வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

கரிகாலன்


பெருங்காப்பியங்களும், அதன் உட்கதைகளும் பின் நவீனத்துவ வெளிச்சத்தில் மறுவாசிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில், வஞ்சமகள் கவனத்திற்குரிய ஒரு நாடகமாக அமைந்திருக்கிறது. பெருங்காப்பியங்களில் மையப் பாத்திரங்களின் நாயக பிம்பத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் வந்து போகின்ற, ஒற்றைப் பரிணாமத்தில் மூடுண்ட துணைப் பாத்திரங்களின் மீது மறுவாசிப்பு கவனத்தைக் கோருகிறது. அப்பாத்திரங்களின் இருள் கவிக்கப்பட்ட மற்ற பக்கங்களையும் அதன் பன்முகத்தன்மையையும் அறிந்துகொள்ள இம்மறுவாசிப்பு உதவி செய்கிறது. இத்தகைய மறுவாசிப்பு காப்பியங்களின் பெருங்கதையாடல் தன்மையைக் குலைத்து அதைச் சிறுகதையாடல்களின் தொகுப்பாக மாற்றிவிடுகிறது. மையப் பாத்திரங்களின் புனிதத்தன்மையைக் கட்டுடைக்கும் அதே வேளையில், துணைப் பாத்திரங்களின் மீது புனையப்பட்டிருக்கும் வில்லன்-வில்லி, நயவஞ்சகன்-நயவஞ்சகி, காமாந்தகன்-காமாந்தகி போன்ற ஒற்றை அபிப்ராயங்களைக் கலைத்துவிடுகிறது. நாயக பிம்பங்களை நோக்கிக் குவியும் பார்வைகளைச் சிதறடித்து விளிம்பு நிலை பாத்திரங்களின் கதையாடல்களையும் கவனிக்கச் செய்கிறது. இத்தகைய சிந்தனையின் திசை வழியே சமூக நீதி, பெண் எனும் தளங்களிலிருந்து அதிகாரத்தைக் கட்டுடைக்கும் செயலுக்கு உதவி புரியக்கூடிய பாத்திரங்களை கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் நம்மால் இனம் காண முடியும். உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கற்பு நலன் நோக்கிய வாசிப்பில் மாதவி போன்ற பாத்திரத்தின் தியாகங்கள் கவனம் பெறாமலே போய்விடுவதை நாம் உணர்கிறோம். தன்னிடம் ஒப்படைக்கப்ட்ட கோவலன், கண்ணகி இணையில் கோவலனை மீண்டும் கவுந்தியடிகளிடம் ஒப்படைக்க முடியவில்லையே எனும் வருத்தத்தில் தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஆயர் குல மங்கையின் தியாகம் மௌனப்படுத்தப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.

இத்தகைய பாத்திரங்களை முன்வைத்து மறுவாசிப்பு நிகழ்த்தப்பட வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், பல வருடங்களுக்கு முன்பாகவே கு. அழகிரிசாமி இவ்வகை வாசிப்பை சூர்ப்பநகையை முன்னிறுத்தி செய்துள்ளார் எனும்போது ஆச்சரியமும், அவர் மீது மரியாதையும் ஒருங்கே ஏற்படுகிறது.

இராமாயணத்தில் பிறன்மனை நோக்கா பேராண்மை உடையவனாக ராமனது நாயக உருவாக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என தெய்வாம்சம் பொருந்தியவன் அவன். இத்தகைய அவனது பண்பு நலன்களை நிரூபிக்க சில உதிரிப் பாத்திரங்கள் தேவைப்படுகின்றார்கள். இந்த இப்பிறவியில் வேறோர் மாதரை சிந்தையாலும் தொடாதவனாகக் காட்டக் கிடைத்த பாத்திரம்தான் சூர்ப்பநகை.

சூர்ப்பநகை பெண். அதிலும் அரக்க குலப் பெண். அடங்காக் காமம் கொண்டவள். அவள் ராமன் மீது காமம் கொள்கிறாள். இது ஆண் நோக்கு மதிப்பீட்டில் எத்தகைய ஒழுக்கக் கேடானது. அதுவும் இராமன் போன்ற ஏக பத்தினி விரதன் இதை எப்படி அனுமதிப்பான். ராமன், சீதை என்கிற புனித உருக்களுக்காகக் காவு கொடுக்கப்படுகிறது சூர்ப்பநகையின் காமம் என்கிற இயல்பாக்கம். அவளது காமம் அலட்சியப்படுத்துவதோடு விடப்படவில்லை. இலக்குவனால் அவளது முலை, மூக்கு, காது போன்றவை சிதைக்கப்படுகின்றன.

