மெய்மையின் மயக்கம்-21

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

காரண அறிவு

‘அனைத்து அறிவும் நினைத்துப் பார்ப்பதுதான் ‘ (ஆல் நாலெட்ஜ் இஸ் ரிக்கலெக்ஷன்) என்று சாக்ரட்டாஸ் கூறினாராம்—-பிளேட்டோ கூறுகிறார். வினாக்களைச் சரியாகத் தொகுத்து வைத்துக் கொண்டு நாம் கேட்டால், சரியாகத்தான் எல்லோரும் விடைகளைக் கூறுவார்கள் என்றும் சாக்ரட்டாஸ் கூறி இருந்தாராம்!

‘நினைத்துப் பார்த்தல் ‘ என்னும் இந்தக் கருத்தமைவினைத்தான் ஆன்மா என்னும் ஒரு கருத்தமைவாகப் பின்னர் அவர் வளர்த்து எடுத்துக் கொண்டு இருந்தார் என்பது எனது கருத்து.

அதாவது, நஞ்சினை உண்டு சாக்ரட்டாஸ் மரித்திட வேண்டும் என்று கட்டளை இட்டு, சிறையில் சாக்ரட்டாசை அரசு அடைத்து வைத்து இருந்த பொழுது—-மரணம் அடைவதற்கு ஒன்று-இரண்டு நாட்களுக்கு முன்னர்—-சிறையில் இருந்து அவர் தப்பிச் சென்றிட வேண்டும் என்று பிளேட்டோ அறிவுரை கூறுகிறார். அவர் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் பிளேட்டோ செய்து முடித்து விட்டு இருந்தார்.

எனினும், தப்பிச் செல்வதற்குச் சாக்ரட்டாஸ் விரும்ப வில்லை. மாறாக, இறந்த பின்னரும் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டுதான் அவர் இருப்பார் என்றும் ஆன்மா என்பதற்கு அழிவு இல்லை என்றும் பிளேட்டோவுக்குச் சாக்ரட்டாஸ் விளக்கம் அளிக்கிறார். ஆனால், இது வல்ல இங்கே நமக்கு முக்கியம்.

சரியான கேள்விகளை நாம் வகுத்துக் கொண்டால்—-அதாவது, நமக்குள் ஒருமைப் பாடான ஒரு தேடல் இருக்கும் என்றால்—-காரண அறிவினை எல்லோராலும் எட்டிப் பிடித்திட முடியும் என்பதுதான் இங்கே முக்கியம். எனவே, காரண அறிவினைத் தலையில் ஏற்றிக் கொண்டு இருப்பதாக எண்ணிக் கொண்டு யாரும் பெருமைப் பட்டுக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை.

அறிவின் நிலைகள்

‘அறிவு என்பதை அனுபவ அறிவு, முரணியக்க அறிவு மற்றும் காரண அறிவு, என்று மூன்று வகையாக நாம் பிரித்துப் பார்ப்பதைப் போல, உணர்மை என்பதனையும் அனுபவ உணர்மை, முரணியக்க உணர்மை மற்றும் காரண உணர்மை, என்று மூன்று வகையாக நாம் பகுத்து எடுத்துப் பார்க்கலாம். இந்தப் பகுப்பு, ஆழ வகையான ஓர் அளவு நிலைப் பகுப்பு என்பது சொல்லாமலே விளங்கும்.

இனி, ஆழ வகையான இந்த மூன்று உணர்மை நிலைகளையும், அகல வகையாகவும் நாம் பிரித்து எடுத்துப் பார்க்கலாம். அதாவது, உண்மத்தில் வெளிப்பாட்டினைக் காண்கின்ற திண்மையான உணர்மை எனவும் சிந்தனையில் உள்முகத் தன்மையினைப் பெறுகின்ற நுண்மையான உணர்மை எனவும், உணர்மையின் தன்மை நிலைகளையும் நாம் பகுத்து எடுத்துப் பார்க்கலாம்.

அப்படி என்றால், அனுபவ உணர்மை என்பதைத் திண்மையான அனுபவ உணர்மை என்றும் நுண்மையான அனுபவ உணர்மை என்றும் நாம் பிரிக்கிறோம்; முரணியக்க உணர்மை என்பதைத் திண்மையான முரணியக்க உணர்மை என்றும் நுண்மையான முரணியக்க உணர்மை என்றும் நாம் பிரிக்கிறோம்; காரண உணர்மை என்பதைத் திண்மையான காரண உணர்மை என்றும் நுண்மையான காரண உணர்மை என்றும் நாம் பகுத்துக் கொள்கிறோம்.

இவற்றுள், திண்மையான உணர்மை என்பது உணர்மையின் ‘உண்மத் தன்மை ‘யினையும் நுண்மையான உணர்மை என்பது உணர்மையின் ‘உள்முகத் தன்மை ‘யினையும் குறிக்கும்.

திருக் குறள் போன்ற நூல்கள் மிகவும் பரவலாக விரிந்து பரவுகின்றன என்றால், அவற்றுள் அனுபவ உணர்மை மேலோங்கி நிற்பதுதான் காரணம். கதைகள் மற்றும் பெரு வாரியான கட்டுரைகளுக்கும் இது பொருந்தும்.

ஆனால், சித்தர் சிந்தனைகள் அந்த அளவுக்குப் பரவிடாததற்கு, அவற்றுள் முரணியக்க உணர்மை மேலோங்கி நிற்பதுதான் காரணம்.

இனி, ‘சிவஞான போதம் ‘, கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘முதல் ‘, போன்ற நூல்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை மட்டும் சென்று அடைந்து இருப்பதற்கு, இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்ற காரண உணர்மைதான் காரணம் ஆகும்.

எடுத்துக் காட்டாக, ‘ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் கூர்ங்கையர் அல்லாதவர்க்கு ‘ என்னும் திருக் குறள், திண்மையான அனுபவ உணர்மையின் கூற்று என்றால், ‘பயன் மரம் உள்ளூர்ப் பழுத் தற்றால் செல்வம் நயன் உடை யான்கண் படின் ‘ என்னும் திருக் குறள், நுண்மையான அனுபவ உணர்மையின் கூற்று என்று நாம் கூறலாம்.

‘தாவாரம் இல்லை, தனக்கு ஒரு வீடு இல்லை, தேவாரம் ஏதுக்கடி ? ‘ என்னும் குதம்பைச் சித்தரின் வரிகள், திண்மையான முரணியக்கச் சிந்தனையின் வரிகள் என்றால், அதே குதம்பைச் சித்தரின் ‘அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத் தந்திரம் ஏதுக்கடி ? ‘ என்னும் வரிகள், நுண்மையான முரணியக்கச் சிந்தனையின் வரிகள் என்று கொள்ளலாம்.

இனி, ‘மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம்—-உழைப்பு, மனம் இல்லையேல் அவன் விலங்காண்டி இன்னும் ‘ என்னும் உலோக யாதச் சித்தரின் கூற்றினைத் திண்மையான காரண உணர்மையின் கூற்றாக நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றால், ‘மாயப் படல் கீறித் தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும் ‘ என்று முரணியக்க நிலையினைக் கடந்து வந்து, பின்னர், ‘நின் பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும், என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன் ‘ என்று பட்டினத்து அடிகள் மொழிகின்ற கூற்றினை நுண்மையான காரண உணர்மையின் கூற்றாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆக, நமது பிளவு வேலைகளின் விளைவாக, மனிதனின் அனுபவ உணர்மை, முரணியக்க உணர்மை மற்றும் காரண உணர்மை, ஆகிய வற்றினைத் திண்மையான, அல்லது உண்மமான உணர்மை என்றும் உள்முகமான, அல்லது நுண்மையான உணர்மை என்றும் இங்கே நாம் பகுத்து எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தெளிவு. ‘ (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.106-08.)

‘அதே நேரத்தில், நிகழ்வுகளின் மேற் பரப்பில் இருந்து தொடங்கி, மெய்ப் பொருளின் ஆழத்திற்குள் சிந்தனையினை உந்திச் செலுத்துகின்ற மனித மனத்தின் கரணியம் கூட, அறிவின் திண்மைக்கும் நுண்மைக்கும் இடையே தடம் மாறி விடுகின்ற வாய்ப்புகள் ஏராளம் என்பதனையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ‘2 (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, பக்.145.)

—-

2 காரணம் என்பது ஆற்றல் வாய்ந்தது என்பது போலவே தந்திரமும் வாய்ந்தது. காரண நிகழ்ப் பாட்டில் தனது நேரடியான குறுக்கீடு எதுவும் நேர்ந்திடாத வண்ணம், புறப் பொருள்களை அவற்றின் இயல்பிற்கு ஏற்ப ஒன்றின் மேல் ஒன்று வினை ஆற்றவும் எதிர் வினை ஆற்றவும் செய்து, தனது நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்ளுகின்ற இடைப்படு நடவடிக்கையில்தான் அதன் தந்திரம் அடங்கிக் கிடக்கிறது. (ஹே:கல், மார்க்சின் மேற்கோள், முதல், தொகுதி-1, பக்.175.)

—-

‘இவற்றுள், ‘திண்மையான அனுபவ அறிவு ‘ என்பது வாழ்க்கையின் குறிப்பிட்ட நிலைமைகளின் பாற்பட்ட வெளி வயமான அறிவாக விளங்குகிறது என்றால், ‘நுண்மையான அனுபவ அறிவு ‘ என்பது வாழ்க்கையின் பொதுப் படையான நிலைமைகளின் பாற்பட்ட உள்வயமான அறிவாக விளங்குகிறது.7

—-

7 புரிவு (புரிந்து கொள்ளுதல்) என்கின்ற வகையில், எண்ணம் என்பது குணங்களின் தீர்க்கத்தினோடும் அக் குணங்களின் வேறுபாடுகளினோடும் ஒட்டிக் கொள்கிறது. தன்னதான ஒரு வாழ்வினையும் இருப்பினையும் கொண்டனவாக இத் தகு வரம்பு பட்ட ஒவ்வொரு நுண்மைப் பாட்டினையும் அது கொள்கிறது. (ஹே:கல், தருக்கம், ஆக்ஸ்ஃபோர்ஃட், 1975, பக்.113.)

—-

ஆனால், ‘முரணியக்க அறிவு ‘ என்பதோ, அனுபவ அறிவு நிலையில் இருந்தும் காரண அறிவு நிலையில் இருந்தும் முற்றிலும் மாறு பட்ட ஓர் அறிவு நிலை. சரியாகச் சொல்வது என்றால், அறிவின் முரண் நிலை இது.

பழைய அறிவினை எதிர்த்தும் புதிய அறிவினைத் தேடியும் இயங்கி வருகின்ற மனத்தின் ‘கரணியம் ‘, கிளர்ச்சி கரமாக வெளிப் பட்டு நிற்கின்ற ஓர் அறிவு நிலை, இந்த முரணியக்க நிலை.

அனுபவ அறிவுடன் இது முரண் படுகிறது; காரண அறிவினை நோக்கி மனிதனின் மனத்தை அது உந்தித் தள்ளுகிறது. தனது முரண் நிலையில் ‘அழிவினையும் ‘ தொடர்ந்த இயக்க நிலையில் ‘ஆக்கத்தினையும் ‘ கருத் தரித்து நிற்கின்ற அறிவு, இந்த முரணியக்க அறிவு.8

—-

8 முரணியக்கக் கட்டத்தில், இந்தப் பொன்றிய குணவரைப்பாடுகள் அல்லது சூத்திரங்கள், தம்மைத் தாமே கடந்து உயர்ந்து, அவற்றின் எதிர் மறைகளுக்குள் சென்று விடுகின்றன. (ஹே:கல், தருக்கம், பக்.115.)

முரண் பட்ட இரண்டு பக்கங்களின் உடன் நிற்பும் அவற்றின் மோதலும், புதியது ஒரு வகைப் பாட்டினுள் அவை உடனாதலும்தாம் முரண் இயக்கம். (மார்க்ஸ், மெய்ப்பொருண்மையின் வறுமை, பக்.112.)

—-

அனுபவ அறிவின் திண்மைத் தன்மை மற்றும் நுண்மைத் தன்மை ஆகியன வற்றை முரணியக்க அறிவு கேள்விக் குறி ஆக்குகிறது.

திண்மையான அனுபவ அறிவினையும், அந்த அறிவின் அடிப்படையில், நுண்மையான அனுபவ அறிவினையும் தகர்த்து எறிந்து, திண்மையான காரண அறிவு நிலையினை நோக்கி மனத்தினைத் ‘திண்மையான முரணியக்க அறிவு ‘ உந்தித் தள்ளுகிறது என்றால், நுண்மையான அனுபவ அறிவினையும், அந்த அறிவின் அடிப்படையில், திண்மையான அனுபவ அறிவினையும் தகர்த்து எறிகின்ற ‘நுண்மையான முரணியக்க அறிவு ‘, நுண்மையான காரண அறிவினை நோக்கி மனத்தினை உந்தித் தள்ளுகிறது.

எனினும், முரணியக்க அறிவின் உந்துதல்கள், மனித மனத்தினை அனுபவ அறிவு நிலையில் இருந்து காரண அறிவு நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்று நாம் சொல்லி விடுவதற்கு இல்லை.

ஏனென்றால், ‘திண்மையான காரண அறிவினை ‘ நோக்கி மனத்தினை உந்தித் தள்ளுகின்ற முரணியக்க அறிவு, அதன் அழிப்பு நிலையில் சோர்ந்து துவண்டு விடலாம்; குழம்பித் தடுமாறி, காரண அறிவின் எல்லையினை எட்டிப் பிடித்திட முடியாமல், அனுபவ அறிவு நிலைக்கு மீண்டும் திரும்பிச் சென்றும் விடலாம். இந்தத் திரும்பல் என்பது, அனுபவ அறிவு நிலையுடன் இறுக்கமாக அதனைப் பிணித்து விடுகிறது.

அல்லது, திண்மையான காரண அறிவினை நோக்கிய அதன் பயணத்தில், நுண்மையான காரண அறிவு நிலைக்கு அது தடம் புரண்டு விடலாம். அல்லது, திண்மையான காரண அறிவு நிலையினை எட்டிப் பிடித்து, தனது ‘அறிவியல் ‘ பயணத்தை மேலும் அது தொடரலாம்.

இனி, ‘நுண்மையான காரண அறிவினை ‘ நோக்கி மனத்தினை உந்தித் தள்ளுகின்ற முரணியக்க அறிவு, அதன் அழிப்பு நிலையில் துவண்டு விடலாம். இந்த நிலையில், தான் அழித்தனவற்றை ஒன்று சேர்த்துத் தொகுத்திட முடியாமல், ஐயப்பாட்டு வாதங்களையும் அது எழுப்பலாம். ஐயப்பாடும் குழப்பமும் அறிவின் ஒவ்வொரு கட்டத்தினையும் அலைக் கழிக்கத் தொடங்குகின்றன. இறுதியில், அனுபவ அறிவு நிலைக்கு அது திரும்பிச் சென்று விடலாம்.

அல்லது, நுண்மையான காரண அறிவினை நோக்கிய அதன் பயணத்தில், திண்மையான காரண அறிவு நிலைக்கு அது தடம் புரண்டு விடலாம்; அல்லது, நுண்மையான காரண அறிவு நிலையினை எய்தி, தனது ‘ஞான ‘ப் பயணத்தை அது தொடரலாம்.

இப்படித்தான், அனுபவ அறிவு நிலையில் இருந்து காரண அறிவு நிலைக்கு வளர்ந்து, முரண் பட்டு, மனித மனம் இயங்கிச் செல்கிறது. ‘9 (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக்.52-53.)

—-

9 உள்முகக் கட்டம் அல்லது நேர் முறையான காரணக் கட்டம் என்பது, பதங்களின் (மொழிவுகளின்) ஒற்றுமையினை, அவற்றின் எதிர் மறையில் கருத்துப் படுத்துகிறது—-அவற்றின் மாறுகையிலும் சீர்குலைவிலும் அடங்கிக் கிடக்கின்ற நேர்க் கூற்றினைக் கருத்துப் படுத்துகிறது. (ஹே:கல், தருக்கம், பக்.119.)

—-

இனி, மிகவும் கடினமானதாக நமக்குக் காட்டிட வேண்டும் என்பதற்காக எழுதப் பட்டு இருப்பது போல் தோன்றுகின்ற ‘அறிவின் நிலைகளை ‘ எளிதாக்கிக் கொள்ளுகின்ற வகையில், காரண அறிவின் அவசியத்திற்குள் சற்று நாம் நுழைந்து பார்ப்போம்.

காரண அறிவின் அவசியம்

வழமையாக எங்கும் இன்று நாம் காண்கின்ற ஒரு குடும்பத்தை நாம் எடுத்துக் கொள்வோம். தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, அதாவது, தலைவன்-தலைவி, ஆண்-பெண் பிள்ளைகள், என்று அனைவரும் கூடி வாழ்கின்ற ஒரு குடும்பம் இது; ஆனால், கூட்டுக் குடும்பம் அல்ல!

முன்னர் அதிகாரம் புரிந்து கொண்டு வந்து இருந்த தாத்தா இப் பொழுது ஓய்ந்து போய் அமர்ந்து இருக்கிறார். இவருக்கு எல்லோரும் மரியாதை அளிக்கிறார்கள்—-அவரது அதிகாரத்திற்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்னும் எல்லைக்குள்!

குடும்பத் தலைவனின் மேல் தாத்தாவுக்கு அதிகாரம் இல்லை என்ற போதிலும், தலைவியின் மேல் பாட்டிக்கு, அதாவது, மாமியாருக்கு அதிகாரம் இருக்கிறது—-பெண்களை அடிமைப் படுத்துகின்ற ஆண்களின் கருவி என்கின்ற வகையில்!

சம்பாதித்து ஓய்ந்து போய் விட்ட தாத்தாவிற்குப் பின்னர் தலைவன்தான் இங்கே சம்பாதிக்கிறான்; எனவே, அதிகாரத்தில் கொடி கட்டிப் பறந்திடவும் செய்கிறான்! பழைய வாழ்க்கையின் மரபுகளைக் கட்டிக் காப்பவர்களாக இவரும் இவரது துணைவியும் செயல் படுகிறார்கள். இந்தப் பழைமையின் பெருமையில்தான் இவர்களது குடும்பத்தின் கவுரவம் அடங்கிக் கிடக்கிறது.

இந்தக் குடும்பத்தை, அதாவது, இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களின் உறவுகளைப் புரிந்து கொள்வதில் நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை; இதற்காக நமக்குக் காரண அறிவும் தேவை இல்லை. ஏனென்றால், நமது அனுபவ அறிவின் எல்லைக்குள் இவை அடங்கி விடுகின்றன.

திடிரென்று ஒரு நாள், தங்கள் பெண்ணுக்குத் திரு மணம் செய்து வைப்பது என்று இந்தத் தாய்-தந்தையர் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் கருத்தினையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதிட வில்லை.

ஆனால், திரு மண ஏற்பாட்டினைப் பெண்ணோ எதிர்க்கிறாள்; படிப்பை முடித்து விட்டுப் பணிக்குச் சென்றதன் பின்னர்தான் தனக்குத் திரு மணம் என்றும் தான் காதலித்துக் கொண்டு வருகின்ற மாப்பிள்ளையைத்தான் தான் மணந்திடப் போவதாகவும் அவள் வாதிடுகிறாள்.

தலைவனும் தலைவியும் அதிர்ச்சி அடைகிறார்கள்; தங்கள் குடும்பத்தின் மானம் பாதிக்கப் பட்டு விட்டதாக—-தங்கள் பழைமைக் கவுரவத்தினைப் பாது காத்திட வேண்டும் என்னும் துடிப்பில்—-தாங்கள் பெற்று வளர்த்த தங்கள் செல்லப் பெண்ணைக் கொடுமைக்கும் உட்படுத்துகிறார்கள்.

தனது தாய்-தந்தையரின் குடும்பத்தையே அந்தப் பெண் வெறுக்கிறாள். தனது குடும்பத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்று முடிவு செய்வதில் தனக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்றும் போராடுகிறாள். இதுதான் முரண் இயக்கம்—-சமுதாய வளர்ச்சியின் முரண் இயக்கம்!

பழைய மரபுகளுக்கும் புதிய மரபுகளுக்கும் இடையே இங்கு ஒரு மோதல் நிகழ்கிறது. பழைமை அழிந்து புதுமை மலர்வது என்பது வரலாற்றில் தவிர்த்திட முடியாதது என்கின்ற ஒரு தெளிவு—-ஒரு முரண் இயக்க அறிவு—-இதனால் நமக்குள் உருவாகுகிறது.

வீட்டை விட்டுப் பெண் வெளியேறுகிறாள்; தனது குடும்பத்தை உடனடியாக அமைத்துக் கொள்கிறாள். புதிய மரபு ஒன்றும் உருவாக்கப் பட்டு விடுகிறது.

இந்தப் புதிய மரபினைப் புரிந்து கொள்வதிலும் நமக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஏனென்றால், அனுபவ முறையான முரண் இயக்க அறிவு மட்டும் இதற்குப் போதும் ஆனதாக இருக்கிறது.

இனி, ஆண் பிள்ளைக்கு நாம் வருவோம்.

படித்து முடித்து விட்டுப் பையன் வேலைக்குச் செல்கிறான்; ஒரு தொழிற் சாலையில் அவனுக்கு வேலை கிடைக்கிறது.

குடும்பத்திற்குள், தாய்-தந்தையருக்குக் கட்டுப் பட்டவன்தான் இவன் என்ற போதிலும், சமுதாயத்தில், யாருக்கும் இவன் கட்டுப் பட்டவன் அல்லன்; விடுதலையான ஒரு தனி மனிதன் இவன்! இவனுக்கு வேலை கொடுத்து இருக்கின்ற முதலாளியும் விடுதலையான ஒரு தனி மனிதர்தாம் ஆவர்.

இந்த வகையில், இவர்கள் இருவரும் சமம் ஆனவர்கள்; சமமான உரிமைகளும் மாண்பும் உடையவர்கள். இந்த முதலாளி-உழைப்பாளி உறவினை அனுபவ அறிவினால் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடிவது இல்லை!

ஆனால், ஆண்டையையும் அடிமையையும் அனுபவ அறிவினால் நாம் புரிந்து கொள்ள முடியும்.

சமுதாய நிலையில் சமமான உரிமையோ, மாண்போ இல்லாதவர்கள் அடிமைகள்! ஆண்டையின் கட்டளைகளைத் தலையின் மேல் ஏற்று அடிமை செயல் படுகிறான்; ஆண்டையோ அவனது உழைப்பில் வாழ்கிறான். நமது அனுபவ அறிவின் எல்லைக்குள் அடங்கிய நிகழ்மைகள் இவை!

ஆனால், முதலாளி-உழைப்பாளி உறவில், இவர்கள் இருவரும் சமன்மை ஆனவர்கள். எனினும், உழைப்பின் விளைவுகள் அனைத்தும் முதலாளியை மட்டும்தான் சென்று அடைகின்றன. கூலி கொடுத்தது போக எஞ்சி இருக்கின்ற உழைப்பின் விளைவினை ஆதாயமாக முதலாளி பெறுகிறார்.

எப்படி இது இயன்மை ஆகிறது ? இதனைப் புரிந்து கொள்வதற்குதான் நமக்குக் காரண அறிவு தேவைப் படுகிறது.

‘உற்பத்திச் சாதனங்களையும் உழைப்பு ஆற்றலையும் அவற்றிற்கு உரிய விலையில் வாங்கி, தமது உற்பத்திப் பொருள்களையும் அவற்றிற்கு உரிய விலையில் மட்டும் விற்று, அதே நேரத்தில், ஆதாயத்தையும் முதலாளிகள் கைப் பற்றிக் கொள்கிறார்கள் என்று ஜெய மோகன் சுட்டிக் காட்டுகின்ற மார்க்சின் கூற்றினை ஈண்டு நாம் எடுத்துக் கொள்வோம்.

முதலாவதாக, உழைப்பு என்பது வேறு; உழைப்பு ஆற்றல் என்பது வேறு! இரண்டாவதாக, உழைப்பு ஆற்றலின் மதிப்பு என்பது வேறு; அது படைக்கின்ற மதிப்பு என்பது வேறு!

ஆடம் ஸ்மித்தும் ரிக்கார்டோவும் அவர்களுக்கும் முந்திய எத்தனையோ ஆய்வாளர்களும் புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த இந்த வேறுபாடுகளைக் கார்ல் மார்க்ஸ் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது என்றால், அவரது சமுதாய அக்கறையின் தீவிரம் மட்டும் அல்ல அதற்குக் காரணம்; அவரது முரணியக்கச் சிந்தனையின் தீவிரம்தான் காரணம்!

தங்கள் உழைப்பிற்குக் கைமாற்றாக, ஒரு குறிப்பிட்ட அளவு கூலியை உழைப்பாளர்கள் பெறுகிறார்கள் என்பது, நமது பகுத்தறிவின் மேற் பரப்பில் யாவரும் காணக் கிடக்கின்ற ஒரு நிகழ்மை!

கூலி-உழைப்பு பற்றிய இந்த மேம்போக்கான அறிவினோடு கூட நமது தேடல் நிறைவு அடைந்து விடலாம்; உழைப்பாளர்களின் உழைப்பினை முதலாளிகள் சுரண்டுகிறார்கள் என்று பேசுவதற்கும் ‘சுரண்டல் ஒழிக! ‘ என்று நாம் முழக்கம் இட்டுக் கொள்வதற்கும், இந்த அறிவே நமக்குப் போதும் ஆனதாகவும் இருக்கலாம்.

ஆனால், இந்த அறிவோ ஓர் அனுபவ அறிவு! அதே நேரத்தில், மேம்போக்கான வெறும் அனுபவ அறிவு என்பது மட்டும் அல்ல, இதன் குறைபாடு! பிழையானது ஓர் அறிவு இது, என்பதுதான் இதன் குறைபாடு!

காரணம், தங்கள் ‘உழைப்பு ‘க்குக் கைமாற்றாக உழைப்பாளர்கள் பெறுவது அல்ல, கூலி! மாறாக, தங்களது ‘உழைப்பு ஆற்றலு ‘க்கு விலையாக உழைப்பாளர்கள் பெறுவதுதான் கூலி!

ஏனென்றால், ‘உழைப்பு ‘ என்பது உழைப்பு ஆற்றலின் செலவீடு! இந்த உழைப்போ, அவசியமான உழைப்பு மற்றும் மிகையான உழைப்பு என்னும் இரண்டு கூறுகளைக் கொண்டது. இவற்றில், ஆதாயமாக மெய்மைப் படுத்திக் கொள்ளப் படுவதோ, மிகையான உழைப்பு!

இங்கே, (1) ‘உழைப்பிற்குக் கூலி ‘ என்னும் நமது ‘அனுபவ அறிவின் ‘ மேற் பரப்பினை, (2) நமது ஐயப் பாட்டின் கேள்விகளால் உடைத்துப் பிளந்து, அதனோடு ‘முரண் பட்டு ‘த் தொடர்ந்து ‘இயங்கி ‘ச் சென்று, (3) உழைப்பு ஆற்றலின் விலைதான் கூலி; மதிப்பு-விதியின் வெளிப்பாடுதான் விலை-விதியின்மை; என்னும் ‘காரண அறிவினை ‘ வந்து நாம் அடைவதை நாம் காண்கிறோம்.

கூடவே, வெளித் தோற்றத்தின் குறிகளிலும் குணங்களிலும் கோலங்களிலும் (குமர குருபரர்) மயங்கிக் கிடந்திடாமல், சாரத்தைச் சென்று நாம் அடைகின்ற பொழுதுதான், வெளித் தோற்றத்தின் மாய்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதும் நமக்குத் தெளிவு ஆகிறது. இல்லை என்றால், நமக்கு எதற்கு முரணியக்க ஆய்வு முறை ? ‘ (பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், பக்.63-64.)

ஆக, அனுபவ அறிவு, முரண் இயக்க அறிவு, ஆகிய இரண்டு கட்டங்களையும் கடந்து வந்ததன் பின்னர்தான், காரண அறிவு நிலையினை எய்தி, வெளித் தோற்றத்தின் உண்மையினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்பது தெளிவு.

இந்த மூன்று கட்டங்களிலும், அதருக்கத்திற்கு உரிய இடம் எது ? என்பதுதான் மிகவும் முக்கியமான ஒரு கேள்வி.

அதருக்கம்

நாம் பார்த்த குடும்பத்தில், தாய்-தந்தையரின் அதிகாரத்தை அவர்களது பெண் பிள்ளை மீறுகிறாள். அவளைப் பொறுத்த வரை, அவளது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முரண் இயக்கம் இது!

அதருக்கம் என்று ஜெய மோகன் வருணிப்பது இந்த முரண் இயக்கத்தினைத்தான் ஆகும். ஏனென்றால், தாய்-தந்தையரின் அதிகாரம் என்னும் தருக்கத்திற்கு எதிரான மகளின் அதருக்கம் அது!

ஆனால், இந்த அதருக்க நிலையுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை இந்தப் பெண் பிள்ளை நிறுத்தி விட வில்லை; வாழ்க்கையின் தொடர்ந்த பயணத்தில் தனக்கு என்று புதியது ஒரு குடும்பத்தினை அவள் உருவாக்கிக் கொள்கிறாள். இதுதான் அவளது புதிய தருக்கம்! இந்தப் புதிய தருக்கத்தை எதிர்த்து அவள் பெற்று எடுக்கின்ற பெண் பிள்ளையும் ஒரு நாள் போராடிடலாம் என்பது, அதாவது, அதருக்கமாகக் கிளர்ச்சி புரிந்திடலாம் என்பது வேறு விசயம்!

இங்கே, தருக்கம்-அதருக்கம்-புதிய தருக்கம் என்று குடும்ப வாழ்க்கையின் முரண் இயக்கம் முடிவு அடைவதனை நாம் காண்கிறோம்.

ஆனால் ஜெய மோகனோ, தருக்கம்-அதருக்கம் என்று அதருக்கத்தை மட்டும் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்; முரண் இயக்க நிலையினைக் கடந்து சென்று, காரண அறிவு நிலையை நோக்கி நடை போடுவதற்கு முயன்றிடாமல், மீண்டும் அனுபவ அறிவு நிலைக்கே அவர் திரும்பிச் சென்றும் விடுகிறார்; அதருக்கத்தின் சிதறல்களை நெய்து நெய்து அனுபவ வாழ்க்கையினுள் மாயங்களைப் படரவும் விட்டு விடுகிறார்.

எனினும், அனுபவ அறிவின் எல்லைக்கு உள்ளேயே இவை அனைத்தும் நடந்து முடிந்து விடுகின்றன என்பதுதான் இங்கே முக்கியம். ஏனென்றால், காரண அறிவு நிலையில் நின்று பார்த்தால், தருக்கத்தினுள் கருக் கொண்டு இருப்பதுதான்—-அதன் வெளிப்பாடுதான்—-அதருக்கம்; புதிய தருக்கத்தினைத் தேடுகின்ற அதருக்கம்!

நாம் எடுத்துக் கொண்டு இருக்கின்ற குடும்பத்திற்கே மீண்டும் நாம் திரும்புவோம். மீண்டும் ஒரு முறை அதனை நாம் நோக்குவோம்.

இந்தக் குடும்பம், ஆண்டை-அடிமைச் சமுதாயத்தின் குடும்பம் அல்ல; முதலாண்மைச் சமுதாயத்தின் குடும்பம்! எனவே, தனி மனித விடுதலை, தனி மனித உரிமை, தேர்வு உரிமை, முதலிய வற்றைக் கொண்ட தனி மனிதர்களின் ஒரு குடும்பம் இது! அதாவது, விடுதலை, உரிமை, முதலிய தருக்கங்களால் பின்னப் பட்டு இருக்கின்ற ஒரு குடும்பம் இது!

இந்தத் தருக்கமோ தந்தையின் அதிகாரம், மகளின் மோதல் என்று அதருக்கமாக வெளிப் பட்டு, புதியது ஒரு முதலாண்மைக் குடும்பமாக மெய்மைப் படுத்தப் படுகிறது, அவ்வளவுதான்! பொருளாதார வகைப்பாடுகளைப் பொறுத்த வரை, மிகவும் தெளிவாக இதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பொருளாதார உறவுகளில், மதிப்பு என்பதுதான் தருக்கம்; அதன் வெளிப் பாடான விலை என்பதுதான் அதருக்கம். எல்லை மீறுகின்ற வகையில் அதருக்கம் இயங்கத் தொடங்கி விடுகின்ற பொழுது, அதற்கு அடிப்படையான தருக்கமே உடை பட்டும் போய் விடுகிறது.

புரட்சிகரமான நிலவரம் என்பது இதுதான் ஆகும். இது பற்றி விளக்கம் வேண்டுபவர்கள், வாழ்க்கையின் கேள்விகளைச் சற்றே படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

மூளைச் சோம்பல்

காரண அறிவு பற்றிய நமது விவாதங்கள் கொஞ்சம் மூளைச் சோம்பலினை நம்முள் உருவாக்குகின்ற வகையில் அமைந்து இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த மூளைச் சோம்பலினைக் கடந்து வந்திடாமல் இன்றைய முதலாண்மைச் சமுதாயத்தை நாம் புரிந்து கொண்டு விட முடியாது.

இனி, இரண்டு பொருள்களில் ‘காரணம் ‘ என்னும் சொல்லை நாம் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதும் ஒரு குழப்பம்!

எனினும், ஒரு விளைவுக்கு ஏது ஆகின்ற மற்றும் ஒன்று என்னும் பொருளிலும் அறிவு நிலைகளினுள் ஒன்று என்னும் பொருளிலும், இடத்திற்கு ஏற்ப இதனை நாம் பொருட் படுத்திக் கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை.

ஆனால், சொல் ஆடல், கதை ஆடல், என்று எல்லாம் புதிய ஆடல்களை அறிமுகம் செய்து விட்டதாகக் கொண்டாடிக் கொண்டு வருபவர்களோ, இந்தச் சிக்கலுக்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள்; தங்களைப் போன்ற மூளைச் சோம்பேறிகளாக தங்கள் வாசகர்களையும் வளர்த்து எடுத்திடவும் முற்படுகிறார்கள்.

இந்த மூளைச் சோம்பலினைச் சற்றே புரிந்து கொள்ளுகின்ற வகையில், ஜெய மோகன் அறிமுகம் செய்து வைத்திடத் துடிக்கின்ற ‘மொழிபு ‘ என்பதனுள் இனி நாம் நுழைவோம்.

04-09-2004

(தொடரும்)

Series Navigation