மேலும் சில மனிதர்கள்…

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

சேவியர்.


அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு..

என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ? கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா. அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு கிராமத்தில் ஏகப்பட்ட சொத்து. அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டில் போய்ப் படித்த ஒரே நபர் அபினயா தான். அந்த பெருமை எப்போதும் பரந்தாமனின் பேச்சுக்களில் தெறிக்கும். ஒரே மகள் என்பதால் அவளுக்கு சாப்பாட்டை விட அதிகமாய் செல்லத்தைத் தான் ஊட்டி வளர்த்தார்.

மகளை மெதுவாய்ப் பார்த்தார் பரந்தாமன், அது பக்கத்து ஆலைல கொல்லன் இரும்படிக்கிற சத்தம்மா இது.

உனக்குத்தான் இந்த கிராமத்தோட தொடர்பு விட்டுப்போயி வருசக் கணக்காச்சு. காலேஜ், மேற்படிப்புண்ணு கிராமத்தை விட்டுப்போயி ரொம்ப நாளாச்சு. காலம் காலமா இவன் இந்த இடத்துல தான் கொல்லப்பட்டறை வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கான், நாம தான் இங்கே புதுசா பங்களா கட்டி இருக்கோம். இந்த சத்தம் எல்லாம் பழகிடும் பேசாம போய்ப் படுத்துக்கோ சமாதானப்படுத்தும் குரலில் சொன்னார் பரந்தாமன்.

‘என்னால முடியாதுப்பா…. யாரோ தலையில அடிக்கிறமாதிரி சத்தம் வருது…. ‘- பாருங்க நைட் மணி பன்னிரண்டாகப் போகுது இன்னும் அவன் அடிக்கிறதை நிறுத்தல.. எப்படி தூக்கம் வரும். பிளீஸ்ப்பா நான் இங்க இருக்கப்போற பத்து நாளா வது இந்த சத்தத்தை நிறுத்துங்க சொல்லிவிட்டு மாடிப்படியேறி படுக்கைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள் அபினயா.

பால்க்கனிக்குச் சென்று வெளியே எட்டிப்பார்த்தார் பார்த்தார் பரந்தாமன். வெளியே கொஞ்சம் தூரத்தில் அந்த குடிசை. மெலிதான நிலவின் வெளிச்சம் கிராமத்தை போர்த்தியிருக்க அந்த குடிசை மட்டும் விழித்துக் கிடந்தது. இன்னும் இரும்படித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பெயரை அனேகமாக எல்லோரும் மறந்திருப்பார்கள், கொல்லன் என்றால் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். பரம்பரை பரம்பரையாய் இரும்படிப்பது தான் அவர்களது தொழில். கொல்லப்பட்டறை என்றால் ஒரு தீக்குழி, அந்த தீக்குழிக்கு காற்றை அனுப்பிக்கொண்டிருக்க ஒரு பெரிய தோல்ப்பை. அந்த தோல்ப்பையின் ஒரு முனையில் கயிறு கட்டி மேலே தொங்க விடப்பட்டிருக்கும், அதன் மறு முனை ஒரு குழலோடு இணைக்கப்பட்டு தீக்குழிக்குள் சொருகப்பட்டிருக்கும். விறகுக்கரி சேகரித்து அந்த தீக்குழியில் இட்டு, தீயைப்பற்ற வைத்து, அந்த கயிற்றைப்பிடித்து மெதுவாய் இழுத்தால் காற்று குழாய் வழியாகச் சென்று தீ கெடாமல் பார்த்துக் கொள்ளும்.

அந்த கயிற்றைப்பிடித்து இழுப்பதற்காகவே ஒரு கருங்கல் ஆசனம் அமைத்து அதில் உட்கார்ந்திருப்பாள் செல்லாயி, கொல்லனின் மனைவி. ஏதேனும் வடிவத்தில் இருக்கும் இரும்புத் துண்டையோ, உருக்குத் துண்டையோ கொண்டு வந்து கொடுத்து கத்தி, மண்வெட்டி, வயல் அறுக்கும் அறுப்பத்தி போன்றவை செய்யச் சொல்வார்கள். கொல்லனும் அந்த இரும்புத்துண்டை தீக்குழிக்குள் இட்டு, அந்த இரும்பு பழுக்க ஆரம்பித்தபின் இடுக்கியால் அதை எடுத்து அருகிலிருக்கும் இன்னொரு பெரிய இரும்பு ஆசனத்தில் வைத்து இன்னொரு கையால் சுத்தியலை எடுத்து உயிர் வலிக்கும் வேகத்தில் அதன் மீது அடிப்பான். கொஞ்சமாய் அது இளக ஆரம்பிக்கும். மீண்டும் தீயில் திணித்து பழுக்கவைப்பான். இப்படியே தொடரும் அவன் வேலை.

வயலில் அறுவடை ஆரம்பித்தால் கதிரறுக்கும் பெண்களும், ஆண்களும் அவனிடம் வருவார்கள். உலக்கைக்கு போடும் வளையம் செய்வதும், மண்வெட்டி கழன்று விட்டால் அதை இரும்புக் கம்பி போட்டு முறுக்கிக் கொடுப்பதும் தான் அவனுக்கு வரும் பெரும்பாலான பணிகள். இதில் வருமானம் என்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது. நாள் முழுவதும் இருந்து சுத்தியல் அடித்தால் ஒரு வெட்டு கத்தியோ, சின்னதாய் இரண்டு அறுப்பத்திகளோ தான் செய்ய முடியும். அதில் கிடைக்கும் சில்லறைப் பணத்தில் ஏதேனும் வாங்கி சாப்பிட்டு, இரண்டு ரூபாய்க்கு மாடசாமியின் வயலோரத்துச் சாராயக்கடையில் ஒரு கிளாஸ் சாராயத்தை அடித்து விட்டு வந்து படுத்தால் விடியும் வரை களைப்பு தெரியாது.இல்லையேல் கையும் முதுகும் கழன்று விழுவதாய்த் தோன்றும். அவனுக்கென்று யாரும் கிடையாது, செல்லாயியைத் தவிர. யாரும் அவனை நண்பர்களாகவோ, தெரிந்தவனாகவோ பார்ப்பதில்லை, காரணம் அவனுடைய ஏழ்மைத் தோற்றம். எங்கேனும் திருமணம் நடந்தால் இரவில் போவான், மிச்சம் மீதி சாப்பிடுவதற்கும், கல்யாண சாப்பாட்டுக்காய் அடுப்பு மூட்டிய இடத்திலிருந்து விறகுக்கரியைப் பொறுக்குவதற்கும். அதற்குக் கூட காசு வாங்குபவர்கள் அந்த ஊரில் உண்டு.

பரந்தாமன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.. மணி பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

மாடிப்படி இறங்கி கொல்லனின் குடிசை நோக்கி நடந்தார்.

கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான் கொல்லன். இந்த நேரத்துக்கு யார் வருகிறார்கள் ? கையிலிருந்த சுத்தியலை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான். பரந்தாமன் நெருங்கி வர வர, கொல்லன் மரியாதை காட்டி எழுந்தான்.

‘வாங்க சாமி, என்ன இந்த சமயத்துல வந்திருக்குதீங்க ? என்னாங்கிலும் வேலை இருக்கா ? ‘ மெதுவாகக் கேட்டான் கொல்லன்.

‘இல்லப்பா… தூக்கம் வரல.. நீ இன்னும் தூங்கலயா ? மணி பன்னிரண்டாகுது ? ‘ கேட்டார் பரந்தாமன்.

‘இல்ல சாமி, தூக்கம் வராம இல்ல… ஆனா நாளைக்கு நம்ம கொற்கை அய்யா ஊட்ல வயல் அறுக்கிறாங்களாம், நான்கு அறுப்பத்தி கேட்டாரு.. அதனால தான் கொஞ்சம் கஷ்டம் பாக்காம வேலை பாக்கறேன். அது மட்டும் இல்ல சாமி…அடுத்த வாரம் முளுசா வயல் அறுப்பு இருக்குதாம், வேலு, தங்கையா எல்லார் வூட்டுக்கும் அறுப்பத்தி, கத்தி எல்லாம் பண்ண வேண்டி இருக்கு, கை நீட்டி முன்பணம் வேற வாங்கி புட்டேன்… சமயத்துக்கு செய்து குடுக்கிறது தானே சாமி மரியாத… நமக்கென்ன ரெண்டு நாளு தூங்க முடியாது கழுத.. அதெல்லாம் என்ன பண்ன முடியும் சாமி…நாலு காசு வரது இப்போதான்… அதான் கஷ்டம் பாக்காம வேலை பாத்துட்டு இருக்கேன்.

இப்போ எல்லாம் எனக்கு தொழிலே அவ்வளவா வரதில்ல சாமி… எங்க அப்பாரு காலத்துல, கலப்பையும், தண்ணி புடிக்கிற காக்கோட்டையும், மண்வெட்டி, பிக்காசு எல்லாமே அவரு தான் பண்ணி குடுப்பாரு. இப்போ எல்லாம் சந்தைல கிடைக்குதாங் சாமி… அதனால ஆருமே அதெல்லாம் பண்ண வரதில்ல… காசு குடுத்து சந்தைல வாங்கிக்கிறாங்க… எப்பவாவது அந்த மண்வெட்டி கீறிப் போச்சுண்ணா வருவாங்க நான் அடைச்சு குடுப்பேன்…மத்தபடி எனக்கு இப்போ எல்லாமே அறுப்பத்தி, கத்தி, வெட்டு கத்தி அவ்ளோ தான் சாமி…

சரி சாமி… நான் பாட்டுகு ஏதேதோ பேசிக்கிட்டே போறேன்..நீங்க வந்த காரியம் என்னன்னு சொல்லவே இல்லையே….கேள்வியாய் பார்த்தான் கொல்லன்.

இல்லப்பா.. என்னோட பொண்ணு லீவுக்காக வந்திருக்கா.. அவளுக்கு இந்த இரும்படிக்கிற சத்தம் தொந்தரவா இருக்காம்… தூங்க முடியாம கஷ்டப் படறா .. அதனால தான் வந்தேன். கொஞ்சம் கேள்விக்குரலுடன் சொன்னார் பரந்தாமன்.

அப்படிங்களா சாமி. பாவம் புள்ள பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்திருக்கு. நான் நிப்பாட்டிடறேன் சாமி. மிச்சத்தை கழுத நாளைக்கு பாத்துக்கலாம். குழந்தை பாவம் தூங்கட்டும். சொல்லிவிட்டு சுத்தியலை ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து தீ மேல் தெளித்து அணைத்தான் கொல்லன்.

பரந்தாமனுக்கு மனசை ஏதோ செய்தது. ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தார்.

வீட்டில் வந்த பின்பும் நினைவுகள் கொல்லனைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. பாவம் எப்படிப்பட்ட வேலை இது. இது வரைக்கும் அவனுடைய குடிசைக்கு இவ்வளவு அருகில் சென்று பார்த்ததில்லை. எப்படித்தான் அந்த குடிசைக்குள் வெந்து தணியும் காற்றோடு குடும்பம் நடத்துகின்றார்களோ ?

வீட்டில் ஒரு நாள் மின்விசிறி சுழலாவிட்டால், தூக்கம் போய் விடும் அவஸ்த்தை… டி வியில் மாலைநேர காபி குடித்தபடியே, ஏதாவது கொறித்தபடியே விளையாட்டு பார்ப்பது இப்படிப்பட்ட வாழ்க்கைக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம். எப்போதாவது ஒரு சுவையான முழுச்சாப்பாடு கொல்லன் சாப்பிட்டிருப்பானா என்பதே சந்தேகம் தான். ஐந்துக்கும் பத்துக்கும் அவனுடைய உடம்பு எப்படி உழைக்க வேண்டி இருக்கிறது ? யோசனை செய்தபடியே மாடிப்படி யேறி அபினயா வின் அறையை அடைந்தார். உள்ளே மகள் மெத்தையில் புதைந்து தூங்கிக்கிடந்தாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே பரந்தாமன் தன்னுடைய அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார்.இரவு மெல்ல மெல்ல இழுக்க அப்படியே தூங்கிப்போனார்.

வெளியே நன்றாக விடிந்திருந்தது…

பால்க்கனியில் நின்று காப்பி குடித்தபடியே கிராமத்தை அளந்து கொண்டிருந்தாள் அபினயா.

ஏதோ ஒன்று வித்தியாசமாய் உறுத்தியது அவளுக்கு.

எது ? என்ன வித்தியாசம்… ஓ… அந்த சத்தம்…

எங்கே போயிற்று அந்த இரும்படிக்கும் ஓசை ? நேற்றைக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரமாய் அடித்த ஓசை இன்றைக்கு எப்படி தொலைந்து போனது ? யோசனையோடு கீழே இறங்கி வந்தாள் அபினயா..

அப்பா… அப்பா …

என்னம்மா ?

என்னப்பா.,.. இன்னிக்கு அந்த கொல்லன் இரும்படிக்கிற வேலையை இன்னும் ஆரம்பிக்கலையா ?

அந்த சத்தம் இல்லேன்னா எப்படி அமைதியா இருக்கு பாத்தீங்களா ?

அப்பா ஒரு பெரிய டார்ச்சர் அது.. எப்படித் தான் சகிச்சுக்கிறீங்களோ… சலித்துக் கொண்டாள் அபினயா.

பரந்தாமன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.

பொதுவாகவே காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடுவானே… இன்று என்னவாயிற்று அவனுக்கு ?

ஒருவேளை நேற்று நான் சொன்னதால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் இருக்கிறானோ ?

கேள்விகள் மனதில் வரிசை வரிசையாய் எழ எழுந்து வெளியே சென்றார் பரந்தாமன்.

குடிசை வாசலில் செல்லாயி நின்று கொண்டிருந்தாள்.

என்னம்மா… கொல்லன் எங்கே ? கேட்டபடி அவளை நெருங்கினார் பரந்தாமன்.

செல்லாயின் கண்கள் அழுதன…

என்ன சொல்றது சாமி…. எவனோ பாவிப்பய ரெயில்வே ஆபீஸ் பக்கத்துல அடுக்கி வெச்சிருந்த தண்டவாளங்களை திருடிட்டு போயிட்டானாம், காலைல போலீஸ் இங்க வந்து இவரு தான் இரும்படிக்கிறதுக்காக அதையெல்லாம் திருடிட்டு போனதா சொல்லி அடிச்சு இழுத்துட்டு போயிட்டாங்க….கேக்கிறதுக்கு நாதியில்ல சாமி.. என்ன பண்றாங்களோ எப்ப வருவாரோ…. சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் செல்லாயி….

பரந்தாமனுக்கு பக் கென்று இருந்தது. கவலைப்படாதே… நான் போய் அவனை கூட்டிட்டு வரேன், சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்.

இதுவரை கொல்லனின் வீட்டில் என்ன நடக்கிறது என்று சட்டை செய்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம்

மனதில் மீண்டும் மீண்டும் எழ, உள்ளே சென்று கொக்கியில் மாட்டியிருந்த ஒரு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டே கார் ஷெட்டை நோக்கி நடந்தார்.

அப்பா .. எங்கே போறீங்க ? பின்னாலிருந்து அபினயாவின் குரல்….

கொல்லனை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களாம், நான் போய் என்னன்னு விசாரிச்சுப் பார்த்து அவனை கூட்டிட்டு வரேன், பாவம் ஒரு குடும்பத்தோட கவலை அது என்று சொன்ன பரந்தாமனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபினயா…. கார் காம்பவுண்ட் கேட்டைக் கடந்து ஊர் சாலையில் வந்து, காவல் நிலையத்தை நோக்கி நகர்ந்தது…

காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார் பரந்தாமன்.

டொங்.. டொங்… டொக்…. வலுவில்லாமல் வீழும் சத்தம்.

கொல்லப்பட்டறையில் செல்லாயி உட்கார்ந்து இரும்படித்துக் கொண்டிருந்தாள்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்