மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

புதியமாதவி, @மெட்ரோ மும்பை


பாப்கார்ன் அமெரிக்காவிலிருந்து வந்தது என்று சொல்லிக்கொள்வதில்தான்
நமக்குப் பெருமை. அமெரிக்காவின் ஒரிஜினல் நாட்டுப்புறத்து மக்கள் அவர்களின்
சைட் டிஸ்ஸாக பயன்படுத்தியது தான் இந்தப் பாப்கார்ன். அமெரிக்கா ஐரோப்பிய நாகரிகக்கும்பலால்
கண்டுபிடிக்கப்பட்ட பின் (!!?) அவர்களுக்கு இந்தப் பாப்கானின் சுவை பிடித்துப் போய்,
அதை அப்படியே தங்கள் நொறுக்குத்தீனி பட்டியலில் முதலிடத்தில் வைத்துக் கொண்டாடினார்கள்.
வறண்ட பூமியிலும் விளையும் பாப்கார்ன் இப்படித்தான் நாகரிக நொறுக்குத்தீனியாகி
இன்றைக்கு உலக மயமாக்கலின் வெளிச்சத்தில் இருள் மின்னும் மால் அரங்கு
ஏ சி திரையரங்குகளில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.
நம் இந்திய மண்ணில் பொரிகடலை, வேர்க்கடலை, சுண்டல், பட்டாணி
வகையறா நொறுக்குத்தீனிகள் காணாமல் போய்விட்டன. பாப்கார்ன் சாப்பிடுவது தான்
நாகரிகத்தின் அடையாளமாகவும் மாநகரத்தின் அடையாளமாகவும் இருப்பதை
ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மாநகரத்து மக்காச்சோளம் மும்பை பங்குச் சந்தையில் வந்திருக்கிறது.
ஒரு பங்கின் மதிப்பு : ரூபாய் 100/
இதைப் பற்றி மெக்டெனல்டில் உட்கார்ந்து பிஃங்கர் சிப்ஸ், கோக், பர்கர் மூவரும்
பேச ஆரம்பித்தார்கள்.
அவர்களிடமிருந்து வாங்கிய ரேட்டிங் ரிபோர்ட்.

The Customer/User rating scale and performance report
—————————————————

Project: Metro Pop-Corn By K R MANI
accepted by : Annai Rajeshwari Pathipagam, Chennai.
one metro popcorn pocket contains 192 popcorns
cost : INR 100/
authorised dealers : Metro city malls.

K R Mani’s details:

skills: vast reading and good in communication

work experience :> 3 Translation works on management skills and Human Resources
> collection of poems – one book title: Metro pattaampOchikaL

Favourable topic : Metro, Metro, Metro…

Performance strength:

> Area of Strength : new style of writting , good swot analyst

> outstanding performance : Arora ,Nan kadavul & Gandhi My Father

Performance weekness:

> Area of weakness: half boiled statements.,& No Idealogy

>negative/unsatisfactory performance : junmping style sometimes missing the
important details

Rating scales: ( excellent 5, good 4, accepted 3, fair 2, poor 1)

Style: 5
topics : 4
debth of the tobics: 3
book pocket : 4

—————————

அவர்கள் கொடுத்த இந்த ரிபோர்ட்டைப் பற்றி அவர்களுடன் பேசி அக்கருத்துகளை
புரிகிறமாதிரி உங்களுக்காக தந்திருப்பவர் மும்பை மெட்ரோவிலிருந்து புதியமாதவி.

* மணி தன் கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் ஒரே மாதிரியான ஸ்டைலில்தான்
எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஒரு கட்டுரை சிறுபத்திரிகை ஒன்றில்
சிறுகதையாக வெளிவந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

* மணி ஒரு சிறந்த swot analyst என்பதில் சந்தேகமில்லை.
பங்குச் சந்தை குறித்தும் அரோரா தியோட்டர் குறித்தும் அவர் எழுதி இருக்கும்
எழுத்துகள் மிகவும் சுவையானவை. மெட்ரோ மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்.
அதனாலேயே மெட்ரோ மனிதர்களுக்கு அவர் எழுத்துகள் மீது ஈர்ப்பு ஏற்படுவது
இயற்கை. தனிமனித அனுபவங்களைப் பொதுஜன அனுபவமாகும் போது
அதைச் சரியாக பரிமாறத் தெரிந்த எழுத்து வாசகனுக்கு மிகவும் நெருக்கமாகிவிடும்.

* பிரபலங்களைப் பற்றி எழுதும்போது ஒரு பக்கத்தை எழுதினால் அதன் மறுபக்கம்
தானே திறக்கும். காந்திக்குப் பல முகங்கள் உண்டு. அந்த முகங்களை எவ்விதமான
விமர்சன வலைக்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் கொடுப்பது என்பது எழுத்தாளனுக்கு
இருக்கும் மிகப்பெரிய சவால்தான். அந்தச் சவாலை வென்றெடுக்க உரையாடல்
உத்தியை மிகவும் புத்திசாலித்தனத்துடன் கையாண்டிருக்கிறார்.

*மாநகர் சார்ந்த புதிய செய்திகளைச் சொல்லும் போது – IT MILAN -அதற்கான தேவை, சூழல்
குறித்து சக மனிதன் மீது கொண்ட அக்கறையுடன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
“25 வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் விட்டு மற்ற நிறுவனம் தாண்டுவதென்பது
நல்ல சிக்னலாகப் பட்டதில்லை. இப்போது நிறுவனம் மாறிக்கொண்டிருப்பது மட்டுமே
தனிமனித வளர்சியின் அளவுகோலாகப் பார்க்கத்தொடங்கும் விழுமியங்கள்” (பக் 86)என்று
எழுதியிருப்பது மாறி வரும் மனித விழுமியங்கள் குறித்த வாசகனை சிந்திக்கத்
தூண்டும் வரிகள்.

*மெட்ரோ பாப்கார்ன் மும்பை இலக்கிய அமைப்புகளையும் தமிழ்ச்சங்கங்களையும்
விமர்சித்து இருப்பது நாஞ்சில் நாடன் மும்பை தமிழ்ச்சங்கங்கள் குறித்து விமர்சனம்
செய்திருப்பதை நினைவூட்டுகிறது. அரைநூற்றாண்டுகள் ஆகியும் மும்பை
தமிழ்ச்சங்கங்கள் மாறாமல் இருப்பது மும்பை எழுத்தாளர்களுக்குச் சாபக்கேடு.

*கருத்துகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிச் செல்லும் போது சில வெந்தும் வேகாமலும்.
அண்ணாவப் பற்றிய அவருடைய விமர்சனங்கள் ஒரு கார்பரேட் நிறுவனப் பார்வையில்
சந்தை நுகர்பொருள் கலாச்சாரப் பின்னணியில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவுடன் அண்ணாவை ஒப்புமைப் படுத்துவதைக் குறிப்பிடலாம்.
அதே கட்டுரையில் (பக்126) அண்ணாவின் பலவீனமாக கட்டுரையாளர் ,
“இரண்டாவது கட்டத் தலைவர்களைச் சரியாக முன்னிறுத்தாதது, நுணுக்கிப் பார்க்கையில்
தியாகமும் அறிவும் பெரும்பான்மை மக்கள் வசீகரமும் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள்
இல்லாதது மற்றும் வளர்வதற்கான சூழல் அமையாதது பலவீனத்தின் முக்கிய திரிகள்”
என்கிறார். வரிக்கு வரி இந்த எழுத்துகள் கட்டுரையாளரின் அண்ணா பற்றிய செய்திகளையும்
திராவிட அரசியலில் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்து முன்நிறுத்திய
அண்ணாவின் அரசியலை அறிந்து கொள்ளாத பலவீனத்தையுமே பதிவு செய்திருக்கிறது.
அண்ணா ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவரல்ல. முழுக்கவும் தவறானக்
கருத்தை எவ்வித ஆதாரமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.
அண்ணாவை அவர் அரசியலை விமர்சிப்பவர்கள் கூட கட்டுரையாளரின் இக்கருத்தை
மறுப்பார்கள்.

*உலக மயமாக்கவோ தேசிய மயமாக்கவோ இயலாதவாறு வளர்ச்சியின் சொத்தாக
அமைந்த அதீத இன உணர்ச்சியே சிலுவையாக மாறிய யாதார்த்தம் ” அண்ணாவைப்
பற்றிய கருத்தாக இதுவும். இன உணர்வு தேசிய மயமாக்கலுக்கு சிலுவையானது
என்றால் சரி , அண்ணா ஒன்றும் தேசியவாதியல்ல. ஆனால் அண்ணாவின்
இருமொழிக் கொள்கையும் ஆங்கில வழிக்கல்வியும் தான் இன்றைக்கு ஆயிரக்கணக்கான
மணிகள் அமெரிக்க மென்பொருள் துறையில் ராஜாங்க நடத்தக் காரணமாக இருந்தது
என்றும் குறிப்பாக தமிழர்கள் இடம் பெற காரணமாக இருந்ததையும் அரைநூற்றாண்டுக்குப்
பின் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளேடுகளும் அறிவுஜீவிகளும்
காரணம் கண்டுபிடித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உலக மயமாக்கலை
தமிழர்கள் ரொம்பவும் எளிதாக உள்வாங்கிக்கொள்ள இதுவும் காரணமானதால் தான்
தமிழ்த்தேசியம் அண்ணாவை விமர்சிக்கிறது. கட்டுரையாளரின் கார்ப்பரேட் கண்ணாடி
இதை எல்லாம் பார்க்காதோ என்னவோ!

* கங்காருவைப் போல துள்ளும் நடை. ஜம்பிங் ஸ்டைல். பலநேரங்களில் இந்த
ஸ்டைல் பெரும் குழப்பத்தில் தான் போய் முடிகிறது.
குறிப்பாக கிங்பிஃஷ்ர் விமானம் ஏர்டெக்கானை வாங்கியது குறித்த இவர் விமர்சனங்கள்.(பக்33)
இருக்கட்டும் மல்லையாவை இவருக்குப் பிடிக்காமல் போனதற்கு எத்தனையோ காரணங்கள்
இருந்துவிட்டுப் போகட்டும். கேப்டன் கோபிநாத்தின் கனவு , உழைப்பு எவ்வளவு தூரம்
மதிக்கப்படும் என்று கட்டுரையாளர் ரொம்பவும் கரிசனப்படுவதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்!

நடந்தது என்ன? கட்டுரையாளர் அதை விட்டுவிட்டு ஜம்ப் அடித்திருக்கிறார்.
குறைந்த விலையில் ஏர்டெக்கான் பயணச்சீட்டுகள் பார்மூலாவில் கோபிநாத்துக்கு தோல்வி!
ரியான் ஏர், ஈஸ்ட் ஜெட், வெர்ஜின் புளு என்று இந்தப் பார்மூலாவைப்
பிறநாடுகளில் கையாண்டு அதீத லாபம் ஈட்டியதை இந்தியாவில் சில
காரணங்களுக்காக செய்யமுடியவில்லை. விளைவு 419 கோடி நஷ்டம் 30/6/2007ல்.
கிங்பிஃஷருக்கும் 31/3/2007ல் 577 கோடி நஷ்டம்தாம். ஆனாலும் கிங்பிஃஷர்
ஏர்டெக்கானை எடுத்துக் கொள்ள முன்வந்தது. கொடுத்து வாங்கற பிசினஸ் தான்.
இன்னும் கார்ப்பர்ட் பாஷையில் சொல்லப்போனால் “it is WIN WIN policy”
கிங்ஃபிஷருக்கு இந்தியா வான எல்லைகளைத் தாண்டி அமெரிக்காவில் தரை
இறங்க வேண்டும். அதற்கு 5 வருட இந்திய வான்பயண அனுபவம் வேண்டும்.
கிங்ஃபிஷருக்கு 3 வருடங்கள் தான் ஆகி இருந்தது!
ஏர்டெக்கானோ மூழ்கிவிடும் கடனில். கோபிநாத் தோல்வியை வெற்றியாக்க
இதை விட நல்ல திட்டம் இருந்திருக்கவே முடியாது.