பெண்ணில் சீதையைப்போல் இருக்கவேண்டும். கல்லும், முள்ளும் நிறைந்த காடானாலும் கணவனது காலடியே அவளுக்கு சொர்க்கம். கணவன் சொன்னால் அவள் கண்ணை மூடிக்கொண்டு தீயிலும் இறங்க வேண்டும். இப்படி இருந்தால் காலம் காலமாக அவள் தேவமகளாக, பத்தினி தெய்வமாகக் கொண்டாடப்படுவாள். சூர்ப்பநகை போல் பிற ஆடவனிடம் காமத்தை வெளிப்படுத்தினால் தண்டனைக்குள்ளாக வேண்டியதுதான். அவமானப்படவேண்டியதுதான். பெண் என்பவள் ஆணின் பாலியல் வேட்கையைத் தணிக்க உதவும் செயலூக்கமற்ற வெறும் உடல். அந்த உடலுக்குத் தனது தேவைகளை, விருப்பங்களை வெளிப்படுத்தும் உரிமையில்லை. இத்தகைய சிந்தனையின் உருவாக்கத்தில் விளைந்தததுதான் சூர்ப்பநகை பாத்திரம்.

ஆனால், அழகிரிசாமி பெண்மீது கொண்டுள்ள அக்கறையால் தனது பார்வையை சூர்ப்பநகை மீது செலுத்துகிறார். தான் இராமன் மீது ஆசைப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது என சூர்ப்பநகையின் மௌனத்தைக் கலைத்து, அவளை வினா எழுப்பச் செய்கிறார். சூர்ப்பநகையை கவனப்படுத்துவது, அவள் பக்கத்து நியாயங்களை உணரச் செய்வது என்கிற அளவில் நவீன குணம் படைத்த இந்நாடகத்தைத் தெரிவு செய்து இயக்கியமைக்காக வெளி ரங்கராஜனைப் பாராட்டவேண்டும்.

ஆர்ப்பாட்டமில்லாத எளிய அரங்க அமைப்பு, சூழலுக்கிசைந்த இசை, பாத்திரங்களின் உணர்வு நிலைக்கேற்ப குவியும், பரவும் ஒளி, தேர்ந்த பாவங்களும், சலனங்களும் கூடிய நடிப்பு என மிளிர்கிறாள் வஞ்சமகள்.

குறிப்பாக சூர்ப்பநகையாக நடித்துள்ள தமிழச்சி, தனது உடல்மொழியின் மூலம் நேர்த்தியாக அர்த்த வெளிப்பாடுகளைப் பார்வையாளர்களிடம் கடத்திவிடுகிறார். ராமனது பரந்த மார்பு, அகன்ற தோள், தோற்றப்பொலிவு ஆகியன கண்டு உண்டாகும் விரகதாபத்தை, சீதையின் பேரழகு கண்டு எழும் பொறாமையை, தனது அங்கங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் தனக்கிழைக்கப்பட்ட அவமானத்தால் எழும் குமுறலை, கோபத்தைத் தனது ஒவ்வொரு அங்க அசைவிலும், முக பாவத்திலும், விழித்திறத்திலும் வெளிப்படுத்துகிறார். அழகிய ஆண்மகனின் நினைவு ஏற்படுத்தும் கிளர்ச்சியைச் சின்னச் சின்ன விழிக்குறிப்புகளில் கொண்டு வரும் விதம், தேர்ந்த நடிப்பின், நாட்டியத்தின் இலக்கணம். சூர்ப்பநகையாக, தேவமங்கையாக அவரது தோற்ற மாறுதல்கள், கம்பீரத்திலிருந்து மென்மைக்கு மாறுவது அழகாக வெளிப்படுத்தப்படுகிறது.

சூர்ப்பநகையின் கனவுக்குள் அலைபாயும் ராமனின் மாயத்தோற்றங்கள், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தருணங்கள் இயக்கத்தின் நுட்பம் காட்டுபவை. முறையே ராமன், சீதை, இலக்குவன் ஆகிய பாத்திரங்களில் நடித்திருந்த கார்த்திகேயன், நந்தமிழ் நங்கை, ஸ்ரீஜித் ஆகியோர் தமது உயிர்த்துடிப்புள்ள நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க – போன்ற கவிநயமும், ஓசையின்பமும் அளிக்கக்கூடிய கம்பராமாயணப் பாடல்களை இசைபட வழங்கியிருந்தது நல்ல இசையை நுகர்வதற்கான வாய்ப்பை அளித்திருந்தது.

புராணப்பாத்திரமான சூர்ப்பநகையினது காமத்தின் எதிர்மறைத் தன்மையை நீக்கி அதன் நியாயங்களைப் பேசும், வஞ்ச மகளைப் பெண்ணியப் பார்வைக்கு வாய்ப்பளிக்கும், நவீன நாடகமாக அடையாளம் கணலாம். இத்தகைய மறுவாசிப்புச் சாத்தியங்களை உள்ளடக்கிய சிறுகதையாடல்களை, நாடக வெளிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் வெளி ரங்கராஜன் போன்றவர்கள் தொடர்ந்து ஈடுபட்டால், அது தமிழ் நாடகத்துறை மறுமலர்ச்சியை அடைவதற்கு உதவுவதாக இருக்கும். மேலும் வஞ்ச மகள் நாடகத்தின் பிரதான பலம் அதன் எளிமை, பன்முகத்தன்மை, உயிர்ப்பு மிக்க அழகியல். சமகால நாடகங்களில் வெளிப்படும், மிகைப்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், செயற்கையான காட்சிகள், வறட்டுத்தனமான பிரசார தொனி போன்றவற்றால் அவை பார்வையாளர்களிடம் கலைப்படைப்புக்கள் உருவாக்க வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன. ஆனால் அரங்கை விட்டு வெளிவந்த பின்னும் வெகு நேரத்திற்குத் தொந்தரவு அளிக்கும் அனுபவத்தை வஞ்சமகள் தருகிறது. இவ்வனுபவமே கலைப்படைப்பின் உயிரோட்டத்தை உறுதி செய்வதாக உள்ளது.

வாசிப்புப் பிரதியாக இருக்கக்கூடிய நாடகப்பிரதி, நாடகம் எனும் காட்சி ஊடகத்திற்கு மாற்றப்படுகிற போது பெறுகிற பரிமாணங்கள், உருவாக்குகிற சலனங்கள், மனப்படிமங்கள் வேறு வகையானவை. கூடுதலானவை. காட்சிப்படிமமாக, வஞ்சமகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் பலவேறு இழைகளைக் கொண்டிருக்கிறது. வஞ்சமகள் உள் பொருளாய், பாத்திரங்களின் உளக்கிடக்கையாய்த் திகழும் காமம்-பார்வையாளர்களிடையே பலவிதமான சிந்தனையோட்டங்களை ஏற்படுத்துகிறது. சூர்ப்பநகை, இராமன், இலக்குவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் காமம் எனும் இயல்பூக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதை சமூக நீதி, பெண்ணியம், உளவியல் எனும் சிந்தனைத் தளங்களில் வைத்து ஆராயக்கூடிய வாய்ப்பை இந்நாடகத்தின் வசனங்களும் நடிகர்களின் உடல்மொழியும் நாடக ஆக்கமும் நமக்கு வழங்குகிறது.

சூர்ப்பநகை ஓர் அரக்க குலப்பெண். உயர்சாதி மதிப்பீடுகளுக்கு எதிரானவள். அவளுடைய காமத்தைத் தெரிவிக்கும் முறை வெளிப்படையானதாக, நேர்மையானதாக இருக்கிறது. குறிப்புகளாலோ, மௌனத்தாலோ, பாவனையாலோ அவள் இராமனிடம் காமத்தை வெளிப்படுத்தவில்லை. நேரடியாகவே காமத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சூர்ப்பநகையை நவீன விழைவின் குறியீடாகப் பார்க்கலாம்.

சூர்ப்பநகையின் உறுப்புகளை அறுக்கும் இலக்குவனது உளவியல் பின்னணி சிக்கலானது. இராமன், சீதை எனும் இணையோடு இருக்கும் இலக்குவன் காமத்தைப் பகிர்ந்து கொள்ள வழியற்ற சூழலில் இருக்கிறான். இந்நிலையில், சூர்ப்பநகை ராமனை நாடுவதை அவன் தனது ஆண்-அடையாளம் அவமானப்படுத்தப்படுவதாக, அலட்சியப்படுத்தப்படுவதாக உணர்கிறான். தன்னை அவமதித்தப் பெண்ணை அசிங்கப்படுத்தும் வக்கிரம் இதிலிருந்து வளர்கிறது. பெண்மையின் அடையாளமாக விளங்கும் மார்பை அறுக்கும் செயலை இத்தகைய வக்கிரத்தின் விளைவாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ள வழி உண்டு. இலக்குவனின் அங்க அசைவுகளில் தென்படும் இறுக்கம், விறைப்பு நிலை போன்ற உடல்மொழியைத் தீராக்காமத்தின் வெளிப்பாடாக வாசிக்கலாம்.

அதே சமயம் நாடகத்தில் ராமன் என்கிற புனித உருவில் நெகிழ்வு காணப்படுகிறது. சூர்ப்பநகையின் விருப்பத்தை மறுக்கும் ராமனிடம் இறுக்கமான கறார் தன்மையில்லை. நாட்டைவிட்டு காட்டுக்கு இடம் பெயர்ந்திருக்கும் சூழலும், அரசனுக்குரிய அதிகாரங்கள் களையப்பட்டிருப்பதும் இத்தகு நெகிழ்விற்கான காரணமாக இருக்கலாம். இலக்குவனால் சூர்ப்பநகை அவமானப்படுத்தப்படுவதை அறியும் ராமனுடைய முகத்தில் குற்ற உணர்வின் சாயல் படர்வதையும் ஆழ்ந்த கவனிப்பில் உணரலாம்.

இப்படிப்பட்ட பன்மைப் பார்வையை வழங்குவதால் பின் நவீனத்துவ சாத்தியப்பாடுகளைப் பெருமளவில் கொண்டு இயங்குகிறது வஞ்சமகள் நாடகம்.

நன்றி: தீராநதி, நவம்பர் 2006.

Series Navigation