மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

மொழியாக்கம்: ஜடாயு


விண்மீன்கள் தெறித்து விழும்
மேகங்களை மேகங்கள் மூடும்
சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும்
வீரியம் ததும்பி வழியும் காரிருள்

சில நொடி முன் சிறை தகர்த்து
பித்துப் பிடித்தலையும் லட்சலட்சம் ஆன்மாக்கள்
பெருமரங்களை வேரோடு பிடுங்கி எறியும்
வழியில் தெரிபவை எல்லாம் வாரித்துடைத்தெறியும்

மலை மலையாய் அலையெறிந்து
ஆர்ப்பரிக்கும் வானம் தொடத் துடிக்கும்
ஆழ்கடலும் இந்த ஆட்டத்தில்.
திசையெங்கும் செந்தீ உமிழும் மின்னல்கள்.
சந்தோஷக் கூத்தாடும் சாவின் ஆயிரம் ஆயிரம் கருநிழல்கள்
நோய்களையும் துயரங்களையும் இறைத்து விளையாடும்

வருக தாயே வருக
பயங்கரி உன் பெயர்
உன் மூச்சுக்காற்றில் மரணத்தின் சுவாசம்
அண்டங்கள் நொறுங்கும் உன் ஒவ்வொரு அசைவிலும்
காண்பவை அத்தனையும் கபளீகரம் செய்யும் காலம் உன் காலடி
வருக தாயே வருக

நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.

** மூலக் கவிதையை இந்த இணைய தளத்திலும் படிக்கலாம் –
http://www.marubai.org/swami_poem.htm

Series Navigation