மெய்மையின் மயக்கம்-18

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

சொற்களும் அவற்றின் பொருள்களும்

அழகு என்பதையும் கதை-கவிதைகளின் சுவனம் என்பதையும் வேறு படுத்திப் பார்த்துக் கொள்ளுகின்ற வகையில், அழகு என்பது பற்றி விவாதித்து நாம் முடித்து இருக்கிறோம். அழகு இயல் என்பதும் கதை-கவிதைகளின் சுவனிப்பு என்பதும் ஒன்றாகிட முடியாது என்னும் ஒரு தெளிவு இதனால் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது. இனி, சுவனம் பற்றிய ஒரு விவாதத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நமது சொல் ஆட்சிகளை வரையறுத்துக்

கொள்வதற்கு நாம் முயல்வோம்.

சொற்களின் பொருள்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டுக் கொள்ளத் தேவை இல்லை என்று கதைஞர் அஷ்வ கோஷ் முழக்கம் இட்டுக் கொண்டு வருவது நமது காதுகளில்

விழாமல் இல்லை. கூடவே, சொற்களின் பொருள்களை வரையறுத்து விட முடியாது என்றும் சொற்களின் மேல் அவற்றின் பொருள்கள் வழுக்கிக் கொண்டு சென்று

விடுகின்றன என்றும் கொள்வது, பின்-புதின வாதத்தின் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று என்று நண்பர் ஜெய மோகனிடம் இருந்து நாம் கற்றுக் கொண்டும்

இருக்கிறோம்.

ஆனால், பின்-புதின வாதத்தின் பித்தத்தினைத் தெளிந்திட வைப்பதற்காக மிகுந்த நல் எண்ணத்துடன் நூல் ஒன்றினை எழுதி இருக்கின்ற அஷ்வ கோஷ் அவர்களைக் கூட, அதே பின்-புதினப் பித்துதான் பிடித்துக் கொண்டும் இருக்கிறது என்பதுதான் இதில் வேடிக்கை! எனினும், இதில் நாம் வியப்பு அடைவதற்கு எதுவும் இல்லை.

ஏனென்றால், ஸ்தாலினிசத்தைத் தூக்கி சுமந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு தலைக்குள், பின்-புதின வாதம் புகுந்து விளையாடுவது ஒன்றும் புதுமை அல்ல! புரட்சிக் கவிஞர் இன்குலாப் அவர்களையே பின்-புதின வாதம் விட்டு வைத்திட வில்லை

என்றால், கதைஞர் அஷ்வ கோஷ் அதற்கு எம் மாத்திரம் ?

எனினும், நமது சொல் ஆட்சிகளை முதலில் நாம் வரையறுத்துக் கொள்வது நமது கடமை ஆகிறது.

சொல் ஆட்சிகள்

ஏதேனும் ஒரு காட்சியினை அடிப்படையாகக் கொண்டு இருப்பதுதான் அழகு

என்பதால், ஓவியம் மற்றும் சிற்பம் ஆகியவற்றினையும் அழகின் எல்லைக்குள் நாம்

கொண்டு வந்து விடலாம். எனவே, அழகின் சுவனிப்பினை ‘அழகுச் சுவனம் ‘ என்று நாம் அழைக்கலாம்.

செவிப் புலனின் அடிப்படையில் அமைகின்ற இசையின் சுவனிப்பினை ‘இசைச் சுவனம் ‘ என்று நாம் அழைக்கலாம்.

மிஞ்சி இருக்கின்ற கதை-கவிதைகளின் சுவனிப்பினைப் ‘புனைவுச் சுவனம் ‘ என்று நாம் அழைப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

அப்படி என்றால், சுவனம் என்னும் சொல்லினைத் தெளிவு இன்றி இது வரை நாம் பயன் படுத்திக் கொண்டு வந்து இருக்கிறோம் என்று பொருள்; நமது விவாதத்தின் தற் போதைய நிலையில்தான் இந்தத் தெளிவு நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்று பொருள்; எனவே, சுவனம் என்னும் தலைப்பின் கீழ் அழகுச் சுவனம், இசைச் சுவனம் மற்றும் புனைவுச் சுவனம், ஆகியவை அடங்கும் என்றும் பொருள்!

இங்கே, இசைச் சுவனம் என்பது நமது விவாதப் பொருள் அல்ல என்பதால், புனைவுச் சுவனத்தினை மட்டும் இனி நாம் எடுத்துக் கொள்வோம்.

அதே நேரத்தில், தருக்கம், தத்துவம், தவம், என்று எல்லாம் தமது வாதங்களை ஜெய மோகன் அடுக்கிக் கொண்டே செல்வதால்—-அவரைப் பின் பற்றிச் சென்றுதான் அவரை நாம் எதிர் கொண்டும் ஆக வேண்டும் என்பதால்—-அறிதல் பற்றிய அவரது கருத்துக் கடலினை நீந்திக் கடப்பதற்கு நாம் முயல்வோம்.

அறிவு நிகழ்ப்பாடு

அறிதல் பற்றிய ஜெய மோகனின் கருத்துகள் பின் வருமாறு:

‘இலக்கியம் ஒருவகை அறிதல் முறை. அறிவியல், தர்க்கம் அல்லது தத்துவம் போல அதுவும் தனித்துவம் கொண்ட அறிதல் முறை. இந்திய மரபு மூன்று அறிதல் முறைகளைச் சொல்கிறது. தர்க்கம் [அறிவியல், தத்துவம்]. கற்பனை [இலக்கியம், கலைகள்], தியானம் [உள்ளுணர்வு]. முழுமுதல் அறிவு மூன்று தளங்களையும் திருப்திப் படுத்த வேண்டும் என்கிறது. கற்பனை ஓர் முக்கிய அறிதல்முறையாக எல்லாப் பகுதிகளிலும் இருந்துள்ளது. இலக்கியம் மனித மனதை, அதற்கும் சமூக அமைப்புகளுக்குமான உறவுகளை, வாழ்க்கையை அது நேர்கொள்ளும் போது ஏற்படும் சிக்கல்களை அறிய முயல்கிறது. அதற்காகவே இந்தப் பல்லாயிரம் நூல்கள். ‘

ஜெய மோகனின் கருத்துகளைச் செரித்துக் கொள்ளுகின்ற வகையில், பின் வருமாறு அவற்றை நாம் சுருக்கிக் கொள்ளலாம்.

(1) அறிவியல் என்பது ஓர் அறிதல் முறை.

(2) தருக்கம், அல்லது தத்துவம் என்பது இன்னும் ஓர் அறிதல் முறை!

(3) இவ் விரண்டும் போன்றது ஒரு மூன்றாவது அறிதல் முறைதான் இலக்கியம், அதாவது, கதை-கவிதைகளின் வாசிப்பு!

இந்த மூன்று அறிதல் முறைகளும் பொதுப் படையானவை (ஜெனரல்); உலகு

அனைத்திற்கும் பொருந்தி வருபவை!

ஆனால், இந்தியச் சிந்தனை மரபு சற்று வேற்றுமை ஆனது; பின் வருமாறு அதனை ஜெய மோகன் வகைப் படுத்துகிறார்.

(1) தருக்கம்! இதற்குள் அறிவியலும் தத்துவமும் அடக்கம்!

(2) கற்பனை! இதற்குள் கதை-கவிதைகளும் பிற கலைகளும் அடக்கம்!

(3) தவம்! இதற்குள் உள்-உணர்வு மட்டும் அடக்கம்!

( ‘தியானம் ‘ என்பதும் ‘தவம் ‘ என்பதும் ஒன்றுதான் என்பதால், தவம் என்பதை ஈண்டு

நாம் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.)

இந்த மூன்றும், மூன்று தளங்கள்; இந்த மூன்றும் நிறைவு அடைகின்ற பொழுதுதான், ‘முழு முதல் ‘ அறிவாக ஒரு நிறைவினை நமது அறிவு எய்துகிறது.

தெளிவும் சிதறலும்

ஜெய மோகனின் கருத்துகள் மிகவும் சிக்கல் ஆனவை! சிக்கலான அவரது கருத்துகளை மிகவும் எளிதாக நாம் புரிந்து கொள்ள முயல்வது உண்மையில் ஒரு குற்றமும் ஆகும்! ஏனென்றால், ‘தெளிவு ‘ என்பதுதான் கதை-கவிஞர்களின் முக்கியமான எதிரி; ஜெய மோகனைப் பொறுத்த வரையோ, அதுதான் முதல் எதிரி!

அதே நேரத்தில், சொற்களின் ஆட்சியிலும், அதன் மூலம், அவர் வெளிப் படுத்துகின்ற கருத்துகளிலும் ஊடாடி நிற்கின்ற குழப்பம்தான் அவரது முதல் பலம்; தெளிவுகளைக் கலைத்துப் போட்டு, அல்லது கட்டு-உடைத்து, அனைத்தையும் குழப்பி விடுகின்ற அவரது உத்திகள்தாம் அவரது தனித் திறமை!

எனினும், ஜெய மோகனின் கருத்துகளை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து

கொள்வதற்கு நாம் முயல்வோம்.

ஜெய மோகன் கூறுவது என்ன ?

(1) உலகு அனைத்திற்கும் பொதுப் படையான அறிதல் முறைகள் இரண்டு வகைப் படும். இவற்றுள், தருக்கம், அறிவியல், தத்துவம், கலைகள், ஆகியவை அடங்கும்.

(2) இந்தியச் சிந்தனை மரபிலும் இவை இரண்டும் உண்டு என்பதால், இந்தியச்

சிந்தனை மரபாக இங்கே எஞ்சி நிற்பது தவம் மட்டும்தான் ஆகும்.

சரி! இதனால் எல்லாம் நமக்கு ஜெய மோகன் சொல்ல வருவது என்ன ? அல்லது ‘மொழிந்திட ‘ முற்படுவதுதான் என்ன ?

கதை-கவிதைகளின் தோற்றுவாய், தத்துவம்தான் என்றா ? கற்பனைதான் என்றா ? அல்லது தவம்தான் என்றா ? அல்லது, வாழ்க்கையை அறிவதற்குதான் தத்துவம் முயல்கிறது; கலைகளும் முயல்கின்றன; எனவே, தத்துவமும் கலைகளும் ஒன்றுதான் என்றா ?

அறிவு நிகழ்ப்பாட்டில், கதை-கவிதைகள் ஆற்றுகின்ற அதே பங்கினைத்தான் தத்துவமும் ஆற்றுகிறது என்றால், கதை-கவிதைகளுடன் நிறைவு அடைந்து விடாமல்,

தத்துவம் பற்றியும் தருக்கம் பற்றியும் ஜெய மோகன் பேசிட வேண்டிய அவசியம் என்ன ?

மூன்றான தளங்களையும் கடந்து வந்ததன் பின்னர்தான் ‘முழு முதல் ‘ அறிவினை நாம் எய்திட முடியும் என்றால், என்ன அது, முழு முதல் அறிவு ? கதை-கவிதை என்னும் தளத்திற்குள் மட்டும் அது அகப்படுவது இல்லையா ? அப்படி என்றால், ஏன் அப்படி ?

இத் தகு கேள்விகளுக்கு எல்லாம் விடைகளைத் தெரிந்து கொள்வதற்கு நம்மால் முடிய வில்லையே என்று இங்கு நாம் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பதில் எந்தப்

பொருளும் இல்லை. ஏனென்றால், ஜெய மோகனிடமும் இவற்றிற்கு விடைகள் இல்லை; ஆனால், விடைகளைக் காண்பதற்கு அவரால் முடியாது என்பதால் அல்ல,

விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது மட்டும்தான் அவரது மிகப் பெரிய பலம் என்பதால்!

எனினும், தாம் தெரிந்து கொள்ளாத விசயங்களைப் பற்றி எல்லாம் எதற்காக ஜெய மோகன் இங்கே பேசுகிறார் ?

இவற்றை எல்லாம் அவர் தெரிந்து வைத்து இருக்கிறார் என்பதை நாம் தெரிந்து

கொள்ள வேண்டும் என்பதற்காகவா ? அல்லது, புரிந்தும் புரியாமலும் அவர் தெரிந்து வைத்து இருக்கின்ற விசயங்களை எல்லாம், புரிந்தும் புரியாமலும்தான் நாமும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனாலா ?

இதனால்தான், தருக்கம் என்றும் தத்துவம் என்றும் தவம் என்றும் கற்பனை என்றும் கண்டபடி எல்லாம் கதைகளை அளந்து வாசகர்களை அவர் மிரட்டிக் கொண்டு

வருகிறாரா ?

சரி, பெரிதாக மிரட்டுபவர்தாம் பெரிய எழுத்தாளர் என்றே இருக்கட்டும்! ஆனால், கதை-கவிதைகளுடன் நிறைவு அடைந்து விடுவதற்கு அவரால் முடிய வில்லையே, ஏன் ? கதை-கவிதைகள் என்று அல்லாமல், அவற்றிற்கு வேறு பெயர்களைக் கொடுப்பதற்கு அவர் முற்பட்டுக் கொண்டு வருவதும்தான் ஏன் ?

எப்படியும், தாம் கருத்துச் செலுத்திப் பார்த்திடாத செய்திகளைப் பற்றி மிகவும்

துணிச்சலுடன் இங்கே ஜெய மோகன் பேசுகிறார் என்பதில் நமக்கு ஐயம் இல்லை. அப்படி என்றால், தமது வாசகர்களைப் பற்றிய அவரது மதிப்பீடு என்ன ? இளித்த

வாயர்கள் என்பதா ?

சரி, போகட்டும்! கதை-கவிதைகளைத்தான் நான் எழுதுகிறேன்; அவற்றைத்தான் நான் படிப்பேன்! என்று அமைந்து விடுவதற்கு ஜெய மோகனால் முடிய வில்லையே, இதற்குக் காரணம் என்ன ? உணவுக்கும் தண்ணீருக்கும்தான் நாட்டில் பஞ்சமே ஒழிய,

கதை-கவிதைகளுக்கு அல்லவே!

இப்படி எல்லாம் ஜெய மோகன் சிந்திக்கிறாரோ இல்லையோ, வாசகர்களாகிய நாம்

சிந்தித்து ஆக வேண்டும்; நாம் மதிக்கின்ற எழுத்தாளர்கள் நமக்கு அளிக்கின்ற மதிப்பு என்ன ? என்பதை நாம் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும்.

வாசகருக்கு மரியாதை

தங்கள் சுவனர்கள் மீது எந்த அளவுக்கு ஒரு மதிப்பினை நடிகர்கள் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், காசு-பணங்களைச் செலவு செய்து சுவனர் மன்றங்களை அமைத்து, தங்களுக்கு என்று ஒரு சுவனர் பட்டாளத்தினை உருவாக்கிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக அவர்கள் செயல் பட்டுக் கொண்டு

வருகிறார்கள்.

நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். மக்களை மட்டும் அல்ல, தங்கள் தொண்டர்களைக் கூட அவர்கள் மதிப்பது இல்லை. ஆனால், மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றுவதற்கு மட்டும் மிகவும் நன்றாக அவர்கள்

தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

கோபுரங்களிலும் கோட்டைகளிலும் குந்திக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்;

பணத்திலும் பதவிகளிலும் புரண்டு கொண்டு வருபவர்கள்; தங்களை மதிப்பவர்களை இவர்கள் மதிக்காமல் இருப்பதில் வியப்பும் எதுவும் இல்லை.

ஆனால், என்ன ஆயிற்று இந்த எழுத்தாளர்களுக்கு ?

கதை எழுதுவதில் வல்லவரான ஜெய காந்தனுக்குத் தத்துவம், சமயம், பொருளாதாரம், முதலிய அனைத்தும் தண்ணீர் பட்ட பாடு போலும்! எல்லாவற்றைப் பற்றியும் அவர் எழுதுவார்; அவர் மீது மதிப்பு வைத்து இருக்கின்ற நாமோ அவர் எழுதுகின்ற அரை-குறைகளை எல்லாம் அள்ளி எடுத்து நமது மண்டைகளை நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால், இளித்தவாயர்கள் நாம்—-அவரது வாசகர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக! அவரது சன்னி தானத்தில் நமக்கு எந்த மதிப்பும் இல்லை—-அவரை நாம் வழி பட்டுக் கொள்கின்ற முதல் மரியாதையினை நமக்கு அவர் அருளி

இருக்கிறார் என்பதைத் தவிர ?

தங்கள் வாழ்க்கை அனுபவங்களை வாசகர்களுடன் எழுத்தாளர்கள் பகிர்ந்து

கொள்ளுகிறார்கள் என்பது வேறு விசயம்; அவர்கள் எழுதி உள்ள கதைகளுடன் இன்னும் ஒரு கதையாக அவர்களின் கதையையும் வாசகர்கள் சுவனித்துக்

கொள்கிறார்கள், அவ் அளவுதான்! அதற்காக, தங்களுக்குத் தெரியாத விசயங்களைப் பற்றி எல்லாம் எழுத்தாளர்கள் கயிறு திரித்துக் கொண்டு இருப்பது என்ன ஞாயம் ? எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் ஒன்றாகி விட முடியும் என்றால், இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன ?

கதைஞர் சுஜாதா அவர்களை நாம் எடுத்துக் கொள்வோம். திடும் என்று ஒரு நாள் இவருக்குத் தனித் தமிழ்ப் பற்று ஏற்பட்டு விடும்!

வரவேற்கப் பட வேண்டிய விசயம்தான்! ஆனால், தமிழ் வாக்கியங்களின் இலக்கணப்

பிழைகளைப் பற்றியும் இவர் பேசிடத் தொடங்கி விடுகிறாரே, இது எப்படி ? எனினும், இவரது வாக்கியங்களில் காணப் படுகின்ற பிழைகளைப் பற்றி யாராவது கேட்டு

விட்டால் மட்டும் அதனை இவர் மூடி மறைத்தும் விடுகிறாரே, என்ன ஒரு தமிழ்ப் பற்று இது—-மூடு-மந்திரத் தமிழ்ப் பற்று ?

காலத்திற்குக் காலம் மதங்கள் மாறிக் கொண்டுதான் வந்து இருக்கின்றன என்று எங்கோ படித்ததை எடுத்து உரைத்து விட்டு, இந்து மதத்தின் வேர்களை வேதங்களுக்குள் தேடிப் பார்ப்பதற்குத் திடும் என்று ஒரு நாள் இவர் முனைந்து

விடுகிறார். ஆனால், வேதங்களின் மேல் அப்படி என்ன ஒரு கோபம் இவருக்கு என்பதுதான் நமக்குப் புரிய வில்லை. ஒரு வேளை, கி. வீர மணி அவர்களின்

கூட்டணியில் இவரும் சேர்ந்து விட்டாரோ, என்னவோ!

இவை எல்லாம் போகட்டும் என்றால், திடும் என்று ஒரு நாள் தமது வாசகர்களுக்கு

மார்க்சியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கும் இவர் முற்பட்டு விடுகிறார். ஆனால், அதுவோ ஸ்தாலினிசமாகச் சீர் அழிந்து விடுகிறது.

அவ் அளவு ஏன், ஜெய மோகன் கூறிட வில்லையா—-மார்க்சியம் காலாவதி ஆகி

விட்டது என்று ? ஆனால், உலகு அளாவிய முதலாண்மையின் சுரண்டலை எதிர்த்திடத் தக்க வலிமையான ஆயுதம் மார்க்சியம்தான் என்று அவர் எழுதி இருந்தது ஒரு சில

மாதங்களுக்கு முன்னர்தான் ஆகும்!

தங்கள் வாசகர்களைப் பற்றி என்னதான் இவர்கள் நினைத்துக் கொண்டு

இருக்கிறார்கள் ? இவர்களின் எடு-பிடிகள் என்றா ?

தங்கள் வாசகர்கள் மேல் இவர்களுக்கு மரியாதை எதுவும் இல்லை என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. வாசகர்கள் ஆகிய நாம்தாம் இதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டும் ஆக வேண்டும்.

இனி, ஜெய மோகனின் தவத்திற்கு நாம் வருவோம்.

தவம்

‘தவம் ‘ என்பதைப் பற்றி அடிக்கடி ஜெய மோகன் பேசுகிறார். அவர் எழுதுவது மட்டும் அல்ல; படிப்பதும் கூட ஒரு தவம்தானாம்!

ஆனால், தவம் என்றால் என்ன ?

குண்டியில் இருந்து எழுப்பிக் கொண்டு வந்து, மூடிய கண்களுக்குள் மின்னலாக

ஒளிர விட்டு, மண்டையில் நமது ஆற்றல்களை நிலைத்திடச் செய்கின்ற ஒரு மாயமான

நிகழ்ப்பாடுதான் ‘தவம் ‘ என்று கூறுகிறார் கோவை ஞானி!

எதையும் அறியாமல் எல்லா வற்றையும் அறிந்து விடுவது, எனவே, எதையும்

சொல்லாமல் எல்லா வற்றையும் சொல்லி விடுவது, போன்ற ஓர் ஆற்றல்—-ஒரு திறல்

—-ஒரு திறமை—-இதனால் தமக்குள் உருவாகி இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார்.

அருணகிரி நாதரோ, ‘சும்மாய் இருத்தல் ‘ என்னும் நிலையினை எய்துவதற்கான ஓர் ஏதுதான் தவம் என்று கருதுகிறார். இந்த நிலையினை அடைந்து விட வேண்டும் என்று அவர் ஆசைப் பட்ட போதிலும், இந்த முயற்சியின் குறுக்கே வந்து நின்று

விடுகின்றனவாம் வேறு பல ஆசைகள்! எனவேதான், முருகனிடம் அவர்

இறைஞ்சுகிறார்—- ‘சும்மாய் இருக்கும் நிலை ‘யினைத் தந்து விடு என்று!

மனத்தை ஒருநிலைப் படுத்துவதுதான்—-ஒருமைப் படுத்துவதுதான்—- ‘தவம் ‘ என்று அருணகிரி நாதருக்கு விளக்கம் அளிக்கிறார் கிருபானந்த வாரியார். ஒரு ‘வெறுமை ‘

நிலைதான் இந்த ‘ஒருமை ‘ நிலையும் ஆகுமாம்!

இந்த நிலையினைத் தமக்குத் தந்திடாத முருகனின் மேல் அருணகிரி நாதருக்கு ஒரு நாள் கோபம் ஏற்பட்டு விடுகிறது. எனவே, தாம் எய்திட முடியாத வெறுமை நிலையினை முருகனின் மேல் சார்த்தி, ‘வெட்ட வெளி ‘ என்றும் ‘பாழ் ‘ என்றும் முருகனை அவர் வசைந்து தீர்த்து விடுகிறார்.

ஆனால், ஜெய மோகனின் தவமோ இத் தகையது ஓர் ஒருமைப் பாட்டின் தவமாக

நமக்குத் தெரிய வில்லை. ஏனென்றால், எழுதுவதும் படிப்பதும் கூட அவருக்கு ஒரு தவம்தான் என்ற போதிலும், இந்தத் தவத்தின் நோக்கமோ ஒருமைப் பாட்டினைக் குலைப்பது; அனைத்தையும் சிதைப்பது! உலகு எங்கணும் சிதைவுகளை அள்ளித்

தெளித்து அதன் மூலம் பன்மைப் பாட்டினை நிலைநிறுத்துவது!

ஆனால், பன்மைப்பாடு என்பது உலகில் இல்லாமல் போய் விட்டது போலவும் இவர் போன்றவர்கள்தாம் அதனை உருவாக்கி உலகில் உலவ விட்டிட வேண்டும் என்பது போலவும், இவர்கள் எண்ணிக் கொண்டு வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை!

‘உருவும் அருவும் உரு-அருவும் ஆகிப்

பருவ வடிவம் பலவாய் ‘ என்று

பன்மைப் பாட்டினுள் ஒருமைப் பாட்டினை—-ஒருமைப் பாட்டினுள் பன்மைப்

பாட்டினை—-காண்கின்ற குமரகுருபரர், இவர்களைப் பார்த்து நகைத்துக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொள்வதற்கு இவர்களுக்கு நேரமும் இல்லை; வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால், மூளை நோகாத ஞானத்தினைத் தேடிக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்!

எனினும், ஜெய மோகனின் முழு முதல் அறிவைப் புரிந்து கொள்வதற்காகத் தவம் என்பதனைப் புரிந்துக் கொள்வதற்கு நாம் முயன்று கொண்டு இருப்பதில் எந்தப்

பொருளும் இல்லை! ஏனென்றால், தவம் என்றால் என்ன ? என்று விளக்கிக்

காட்டுவதற்கு அவர் முற்பட வில்லை. எப் பொழுதாவது நமக்குத் தவம் என்பதை அவர் விளக்கி அருளுவாரா ? என்று நாம் எதிர் பார்த்தால், அதற்கும் எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புப் பேரவையில் ஹிந்தியில் நடைபெற்றுக் கொண்டு வந்து இருந்த விவாதங்கள் தமக்குப் புரிய வில்லையே என்று அவைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத்திடம் முறையிட்டார்களாம் ஹிந்தி தெரியாதவர்கள்! ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட, வேண்டும் என்றே ஹிந்தியில் பேசிக் கொண்டு வந்து இருந்ததுதான் அவர்களது முறையீட்டிற்குக் காரணம்!

அதற்கு இராஜேந்திர பிரசாத் கூறினாராம்—-அவரவர் வரம்புகளுக்குள்—-அவரவர்

போக்கில்—-விவாதங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று!

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் நாட்டுக் கக்கன் ஒரு நாள் தமிழில் பேசினார். ஆனால், அவர் என்ன பேசினார் என்பதுதான் அவைக் குறிப்பில் இடம் பெற்றிட

முடியாமல் போயிற்று! ஏனென்றால், மொழி பெயர்ப்புக்கு என்று எந்த வசதியும் அங்கு செய்யப் பட்டு இருக்க வில்லை!

இப்படித்தான், தவம் என்பதையும் அவரவர் போக்கில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜெய மோகன் கருதுகிறாரோ, என்னவோ!

அப்படி என்றால், தவத்தைப் பற்றி இவர் பேசிட வேண்டிய அவசியம் என்ன ?

தெரியாததை எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதற்காகவா ?

‘உள்-உணர்வு ‘ என்பதனை உள்ளடக்கமாகக் கொண்டு இருப்பதுதான் தவம் என்று ஜெய மோகன் கூறுகிறார்! அப்படி என்றால், ‘உள்-உணர்வு ‘ என்றால் என்ன,

என்றாவது நமக்கு அவர் விளக்கிட வேண்டாமா ? குறைந்தது, ‘உணர்வு ‘க்கும்

‘உள்-உணர்வு ‘க்கும் இடையே உள்ள வேறுபாடுகளையாவது நமக்குச் சுட்டிக்

காட்டுவதற்கு அவர் முன் வந்திட வேண்டாமா ?

சரி, அது போகட்டும் என்று விட்டு விட்டு, தவம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு உரிய ஒரு சிறிய முயற்சியையாவது அவர் மேற்கொண்டு இருந்து இருக்கிறாரா என்று நாம்

பார்த்தால், அப்படி எந்த ஒரு முயற்சியும் அவரிடம் காணப் படவும் இல்லை.

ஏனென்றால், மாயங்களை அள்ளித் தெளித்துச் செல்வதுதான் தமக்கு என்று அவர் எடுத்துக் கொண்டு இருக்கின்ற சமுதாயப் பணி! ஆனால் அவரோ, அறிவின்

நிகழ்ப்பாட்டினைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார். நல்ல கூத்துதான் இது—ஒரு கேலிக் கூத்து!

இனி, ஜெய மோகனின் தருக்கத்திற்கு நாம் வருவோம்.

18-08-2004

தொடரும்

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்