வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

சின்னக்கருப்பன்


மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் செப்டம்பர் 7 ஆம் தேதி எல்லாப் பள்ளிக்கூடங்களும் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த பாடலின் தோற்றம் குறித்த கொண்டாட்டம் சம்பந்தமாக இந்த ஆணை எல்லா முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்கத்திடமிருந்து அனுப்பப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முலயாம் சிங் யாதவின் அரசாங்கம் எல்லாப் பள்ளி நிறுவனங்களும் “:வந்தே மாதரம்” பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவு போட்டது. இதனை எதிர்த்து அங்கிருக்கும் இஸ்லாமிய இமாம்கள் “வந்தே மாதரம்” பாடலை முஸ்லீம்கள் பாடக்கூடாது என்று பலர் எதிர்பார்த்தது போல பட்வா விதித்தார்கள். உடனே தன் வேலை முடிந்துவிட்டது என்று முலயாம் சிங் அரசு தனது உத்தரவை வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டது. இஸ்லாமிய இமாம்கள் பட்வா விதித்ததும் துணை விளைவு இதற்கென்றே காத்திருந்தது போல பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டுவிட்டது. பிரச்னையைக் கிளப்பிய அர்ஜுன் சிங்கோ இந்த ஆணை கட்டாயம் அல்ல, பாடலைப் பாட வேண்டுமென்பது கட்டாயமும் அல்ல, தானாக விரும்பி பாட விரும்புபவர்கள் பாடலாம் என்று தப்பித்துகொண்டார்.

உண்மைதான். வந்தே மாதரத்துக்கு ஒரு முக்கியமான வரலாற்று பாத்திரம் இருக்கிறது. அந்த பாடல் தோன்றிய ஆனந்த மடம் நாவலைக் கடந்து அதன் வீச்சு பெரியது. அதன் பங்கு முக்கியமானது. ஆனந்த மடம் நாவலைப்பற்றி நாம் அறிவது வந்தே மாதரத்தின் மூலமாகத்தானே தவிர, ஆனந்த மடத்தின் பின்புலத்தில் நாம் வந்தே மாதரத்தை பார்ப்பதில்லை. மேலும் வந்தே மாதரத்தின் இந்துமத பின்னணி உள்ள வரிகள் பல நீக்கப்பட்ட ஒரு “சுத்திகரிக்கப்பட்ட” பாடலே இன்று தேசிய பாடலாக இருக்கிறது. அந்த பாடலுக்கு வேறொரு அந்தஸ்து கொடுத்து, ஜனகனமனவை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளும்போது நேரு கூறியவை இன்னமும் அர்த்தமுள்ளவை. நேரு ஒரு மதச்சார்பற்ற அனைவருக்குமான தேசியத்தை கட்டமைக்க முயன்றார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள் இன்னமும் ஆழமும் அர்த்தமும் பொருந்தியவை. அவற்றை நாம் பயிலவேண்டும். அதில் உள்ள சாராம்சத்தை அரவணைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த காரணத்தினாலோ முஸ்லீம் தலைவர்களில் பலர் இந்த பாடலை எதிர்க்கிறார்கள். அதற்கு மத ரீதியான காரணங்களை முன் வைக்கிறார்கள். எந்த காரணத்தினாலோ பல முஸ்லீம் தலைவர்கள் இந்த பாடலை ஆதரிக்கிறார்கள். அதற்கும் பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.

இந்த பாடலை மத காரணங்களால் எதிர்க்கும் முஸ்லீம் தலைவர்களின் வாதங்களை எதிர்த்து வரிக்கு வரி வாதம் செய்யலாம். உதாரணமாக, பாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் இந்துக்களும் கிரிஸ்துவர்களும் பிறை பொறித்த பாகிஸ்தான் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். பாகிஸ்தான் கொடிக்கு மிலிட்டரி சல்யூட் அடிக்காத ஒரு பாகிஸ்தான் போர்வீரர் நிச்சயம் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து விலக்கப்படுவார். அங்கே இருப்பது பாகிஸ்தான் என்ற தேசத்தின் பிரதிநிதியாக நிற்கும் கொடியே தவிர அதிலிருக்கும் பிறை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகத்தான் அங்கிருக்கும் கிரிஸ்துவர்களும் இந்துக்களும் பார்க்கிறார்கள் என்று கருதுகிறேன். இதுவே சுமார் 10 சதவீதம் இந்துக்கள் குடிமக்களாக இருக்கும் பங்களாதேசத்திலும் என்று பார்க்கிறேன். இந்தியாவின் கிரிஸ்துவர்கள் எந்த காலத்திலும் வந்தே மாதரத்தை ஒரு விவாதப்பொருளாக ஆக்கியதில்லை. முஸ்லீம் மதத்தலைவர்கள் எடுப்பது போன்ற ஒரு நிலைப்பாட்டை கிரிஸ்துவ மதத்தலைவர்கள் எடுப்பது எளிது. அதனை விவிலியத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் தம் மத நம்பிக்கை பாதிக்கப்படுகிறது என்று காட்டுவதும் எளிது. ஆனால், இன்றைய நடைமுறை சாத்தியங்கள், ஒத்து வாழ்தல், இந்திய பாரம்பரியத்தை மதித்தல் என்ற பார்வையில்தானா என்னவோ, அவர்கள் அப்படிப்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. சொல்லப்போனால், கொடிவணக்கம் என்பது இந்திய பாரம்பரியம் இல்லை. இந்தியாவில் தேர்களின் மீதும் ராணுவம் ஏந்தும் கொடிகளும் அடையாளங்களாக பயன்பட்டனவே அன்றி, அவை வணக்கம் செலுத்தப்படவில்லை என்பது என் எண்ணம். கொடிக்கு மிலிட்டரி சல்யூட் என்பது விவிலியத்தை வேதமாகக் கொண்ட ஐரோப்பியர்கள் இந்திய துணைக்கண்டத்துக்குக் கொண்டுவந்தது. இதனையும் காலனிய பாதிப்பு என்று பார்க்கலாம்.

மறுபுறம் பார்த்தால், தாய் என்று உருவகிக்கப்படும் இந்தியத் தாய்நாட்டை எல்லாம் வல்ல கடவுள் என்று கருதி வணங்குகிறோம் என்றும் இந்துக்கள் கூறுவதில்லை. தாய்க்கு கொடுக்கப்படும் மரியாதையே, வந்தனமே அது. நபிகளும் சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது என்று கூறியதாக படித்திருக்கிறேன். தாயின் காலடியை அவரே போற்றும்போது தாய்நாட்டினை போற்றுவதும் எவ்வாறு இஸ்லாமுக்கு எதிரானது என்பது எனக்குப் புரியவில்லை. “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்பது பாரதியாரின் கூற்று. இங்கும் மாநிலத் தாய் என்று தான் சொல்லப்படுகிறதே ஒழிய கடவுள் என்று சொல்லப்படவில்லை.

ஆனால், ஒருவரை ஒருவர் கேட்கத் தயாரில்லாத பட்ச வாதங்கள் மூலம் தேச ஒற்றுமை உருவாகிவிடுவதில்லை. அது பேச்சுக்கள் மூலமும் விட்டுகொடுத்தல் மூலமும் தான் உருவாகிறது.

ஒரு நாட்டின் வலிமை பெரும்பான்மையினரின் ஒன்றுபட்ட வலிமையால் அயல்நாட்டு விரோதிகளை எதிர்கொள்கிறது. நாட்டின் வலிமை பெரும்பான்மையின் விட்டுக்கொடுத்தலால் உள்நாட்டில் உறுதியாகிறது.

இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள். அந்த இந்துக்கள் நிச்சயம் வந்தே மாதரத்தை நெஞ்சில் வைத்து போற்றுகிறார்கள் என்பதை அறிவேன். ஏன் பெரும்பாலான முஸ்லீம்களும்கூட அதனை விரும்பிப்பாடுவார்கள் என்றே கருதுகிறேன்.

ஆனால், அது கட்டாயமாக்கப்படக்கூடாது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் பொருள் பெரும்பான்மையின் சர்வாதிகாரம் என்று உருவாகுமேயானால், அது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் ஜனநாயகம் என்பது சிறுபான்மையின் சர்வாதிகாரம் என்று ஆகுமேயானால் அதுவும் இந்தியாவுக்கு நல்லதல்ல.

1960களில் ஒரு மொழி கட்டாயமாக்கப்பட்டபோது தீய விளைவுகள் நிகழ்ந்தன. அதிலிருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அன்று அண்ணா இந்தி மொழியை எதிர்த்தது பல நல்ல விளைவுகளை தோற்றுவித்திருக்கிறது. இன்று ஆங்கில அறிவு மூலம் பல நல்ல விளைவுகள் இந்தியாவில் தோன்றியிருப்பதற்கு அண்ணா ஒரு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.

இப்படி ஒரு பெரும்பான்மை, (மொழிப்பெரும்பான்மையோ, மதப்பெரும்பான்மையோ) தன் குணங்கள் மூலம் தேசியத்தின் குணாம்சங்களை கட்டுவது இந்தியாவில் குறைவு என்றாலும், அதற்கான முயற்சிகள் முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை.

மேலும், பெரும்பான்மை தனது அடையாளத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதும் ஒரு எல்லை வரைக்கும்தான் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே தமிழ் தமிழ்நாட்டில் மாணவர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று நான் எழுதுவதன் காரணம். அதுவே பெரும்பாலான பிற்பட்ட மக்கள் அரசாங்க வேலைகளில் உகந்த பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று எழுதுவதற்கும் காரணம். பெரும்பான்மையினர் தங்கள் உரிமைகளையும் அடையாளங்களையும் இழப்பது அளவுக்கு மீறிப்போகும்போது பெரும்பான்மையினர் மத்தியில் மனவருத்தத்தினையே உருவாக்கும். உதாரணமாக வெளிப்படையாக இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும், சீக்கிய குருக்களையும் அசிங்கப்படுத்துவது போல பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்படுகிறது. இது பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் விவாதமாக ஆகியிருக்கிறது.

இந்த பின்னணியில் முஸ்லீம்களுக்கு அவர்களின் வாக்குக்களுக்காக வெளிப்படையாக இந்துக்களை விரோதம் செய்வது போல விளம்பரத்தோடு அரசு மான்யங்கள் வாரி வழங்கப்படுவது பெரும்பான்மை இந்துக்களை வெறுப்பேற்றும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். அது காங்கிரசுக்கும் நல்லதல்ல. முஸ்லீம்களின் வாக்கு வங்கிக்காக இந்துக்களை இழிவுபடுத்துவதன் உளவியலும், இப்படி இழிவு படுத்துவது முஸ்லீம்களுக்கு ஆதரவானது என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள் என்றால் அதன் உளவியலும் எனக்கு விளங்கவில்லை.

ஏனெனில், காங்கிரஸ் இன்று உத்தரபிரதேசத்தில் இருக்கும் முஸ்லீம் வாக்குக்களை முலயாம் சிங்கிடமிருந்தும் மாயாவதியிடமிருந்தும் முழுவதுமாக பிரித்து தன் கையில் கொண்டுவந்துவிட்டால், சொற்ப காங்கிரஸ் ஆதரவு இந்து வாக்குக்களோடு முஸ்லீம் வாக்குக்களையும் இணைத்து ஆட்சிக்கு வந்துவிடலாம். அந்த வாக்குக்கள் இருந்தால் அடுத்து நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கணக்குப்போடுகிறது.

இன்று “ஜனகணமன” பாடல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சிறப்பான தேசிய கீதமாக இருக்கிறது. அதனைத் தொடர்வதோடு, வந்தே மாதரத்தை தேசிய பாடலாக ஒரு புறம் ஏற்றுக்கொண்டு இருப்பது ஒரு நல்ல ஏற்பாடு. இதனை கெடுக்க எந்தவிதமான தேவையும் இல்லை இப்போது.

“ஜனகணமன” பாடலுக்கு பல வரலாற்று ரீதியான காரணங்கள் கூறப்படுகின்றன. அது வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பாக எழுதப்பட்டது என்றும் கூறுகிறார்கள். அவையெல்லாம் தேவையற்றவை. பாடலாசிரியரின் நோக்கம் என்னவானாலும் மக்கள் அதை என்னவாகக் கருதுகிறார்கள் என்பதே இன்று பிரதானமாகிறது.

இன்று அது ஒரு பாரதீயனை போற்றுகிறது. ஒரு சாதாரண இந்தியனை, அவனது வலிமையை, அவனது ஆன்மாவைப் போற்றுகிறது. அவன் இந்த நாட்டின் பாரம்பரியத்திலும் உணர்விலும் இரண்டற கலந்திருப்பதை போற்றுகிறது.

அதுதான் முக்கியம்.

பாரதிய ஜனதாவின் பார்வையில் காங்கிரஸ் செய்யும் இந்த வேண்டாத வேலையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் உத்வேகம்தான் தெரிகிறது. காங்கிரஸின் இப்படிப்பட்ட அரசியல் இல்லையென்றால், ஏராளமான முஸ்லீம்கள் தானாகவே வந்தே மாதரம் பாடக்கூடியவர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டும் ஆர்வமும் இருக்கிறது. அது உண்மைதான். ஆனால், இந்திய முஸ்லீம்களிடம் தேவையில்லாமல், அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசாலும், “முற்போக்கு” ஊடகங்களாலும் பரவலாகப் பரப்பப்பட்டுள்ள “பாஜக எதிர்ப்புணர்வு” பாஜகவின் இந்த செயலை சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்கவைக்கும்.

இந்தியாவின் முதன்மைக் கட்சியாக விரும்பும் பாரதிய ஜனதாவுக்கு வந்தே மாதரம் பிரச்னை தேவையற்றது. சொல்லப்போனால், வந்தே மாதரத்தைக் கட்டாயமாக அர்ஜுன் சிங் முன்னுரைத்தபோது, அதனை வேண்டாத வேலை என்று பாரதிய ஜனதா கூறியிருக்க வேண்டும். அது உண்மையிலேயே ஒரு அனைத்திந்திய அமைப்பாகத் தன்னை நிறுவ விரும்பும் பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி, எல்லோருக்குமான கட்சி, சிறுபான்மை மக்கள் உணர்வை மதிக்கும் கட்சி என்ற கருத்தை உருவாக்கியிருக்கும்.

ஆனால், பாரதிய ஜனதாவில் உள்ள தீவிரவாதப் பிரிவு இந்த விவாதத்தை இன்னொரு திசைக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. அல்லது உத்தரப் பிரதேசத்தில் நடக்கப்போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இந்துக்கள் வாக்குக்களை அள்ளிவிடலாம் என்ற கணக்கில் இது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்காலிகமாக வாக்குக்களை அள்ளும் வேலையைத் தாண்டி, இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இது போன்ற வகுப்புவாத நிலைப்பாடுகளிலிருந்து பாரதிய ஜனதா கட்சி விலகுவது அந்த கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது. இதில் நரேந்திர மோடி மட்டுமே, “மதரசாக்களுக்கு வந்தே மாதரம் கட்டாயமல்ல” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். மற்ற பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சர்கள், பாரதிய ஜனதாவின் தீவிரவாதப்பகுதியால் ஹைஜாக் செய்யப்பட்டு எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாரதிய ஜனதா முதலமைச்சரும் அவ்வாறே வந்தே மாதரம் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் இந்தியர்களாகவே தொடர்ந்து தம்மைக் கருத எத்தனை வாய்ப்புக்கள் எளிதாக அவர்களுக்குக் கிட்டுகின்றனவோ அத்தனைக்கு இந்தியாவுக்கு நலன் கிட்டும். அவர்களைத் தாம் இந்தியர் என்ற உணர்வுடன் இருக்கவிடக் கூடாது என்று எல்லா உத்திகளையும் பயன்படுத்தி அன்னியராக்க முயலும் வெளிச்சக்திகளையும், உள்நாட்டுக்குள் உள்ள நாசகாரச் சக்திகளையும் இந்திய மக்களின் முன்னால் முகத்திரையைக் கிழித்து வெளிப்படுத்த பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு இன்னமுமே இருக்கிறது.

ஏனெனில், இன்னும் காலம் கடந்துவிடவில்லை. “வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப்பாடல், அது இந்த நிலைமையிலேயே தொடரும். அதனை வைத்து முஸ்லீம்களிடம் வேற்றுமை உணர்வை தூண்டிவிடும் வேலையைச் செய்த காங்கிரஸை கண்டிக்கிறோம். இதனை வைத்து இந்துக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் எந்த உத்தியும் எங்களிடம் இல்லை. வந்தே மாதரம் எங்களால் பெருமையுடன் பாடப்படும். மற்றவர்கள் மீது இதைத்திணிக்க மாட்டோம். அவர்கள் விரும்பியவர்கள் பாடட்டும். ” என்று பாரதிய ஜனதா அறிவிக்கலாம்.

அதன் மூலம் ஒரு நேர்மையான அரசியலை, இந்தியாவின் வளமான எதிர்காலத்தை மனதில் கொண்ட அரசியலைத் தொடங்கி வைக்கலாம்.

karuppanchinna@yahoo.com

Series Navigation