வரி விளம்பரம்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

பாஸ்டன் பாலாஜி


ஃபெப்ரவரி 9, 1995 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

கல்வி

வேண்டுவோருக்கு கணிதம், வரலாறு குறித்து ? தனிப்படவும் குழு வகுப்புக்களாகவும் கற்பிக்கப்படும். பாஸ்டன் நகரம் அருகேயுள்ளோருக்கு கணினி குறித்த சிறப்புப் பயிற்சிகளும் கொடுக்கப்படும்.

அணுகவும்: (555) 767 3918

டிசம்பர் 28, 1995 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

வாழ்த்துகின்றோம்

முதலாவது பிறந்த நாள் வாழ்த்து

செல்வி நிலா விஜயகுமார்

அமெரிக்காவின் மாஸாசூஸ்ட்ஸில் (ஷ்ரூஸ்பரி) வசிக்கும் விஜயகுமார் தேவிகா தம்பதியரின் செல்வப்புதல்வி நிலா இன்று(21.12.1995) புதன்கிழமை தனது முதலாவது பிறந்த தினத்தை குதூகலமாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பான அப்பா, அம்மா, சுவிஸில் வசிக்கும் மாமா ராஜா, அத்தை மேகலா, மச்சான்மார்களான விவேக், ராஜன், மச்சாள் ரேணுகா, பாட்டி பத்மினி, சித்திமார்களான ரேகா, வித்யா, அண்ணாமார்களான திலீப், பிரபாகர், சென்னையில் வசிக்கும் தாத்தா சுந்தரலிங்கம், பாட்டி, அத்தை ராதிகா குடும்பம், சுவிஸில் வசிக்கும் அத்தை மதுவந்தி குடும்பம் , பிரான்ஸில் வசிக்கும் பாட்டி லட்சுமி, தாத்தா பிரபுலிங்கம், மாமாமார்களான தினகர், நடராஜ், சித்தப்பாமார்களான கார்த்திக் குடும்பம், நாகராஜன் குடும்பம், வேதலிங்கம் குடும்பம், தயா

கரன் குடும்பம், அரசரத்தினம் குடும்பம், தாத்தாமார், அண்ணாமார், அக்காமார், மச்சாள்மார், மச்சான்மார் மற்றும் உற்றார், உறவினர் ஆகியோர் நோய்நொடியின்றி சகல செளபாக்கியங்களும்பெற்று, நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

பத்மினி

(பாட்டி).

விருகம்பாக்கம்,

சென்னை.

ஜனவரி 4, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

இலக்கியவாதி தேவை

‘நிலம் பார்த்த கண்கள். வீறு கொண்ட நடை. பூணூல் போன்ற தோள் பைகள். எதிர்ப்படும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுபவர் போன்ற கால்கள். இரயில் வந்துவிட்டதா என்று உயரத்தில் அறிவிப்புப் பலகையை முறைத்துக் கொண்டிருந்த முகங்கள் ‘ என்பது போல் இலக்கியத்தரமாய் எழுத எழுத்தாளர் தேவை. தொடர்பு: siru_pathirigai@oonjal_mag.com

பனிச்சறுக்கு விளையாடுபவர் தேவை

பனியில் சறுக்குதல் விளையாட்டுக்கு துணை தேவை. Skiing விரும்பிக்கு சகா அவசியம் தேவைப்படுகின்றது. கூட வந்து விளையாடக்கூடியவர்கள் எவராவது இருப்பின் தயவு செய்து எம்முடன் தொடர்புகொள்ளவும். (மாஸாசூஸட்ஸ் மாகாணம்). லிஃப்ட் டிக்கட் எடுக்கப்படும். தொலைபேசி: (555) 767 3918

ஜனவரி 11, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

சினிமாத் துணை தேவை

சென்னையில் வெளிவரும் அறிவுஜீவிப் படங்களுக்கும் மோசமான திரைப்படங்களுக்கும் தனியே செல்லமுடியாது. யாருடனாவது என்னுடைய புத்திசாலித்தனமான கருத்துக்களைப் பகிர விருப்பமாய் உள்ளது. தியேட்டர் இருட்டில் காமெண்டுகளைக் கேட்க உறுதுணை தேவை. டிக்கெட் செலவை நான் பார்த்துக் கொள்வேன். தொடர்பு: siru_pathirigai@oonjal_mag.com

ஜனவரி 18, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

80 ஆவது பிறந்த தின வாழ்த்து

சென்னையைச் சேர்ந்த சுந்தரலிங்கம்(Retd. T.O, High Ways)

இன்று தனது 80ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். அவரை மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சம்பந்திமார்கள் அனைவரும் நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

இன்று போல்

என்றும் நீடூழி

காலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்

தொ.பே.: 044 1210 2490

ஜனவரி 25, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

கர்நாடக சங்கீதம், வீணை கற்றுத்தரப்படும்

கர்நாடக சங்கீதம், வீணை கற்பதற்கு ஆர்வமாக உள்ளீர்களா ? நியு இங்கிலாந்து பகுதியில் அனுபவமும், தகுதியும் மிக்க ஆசிரியர் திருமதி. தேவிகா விஜயகுமாரை 555-789.1017 அல்லது (555) 767.3918-இல் தொடர்பு கொள்ளுங்கள்.

ஃபெப்ரவரி 8, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

இந்திய நாகரிக அணிகலன்களை அமெரிக்காவில் பெற

திருமண மண்டபங்கள் அலங்கரிக்க, இந்திய ஆபரணங்கள் தருவிக்க, தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஆயத்த ஆடைகள் (Readymade Dress) தயார் செய்ய, காலணிகள் முதல் கடிகாரம் வரை வித்தியாசமாக அணிய அணுகுங்கள்: 555-789.1017

மார்ச் 22, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

சுந்தரலிங்கம்

அம்பாசமுத்திரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அண்ணாநகர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் அவர்கள் நேற்று(21.03.1996) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு. நாகரத்தினம் பிள்ளை புவனம் தம்பதியரின் அன்பு மகனும் அரசப்பா நல்லமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் விசாலத்தின் கணவனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.03.1996) புதன்கிழமை பி.ப.2 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

சு. விஜயகுமார்

தொ.பே.: 044 1210 2490

ஏப்ரல் 12, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

வீடு விற்பனைக்கு

சென்ரெயின் ஆஸ்பத்திரிக்கு எதிரில் ஜீவன் பீமா நகரில் கிணற்றுடன் கூடிய பயன்தரும் மரங்கள் உள்ள வீடு வளவு உடன் விற்பனைக்குண்டு. தொடர்பிற்கு: கூ.க.: 044 1210 2490 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஜூன் 21, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

பாராட்டி வாழ்த்துகின்றோம்

செல்வன் திலீப் விஜயகுமார்

ஜூன் 1996இல் நடை பெற்ற SAT நுழைவுத்தேர்வில் மாணவன் செல்வன் வி. திலீப் கணிதத்தில் 540 மதிப்பெண்களைப் பெற்று சித்தியடைந்தமையையிட்டு அவரை ஊக்குவித்த காப்லான் போதகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் திலீப் அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகின்றோம்.

பத்மினி

(பாட்டி).

விருகம்பாக்கம்,

சென்னை.

செப்டம்பர் 20, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

வீடு வாடகைக்கு விடப்படும்

ஷ்ரூஸ்பரி (வாஷிங்டன் ஸ்ட்ரீட்) யில் 5 படுக்கை அறைகள், பெரிய balcany, டெக் கொண்ட முற்றாக பூர்தியாக்கப்பட்ட புதிய கலோனியல் வீடு வாடகைக்கு உண்டு. குடும்பத்துக்கும் பணிநிமித்தாகவும் பொருத்தமானது.

தொடர்பு: ஆங்கிலம் / தமிழ் – (555) 767 3918

வாகன விற்பனைக்கு

வாகன விற்பனைக்கு டொயோட்டா கேம்ரி விற்பனைக்கு உண்டு புத்தம் புதியது. மாஸாசூஸட்சில் தொடர்பு (555) 767 3918

செப்டம்பர் 27, 1996 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

கல்வி

வேண்டுவோருக்கு கணிதம், வரலாறு குறித்து ? தனிப்படவும் குழு வகுப்புக்களாகவும் கற்பிக்கப்படும். நியு யார்க் நகரம் அருகேயுள்ளோருக்கு கணினி குறித்த சிறப்புப் பயிற்சிகளும் கொடுக்கப்படும்.

அணுகவும்: (555) 767 3918

மார்ச் 21, 1997 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

முதலாம் ஆண்டு நினைவலைகள்

மலர்வு 1.18.1926

உதிர்வு 21.03.1996

அமரர் சுந்தரலிங்கம் நாகரத்தினம்

(ஆசிரியர்: ‘ஊஞ்சல் ‘ பத்திரிகை)

குடும்பஜோதி அணைந்து இன்று

குழாமே கதறுகின்றோம்

மறக்குமோ உங்கள் பண்பு

பறந்திடுமோ எம்மை விட்டு

நேசம் வைத்து எம்மோடு

நிலைத்துவிட்ட என் தெய்வமே!

இலக்கியத்தைக் கொடுத்து எம்மோடு

தெவிட்டாத ஞானத்தெளிவையும் தந்தவரே!

நீங்கள் இல்லாத தமிழ் இனிக்

கானல் நீர்தான் யாரறிவார் ?

என்றும் உங்கள் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

இன்று(22.03.1997) வியாழக்கிழமை ஃபர்ஸ்ட் ப்ரீசைப்டாரியன் தேவாலயத்தில் (321 South 7th Street) ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், திருமுறை பாராயணமும், மதிய போசனமும் நடைபெறவுள்ளதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்திபெற்று, அமைதிபெற அனைத்துத் தெய்வங்களையும் வேண்டுகின்றோம்.

குடும்பத்தினர்.

ஃபார்மிங்டேல், நியு யார்க்.

மார்ச் 21, 1997 தேதியிட்ட வாரயிதழில் இருந்து:

சிறுநீரகம் தேவை

சிறுநீரக நோயாளிக்கு சிறுநீரகம் அவசியம் தேவைப்படுகின்றது. சிறுநீரகம் ஒன்றை வழங்கி உதவக்கூடியவர்கள் எவராவது இருப்பின் தயவு செய்து எம்முடன் தொடர்புகொள்ளவும். ( ‘ஏபி ‘ குரூப்). சன்மானம் வழங்கப்படும்.

T.P: (555) 767 3918

மார்ச் 21, 2007 திலீப் விஜயகுமாரின் ‘நினைவு கூர்கிறோம் ‘ என்னும் கூகிள் தேடலின் போது வலப்பக்க ஆட்சென்ஸ்:

விளம்பரதாரர்களின் சுட்டிகள்

தபால் அட்டையில் அறிவியுங்கள்

போஸ்ட்-கார்ட் மூலமாக அச்சடிக்கப்பட்ட உங்கள் அறிவிப்புகளை அனுப்புங்கள்

$19.99-இல் திட்டங்கள் ஆரம்பம்

www.எளியஅச்சு.com

$7.99-க்கு அறிவிப்புகள்

நூற்றுக்கணக்கான டிஸைன்கள்.

இணையம் மூலமாக உங்களுக்கு வேண்டிய வரிகளுடன், நீங்கள் விரும்பும் புகைப்படங்களுடன்…

www.சொந்தப்பதிப்பு.com

இறப்பு அறிவிப்புகள்

இறப்பைப் பதிவு செய்து, முன்னணி தமிழ்/ஆங்கில சஞ்சிகைகளில் விளம்பரமும் செய்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எங்கிருந்தாலும் தொடர்பு கொள்க.

www.இறந்துட்டாரா.com

இறப்புப் பதிவு

பொய்யாக இறந்ததாக நாடகமாடுகிறாரா என்னும் சந்தேகமா ?

இறப்பை உறுதி செய்ய வேண்டுமா ?

பதிவு செய்ய வேண்டுமா ?

www.நோண்டு.com

– பாஸ்டன் பாலாஜி

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி