லினக்ஸும் இந்தியாவும்

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue

ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 7 வெங்கடரமணன்


venkat@tamillinux.org

உலக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் முன்னேறிய சமூகமாக ஒரு குழு அடையாளம் காணப்பட பல அளவுகோல்கள் உருவாகி வந்துள்ளன. உதாரணமாக, வெறும் கற்களால் வேட்டையாடி வந்த சமயத்தில் கல்லை இழைத்துக் கூறிய ஆயுதங்கள் உருவாக்கியது அளவுகோலாயிற்று, பின்னர் மண்ணைச் சுட்டுப் பாண்டங்கள் செய்வது நாகரீகத்தின் அடையாளம் ஆனது, இது தொடர்ந்து கடல் கடந்து எவ்வளவு தூரம் பயணித்தான் (கடாரம் கொண்டான்,…), எத்தனை நாடுகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்த முடிந்தது (பிரிட்டன், ஸ்பெயின், போர்த்துகல்…), என ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேறிய நாடுகளாகப் பிறருக்கு உணர்த்தப் பல்வேறு வழிகள். பின்னர் காலணியாதிக்கம் பயங்கரத்துக்கு இட்டுச் சென்று ‘உன் கையில் எவ்வளவு அணுஆயுதம், என் கையைப் பார் ‘ எனப் பனிப்போருக்கு இட்டுச் சென்றது.

இவை எல்லாம் கடந்து நாம் ஒரு இனிமையான சூழலுக்கு வந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய முன்னேறிய சமூகத்தின் அளவுகோல் முன்னேற்றம் அடைந்துவரும் பிற சமூகத்திற்கு உன்னால் எவ்வளவு உதவ முடிகின்றது என்பதே. இந்த வகையில் தளையறு மென்கலன்கள் நாகரீக வளர்ச்சியின் அளவுகோலாக அறியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதும் தென்படத் துவங்கியுள்ளன. தளையறு மென்கலன் கழக நிறுவுனரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்டால்மான் இவ்வாறு கூறுகின்றார்; ‘உதவிகள் எல்லாவற்றிலும் சாலச் சிறந்தது இன்னொருவருக்குச் சுய சார்பை உருவாக்கிக் கொள்ள வழிகாட்டுவது. அந்த வகையில் திறந்த ஆணைமூலம் கொண்ட கணினி நிரல்கள் ஒருவருக்கு அவர் தேவைக்கேற்ற செயலியை அவரே உருவாக்கிக் கொள்ள வழிசெய்வதால் அது எல்லாவற்றிலும் விடப் பெரிய உதவியாகக் கருதப்பட வேண்டும் ‘. இது எத்தனை உண்மை, நல்ல உணவை அளிப்பது ஒரு தாயின் கடமை -அது குழந்தைக்கு ஒரு வயது வரும் வரைதான்; அது கடந்தபின் நல்ல உணவை எப்படித் தானாகச் சமைத்துக் கொள்ளலாம் என்று கற்றுக் கொடுத்தல்தான் சத்துள்ள உணவை அளிப்பதை விடச் சிறந்த தாயன்பாகும். ஒருவரை சுயசார்புள்ளவராக மாற்றுதல்தான் அவருக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கமுடியும். என்னுடைய தாத்தா வீட்டில் பிச்சை கேட்டுவரும் (உடம்பு வலுவுள்ள) ஒருவனைப் பார்த்து, ‘எங்கள் வீட்டு வேலியை இழுத்துக் கட்டப்போகிறோன், அதில் நீ உதவினால் உனக்கு எங்களுடன் மதியச் சாப்பாடு தருகின்றேன் ‘, என்று வேலையளித்து அவன் உணவை அவனே சம்பாதித்துக் கொள்ள உதவியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அந்த வகையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு திறந்த ஆணைமூல நிரலிகள் ஒரு வரப்பிரசாதம். வேறு எங்கும் இல்லாததைவிட இந்தியா ஒரு விந்தையான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. உலகில் கணினித் துறையில் மனித வளத்தில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மனிதவள வளர்ச்சி ஜப்பான் போன்ற நாடுகளைக்கூட திரும்பிப் பார்க்கத் தூண்டியிருக்கின்றது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கணினிகளும் ஆங்கில இடைமுகத்தைக் கொண்டே அமைந்தவை. இந்தியாவில் 10% மக்கள் தொகைக்குத்தான் ஆங்கிலம் எழுத பேசத் தெரியும். எனவே, மீதமுள்ள 90% மக்கள் ‘தகவல் வறுமை ‘-யில் (information poverty) சிக்கித் தவிக்கிறார்கள். இது பொருளாதார ஏழை-பணக்காரன் பிரிவைப் போல சமூகத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இதிலிருந்து விடுபட நமக்கு ஏற்ற நல்ல வழி தளையறு மென்கலன்கள்தான்.

இந்த இடத்தில் ஒரு உதாரணம் தவிர்க்க இயலாதது ஆகின்றது. இன்றுவரை உள்நாட்டுக் கடிதங்களில் (Inland Letter) மடிக்க வேண்டிய இடங்களைக் காட்ட ஆங்கிலமும் இந்தியுமே பயன்படுத்தப்படுகின்றது. அதிக செயல் குழப்பமில்லாத இதைப் பலரும் பொருட்படுத்துவதில்லை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்வரை பணவிடைத் தாள்களில் (Money Order forms) ஆங்கிலமும் இந்தியுமே இருந்தன. நிறைய விபரங்கள் எழுதவேண்டிய பணவிடைத் தாளை உள்நாட்டுக் கடிதம்போல் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல போராட்டங்களுக்குப் பின்னும் செவிசாய்க்காத காங்கிரஸ் அரசு அதன்மூலம் தான் இழக்கவிருக்கும் தமிழர்களின் ஓட்டுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தமிழ் பணவிடைத் தாள்களை வெளியிட்டது. இன்றைக்கு கணினி செயல்பாடுகளும் இணைய வசதியும் பெருகிவரும் நேரத்தில் மைய அரசு இதே போன்ற நிலையில்தான் இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது. எல்லாம் வல்லனவாக கணினிகள் மாறிவரும் இந்த நேரத்தில் அதன் பல பயன்களை முழுதுமாக அடைய பயனர்களுக்கு அவர்களின் பழகுமொழியிலேயே இடைமுகம் முற்றிலும் தவிர்க்க இயலாததாக ஆகிவருகின்றது.

பொருளாதார ரீதியாக வர்த்தக மென்கலன்களின் விலை சராசரி இந்தியனின் கழுத்தை நெரிக்கும். உதாரணமாக, எந்தவகை சிறிய வணிக நிறுவனமாக இருந்தாலும் அதற்கு ஒரு மைக்ரோஸாப்ட் ஆபீஸ் போன்ற செயலி இன்றிமையாதது. அதன் விலை மிகச்சிறிய மற்றும் தனிநபர் பயன்பாடுகளுக்கு மிகவும் அதிகம். மேலும் நாம் கடந்த வாரங்களில் பார்த்த காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இந்தியா போன்ற சமூகங்களுக்கு ஏற்றவையல்ல. இந்தியர்களுக்கு எதையும் தனக்கென்று தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ளத் தெரியாது, அவர்கள் எளிதில் தங்கள் பொருள்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இத்தகைய கலாச்சாரம் தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகளும் பொருளாதார உச்சங்களும் தளையறு மென்கலன்களில் கிடையாது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இவற்றின் பலன்கள்களும் அதிகரிக்கத் தொடங்கும். மெக்ஸிகோ அரசு அதன் பள்ளிகளில் கணினிகளை அமைக்க ரெட்ஹாட் நிறுவனத்துடன் கொண்ட ஒப்பந்தத்தால் கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலர்கள்வரை சேமித்துள்ளது. சீன அரசாங்கம் லினக்ஸ் இயக்குதளத்தை அரசு ரீதியாக ஆதரித்துள்ளது.

லினக்ஸ் இயக்குதளத்தை ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒரு சிறிய கணினியிலும் இயக்கவியலும். எனக்குத் தெரிந்து, இந்திய அறிவியல் கழகத்தில் 1994ல் நிறுவப்பட்ட ஒரு 486 கணினி இன்றுவரை அவர்கள் மின்னஞ்சல் மற்றும் வலைத் தொடர்பு சேவைகளுக்குப் பயன்பட்டு வருகின்றது. இது இந்தியப் பொருளாதாரச் சூழலுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு அதிசக்தி கணினியையும் பல 486 பழைய கணினிகளையும் கொண்டு ஒரு பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ தேவையான வலுவுள்ள கணினி ஆய்வகத்தை எளிதில் செலவின்றி அமைக்கமுடியும். அதில் நிறுவப்படும் திறந்த ஆணைமூலச் செயலிகள் மாணவர்கள் அதன் செயல்பாட்டை முற்றிலும் உணர்ந்து கொள்ளவும் உதவும்.

ஆந்திர முதல்வர் திரு சந்திரபாபு நாயுடுபோன்றவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களின் தொழில் செயல்பாடுகளை ஹைதராபாத் நகருக்குக் கொண்டு வந்துள்ளனர். அதையடுத்துப் பல சிறிய மென்கலன் சேவை நிறுவனங்களூம் அங்கு உருவாகி வருகின்றன. இது ஒரு குறுகிய காலத்தில் ஆந்திராவிற்குப் பலனளித்தாலும் நாளடைவில் மைக்ரோசாப்டின் மீது அவர்களின் பொருளாதாரமும் அரசியலும் சார்ந்திருக்க வேண்டிய ஒரு மோசமான நிலைக்குத் தள்ளக்கூடும் (மைக்ரோசாப்ட் நிறுவனம் வீழ்ந்தால் அவர்களுக்குச் சேவையளிக்கத் தொடங்கப்பட்ட சிறுநிறுவனங்களும் விழும், மாறாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உயர்ந்தால் அவர்களின் கட்டளைக்கெல்லாம் சிறுநிறுவனங்கள் தலையாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்). எந்த தனிநிறுவனத்தாலும் பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலைகள் ஏற்றவையல்ல. தமிழக அரசு கிராமங்கள் எங்கும் சேவையளிக்க வேர்ல்ட்டெல் நிறுவனத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தின் அடிப்படையில் உருவாகவிருக்கும் சேவைமையங்களுக்குத் தளையறு மென்கலன்கள் பயன்படப் போகின்றன. நாளை அந்நிறுவனத்தால் தொழில்நுட்ப அளவில் இயலாமல் போனாலும், அதன் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டாலும் தமிழக அரசு தானாக தளையறு மென்கலன்களை மாற்றியமைத்து வளர்ச்சியைத் தொடரவியலும்.

இன்னும் ஒரு முக்கியக் காரணி மென்கலன்களின் அமைப்பு முறை. உதாரணமாக, விரிதாள் (spread sheet) நிரலிகளின் அமைப்புகள் அமெரிக்கர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனால் நம்மூரில் உள்ள ஒரு மளிகைக் கடைக்காரருக்கு அதன் அமைப்பும் பயன்பாடும் முற்றிலும் புதிதானது. இதை அவருக்குப் பரிச்சயமான ‘கணக்குப் பேரேடு ‘ வகையில் மாற்றினால் (முன்பக்கப்படி, வரவு வைத்தல் என அவருக்குத் தெரிந்த மொழியிலும் வடிவமைப்பிலும்) அவரை கணக்கு நேட்டிலிருந்து கணினிக்கு மாற்றுவது மிகவும் எளிதாகும். இதன்மூலம் வர்த்தகப் பெருக்கம் உறுதியாகும். பொதுவில் மேற்கத்திய கலாச்சாரத்திற்காக உருவான இன்றைய கணினிச் செயலிகளை இந்தியர்களுக்காக மாற்றுவது கணினிமயமாக்கலுக்கு இன்றியமையாதது. எவ்வளவுதான் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் முயன்றாலும் அவர்கள் தங்களுடைய பொதுச் செயலிகளுக்கு (மைக்ரோஸாப்ட் எக்ஸெல், அடோப் இல்லஸ்ரேட்டர்) நம் மொழி இடைமுகம்தான் தர முயல்வார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கேற்ற வகையில் அவர்கள் செயலிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தல் அவர்களுக்கு முடியாத ஒன்று. திறந்த ஆணைமூலங்கள் நம்முடைய தேவைக்கு நாமே செயலிகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவுகின்றன. யாருடைய சார்புமின்றி நம்முடைய தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேற நமக்கு நாமே துணைக் கருவிகளை அமைத்துக் கொள்ள இவை மாத்திரமே உதவக்கூடும். (இத்தகைய சுயசார்புக்கு இந்தியா போன்ற நாடுகள் முன்னேறக்கூடும் என்பதை உணர்வதால்தான் அமெரிக்க அரசாங்கம் திறந்த ஆணைமூலங்களைப் பெரிது படுத்தாதுபோல் காட்டிக்கொள்வதாக ஒரு சாரார் வாதிடுவதிலும் உண்மை இருக்கிறது. எப்படி அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு உலகெங்கிலும் சிறுபோர்கள் அவசியமோ அதேபோல் கணினி நிறுவனங்களுக்கு ஆணைமூலம் மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் உதவுகின்றன).

இது நம்மை அடுத்த காரணிக்கு இட்டுச் செல்லுகின்றது – அது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சார்ந்தது. மூடிய ஆணைமூலங்களுடன் வெளிவரும் கரும்பெட்டிச் செயலிகள் நம்முடைய இறையாண்மைக்கு எப்பொழுதும் ஒரு மிரட்டல்தான். வெளியில் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் காரியங்களைத் தவிர பிற இரகசிய வேலைகளையும் செய்ய சில செயலிகளால் முடியும். வலைப்பின்னலாக பிணைக்கப்பட்ட கணினிகளில் நிறுவப்படும் இத்தகையச் செயலிகள் உங்கள் நடவடிக்கைகளை வேவுபார்த்து பிறருக்குச் சொல்ல வைக்கமுடியும். உதாரணமாக நீங்கள் வாங்கும் ஒரு சி++ தொகுப்பி உங்கள் ஆணை மூலங்களை நகலெடுத்து அந்தத் தொகுப்பியை விற்கும் நிறுவனத்திற்கு உங்களுக்குத் தெரியாமல் அனுப்பவியலும்!! இந்திய அரசாங்கம் உள்நாட்டு நிர்வாகத்திற்காக வாங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனச் செயலி நம்முடைய அரசின் நடவடிக்கைகளை வேவுபார்த்துப் பிறருக்குச் சொல்லக்கூடும். இத்தகையக் கவலைகள் திறந்த ஆணைமூல நிரலிகளில் இல்லை.

இதுபோன்று பலகாரணிகளால் லினக்ஸும் திறந்த ஆணைமூலச் செயலிகளும் இந்தியாவிற்கு மிகவும் ஏற்றனவாகின்றன. இது நம்மை முதல் பத்திக்கு மீண்டும் இட்டுச் செல்கின்றது. நான் குறிப்பிட்டதுபோல் எவ்வளவு தளையறு மென்கலன்களை மனித சமுதாயத்திற்குப் பங்களித்துள்ளது என்பது இந்த நூற்றாண்டின் நாகரீக அளவுகோலாக மாறிவருகின்றது. உதாரணமாக, அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள கணினி நிரலர்கள் தளையறு மென்கலன்களில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். உலகின் வடக்கு மூலையிலிருந்து வந்த லினக்ஸ் இன்றைக்கு உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டு வருகின்றது. அதன் பலனைத் துய்க்கும் ஒவ்வொருவருக்கும் அதன் துவக்குனரான லினஸ் டோர்வால்ட் நாகரீகத்தின் வெளிப்பாடாகத் தோன்றுகின்றார். அந்த வகையில் இந்தியர்களின் பங்களிப்பு தளையறு மென்கலன்களில் மிகவும் குறைவு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு செயலியையும் ஒரு இந்தியர் வடித்து இலவசமாக மனித சமூகத்திற்கு வழங்கவில்லை. அயல்நாடுகளில் வசிக்கும் சில இந்தியர்கள் ஒருசில நல்ல உதவிப்பாடங்களை வடித்துள்ளனர். தளையறு மென்கலன்களைப் பற்றிய அறிமுகம் சராசரி இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது தற்பொழுதுதான் பயனுக்கு வரத்தொடங்கியுள்ளது. சிறந்த, திறந்த ஆணைமூல நிரலிகளை வடிக்காவிட்டால் நாம் வரலாற்றில் தகவல் தொழில்நுட்பத்திற்கான நம்மிடத்தை இழக்கவியலும்.

இந்த திறந்த ஆணைமூலங்களும், பலன்கருதாமல் தங்கள் உழைப்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் இந்தியர்களுக்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் அப்படியொன்றும் புதிதான கருத்துகள் இல்லை. தொடர்ந்து பார்ப்போம்.

தோக்கியோ,

24.10.2000

Series Navigation