மௌனித்த நேசம்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ப.கவிதா குமார்


உறக்கம் கலையாது
உறங்கிப்போனான் அவன்.
மனப்பிராந்தியம் முழுவதும்
பரவியிருந்த ஞாபகக்கசடுகள்
சுவாசம் முடிந்த பின்
தன் சுயவிலாசத்தை
அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
சப்தமிக்காது
சருகு உதிர்ந்த சேதி
மண் கிழித்த வேர்
பிற மரக்கிளைக்கு
பரிமாறிய சேதி
அந்த குயிலுக்கும்
கொஞ்சம் சொல்லப்பட்டது.
வாழ்ந்த காலங்களில்
மௌனித்த நேசம்
மரணித்த நேரத்தின் போது தான்
பூரணமெய்தியது.
சவபாதம் நனைத்த
விழிநீர்களின் தன்மையறியாது
தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
அந்த சாவுக்கான செய்தி பன்னீராய்.
அவன் உறக்கம் கலைக்க நினைக்கும்
அந்த ஒற்றைக்குயிலின்
ஓங்காரச்சோகம்
மேளவாத்திய இரைச்சலில்
இறந்து தான் போனது.


kavithamukil@rediffmail.com

Series Navigation