வளர்சிதை மாற்றம்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

சுந்தர் பசுபதி


கிட்டிப்புல் செய்து தரவும்
பள்ளியில் விட்டு வரவும்
கிரிக்கெட்டு மட்டைக்கு
வண்ணம் பூசவும்
தோளில் தூக்கி சாமி ஆடவும்
ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும்
காட்டாமணக்கில் குமிழி ஊதவும்
பால்யத்தில் பாதி நேரம்
என் தாத்தாவின் வயதை ஒத்த
வீட்டாள் முனுசாமி கூடத்தான்

சாப்பிடும் நேரம் மட்டும்
அவன் கொல்லை நடையிலும்
நான் கூடத்திலும்…
அவன் நீர் குடித்த குவளை கூட
நீர் தெளித்தே வீட்டுள் வரும்

வளர்ந்து , கிளைத்து
முதிர்ந்து வெளிப்படர்ந்து
திரைகடலோடி
ஐரோப்பிய தேசத்தினுள்
வெள்ளையை தவிர
மற்றதெல்லாம் கறுப்பெனவே அறிந்த
அயலகத்து மக்களுள்
இத்தனை கலந்தும்கூட
கண்ணுக்குத் தெரியாதொரு
சுவரை கடந்து விட்டு
தூக்கி வெளி வீசப்பட்ட
அந்த ஓர் நாளில்
சட்டென
கனவு கலைந்தது…

sundar23@yahoo.com

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி