும் அவர் களையும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல் பொசுக்கி விடுவேன். ஈரேழு பதினாலு உலகங்களையும், மன்னர் குலக் காவலையும் நான் தருகிறேன். கொள்வாயாக” என்கிறான் இலக்குவன்.

இராமன் மீண்டும் அதே அமைதி யோடு, “லக்ஷ்மணா! உன் அறிவு நல்ல நெறியிலிருந்து
தவறாத அறிவாயிற்றே! இப்படி முறையில்லாமல் உனகுக் கோபம் வர என்ன காரணம்?” என்று நிதான மாகக் கேட்கிறான்.

இதைக் கேட்ட லக்ஷ்மணன் வெடி
படச் சிரிக்கிறான். அண்ணா! கோபம் வராமல் என்ன செய்யும்? நேற்று இந்தப் பெரிய கோசல நாடு உன்னு
டையது என்றார்கள். நீயும் சரி என்று சம்மதித்தாய். இன்று விரோதிகள் (கைகேயி) சொன்னதற்காக அரசை விட்டு வனவாசம் போ என்று உன் தந்தை சொன்னால் கோபம் வருமா வராதா? இதற்குக் கோபிக்காமல் வேறு எதற்குக் கோபிப்பது? இப்பொழுது கோபிக்காமல் எப் பொழுது கோபிப்பது? உன்னை வனம் போகச் சொல்லி விட்டு இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் மன்னவன் (தசரதன்) என்று என்னையும் நினைத் தாயோ? எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்?

நதியின் பிழை

”மைந்த! நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாக்க் கேள். அரசை ஏற்றுக் கொள் என்று மன்னவன் சொன்னபோது அதை ஏற்றுக் கொண் டது என் குற்றமே தவிர மன்னன் குற்றமில்லை.
லக்ஷ்மணா! ஒரு நதியில் நீர் வரவில்லை என்றால் அது நதியின் குற்றமில்லை. மலையில் மழை பெய்தால் தானே நதியில் நீர் வரும்? அது போலவே இது மன்ன னின் குற்றம் இல்லை. என்னை வனவாசம் போகச் சொன்னதும் நம்மை பெற்று வளர்த்த கைகேயியின் குற்றமும் இல்லை அவள் மகனான பரதனின் குற்றமும் இல்லை. மகனே! இது விதியின் குற்றமே தவிர வேறொன்றும் இல்லை. இவர்கள் எல்லோருமே கருவி கள் தானே தவிர, அம்புகள் தானே தவிர எய்தவன் வேறொருவன். அவன் யார் தெரியுமா? அதுதான் விதி!
எய்தவன் இருக்க அம்பின் மேல் பழி போடலாமா?

”நதியின் பிழையன்று
நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று, பயந்து
நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன்பிழை
அன்று மைந்த!

விதியின் பிழை நீ இதற்கு
என்னை வெகுண்டது?

என்று இலக்குவனை சமாதானப் படுத்துகிறான்.

விதிக்கும் விதி

”அண்ணா! கொல்லன் உலைக்களத் தில் ஊதுலையில் உண்டாகும் நெருப்பைப் போல என் மனம் கொதிக்கிறதே! இதை எப்படித் தணிப்பேன்? உனக்குத் தீமை செய்த கைகேயியின் அறிவுக்கும் மேலான அறிவைத் தருவேன். மும்மூர்த்திகளுக்கும் மட்டுமல்ல, நீங்கள் சொன்னீர்களே விதி, விதி என்று அந்த விதிக்கும் ஒரு விதி செய்வேன். என் வில்லின் செயலை, அதன் வேகத்தைப் பாருங்கள்” என்று கொதித்தெழுகிறான்.

இதைக்கேட்டு இராமன் பொறுமை யாகவும் நிதானமாகவும் பேசுகிறான். “தம்பி! நீயா இப்படிப் பேசுகிறாய்? வேதம் பயின்ற வாயால் வாய்க்கு வந்தபடி பேசலாமா? நீ இப்பொழுது பேசிய வார்த்தை கள் நல்ல நெறியில் நடப்பவர்கள் பேசும் பேச்சா? உன் கருத்துக்கு மாறாக பெற்ற தாய் தந்தையர்கள் நடந்தால் அவர்களைக் கோபிக்கலாமா? மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! என்று நீ கற்க வில்லையா?” என்று

ஆதரவாகக் கேட்கிறான் ராமன்.

அம்மை நீ அப்பன் நீ ஐயனும் நீ

ராமனுடைய அமைதியான
பேச்சுக்களால் ஆத்திரம் அடங்காத இலக்குவன், ருத்ர னைப் போல் காட்சியளிக்கிறான்.”எனக்குத் தந்தையும் நீயே, தலைவனும் நீயே, ஏன் பெற்றெடுத்த தாயும் நீ
தான்! நீ எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுக் கத் தயாராக யிருக்கிறாய். ஆனால் இன்று நான் உனக்கு அரசைப் பெற்றுத் தரப் போகிறேன். எனக்குச் சகலமும் நீயே! அதனால் உனக்குத் தீமை செய்தவர் களைத் தண்டிப்பதில் தவறில்லை” என்று தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.

ராமனின் கேள்விக் கணைகள்

”லக்ஷ்மணா! நம் தந்தையாகிய தசரத மன்னனுக்குப் போர்க்களத்திலே தேரோட்டி தக்க நேரத்தில் அவருக்கு உதவியதால் வரம் பெற்ற கைகேயியே இவ்வுலக ஆட்சியைப் பெற உரிமை உடையவள் ஆகிறாள். என் தந்தை சொல்ல பரதன் இவ்வரசாட்சியைப் பெறுகிறான். நான் தவம் என்னும் செல்வத்தைப் பெறுகிறேன். இத் தவத்தைவிட மேலான செல்வம் வேறு என்ன இருக்கிறது? இன்னும் கேள்.

இந்த அரசாட்சியைப் பற்றிய மயக்கம் கொஞ்சமும் இல்லாமல் நன்னெறியில் ஒழுகும் உன் அண்ணனாகிய பரதனைப் போரில் வென்று இந்த அரசாட்சியைப் பெற்றுத் தரப் போகிறாயா? அல்லது ஈடு இணையற்ற நம் தந்தையை(தசரதனை)வெற்றி கொண்டு ஆட்சியைத்
தரப் போகிறாயா? அல்லது பெற்றதாயையே (கைகேயி)
வெற்றி கொண்டு நீ நினைத்தபடி ஆட்சியைப் பெற்றுத் தரப் போகிறாயா? எதைச் செய்தால் உன் கோபம் தணியும்? அன்னை, தந்தை, அண்ணன் இவர்களோடு போர் செய்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? சொல்!” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கிறான்.
இராமன்.

இலக்குவன், “என் வில் பேசும்
என்கிறான். கோதண்டபாணியான ராமனும் சொல்லா கிய (கேள்விக்) கணைகளால் பேசுகிறான்.

”ஐய! இவ்வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப்
போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித் தாதையை
வாகை கொண்டோ?
ஈன்றாளை வென்றோ? இனி இக்கதம்
தீர்வது?” என்றான்.

பொங்கிய பாலில் நீர் தெளித்ததுதும்
அடங்குவது போல இராமன் சொற்களில், கேள்விகளில்
தெரிந்த நியாயத்தால் இலக்குவன் கோபம் கொஞ்சம் தணிகிறது, என்றாலும் முற்றும் அடங்கவில்லை.
கோபம் ஆற்றாமையாக உருவெடுக்கிறது. தன்னைத் தானே பழித்துப் பேசுகிறான். நொந்து கொள்கிறான். பகைவர்கள் (கைகேயி) சொல்லும் ஏச்சுக்களையும் தாங்கினேன். அசையாமல் இருக்கும் மலைகலைப்
போன்ற இரு தோள்களையும் சுமந்தேன். பயனில்லாமல்
ஒன்றுக்கும் உதவாத வில்லும் அம்பறாத் தூணிகளை யும் சுமக்கப் பிறந்தேன். இப்படி ஓர் அவல நிலையில் இருக்கும் எனக்குக் கோபம் வரலாமா?” என்று நொந்து பேசுகிறான்.

செல்லும் சொல் வல்லான்

இலக்குவனின் சீற்றம் அடங்கி, கழிவிரக்கமாக மாறும் இந்தத் தருணத்தை நன்கு பயன் படுத்திக் கொள்கிறான் இராமன். ஏனென் றால் அவன் தென் சொல் எல்லை கடந்தவன். வட சொல் கலைக்கு எல்லை தேர்ந்தவன்! ”லக்ஷ்மணா!
என் தந்தை என்னை நாள் தோறும் இனிய சொற்களை,
நல்ல சொற்களைப் பேசியே வளர்த்து வந்திருக்கிறார்.

அதனால் அவருடைய சொல்லை மீறி அரசாட்சி செய் வது எனக்கு உகந்தது அன்று. தகுதியான செயலும் அன்று. நான் அப்படிச் செய்யவும் விரும்ப வில்லை.

நீ கொஞ்ச நேரத்திற்கு முன்பு
என்ன சொன்னாய்? நானே உனக்குத் தாய், தந்தை, தலைவன் என்றெல்லாம் சொன்னாய் அல்லவா? நீ சொல்வது உண்மையானால் என்னுடைய சொல்லை மீறப் போகிறாயா?

”நன் சொல் தந்து ஆண்டு எனை
நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு
ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால், உனக்கு
யாது உளது ஊற்றம்? என்றான்
தென் சொல் கடந்தான் வடசொல்
கலைக்கு எல்லை தேர்ந்தான்.

சீறிய நாகம் பெட்டிப் பாம்பானது

சொல்லுக சொல்லைப் பிறிது ஓர்சொல்
அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

என்ற குறளுக்கேற்ப சொல் வல்லவனாகிய இராமன் எதிரில் இலக்குவன் கோபத்தை விட்டொழிக்கிறான்.
கரையைக் கடக்காத கடல் போல சினம் அடங்கி நிற்கிறான். சீறிவரும் நாகம் சிரியா நங்கை என்னும்
மூலிகையைக் கண்டால் சீற்றம் அடங்கும் என்று சொல் கிறார்கள் நாகத்தின் விஷகடிக்கு அது ஒரு அரிய மூலிகை. விஷம் முறியும்.

சீறிய ஆதிசேஷனின் (இலக்குவனை ஆதி சேஷனின் அம்சம் என்று சொல் வார்கள்) சீற்றத்தை அடக்கியவன் யார்? வற்றாத நாற்பெருங் கடல் போன்ற நான்கு வேதங்களையுடைய ராமன் அடக்குகிறான் (ராமன் அந்தப் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் தானே?)

இலக்குவன் வாய் தந்தன கூறினான்.
(வாய்க்கு வந்தபடி ஏசினான், பேசினான், சீறினான்) வேதப் பரம் பொருளான ராமன் மறைதந்த நாவால் அதை அடக்குகிறான்.

சீற்றம் துறந்தான் எதிர் நின்று
தெரிந்து செப்பும்

மாற்றம் துறந்தான், மறை நான்கு என
வான்கல் செல்லா
நால் தெண்திரை வேலையின் நம்பி
தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்காக் கடலின்
தணிவு எய்தி நின்றான்.

சீற்றம் அடங்கி நிற்கும் இலக்குவனை ராமன் தழுவிக் கொள்கிறான். இருவரும் சுமித்திரை அரண்மனைக்குச் செல்கிறார்கள்.

22/03/2010

*********************************************************

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி