லாடம் அடித்த கனவுகள்

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

சேவியர்.


பிரிய நிலவே,
எத்தனை நாளாகிறது
உன்னைப் பார்த்து.
ஓர்
பதினான்காம் பிறைபோல
நினைவிடுக்கில்
நகர்கின்றன நாட்கள்.

காதலின் கணங்களும்
காத்திருப்பின் கனங்களும்
கால்களை
பாறையோடு பதியனிட்டதாய்
இறுகிக் கிடக்கின்றன.

தேடலின் விழிகள் கூட
உறைந்து விட்டன.
ஆனாலும்
விடாமல் என் உள்ளத்தை மட்டும்
உழுது கொண்டே இருக்கிறேன்.

உன்
ஒவ்வோர் புன்னகைக்கும்
உயிரின் ஒருபாதையை
உயிலெழுதிய பழக்கத்தால்
இன்று
மிச்சமிருப்பதெல்லாம்
பட்டா இல்லாத பகுதிகளே.

என்
பொருளாதாரப் பல்பறித்து
காதலுக்கு
காலணி நெய்ததில்
என் முதுகெலும்பு முறித்தே
கைத்தடி செய்ய வேண்டிய
கட்டாயம் எனக்கு.

ஆனாலும்,
உன் வயல்க்காட்டுத் தூறல்
வற்றி விடவில்லை என்றே,
என் நாற்றுக்கள்
நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.

ஒத்திகைக் காலக்
குத்தகை முடிந்ததால்,
அரங்கேற்ற மேடை
தூண்களில்
தவறாமல் தவமிருக்கிறேன்.

நீ
வந்தபின் விரிப்பதற்காய்
தோகைகளைக் கூட
துடைத்து வைத்திருக்கிறேன்.

நீ,
வரும் வடிவத்தை மறவாமல்
கடிதத்தில் அனுப்பு.

நீ
பல்லக்கில் வருவாயானால்
நான்
கடிவாளத்தோடு
காத்திருக்கக் கூடாதில்லையா ?

Series Navigation