மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா2010 சூலைப் பதினொன்று. தென் ஆப்ரிக்காவிலெழுந்த காற்பந்து சூறாவளி ஸ்பெயினை கரை சேர்த்துவிட்டு ஓய்ந்ந்துள்ளது. முதன் முதலாக ஆப்ரிக்க நாடொன்றில் அதிபர்கள், ஆட்சியாளர்களை முதன்மைப்படுத்தாத சர்வதேச நிகழ்வொன்றைக் காணநேர்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டினை அடுத்து அதிக எண்ணிக்கையில் உலக நாடுகள் கலந்து கொண்ட ஆரோக்கியமான விளையாட்டுகளம். இனம், நிறம், ஏழை பணக்காரர்கள், அரசியல் சமய பேதங்களற்ற ஒர் உலக விளையாட்டு, அதாவது ஆண்களுக்கான என்கிற குறையைத் தவிர்த்து. கிரிக்கெட்டை கால் பந்தோடு ஒப்பிடமுடியாது. என்னதான் மட்டை பிடித்து இங்கிலாந்தின் பந்துவீச்சை நிமிர்ந்து எதிர்கொண்டாலும் இங்கிலாந்து எஜமானரும் அதன் கடந்தகால சேவகர்களும் பங்கேற்கும் கிரிக்கெட்டை காலனிய அடிமைத்தனத்தின் கழுவமுடியாத எச்சமென்றே நினைகூரவேண்டியிருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளை வைத்துக்கொண்டு உலக கிரிக்கெட் போட்டி என்றெழுதுவதே மகா அபத்தம். ஏறக்குறைய பத்து நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட்டை உலக விளையாட்டெனில் 200 நாடுகளுக்குமேல் பங்கேற்கும் கால்பந்து நிகழ்வுக்கு பொருத்தமான பெயரை கிரிக்கெட் அபிமானிகள்தான் சொல்லவேண்டும். உலகக் கால்பந்துபோட்டியில் ஆசிய நாடுகளுக்கானத் தகுதிச் சுற்றில் இந்தியா தேர்வாகவில்லை. ஜப்பான், வடகொரியா, தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளுக்குமட்டுமே அதற்கான திறனைப் பெற்றிருந்தன. இந்தியா ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட வரிசையில் பதின்மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கேள்வி.

தென் ஆப்ரிக்காவில் கால் பந்தாட்ட நிகழ்வு ஏற்பாடு குறித்து ஆயிரமாயிரம் விமர்சனங்கள். இலட்சக்கணக்கான மக்கள் வேலையின்றி, போதிய உணவின்றி, மின்சாரமின்றி புறநகரங்களில் தவிக்கின்றநிலையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யபட்ட கால்பந்தாட்ட மைதானங்களும் அதற்கான உபரிச்செலவுகளும் அவசியமா போன்ற கேள்விகளெல்லாம் எழுந்தன. அடிமைவர்த்தகம், காலனி ஆதிக்கம் நிறவேற்றுமையென காலகாலமாய் ஆதிக்கசக்திளால் வஞ்சிக்கபட்டவர்கள் அவர்கள். ஏமாற்றமும் நிராசையும் கனவுகளுமாக வாழ்ந்து களைத்த மக்கள் உற்சாகம் தரிக்க, உலகக் கால்பந்தாட்ட தோரணம் உதவியிருக்கிறது. 2010 உலககோப்பைக்கு ஆப்ரிக்காவுக்கென தீர்மானம் ஆனவுடன் எகிப்து, மொராக்கோ, தென் ஆப்ரிக்கா நாடுகளுகளுக்கிடையே போட்டி. கடைசியில் வென்றது தென் ஆப்ரிக்கா. எப்படி நடத்துவார்களோ? அவர்களால் முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் பிறந்தன. கடைசியில் பலரும் வியக்கும் வகையில் தென் ஆப்ரிக்கா கோலாகலமாக நிகழ்வை நடத்திமுடித்தது.

போட்டியில் கலந்துகொண்ட ஆப்ரிக்க நாடுகளில் அல்ஜீரியாவைத் தவிர்த்து கானா, நைஜீரியா, ஐவரிகோஸ்ட், கமெரூன், தென் ஆப்ரிக்கா நாடுகளின் வீரர்கள் விளையாடினபோது இருண்ட கண்டத்து மக்களின் முகங்களில் ததும்பிய ஒளியை சொற்களிட்டு நிரப்ப முடியாது. ப·பானா ப·பானா(Bafana Bafana) என அழைக்கபட்ட தென் ஆப்ரிக்க நாட்டின் கால் பந்தாட்ட குழுவினர் முதற்சுற்றில் குறைவான புள்ளிகளெடுத்து போட்டியிலிருந்து வெளியேற நேர்ந்தபோதும், அவர்கள் பிரான்சுடனானப் போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கணக்கில் வென்றது சாதனை. அதன் பின்னர் ஆப்ரிக்க நாடுகளில் கானா மட்டுமே மிஞ்ச தென் ஆப்ரிக்கர்கள் க·பானா க·பானா என்ற முழக்கத்துடன் கானா நாட்டு அணியின் பின் திரண்டனர். அமெரிக்காவை வென்ற கானா உருகுவே அணியை கால்இறுதியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. கானாவுக்கு ஏற்பட்ட தோல்வி பரிதாபமானது. கானா முன்னணிவீரர் அனுப்பிய பந்தொன்றை உருகுவே வீரர் வேண்டுமென்றே கையால் தடுக்க, கிடைத்த பெனால்ட்டிவாய்ப்பை கானா பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது. நியாயமான தோல்வியல்ல. எனினும் தோல்விதோல்விதான். சட்டமும் விதியும் நியாயத்திற்கு உதவுகிறதோ இல்லையோ அநியாயத்திற்கு தாராளமாய் துணைபோகும் என்பதற்கு விளையாட்டும் தப்பவில்லை. கானாவின் தோல்வியை ஆப்ரிக்க கண்டம் எல்லைபேதமின்றி தன்னுடையென்று பாவித்து வருந்தியது. வெற்றியோ தோல்வியோ ஆப்ரிக்கமக்களை ஓரணியில் திரட்ட காற்பந்து உதவியிருக்கிறது.

உருகுவே நாடு அரையிருதிப்போட்டியில் கலந்துகொள்வதற்கு உதவிய கை(?) பிரான்சு தகுதிச் சுற்றில் தேர்வு பெறுவதற்கும் உதவியது. தகுதிச்சுற்றில் அயர்லாந்துக்குக்கு எதிராக விளையாடிய பிரான்சு ஒரு கோலடித்து வெற்றிபெற்றது, அந்த ஒரே கோலை பிரெஞ்சு முன்னணிவீரர் தியரி ஹாரி (கையால்) போட்டிருந்தார். ‘உங்க கையை காலாய் எடுத்துக்கிறேன்’ என நடுவர் சொல்லிவிட்டார். கோல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகக் காற்பந்து அமைப்பும் பிரான்சு நாடு தேர்வு பெற்றதை பின்னர் உறுதிபடுத்தியது. திரும்ப விளையாடப்படவேண்டுமென்ற கோரிக்கையை அது நிராகரித்தது. பிரெஞ்சு மக்களில் ஒரு சிறுபான்மைக்கூட்டம் ஏற்கவில்லை முனுமுனுத்தது. பிரெஞ்சு காற்பந்தாட்ட குழு பயிற்சியாளர் ரெமோன் தொமெனக்(Raymond domenech), “நாம் தகுதிபெற்றிருக்கிறோம் அதுதான் முக்கியம்”, என்றார். பிரெஞ்சுக் காற்பந்தாட்ட அணியைக் குட்டிச் சுவராக்கினதில் இவருக்குப் பெரும்பங்குண்டு. 2006ல் நடந்த உலகப் போட்டியிலும், 2008ல் நடந்து முடிந்த ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான போட்டியிலும் பிரான்சு அணி மோசமான தோல்வியைப் தழுவியிருந்தும் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கவேண்டும். என்ன மாய்மாலம் செய்தாரோ தொடர்ந்து பயிற்சியாளராக இருந்தார். தொடக்கத்திலிருந்தே அணியைக் குறித்து விமர்சனங்கள், பிரான்சு அணிக்கு இணையாகச் சொல்லப் பட்ட மிகப்பெரிய அணிகள்கூட காற்பந்தாட்டத்தின்போது தென் ஆப்ப்ரிக்காவில் நடுத்தர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட இவர்கள் தென் ஆப்ரிக்காவிலேயே மிக ஆடம்பரமான ஓட்டலை தேர்வு செய்து தங்கினார்கள். இதுகுறித்து பிரான்சு அரசாங்கத்தின் விளையாட்டுத்துணை இணை அமைச்சர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். பயிற்சியாளரும் வீரர்களும் ஆரம்பத்திலிருந்தே முட்டிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு வீரர்களிலேயே அதிகக் கோல்போட்டிருந்த தியரி ஹாரியை பயிற்சியாளர் களத்தில் இறக்கவில்லை. சமீபக் காலமாக அவர் நன்றாக விளையாடவில்லையென்பது உண்மையென்றாலும், களத்தில் இறக்காமல் மாற்று விளையாட்டுவீரராக அவரை உட்காரவைத்திருந்தது அநியாயம். அதற்கு அவரைத் தேர்வு செய்திருக்கவே வேண்டாம். மூத்த வீரர்களான அனெல்கா, ரிபெரி ஆகியோர் அண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தனர்; தியரி ஹாரியும் தன் பங்கிற்கு இஸ்லாமியத்தைத் தழுவ இருப்பதாகக் கூறியிருந்தார். வேறு என்னென்ன காரணங்களோ! மூத்த வீரர்களை, அணியில் அவர்களது வழக்கமான இடத்தில் நின்றாட பயிற்சியாளர் அனுமதியளிக்கவில்லை, அவர்களுடை இடத்தில் புதிய வீரர்களை ஆடவைத்தார். டிராவிலும், தோல்வியிலும் ஆட்டங்கள் முடிய, பயிற்சியாளர் அனெல்கா என்ற வீரரை கண்டிக்க அவர் பதிலுக்குக் கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். பேனைப் பெருமாளாக்கி அனெல்கா குழுவிலிருந்து வெளியேற்றப்பட மற்றவர்கள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ளமாட்டோமென அடம் பிடிக்க, பிரெஞ்சு அணி இனி தேறாதென்றார்கள். உறுதிப்படுத்துவதைப்போலவே தென் ஆப்ரிக்காவோடு மோதி தோல்வியுற்ற பிரான்சு அணி நாடு திரும்பியது. வெற்றிபெறுகிறபோது உறுத்தாத விடயங்கள் தோல்வியென்கிறபோது பெரிதுபடுத்தப் படுகின்றன. பயிற்சியாளர் பற்றிய விமர்சனங்களெல்லாம் பலவீனமடைந்தது.
தகுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவிதம் சரியில்லை எனவே தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருக்கக்கூடாது என்பவர்கள் ஒரு பக்கம், பிரான்சுக்காக விளையாடும் அநேகர், வெளிநாட்டவர் ( பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்), நாட்டுக்காக விளையாடும் உணர்வு அவர்களுக்கில்லை என்பவர்கள் மற்றொரு பக்கம். 1998ல் உலகப்பந்தாட்டக்கோப்பையை பிரான்சு கைப்பற்றியபோதும் வீரர்களில் அநேகர் பிரான்சு நாட்டின் முன்னாள் காலனி நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான். வெற்றிபெற்றபோது வீரர்கள் அனைவரையும் பிரெஞ்சுக்காரர்கள், தோல்வி என்கிறபோது வீரர்களின் அந்நிய அடையாளம் முன்னால் நிற்கிறது. பிரெஞ்சு மனப்பான்மைக்கு மாறாக ஜெர்மன் அரசாங்கமோ இதுவரையில் காணாத தங்கள் அணியின் உற்சாகமான விளையாட்டிற்கு வீரர்களின் இளம் வயது மட்டும் காரணமல்ல பிரேசில், துனீசியா, அர்ஜெண்ட்டைனா, துருக்கி, கானாவென்று நாட்டிலுள்ள பலதரப்பு மக்களுக்கும் அணியில் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம், அதுவே என்கிறார்கள்.

உலகக் கோப்பையைவென்ற ஸ்பெயின் நாட்டிற்கு வேறு பிரச்சினை. பல ஆண்டுகளாவே ஸ்பெயின் பிரான்சென்று இரண்டு நாடுகளின் எல்லையில் காணப்படுகிற பாஸ்க் மக்கள் தனிநாடுகோரி போராடிவருகிறார்கள். ஸ்பெயினுக்கு அண்மைக்காலங்களில் தலைவலியாக இருப்பது கட்டலோனியா (Catalonia)பிரதேசப் பிரச்சினை. மத்திய தரைக்கடல் பகுதியில் பார்சலோனாவைத் தலைநகரமாகக்கொண்ட கட்டலோனியா மொழியிலும் பண்பாட்டிலும் ஸ்பெயினிலிருந்து வேறுபட்டது. இந்தியக் காஷ்மீர்போல அதிகப்படியான நிர்வாகச் சுதந்திரங்களைக்கொண்டது. ஸ்பெயின் மொழி தெரிந்தாலும் கட்டலோனிய மக்கள் வாய் திறக்கமாட்டார்கள். கல்வித்துறையில் ஆரம்பித்து நீதிதுறைவரை கட்டலோனியாதான் வழக்கு மொழி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிராங்பர்ட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியில் ஏற்பாட்டாளர்களிடம் சண்டைபிடித்து கட்டலோனியாவுக்கென்று தனி அரங்கினைக்கேட்டுப் காட்சியில் பங்குபெற்றார்கள். உலகப் கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்கள் தலைநகர் மாட்ரிட்டில் திறந்த பேருந்தொன்றில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். வீரர்களில் ஒருபாதியினர் ஸ்பெயின் நாட்டுக் கொடியை அசைத்துவர மற்றவர்கள் கட்டலோனியா கொடியை அசைத்துவந்தனர். ஸ்பெயின் அணியின் தலைவன் மட்டுமல்ல, பந்தய வீரர்களில் பாதிபேர் கட்டலோனியாவைச் சேர்ந்தவர்கள். எனவே நியாயமாக கோப்பை ஸ்பெயினுக்கல்ல கட்டலோனியாவுக்குத்தான் சொந்தம் என்ற குரலும் இப்போது கேட்கிறது.

சோதனைபோல உலகக் காற்பந்தாட்டத்தின் முதல் நாள் துவக்க நிகழ்ச்சியில் மாண்டெலா கலந்துகொள்ள முடியவில்லை, ஒரு வாகன விபத்தில் மாண்டெலாவின் பேர்த்தி சம்பவத்தன்று இறந்திருந்தார். அக்குறையை தவிர்க்க நினைத்தவர்போல கால்பந்தாட்ட இறுதிநாளில் முகம்கொள்ள குறுநகை சுமந்தபடி சிறு வாகனமொன்றில் உலாவந்த காட்சியை நினைக்க உடற் சிலிர்க்கிறது. பிரெஞ்சு தொலக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படு தேவதூதன் மீண்டும் வந்திருக்கிறா¡னென்றார். எங்கே? பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்த பாரீஸ் நகரிலிருந்துகொண்டு. மாண்டெலா இந்த பிரெஞ்சு ஊடகவியலாலருக்கு ஆப்ரிக்காவில் எங்கேயாவது நத்தம் புறம்போக்கில் மனை ஒதுக்கிக் கொடுத்திருப்பாரா என விசாரித்துப்பார்த்தேன் அப்படி ஏதுமில்லையாம்? ஆனால் அந்த ஐரோப்பியருக்கு வேறொரு நன்றிக்கடனிருக்கிறது. ஏறக்குறைய அரைநூற்றாண்டுகாலம் நிறவெறியால் அடக்கி ஆளப்பட்ட இனம் விடுதலைபெற்றபோது வெள்ளையர்களுக்கெதிராக சிறு அசம்பாவிதங்கூட நிகழாமல் அவர்களை வழிநடத்தினாரென்ற பெருமை குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. கடந்த வாரத்தில் நெல்சன் மாண்டெலாவிற்கு 82வது அகவைதினம் கொண்டாடப்பட்டது. ஐக்கியநாட்டுபையின் செயலாளர், அமெரிக்க அதிபர், மேற்கு நாடுகளின் தலைவர்களென பலர் வாழ்த்தியிருந்தனர். அவ்வாழ்த்துகளில் சம்பிரதாயச் சொற்களில்லை. போற்றிப்பாடல்களில்லை, நெல்சன் மாண்டெலா இருபத்தோராம் நூற்றாண்டின் ஓர் அற்புத மனிதர் என்பதை அவர்களது அறிக்கைகள் உறுதிசெய்திருந்தன.

————————————————————-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா