ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

மலர்மன்னன்


இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள் என்கிற தன்னுடைய நூல் மதிப்புரையில் (திண்ணை, ஏப்ரல் 10, 2011) – உரிமையுடன் ஒருமையில் குறிப்பிடலாம் அல்லவா மாதவி?

ஸி.வி. புவனேஸ்வரி என்பவரின் ஒரு பாட்டி சொன்ன கதைகள் என்கிற சிறுகதைத் தொகுப்பை புதிய மாதவி சுவாரஸ்யமாகவே விமர்சித்திருக்கிறாள், தன் கட்டுரையில். அதிலும் ராமாயண சூர்ப்பனகையை முக்கியக் கதாபாத்திரமாக்கி ராமபிரானில் தொடங்கி, லட்சுமணன், சீதை என சகலர் மீதும் குற்றம் சுமத்தி எழுதப்பட்டுள்ள சிறுகதையை சிலாகித்துப் பேசுகிறபோது புதிய மாதவியின் எழுத்தில் தனி உற்சாகமே கொப்பளித்து வருகிறது!

புவனேஸ்வரி தனது சூர்ப்பனகைக் கதையில் என்ன சொல்ல வருகிறார், சொல்லியிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவரது எழுத்து எதையுமே படித்ததில்லை. ஆகையால் புதிய மாதவியின் பதிவை ஆதாரமாகக் கொண்டே இதுபற்றிப் பேச வேண்டியிருக்கிறது. மேலும், பெண்ணீய தளத்தில் பாட்டியின் கதைகள் என்று புதிய மாதவி மிகத் தெளிவாகவே கட்டுரைக்குத் தலைப்பிட்டிருப்பதால் அதன் அடிப்படையில் பேச எனக்குத் தயக்கமில்லை.

அதென்னவோ தெரியவில்லை, நமது பெரும்பாலான பெண்ணியவாதிகளுக்கும், முற்போக்கு என்று தங்களை வர்ணித்துக் கொள்கிறவர்களுக்கும் ஹிந்துக்களின் சமயச் சடங்குகள், தெய்வங்கள், புராண இதிகாசங்கள் ஆகிய வற்றையெல்லாம் இழிவு செய்வதென்றால் அலாதி இன்பமாயிருக்கிறது. ஹிந்துக்கள் சுபாவமாகவே பெருந் தன்மையுடன் எதையும் சகித்துக்கொள்வார்கள் என்கிற தைரியம்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

ஒரு படைப்பாளிக்குக் கற்பனா சுதந்திரம் உண்டுதான். மறுக்கவில்லை. அதே கற்பனா சுதந்திரம் ராமாயணத்தை இயற்றிய வால்மீகிக்கும் உண்டு எனபதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ராமனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயற்றியது காவியம்தான். இதிஹாசம் என்றால் இவ்வாறாக நிகழ்ந்தது என்று பொருள் தரும்படியான ‘வரலாறு’ என்பது வாஸ்தவம்தான். ஆனால் காவியமாக அது எழுதப் படுகிறபோது அதை முற்றிலும் வரலாற்று ஆவணமாகக் கொள்ளாமல் வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதினம் என்று கொள்வதுதான் சரியாக இருக்கும். கற்பனையின் கலப்பிற்கு அதில் நிறையவே இடமிருக்கும். ஆக ராமன் உண்மை, ராமாயணம் அவனைக் கதா நாயகனாகக் கொண்ட கற்பனைகள் செறிந்த உன்னத வரலாற்றுக் காவியம். அது இல்லையேல் ராமனை அறிந்திட நமக்கு வாய்ப்புக் கிட்டியிராது எனக் கூறவியலாது.

மேலும், ராமாயணம் என்று வருகிறபோது அது தொடர்பாகப் பேசுவதானால் மூல நூலான வால்மீகியை எடுத்துக் கொள்வது தான் முறை.

‘நீ பகவானுடைய அவதாரம்’ என்று தேவாதி தேவர்கள் எல்லாம் எடுத்துச் சொல்லி நினைவூட்டிய பிறகும் கூட, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் தசரத குமாரன் ரவி குல ராமன்’ என்று ராமனே வாக்கு மூலம் அளித்திருப்பதை வால்மீகி பதிவு செய்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொண்டு பிரச்சினைக்குச் செல்வோம். நிறை-குறைகள் உள்ளவன்தானே மனிதனாகப் பட்டவன்! ஆனால் இதைச் சொல்லி சூர்ப்பனகை விஷயத்தில் சமாதானம் சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல.

ஸ்ரீ ராமபிரான் நமது நாடி நரம்புகளில் எல்லாம் பிரவகித்து ஓடி மெய் சிலிர்க்க வைக்கிற தெய்வம் என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லையெனினும் இங்கே அவனை, வால்மீகியின் காவிய நாயகனாகத்தான் கவனிக்க வேண்டியிருக்கிறது.

காவியம் என்றால் அதில் நவ ரசங்களும் இருக்க வேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. அலங்கார சாஸ்திரம் என்றெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஒரே கதியில் போய்க் கொண்டிருக்கிற தனது காவியத்தில் சலிப்புத் தட்டிவிடாமலிருக்க இடையே சிறிது ஆசுவாசமளிப்பதற்காகவே சூர்ப்பனகை வருகிற இடங்களில் நகைச் சுவையைச் சிறிது தூக்கலாக வால்மீகி பயன்படுத்தியிருக்கிறார் என்று கொள்ள வேண்டும். அதற்காக பாவம் ஒரு பெண்ணை (உண்மையில் அவள் அரக்கியாக இருப்பினும்!), அவளது விரக தாபத்தை ஏளனம் செய்து மூக்கையும் காதுகளையும் அறுப்பது நகைச் சுவையா என்று பெண்ணியவாதிகள் கோபத்துடன் கேட்டால், என்ன செய்வது, அது படைப்பாளியான வால்மீகிக்கு உள்ள கற்பனா சுதந்திரம் என்று கொள்ள வேண்டியதுதான். அவர் இயற்றியது செய்யுள் வடிவிலான வரலாற்றுப் புதினமேயன்றி வரலாற்று ஆவணமல்லவே!

வால்மீகியின் படைப்பிலக்கியம் ராமனை மிகவும் பிடிவாதமாக ஒரு மனிதனாகவே பெரும்பாலும் சித்திரிக்கிறது. ஆனால் நாம் அந்தப் படைப்பிலக்கியத்திலேயே தேவாதி தேவர்கள் ராமனைப் பற்றி ராமனிடமே அவன் பகவானின் அவதாரம் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஸ்ரீ ராமபிரானை நம் தெய்வமாக உளமார வரித்துக்கொண்டுள்ளோம். ராமன் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன? நாம் ஏற்கிறோம், அவன் மலரடி தொழுகிறோம். அதே சமயம் வால்மீகி என்கிற படைப்பாளிக்கு உள்ள கற்பனா சுதந்திரத்தையும் அங்கீகரிக்கிறோம். அவரது ராம கதையை ஆவணமாக அல்ல, காவியமாகச் சுவைக்கிறோம். நான் வணங்குகிற ராமன், எனது ராமன், ராமாயண ராமன் அல்ல என்று காந்தியும் சொன்னது இப்போது புரிந்திருக்கும்.

வால்மீகிக்கு உள்ள படைப்பு சுதந்திரம் என்றே இதை வைத்துக் கொண்டாலும் மனிதாபிமானமின்றி ஒரு பெண்ணின் மூக்கையும் செவிகளையும் அறுப்பது என்ன குரூர நகைச் சுவை, அதை ரசிப்பது எத்தனை குரூர ரசனை என்றும் தோன்றலாம். அதையும் பார்த்துவிடலாம்.

முதலில், இரண்டு பெண்கள் இல்லாவிடில் ராமாயணமே இல்லை. ராமாயணத்தில் இவ்விரு பெண்டிரும் மிக மிகக் குறைவான இடத்தையே பெற்றிருக்கிறார்கள். எனினும் ராமாயணத்திற்கு இவர்களே அதி முக்கியமாக இருக்கிறார்கள்.

ஒருவர் கைகேயி, இன்னொருவர் சூர்ப்பனகை. கைகேயி இல்லாவிடில் ராமன் தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணன் சகிதம் வனவாசத்திற்குப் போயிருக்கவே முடியாது. அதேபோல் சூர்ப்பனகை இல்லாவிட்டால் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றதும், அதைத் தொடர்ந்து ராவண வதமும் எல்லாம் நிகழ்ந்திருக்கவே முடியாது! ஆகவே ராமாயணத்தில் சூர்ப்பனகை வரும் இடம் மிகவும் குறைவாகவே இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு முக்கியத்துவம் மிக அதிகம்! கைகேயினதைவிட ஒரு பங்கு மேல் என்றுகூடச் சொல்லலாம்!

வால்மீகி ராமாயண காவியத்தின்படி, மூன்றாவது பாகமான ஆரணிய காண்டத்தின் பதினேழாவது அத்தியாயம் (ஸர்கம்), ஐந்தாவது ஸ்லோகத்தில்தான் முதல் முதலாக சூர்ப்பனகை என்பவள் நமக்கு அறிமுகம் செய்விக்கப்படுகிறாள்.

சூர்ப்பனகா என்றால் கூரிய நகங்களை உடையவள் என்று அர்த்தம். அது அழகைக் குறிப்பதாகவும் இருக்கலாம், அருவருப்பைத் தருவதாகவும் இருக்கக்கூடும். எல்லாம் அவரவர் பார்வையைப் பொருத்து.

சூர்ப்பனகை ராவணனின் விதவைத் தங்கை. அவளுடைய கணவன் வித்யுத் ஜிஹ்வா தன் கை மீறிப் போனதால் ராவணன் தங்கையின் கனவன் என்றும் பாராமல் அவனைக் கொன்று தங்கையை விதவையாக்கிவிட்டான்.

சூர்ப்பனகையை இரட்டைத் தோற்றமும் இரட்டை குண விசேஷமும் உள்ள அரக்கி என்று அறிமுகம் செய்து வைக்கிறார், வால்மீகி. அதாவது ஒரு சமயம் அதிரூப சுந்தரியாகவும் மறு சமயம் அதி கோர வடிவினளாகவும் இருப்பதோடு ஒரு சமயம் குணவதியாகவும் மறு சமயம் இழிவான சுபாவம் உள்ளவளாக வும் இருக்கிறாள், அவள். டாக்டர் ஜெகிலும் ஹைடும் போல என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்!

கோதாவரி ஆற்றுப் படுகையில் தண்டகாரண்யப் பிரதேசத்தில் அவ்வப்போது சுவாதீனமாக அலையும் சூர்ப்பனகையானவள் மனைவி சீதையுடனும் தம்பி லட்சுமணனுடனும் சல்லாபித்துக் கொண்டிருக்கிற ராமனைக் கண்ட மாத்திரத்தில் காமம் மேலிட, விரக தாபம் தகித்தெழ அவனிடம் சிறிதும் லஜ்ஜையின்றி ஆசையுடன் சென்று அவனைப் பற்றி விசாரிக்கிறாள்.

ராமன் மிகவும் கண்ணியமாகவே தன்னைப் பற்றியும் தன் மனைவி, தம்பி ஆகியோரைப் பற்றியும் அவளிடம் எடுத்துக் கூறுகிறான். அவளிடம் ராமன் சிறிதளவும் ஏளனமாகவோ இழிவாகவோ பேசவேயில்லை! சூர்ப்பனகை காம வேட்கை யினால் வரம்பு மீறிப் பேசத் தொடங்கவும்தான் விவகாரம் வருகிறது. சீதையைக் கேவலமாகப் பார்த்து, போயும் போயும் அவலட்சணமான இந்த அற்பப் பெண்ணை சுந்தர புருஷனான நீ எதற்காக மனைவியாகக் கொண்டிருக்க வேண்டும் என்று ராமனிடம் அவள் கேட்கிறாள். நான் திருமணமானவன் என்று ராமன் சொன்ன பிறகும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவனிடம் சரசமாட சூர்ப்பனகை தயங்குவதில்லை. இவள் ஆண் துணை கிட்டாத அவஸ்தையில்தான் விவஸ்தையில்லாமல் பிதற்றுகிறாள் என்று கண்ட பிறகே ராமன் தன் தம்பி மனைவி இல்லாமல் இருப்பதாகக் கூறி அவளை லட்சுமணனிடம் போய்க் கேட்குமாறு கூறுகிறான். ராமன் கருதியது போலவே சூர்ப்பனகைக்கு அப்போதைக்கு ஆண்மை மிக்கதோர் ஆண் துணை தேவையாக இருக்கிறது என்பதுதான் நிலைமை! ராமனிடம் அவளுக்கொன்றும் உண்மையான ஈடுபாடு இல்லை; அதனால்தான் உடனே லட்சுமணனிடம் சென்று தன்னை மனைவியாக ஏற்குமாறு வற்புறுத்துகிறாள்! காமம் ஒரு போதையாகத் தலைக்கேறிய நிலையில்தான் சூர்ப்பனகை நம்மெதிரில் காணப்படுகிறாள். சில நிமிடங்களுக்கு முன்புதானே லட்சுமணனின் அண்ணனிடம் தன்னை ஏற்குமாறு வேண்டினோம் என்கிற விவஸ்தைகூட அவளுக்கு இல்லை!

லட்சுமணன் தன்னைப் பற்றி ராமனிடம் குற்றேவல் செய்யும் வெறும் வேலையாள்தான் என்று தெரிவித்து, தன்னுடைய மனைவியாவதால் அவளும் வேலைக்காரியாகத்தான் இருக்க நேரிடும் என்றும் கூறி ராமனிடமே முயற்சி செய்யுமாறு சூர்ப்பனகையிடம் சொல்கிறான். ஆக, லட்சுமணன்தான் அவளிடம் விளையாட்டாகப் பேசுகிறான்!

லட்சுமணனை நாம் தெய்வமாகத் தொழுவதில்லை!

ராமனிடம் திரும்பி வரும் சூர்ப்பனகை, தனது வேட்கை தீர்வதற்கு சீதைதான் தடங்கலாக இருக்கிறாள் என்று தீர்மானித்து, சீதையைத் தின்று தீர்த்துவிடப் போவதாகக் கூறி, சீதையைத் தின்றுவிட்டு, ராமன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவனது மனைவியாகத் தான் ஆகா விட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக அடையப் போவதாகச் சூளுரைத்து அதற்கு ஆயத்தமாகிறாள். நிலைமை கை மீறிப் போவதால் அவளை உரிய முறையில் தண்டித்து அனுப்புமாறு லட்சுமணனிடம் சொல்ல வேண்டியதாகிறது, ராமனுக்கு. வாய் வார்த்தையாகச் சொன்னால் கேட்கும் நிலையில் சூர்ப்பனகை இல்லை. நல்லபடியாகத் தடுத்தாலும் அவள் தனது அரக்கி யருக்குள்ள மிருக பலத்துடன் சீதையைத் தாக்கிவிட்டு ராமனையும் பலவந்தமாகப் புணர முற்பட்டிருப்பாள். எனவே உரிய தண்டனை அளிப்பதன் மூலமாகவே சூர்ப்பனகையை அங்கிருந்து அப்புறப்படுத்த இயலும். லட்சுமணன் அதைத்தான் செய்தான்.

லட்சுமணன் சூர்ப்பனகையின் மார்பகங்களையும் அறுத்ததாகச் சிலர் சொல்வதுண்டு. அதெல்லாம் ஈ.வே.ரா.வின் ராமாயணம். வால்மீகியில் அதற்கு ஆதாரம் இல்லை. பெண் என்றால் ஒரு சில உறுப்புகள் மாத்திரமே என்கிற மனோபாவத்தில் இருக்கிறவர் களைப்பற்றி நமக்குப் பேச்சில்லை!

உன் கண் எதிரிலேயே சீதையைக் கொன்று உனக்கு நான் மனைவியானாலும் ஆகாவிட்டாலும் உன்னுடன் பலவந்தமாக சுகித்திருப்பேன் என்று காமம் தலைக்கேற சவால் விடுகிறாள் சூர்ப்பனகை என்கிறது வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டமாகிய மூன்றாவது காண்டம் 18 ஆவது அத்தியாயம் 16 ஆவது ஸர்கம்:
அத்ய இமாம் பக்ஷயிஸ்யாமி பஷ்யதஹ தவ மானுஷீம்
த்வயா சஹ கரிஷ்யாமி நிஹ்ஸபத்னா யதா ஸுகம்
adya imaam bhakSayiSyaami pashyataH tava maanuSiim |
tvayaa saha cariSyaami niHsapatnaa yathaa sukham || 3-18-16
16. tava pashyataH= you, while seeing; adya imaam maanuSiim= now, her, the human female; bhakSayiSyaami= I wish eat up; niH sa patnaa= without [botheration of,] co, wife; tvayaa saha cariSyaami= with you, along, I ramble [make merry]; yathaa sukham= as per, cheerfulness – blithely.
“Now I wish to eat up this human female right before your very eyes, and then I can blithely make merry along with you, without the botheration of a co-wife,” Said Shuurpanakha to Rama. [3-18-16]

இப்படிப்பட்ட ஒரு பெண்ணை எப்படித்தான் சமாளிப்பது என்று பெண்ணியவாதிகள்தான் ஓர் உபாயம் சொல்ல வேண்டும்.

ஆணும் பெண்ணூம் சரி சமம் என்பதால் பெண்ணை வன் புணர முற்படும் ஆணுக்குரிய தண்டனையையே ஆணை வன் புணர முனையும் பெண்ணுக்கும் அளிக்க வேண்டும் எனபதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பெண்ணை ஒப்படைக்ககப் பறக்கும் காவல் படை என்று ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தண்டகாரண்யத்தில் அது இருக்க சாத்தியமில்லை. ஆகவே க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த ராம லட்சுமணர்கள்தாம் கொலை முயற்சி, வன் புணர்வு முயற்சி என்கிற கொடிய குற்றங்களுக்காக சூர்ப்பனகையை தண்டிக்க வேண்டிய பணியை மேற்கொள்ள நேரிட்டது எனலாம்.

எந்தவொரு படைப்பாளியும் தனது படைப்பு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வது சரியாகாது. சூர்ப்பனகையை ஒரு அபலையாகவும் ராமனையும் லட்சுமணனையும் ஆணாதிக்க அகம்பாவிகள் என்றும் ஒரேயடியாகத் தலைகீழ் குண சித்திரத் தடுமாற்றம் செய்வது படைப்பு சுதந்திரம் ஆகாது. மூலப் படைப்பில் உள்ள குண சித்திரங்களையும் சம்பவங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு சுயமான கற்பனையில் இறங்குவதுதான் முறையான படைப்பு சுதந்திரம். புதுமைப் பித்தன் இதைத்தான் செய்தார், தமது அகலிகையில்.

நானும் இந்த அடிப்படையில்தான் மரபை மீறலாம், மரபைப் புரிந்துகொண்டு, ஆனால் மரபைச் சிதைத்தலாகாது மரபு இன்னதென்று தெரியாமலே என்கிறேன்.

+++++

Series Navigation