ஐடியாலாஜிக் குழப்பங்கள் கட்டுரைகளின் மூலை முடுக்கெல்லாம்!
ஏர்டெக்கும் கிங்ஃபிஷரும் இணைந்ததை கவலையுடன் பார்க்கும்
கார்ப்பரேட் கண்ணாடிகள் அதே கட்டுரையில் அடுத்தப் பக்கத்தில் (பக்34)
“ரான்பக்ஸீ நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்கப்பட்டபோது
என் சுதேசி மனம் கொஞ்சம் பயந்துதான் போனது. இதற்கு இந்திய நிறுவனங்களே
ஒன்றிணைந்து பெரிய நிறுவனமாய் உருமாறி உள்ளே வருகிற வெளிநாட்டு
நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கலாமே. ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலும்
அத்தகைய மெர்ஜர்களே நடக்கின்றன” என்று சொல்வது எத்தனைக்கருத்து முரண்!

*இப்படித்தான் கட்டுரை “வறுமையின் நிறம் சிவப்பல்ல செழுமை” என்ற தலைப்பும்.
வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்லும் போது சிவப்பு வர்ணம் அல்ல.
அது ஒரு குறியீடு. ஒரு வரலாறு. ஒரு கலகக்குரல். அப்புறம் சிவப்பல்ல, செழுமையாம்!
வறுமை யாருக்குச் செழுமை?

*மோதிக்கு சொல்லும் அறிவுரையாக “நல்ல முகமதியரையோ நல்ல கிறிஸ்தவரையோ
உங்கள் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து மாநிலத்து முக்கிய பதவியில் அமர்த்துங்கள்.
இந்துக்களின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை நிறுவ நல்ல வாய்ப்பாக அமையும்”
என்று மேலோட்டமாக சொல்லியிருப்பதும்

* எழுத்தாளர் சுஜாதாவை விமர்சிக்கும் போது சுஜாதாவின் சினிமா வசனம் ஏனோ சிலாகித்து
பேசப்படாமலே போயிற்று” என்று அங்காலாய்ப்பவருக்கு சுஜாதா சினிமா வசனம் எழுதியது
பணம் சம்பாதிக்கும் தொழில் என்பது வசதியாக மறந்துவிடுகிறது. சிவாஜி படமும்
வேண்டுமென்றே சங்க இலக்கியத்திலிருந்து பாரிமகளிர் பெயரான அங்கவை,
சங்கவையை இழுத்ததும் மிஸ்ஸாகிவிடுகிறது. ஆனால் “freedom of expresssion ?
யாருக்கு? … சுஜாதா தாக்குதலைக் கொஞ்சம் வேகமாக எதிர்கொண்டிருக்கலாம். இதுபோலத்தான்
அறிவுமதி அள்ளித் தெளித்த சாக்கடைகளும்” என்று சொல்லும் போது கட்டுரையாளரின்
Freedom of expression, யாருக்கு? என்று வாசகனுக்கும் ஒரு தெளிவு பிறந்துவிடுகிறது!!

பக்கத்திற்கு பக்கம் விமர்சன அலைகளை எழுப்பி இருப்பதன் மூலம்
வாசகனை அடுத்தக் கட்ட வாசிப்புக்கு இழுத்துச்செல்வதில் மெட்ரோ பாப்கார்ன்
சுட சுட அழகான குடுவையில் காரம் உப்பு சேர்த்து பரிமாறப்பட்டிருக்கிறது.
ஏ சி தியேட்டரில் திரைப்படம் பார்க்கும் போது நொறுக்குத்தீனியாக
மெட்ரோ வாசகர்கள் வாசிக்கும் வரை வாசித்துவிட்டு மீதி இருப்பதை
அப்படியே வைத்துவிட்டு போகலாம்.
பாப்கார்ன் நொறுக்குத்தீனி தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
நொறுக்குத் தீனிகள் எப்போதும் உணவாக முடியாது. கூடாது.
இதன் நுகர்வோர் சந்தை : மெட்ரோ வாசகர்கள்.

மெட்ரோ நுகர்வோர் சந்தை மெட்ரோ கார்ப்பரேட் கண்ணாடிகளிடமிருந்து
இன்னும் நிறையவும் நிறைவாகவும் எதிர்ப்பார்க்கலாம்.

———————-

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை