ரயில் பயணங்களில்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

ஞானதேவன்


இந்தியாவின் மற்ற பெரிய ஸ்டேசன்களை போலவே சென்னை சென்ட்ரல் அன்றும் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையும் அங்கே வந்து குவிந்தது போல் அத்தனை தலைகள். அவற்றுக்கு நடு வே புகுந்து, பிழியப்பட்டு , நைந்து, வேர்வை வெளியேற, சேலம் செல்லும் விரைவு புகையில்லா வண்டியை கண்டு பிடித்தேன். நீண்ட வால் போல் அத்தனை பெட்டிகளை இணைத்துக்கொண்டு , ஒரு சத்தமும் இடாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

உடம்பின் வேர்வையில் காற்று பட்டு அதை குளிர செய்தது. உடலும் அதனால் அங்கங்கே குளிர்ந்தது. சன்னலோர இடம் தேடி கடைசி வரை ஒரு கால்நடை பயணம். வீணாகவில்லை. அற்புதமாய் ஒரு இடம் கிடைத்தது. ‘கண்டேன் சீதையை ‘ என்ற அனுமன் போல் ‘கண்டேன் சீட்டினை ‘ என்று மனதிற்குள் கூவிக்கொண்டு அங்கே சென்று அமர்ந்தேன். உடல் ‘கச கச ‘ என்றிருந்தது. சட்டையை லேசாய் தூக்கி விட்டு சன்னலை நெருக்கிக் கொண்டு அமர்ந்தேன்.

ஏசி ‘யா அது ? ? சாதாரண சன்னல் தானே! என் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு காற்று வரவில்லை. காற்றில் ஈரம் தென்பட்டால் எவனது துப்பியது என்று எட்டிப்பார்க்கத் தோன்றியது. கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்தேன். ‘ஷ் ஷ் ஷ் ஷ் அப்பாடா ‘ என்றவாறு என்னைப்போல் ஒரு ஜீவன் பழைய ரயில் எஞ்சின் சத்தம் போல் மூச்சு விட்டு க்கொண்டே வந்தது.. இல்லை வந்தார். சினேகமாய் புன்னகைத்தார். நானும் சிரித்தேன்.

‘ சென்னையில் இருந்து கோயமுத்தூர் நோக்கிச் செல்லும்…. ‘.என்ற தேனறிவிப்பு என் காதில் தேனாய் தான் பாய்ந்தது… குணா கமல் போல ‘வரும் வரும் வரும் வரும்.. காத்து வரும் ‘ என்று மனம் முனகியது. அறிவிப்பு முடிந்த போது உடம்பை லேசாய் உதறிக்கொண்டு அந்த பெரிய இரும்பு பாம்பு சென்னையில் இருந்து புறப்பட்டது.

‘என்ன சார் சேலமா ‘ என்று ஆரம்பித்தார் எதிரே இருந்தவர்… இப்போது அவர் தனது ரயில் எஞ்சினை அணைத்து விட்டார் போலும், சாதரணமாக பேசினார். கடந்த 30 நிமிடமாக அவரது ‘ஷ் ஷ் ஷ் ‘ சத்தம் கேட்டு எனக்கு எந்த ரயிலில் போகிறோம் என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு சாதாரண மனிதன் இப்படி ‘ஷ்ஷ்…. ‘ பண்ண முடியுமா என்று குழப்பம் ஆகி, நானே 2 முறை வாசல் வரை சென்று ‘ஷ்…. ‘ செஞ்சி பார்த்தேன்… ம்ம்ம்.. அது என் காதுக்கே எட்டவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே மூச்சாக விட்டு இப்போது தான் சாதா மூச்சுக்கு வந்து என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டார்.

‘ஆமா ‘ என்றேன் ஒரே வார்த்தையில்.. ஏனோ அந்த ஆளை எனக்கு பிடிக்கவில்லை.

‘ஏதாச்சும் புக்ஸ் வச்சி இருக்கீங்களா சார் ‘ என்றார் அணைந்து போன ரயில் எஞ்சின்.

இல்லை என்பது போல் தலையாட்டினேன்

‘பரவாயில்லை என்கிட்ட குமுதம், கல்கி, ஜூனியர் விகடன் இருக்கு, நீங்க ஏதாச்சும் ஒண்ணு படிங்க நான் ஒண்ணு படிக்கிறேன் ‘ என்று கல்கியை நீட்டினார்.

திடு க்கென்று காலையில் படித்த தினத்தந்தி ஞாபகம் வந்து தொலைத்தது. ரயிலில் திருடு ம் பெரும்பாலோர், சக பயணிகளிடம் மிகுந்த பாசம் உள்ளவராக நடிப்பர்… புதியவர்களின் நட்பை உடனே நம்ப வேண்டாம்…

‘என்ன சார் யோசனை ? கல்கி வேண்டாமா ? ‘ ‘ எஞ்சினின் குரல்

‘ம்ம் ம்ம்க் வேண்டாம்… ‘ என்று மறுத்தேன்..

‘அப்போ ஜூனியர் விகடன் படிங்க.. இந்தாங்க ‘ என்றார்..

நீங்கள் கேட்ிகாமலே உங்களுக்கு தேவையானதை தருவதை போல் தருவார். அவரது பேச்சில் உதவியில் மயங்கி விட வேண்டாம்.

‘என்ன சார், எல்லாத்தையும் படிச்சிட்டாங்களா என்ன ? ? சூப்பர் பாஸ்ட் சார் நீங்க. நேத்து தான் வந்திச்சி, இன்னைக்கி நீங்க படிச்சி முடிச்சி இருக்கீங்க.. சரி விடு ங்க புத்தகம் வேண்டாம், நாம கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம் சார் ‘

உங்களுக்கு மிக நெருக்கமானவராக காட்டிக்கொள்ள முனைவார். நீங்கள் சாதாரணமாக பேசும் பேச்சில் இருந்து உங்களை அறியாமல் சில முக்கியமான விவரங்களை எடு த்து தனக்கும் அது தெரியும் என்பது போல் காட்டிக்கொள்வார். எனவே இவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நன்று.

தினத்தந்தி அடிக்கடி குறுக்கே வந்து ஆலோசனை சொல்லியது. ‘இல்லீங்க எனக்கு தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்குறேன்.. அப்புறம் பேசலாம் ‘ என்றேன்.

என்னையே உற்றுப்பார்த்த அந்த ரயில் எஞ்சின்.. ‘சரி தூங்குங்க.. பார்த்தா ரொம்ப களைப்பா தெரியிறீங்க.. கவலை படாதீங்க. தூங்குங்க.. உங்க பொட்டி எது எதுன்னு சொல்லுங்க, நான் வேணா பார்த்துக்குறேன் ‘ என்றார்..

திடாரென்று அடி வயிற்றில் அமிலம் சுரந்தது… ஆ ?ா ஒரு பக்காத் திருடன் நம் முன்னாடி உட்காந்து இருக்கானே.. எப்படி பிடிப்பது என்று மனம் பர பரக்க ஆரம்பித்தது.. கண் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது..

‘என்ன சார், கண்ணை மூட முடியலியா ? வெளிச்சம் இருந்தா எப்படி சார் தூக்கம் வரும், கைகுட்டை வச்சி இருந்தா அதை எடு த்து கண்ணை கட்டிகங்க ‘ என்றார்.

‘நான் என்ன இளிச்சவாயனாடா ?, நான் கண்ணை கட்டிகிட்டா நீ அடு த்த ஸ்டேஸன் வரும் போது எஸ்கேப் ஆயிடு வே, அப்புறம் தினத்தந்திலே என் பேட்டி + போட்டோ போட்டு .. இன்று ஏமாந்தவர்ன்னு வரும்.. ம்க்கும். நானாவது ஏமாற்றதாவது… ‘ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது..

‘என்ன சார் யோசனை, நீங்க கண்ணை கட்டிகிட்டு இருக்கும் போது உங்க பொட்டியை தூக்கிட்டு போயிடு வேன்னு பயப்படு றீங்களா ? ‘ என்று சொல்லி ஸ்டார்டிங் ட்ரபிள் ஆன ரயில் எஞ்சின் மாதிரி ‘ ?ஸ் ?ச் ஸ்க் அஷ்க்ஸ்ஸ்ஸ் ?ஸ்க் ?ஸ்க் ‘ என்று சிரித்தார்

‘இல்லீங்க ‘ என்றேன் ரொம்ப அப்பாவியாய்.

‘பயப்படாதீங்க .. நான் நல்லவன் தான்.. தைரியமா தூங்குங்க.. நான் பார்த்துக்குறேன் ‘ என்றார்

அந்த ஆள் அப்படி சொல்ல சொல்ல எனக்கு பயம் அதிகம் ஆனது.. இந்த கம்பார்ட்மெண்டில் வேறு கூட்டமே இல்லை.. என்ன செய்வது என்று முழித்தேன்.. இல்லை கண்ணை மூடிக்கொண்டு , பெட்டி மேல் ஒரு கை வைத்துக்கொண்டு யோசித்தேன்.

ரயில் ‘தடக் தடக் ‘ என்று ஒரே சீராய் போய்க் கொண்டிருந்தது.. பெட்டி லேசாய் இழுபடு வது போல் ஒரு உணர்ச்சி.. மெல்ல கண் இமை திறந்து பார்த்தேன்… முடிவு செய்துவிட்டேன்.. அவன் தான்.. திருடன் தான் அவன்.. நிச்சயம்…. பெட்டியை லேசாய் இழுக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு விநாடி தாமதிது வெடு க்கென்று எழுந்தேன். பதறிப்போய் பின் வாங்கி அமர்ந்தான் அவன்.

‘என்ன சார், ஏதாச்சும் கெட்ட கனவா ? ? இப்படி திடார்ன்னு எந்திரிச்சிட்டாங்க ‘ என்றான் ஒன்றும் தெரியாதவனாய்.. இந்த முறை நான் சிரிக்கவில்லை, லேசான முறைப்புடன்..

‘என் பெட்டி மேல உஙகளுக்கு என்ன கை ? ? என்ன பார்த்துகிட்டு இருந்தீங்க ? ‘ என்றேன்.

‘ ஓ அதுவா சார்.. பெட்டி மேல உங்க பேரு இருந்திச்சி.. சார் சார்ன்னு கூப்பிடு றதை விட பேரு சொல்லி கூப்பிடலாம்ன்னு தான் பார்த்தேன்.. தப்பா நினைச்சிட்டாங்களா ? ‘ என்று சொல்லிவிட்டு அரை விநாடி தாமதித்து ‘…பயந்துட்டாங்களா.. ‘ என்று சொல்லி திரும்பியும் அதே சிரிப்பை ஆரம்பித்தார்.. பற்றிக்கொண்டு வந்தது எனக்கு.. இருந்தும் அதை மறைத்துக்கொண்டு சன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தேன்.

‘பிஸ்கட் சாப்பிடு றீங்களா சார் ‘ என்றார் இந்தமுறை..

உங்களுடன் பேச்சு குடு த்தவாறு அவர்கள் பையிலிருந்து மயக்கமருந்து தடவப்பட்ட பிஸ்கட் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை நீட்டு வார்கள்.

அவசரமாய் தினத்தந்திஐ உதறி விட்டு .. ‘வேண்டாம் என்கிட்ட பிஸ்கட் இருக்கு ‘ என்று சொன்னேன்.

அவரும் விடவில்லை. ‘அட பயப்படாதீங்க சார். நான் ஒண்ணும் இதுலே மயக்க மருந்து எல்லாம் தடவலே. பாருங்க நான் தைரியமா சாப்பிடு றேன். ‘ என்று சொன்னவாறு ஒரு பிஸ்கட் எடு த்து சாப்பிட்டார்.

அவர்கள் சாப்பிடு ம் பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து எடு த்து தந்தாலும் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை அவர்களுக்கு அடையாளம் தெரியும். எனவே நல்லவற்றை சாப்பிட்டு விட்டு உங்களுக்கு மாற்றி கொடு த்து விடு வார்கள்.

தினத்தந்தி மீண்டு ம் எச்சரித்தது.

‘வேண்டாம் ‘ என்று பிடிவாதமாய் மறுத்து விட்டு என் பையில் இருந்த அந்த வெளிநாட்டு பிஸ்கட் பாக்கெட்டை எடு த்தேன். அவரிடம் காட்டி..

‘பாருங்க என்கிட்டேயும் இருக்கு. நான் என்னோடதையே சாப்பிட்டு க்குறேன் ‘ என்று சொல்லிவிட்டு ஒன்றை எடு த்து வாயில் போட்டு க்கொண்டேன்.

‘அது எந்த கம்பேனி சார் ‘ என்றார் பிஸ்கட் பாக்கெட்டை காட்டி.

‘இது பாரின் பிஸ்கட்.. நான் போன வாரம் லண்டன் போன போது வாங்கிட்டு வந்தது ‘ என்றேன் பெருமையாக.

‘ஒண்ணு குடு ங்க சாப்பிட்டு பார்க்குறேன் ‘ என்றார் சிறிதும் தயக்கம் இல்லாமல், பின் அவரே ‘நான் லண்டன் போய் இதை எல்லாம் வாங்க முடியாது சார். அவ்வளவு படிப்பு இல்ல. நீங்க ஒண்ணு குடு த்தா ஊருல போய் பெருமையா சொல்லிக்குவேன்.. லண்டன் பிஸ்கட் சாப்பிட்டதா ‘ என்றார்..

எனக்கே பாவமாக இருந்தது.. ஒன்று தானே கேக்கிறார் குடு த்துவிடலாம் என்று பாக்கெட்டை நீட்டினேன்.

3 பிஸ்கட் எடு த்துக்கொண்டு .. லேசாக இளித்தார்.

‘தப்பா நினைச்சிக்காதீங்க.. சம்சாரத்துக்கு ஒண்ணு.. என் பொண்ணுக்கு ஒண்ணு.. அதான் சேர்த்து எடு த்துகிட்டேன்.. ‘

‘பரவாயில்லை வேணா இன்னும் 2 எடு த்துகங்க ‘ என்றேன்.

‘இருக்கட்டு ம் சார்.. மனுஷனுக்கு நாக்கு முக்கியம்.. அதை அடக்கனும்… ‘ என்றார் ஒரு பிஸ்கட்டை சாப்பிட்ட படி…

அடு த்த 2 நிமிடத்தில் மூன்றையும் காலி செய்து விட்டு .. ‘சில சமயம் நாக்கை அடக்க முடியறதில்லீங்க ‘ என்று சிரித்தார்.

எனக்கு பாத்ரூம் வருவது போல் இருந்தது. ‘ கொஞ்சம் என் பெட்டியை பார்த்துகங்க.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன் ‘ என்றேன்.

‘தாராளமா போய்ட்டு வாங்க சார்.. நான் ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டேன். நீங்க வந்ததும் நான் போகனும்.. ‘ என்று சொல்லி சிரித்தார்.

நான் போய் 5 நிமிடத்தில் திரும்பி வரும் போது அவர் நன்றாக உறங்கிப் போய் இருந்தார். தொட்டு ப்பார்த்தேன்.. லேசாக உலுக்கியும் பார்த்தேன். முழிக்கவில்லை.. பிஸ்கட் தன் வேலையை சரியாக செய்து விட்டது. என் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை. அந்த ஏமாந்தவனின் பெட்டியை தூக்கிகொண்டு .. அடு த்த 5வது நிமிடத்தில் வந்த வேலூர் ஜங்ஷனில் இறங்கி மக்களோடு மக்களாய் கலந்து போனேன்.

நாளைய தினத்தந்தியை அவசியம் பாருங்கள். இதே கதை கட்டாயம் வரும்.

*** Gyanadevan Baskaran gyanadevan@gmail.com

Series Navigation

ஞானதேவன்

ஞானதேவன்