மொழிக் குறிப்புகள்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

நரேந்திரன்


சமிபத்தில் படித்த செய்தி ஒன்று:

“அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரில் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியான ‘மூத்த போவாவின் (Boa Sr.)’ மரணத்துடன், உலகின் மிகத் தொன்மையான (ஏறக்குறைய 70,000 வருடங்கள்) மொழிகளில் ஒன்றான ‘போ (Bo)’ மொழி இந்த மண்ணிலிருந்து மறைந்து விட்டது. அம்மொழி பேசத் தெரிந்த இறுதி மானுடர் அப்பெண்மணி மட்டுமே என்பது உலக மொழியியல் வல்லுனர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.”

ஒரு மொழியின் மரணம் என்பது எத்தகைய துயரமான விஷயம் என்பதினை விளக்கத் தேவையில்லை. அதிலும், நம்மை கற்காலத்திற்கே இட்டுச் செல்லக்கூடிய, எழுபதினாயிரம் வருடங்கள் பழமையான ஒரு மொழியின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. காதலும், பூசலும், வரலாறும், பாடல்களும் அம்மொழியில் இயற்றப்பட்டிருக்கலாம். அம்மொழி தெரிந்த குழந்தைகள் குதூகலத்தோடு கதைகள் பேசியிருக்கலாம்; அல்லது தங்களின் பெற்றோர்களிடமிருந்து கதைகளைக் கேட்டிருக்கலாம். அத்தனையும் ஒரு மானுட உயிரின் மரணத்துடன் முடிவுக்கு வருவது என்பது வருத்தம் தரக்கூடியதே. ‘போ’ மொழியின் வேர் ஆப்பிரிக்க மொழிகளுடன் தொடர்புடையது என்பது இங்கு கவனிக்கத்தக்க ஒரு செய்தி.

அமெரிக்க மொழியியல் வல்லுனர்கள் 1992-ஆம் வருடம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, 2100-ஆம் வருடத்திற்குள் உலகில் புழங்கும் மொழிகளில் ஏறக்குறைய 90 சதவீத மொழிகள் அழிந்துவிடும் அபாயத்திலிருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள். உலகில் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஏறக்குறைய 470 மொழிகளுக்கு அந்த அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும், சிறிது காலத்திற்கு முன்வரை வெளியுலகத் தொடர்பு அதிகமில்லாத பழங்குடி மக்கள், தங்களின் வெளியுலகத் தொடர்பை அதிகரித்து வருவதன் காரணமாக அவர்களின் மொழிகள் அழியும் நிலையிலிருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் ‘லிபான் அபாச்சே (Lipan Apache)’ என்ற பழங்குடி மொழி பேசத் தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே. நான்கே நான்கு பேர்களுக்கு மட்டுமே கொலம்பிய நாட்டின் ‘டோட்டோரோ (Totoro)’ மொழி தெரியும். கேமரூன் நாட்டின் பழங்குடி மொழியான ‘பிக்யா (Bikya)’ அறிந்த ஒரே ஒருவர் மட்டுமே இன்று உலகில் உயிருடனிருக்கிறார்.

அதே சமயம், உலகில் அழிந்து போனதாகக் கருதப்பட பல மொழிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக யூதர்களின் ‘ஹீப்ரு’ மொழி 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பேச்சு வழக்கிலிருந்து நின்றுவிட்டது. புத்தகங்களிலும், மதகுருமார்களின் போதனைகளிலும் மட்டுமே எஞ்சியிருந்த ஹீப்ரு இன்று இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழி மட்டுமல்லாது சாதாரண யூதர்கள் பேசும் மொழியாகவும் மாறியிருக்கிறது. ஹீப்ரு மொழியினை எவ்வாறு உச்சரிப்பது என்பதினைக் கூட அறியாதிருந்த யூதர்கள், தங்களின் விடா முயற்சியால் அதனை உயிர்ப்பித்தார்கள் என்பது வரலாறு. இது போலவே, பிரிட்டனின் ‘வெல்ஷ் (Welsh)’ மொழியும், நியூஸிலாந்தின் பழங்குடி மொழியான ‘மாவோரி (Maori)’யும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட இருமொழிகள்.

**

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழும் சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருக்கின்றது. தமிழ் பேசுவதே கேவலமென்று எண்ணும், நடந்து கொள்ளும் ஒரு தலைமுறை நம்மைச் சுற்றிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழை எழுதவோ, படிக்கவோ இயலாத இத்தலைமுறை, தங்களின் எதிர்கால சந்ததிக்கும் இதனையே கற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘டோண்ட் டாக் இன் டாமில். ஒன்லி இன் இங்லிஷ்’ எனத் தன் குழந்தையை அதட்டும் தமிழ் அன்னையைக் காண நாம் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு மிக அருகில், அண்ணா நகருக்கோ அல்லது அமிஞ்சிக்கரைக்கோ போனால் போதும். அறிமுகம் செய்கையில், “அவளுக்கு (அல்லது அவனுக்கு) டாமில் தெர்யாது!” எனக்கூறும் தமிழ்க்குடிப் பெண்ணின் முகத்தில்தான் எத்தனை பரவசம்! எத்தனை தேஜஸ்!!

தமிழை உய்விக்க வந்தவர்களாக மார்தட்டிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் நாற்பந்தைந்து கால ஆட்சியின் சாதனை இது. வேறு யாராலும் இத்தனை பழமையான, வேர்விட்ட ஒரு மொழியை இத்தனை விரைவில் வெட்டிச் சாய்த்திருக்க முடியாது. ஆங்கிலேயர்களால் கூடச் செய்ய முடியாத ஒரு மாபெரும் சாதனை. பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

‘இனமான வீரர்களின்’ சொந்த தொலைக்காட்சி சேனல்கள் தமிழ்க் கொலை புரிவதில் முன்னனியில் நிற்பவை. அந்தச் சேனல்களில் பணிபுரியும், ‘தமிழ்க் குதறி’ காம்பியரினிகளைக் குறித்து எல்லோரும் எழுதி மாய்ந்துவிட்டார்கள். இன்னும் திருந்தியபாடில்லை. நூலகங்கள் இல்லாத சிறுகிராமங்களில் கூட நுழைந்திருக்கும் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும் குழந்தைகள் “காம்பியரினி டமிலை” பேச ஆரம்பித்திருத்தால் தமிழின் கதி அதோ கதிதான். இதையெல்லாம் திருத்தாமல் செம்மொழி மாநாடு நடத்தி என்ன பிரயோசனம்?

அண்டை மாநிலங்களைப் பார்க்கையில், தமிழ் இலக்கிய உலகம் ஏறக்குறைய தேங்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆர்வமுடன் எழுதுபவர்கள் அதிகம் பேர்களில்லை. அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, நன்றாக எழுதுபவனைச் சாதியைச் சொல்லி அதட்டி விரட்டும் கேவலமான மனநிலையும் இங்குதான் நிலவுகிறது. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது மருந்துக்கூட இல்லை. தப்பித்தவறி மொழிபெயர்கப்படும் புத்தகங்ளின் தரம் சொல்லும்படியாக இல்லை என்பதுவும் வருத்தம் தரக்கூடியது. விதி விலக்குகள் இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் வெளியாகும் உலகின் சிறந்த புத்தகங்கள் உடனுக்குடன் மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் தமிழில் வெறும் ஒரு சதவீதம் கூட இல்லை. அதற்கான அரசாங்க ஆதரவும் தமிழ்நாட்டில் இல்லை. பின் எங்கிருந்து தமிழ் இலக்கியம் வளரும்?

இதனைக் குறித்து எழுதிக் கொண்டே போகலாம். விளையப்போகும் பயன் என்னவோ பூஜ்யம்தான்.

**

தமிழைக் கொன்று உமிழும் டி.வி. காம்பியரினிகளைத் திருத்தும் எளிய வழியாக பரமஹம்ஸ நித்திய’துக்கர்’ பகர்வது யாதெனில்,

அப்பா நீயுமிரு அடிநீள இரும்பெடுத்து
செங்கதிரொப்பச் சிவக்கவே தீயிலிட்டு
தப்பாய்த் தமிழுரைக்கும் காம்பியரினியின்
குப்பாயம் களைந்து, குறுக்காயிரு இழுப்பிழுப்ப
செப்பா தோடிவருமே செந்தமிழ்!

குறிப்பு: ஸ்வாமி நித்தியதுக்கரின் கருத்து நம் கருத்தல்ல.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்