முள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

குழந்தைகள் எல்லோரும் வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். உள்ளே இருந்து ஏறத்தாழ என் வயதில் இருக்கும் பெண் ஒருத்தி வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே தும்பைப்பூ போல் நரைத்துப் போன தலையுடன், ஒல்லியாக, சற்று உயரமாக இருந்த ஒரு அம்மாள் வெளியே வந்தாள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலில் வந்தவள் வண்டியின் அருகில் வந்து “இறங்கு” என்றாள் முறுவலுடன்.
“நீ ராஜீ தானே?” என்றேன். ராஜிக்கு வலது கன்னத்தில் மச்சம் இருப்பதாக அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
ராஜேஸ்வரியின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தன. ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள். வண்டியிலிருந்து கீழே குதிக்கப் போனவள் அப்படியே நின்று விட்டேன். நான் சின்னவளாக இருந்த போது எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமி ஒருத்தி ஏணியில் ஏறி பூக்களைப் பறிக்கப் போனாள். ஏணி சாய்ந்து விட்டதில் உயரத்திலிருந்து கீழே விழுந்து நொண்டியாகிவிட்டாள். அந்தக் காட்சியைப் பார்த்தது முதல் எனக்கு சுவரின் மீது ஏறுவதோ, உயரத்திலிருந்து கீழே குதிப்பது என்றாலோ பயம் அதிகம். அதோடு என் மனம் எந்த விஷயத்திலும் முதலில் கெடுதலைத்தான் நினைக்கும்.
ராஜேஸ்வரி என் மனதைப் புரிந்து கொண்டவள் போல் தம்பியை அழைத்து “மதூ! உள்ளே போய் நாற்காலியைக் கொண்டு வா” என்றாள். மது உள்ளே ஓடிப்போய் நாற்காலியைக் கொண்டு வந்து என் முன்னால் வைத்தான். நான் மெதுவாக காலை நாற்காலியின் மீது வைத்துக் கீழே இறங்கினேன். ராஜேஸ்வரி எனக்கு சப்போர்ட் கொடுப்பது போல் என் தோளை பலமாக பற்றிக் கொண்டாள். அன்பு நிறைந்த அந்தத் தொடுகை என் மனதை புல்லரிக்கச் செய்தது. எதிரே அத்தையும் மற்ற குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. எல்லோர் முகத்திலும் சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது.
“உள்ளே வாம்மா.” அத்தை உள்ளே வழி நடந்தாள். எல்லோரும் உள்ளே போனோம். சாமிகண்ணு என்னுடைய பெட்டி படுக்கையை உள்ளே கொண்டு வந்து வைத்தான்.
“உங்க அய்யாவிடம் என்னுடைய தாங்க்ஸ் சொல்லிவிடு” என்றேன்.
அத்தையும் ராஜேஸ்வரியும் நான் ஏதோ புரியாத பாஷையில் பேசியதுபோல் பார்த்தார்கள். சாமிகண்ணு நான் சொன்னதை காதில் வாங்கினாற் போலவே தெரியவில்லை. பின்னால் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய் விட்டான்.
ஹால் நடுவில் புதியதாக பின்னபட்ட நாடா கட்டில் மீது அமர்ந்து கொண்டேன்.
“அம்மா, அப்பா சௌக்கியமாக இருக்காங்களா?” வாசற்படி அருகில் தரையில் அமர்ந்துகொண்டே அத்தை கேட்டாள்.
“நல்லா இருக்காங்க. அப்பா உங்களை ரொம்பவும் விசாரித்ததாக சொல்லச் சொன்னார். தானும் கூட வந்திருப்பார். ஆனால் அர்ஜெண்ட் கேஸ் ஒன்று வந்து விட்டதால் அவரால் வர முடியாமல் போய்விட்டது.”
அத்தை பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகத்தில் வருத்தம் கலந்த வேதனை நிழலாக படர்ந்தது என் பார்வையிலிருந்து தப்பவில்லை. ராஜேஸ்வரி எழுந்து உள்ளே போனாள்.
பஸ்ஸை விட்டு இறங்கியதும் வண்டி எதுவும் கிடைக்காமல் நான் கலவரமடைந்ததைப் பற்றி அத்தையிடம் சொன்னேன்.
“அதென்ன? பிள்ளையாண்டான் உன் கண்ணில் படவில்லையா?” வியப்புடன் கேட்டாள் அத்தை.
“பிள்ளையாண்டானா? யார் அது?” அதே அளவு வியப்புடன் கேட்டேன்.
“வேறு யாரு? இந்த வீட்டுக்கு மூத்த மகன்.”
அத்தையிடம் மேற்கொண்டு விவரங்களை கேட்கும் முன்பே கறுப்பாக, குள்ளமாக, குண்டு பூசணியைப் போல் பருமனாக இருந்த ஒரு அம்மாள் விடுவிடு என்று உள்ளே வந்துகொண்டே “என்னடீ கமலா! ஆனந்தனின் மகள் வந்திருக்கிறாளாமே?” என்று கேட்டாள்.
“ஆமாம். இவள்தான்” என்று அத்தை என்னை சுட்டிக் காட்டினாள்.
அந்த அம்மாள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். நானும் பார்த்தேன். அந்த அம்மாளின் கண்களுக்கு நான் எப்படி தென்பட்டேனோ தெரியாது. எனக்கு மட்டும் அவளைப் பார்க்கும் போது இந்த பூமியே தாங்க முடியாத அளவுக்குப் பருமனாக இருப்பதுபோல் தோன்றியது. முகம் முழுவதுமாக உப்பிய நிலையில், கண்கள் மட்டும் கோடுகள் போல் தென்பட்டன. செதுக்கியது போல் பலமாக இருந்த மூக்கு. அந்த அம்மாளுக்கு அழகான பல்வரிசை இருப்பதை, அவை இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை அந்த அம்மாள் சிரிக்கும் போது உணர முடிந்தது. சுமார் ஐம்பது வயது இருக்கக் கூடும்.
என்னை பரிசீலிப்பதை முடித்த பிறகு அந்த அம்மாள் அத்தையின் பக்கம் திரும்பி “டீ கமலா! இந்தப் பெண்ணிடம் உன் சாயல் நிறைய இருக்கு” என்றாள்.
அத்தையின் கண்களில் ஒரு நிமிடம் பெருமிதம் வெளிப்பட்டது. நான் எங்க அப்பாவின் ஜாடை. அத்தைக்கும் அப்பாவுக்கும் சாயல் இருப்பதை அத்தையைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன்.
அந்த அம்மாள் என் பக்கம் திரும்பினாள். “இந்தாடீ பெண்ணே! நான் யார் தெரியுமா? மங்கம்மா என் பெயர். நானும் உங்க அப்பாவும் சின்ன வயதில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். ஏதோ மயிரிழையில் தப்பி விட்டதே தவிர உங்க அப்பா என்னைத்தான் கல்யாணம் கட்டியிருக்க வேண்டியது” என்றாள்.
பானையைத் தூக்கிப் போட்டு உடைப்பது போல் அந்த அம்மாள் பேசிய பேச்சு என்னை திகைப்பில் ஆழ்த்தியது. கடவுளே! இந்த அம்மாள் அப்பாவுக்கு மனைவியாக இருந்திருக்க வேண்டியவளா? அதாவது என்னுடைய தாயின் ஸ்தானத்தில். வேண்டாம் சாமீ! இந்த அம்மாளை தாயாக சகித்துக் கொள்வதைவி அந்தக் கொடுமைக்காரிக்கு மகளாக இருப்பதே மேல்.
அந்த அம்மாள் மறுபடியும் “உங்க அப்பா என்னைப் பற்றி எப்போதாவது வீட்டில் சொல்லியிருக்கிறானா? அவன்தான் பெரிய பணக்காரன் ஆகிவிட்டானே. இப்போ எங்களுடைய நினைப்பு இருக்குமா என்ன?” நீட்டி முழக்கிக் கொண்டே சொன்னாள்.
இந்த அம்மாள் நேராக எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் “நான்தான் மங்கம்மா. ஆனந்தனின் பால்ய சிநேகிதி” என்று அறிமுகப்படுத்துக் கொண்டால் அம்மாவின் முகம் எப்படி மாறுமோ கற்பனை செய்து பார்த்தபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ராஜீ! சித்தியும் வந்திருக்கிறாள். இன்னொரு டம்ளர் காபியும் சேர்த்து எடுத்து வாம்மா.” அத்தை குரல் கொடுத்தாள்.
மங்கம்மா அத்தையின் பக்கத்தில் தரையில் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள். ராஜேஸ்வரி இரண்டு பெரிய டம்ளர்களில் காபி எடுத்து வந்தாள். ஒன்றை அந்த அம்மாளிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை என்னிடம் நீட்டினாள். அரையடி நீளமுள்ள டம்ளரில் வழிய வழிய இருந்த காபியைப் பார்த்துவிட்டு “இவ்வளவு வேண்டாம். என்னால் குடிக்க முடியாது” என்றேன்.
“கொஞ்சம்தானே” என்றாள் ராஜேஸ்வரி.
“ஊஹ¤ம். என்னால் முடியாது.”
“குடிடீ பெண்ணே. பரவாயில்லை.” மங்கம்மா காபியை குடித்துக் கொண்டே ஆணையிடுவதுபோல் சொன்னாள்.
ராஜேஸ்வரி என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ, உள்ளே போய் பாதியாகக் குறைத்துவிட்டு, கொண்டு வந்துக் கொடுத்தாள்.
இரண்டே நிமிடங்களில் பெரிய பித்தளை டம்ளர் நிறைய இருந்த காபியை கடகடவென்று குடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்துவிட்ட மங்கம்மாவை வியப்புடன் பார்த்தேன். ஒன்று மட்டும் உண்மை. இவர்கள் ஒரே தடவையில் குடித்து விடுவார்கள். பட்டணவாசிகள் நாலைந்து தடவையாகக் குடிப்பார்கள். அதுதான் வித்தியாசம்.
கடைக்குட்டி மணி தாயின் அருகில் சென்று காதில் ஏதோ ரகசியம் சொல்லிக் கொண்டிருந்தாள். வந்தது முதல் அவள் பார்வை என் மீதே இருந்தது.
“எனக்குத் தெரியாது மணீ! நாளைக்குப் பரீட்சை இருப்பதாக சொல்லியிருக்கிறாய். இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகவில்லை என்றால் அண்ணன் கோபித்துக் கொள்வான்.” அத்தை சொன்னாள்.
“அண்ணாவிடம் நீ சொல்லும்மா.” மணி செல்லம் கொஞ்சினாள்.
விஷயத்தைப் புரிந்து கொண்டவள்போல் “இந்த வேளை யாரும் ஸ்கூலுக்குப் போக வேண்டாம். எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம்” என்றேன்.
குழந்தைகளின் முகங்கள் மலர்ந்தன.
“உங்க எல்லோருக்கும் பரிசுகளைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் திறந்து அப்பா வாங்கி அனுப்பியவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கொடுத்தேன்.
“இப்போ இதெல்லாம் எதுக்கும்மா?” என்றாள் அத்தை.
“எனக்கென்ன தெரியும்? அவங்க மாமா அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றேன் முறுவலுடன்.
ரெடிமேட் கவுனை வைத்துக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த மணி என் அருகில் வந்து திடீரென்று கேட்டாள். “பின்னே எங்க பெரிய அண்ணாவுக்கு என்ன வாங்கி வந்தாய்?”
“பெரிய அண்ணாவா?” திகைத்துப் போனவளாகப் பார்த்தேன்.
“ஷ்… சும்மாயிரு.” அத்தை மணியை அதட்டினாள்.
மங்கம்மா ராஜேஸ்வரிக்காக கொண்டு வந்த முத்துமாலையின் தரத்தை, மதிப்பைப் பரிசீலித்துக் கொண்டிருந்தாள்.
“குளியலறையில் வெந்நீர் எடுத்து வைத்திருக்கிறேன். குளித்துவிட்டு வருகிறாயா?” என்றாள் ராஜேஸ்வரி.
மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினேன். அப்பா சொன்னது போல் கூரையில்லாத குளியல் அறை. உள்ளே சிமெண்ட் பூச்சுடன் சுத்தமாக இருந்தது. வலது பக்கம் பெரிய சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்தது. ஒரு பக்கம் வாளியில் வெந்நீரும், உயரமான பலகை, சோப்பும், டவலும் இருந்தன. குளியல் அறைக்குக் கதவு இருக்கவில்லை.
“யாராவது வந்து விட்டால்?” என்றேன் மிரட்சியுடன்.
“யார் வரப் போகிறார்கள்?”
உண்மைதானே. இந்த வீட்டில் ஆண்களே இல்லையே. சட்டென்று நினைவுக்கு வந்தது. “ராஜீ! உங்க அம்மா மூத்த மகன் என்று சொன்னாள். அண்ணாவுக்கு என்ன வாங்கி வந்தாய் என்று மணி கேட்டாள். உனக்கு அண்ணன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.
ராஜேஸ்வரி வியப்புடன் பார்த்தாள். “எங்களுக்கு அண்ணன் இருப்பது உனக்குத் தெரியவே தெரியாதா?
இல்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்தேன். “ஊஹ¤ம். அப்பா உங்க வீட்டு விஷயங்களைப் பற்றிச் சொல்லும் போது குழந்தைகளில் நீதான் பெரியவள் என்று சொல்லியிருக்கிறார்.”
“அதுவா! அம்மாவுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்தான் மூத்தவள். ஆனால் அண்ணன் எங்க அப்பாவோட முதல் தாரத்தின் மகன். ஆனால் எங்களுக்கு அந்த விஷயம் எப்போதும் நினைவில் இருக்காது.”
அதற்குள் அத்தை “ராஜீ!” என்று குரல் கொடுத்ததும் “வந்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே ராஜேஸ்வரி போய் விட்டாள்.
குளியலறையில் நான் தனியாக ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டேன். வாளியில் இருந்த நீர் சூடாக இருந்தது. தலைக்கு மேல் வெயில் சுள்ளென்று தகித்தது. பயணத்தினால் ஏற்பட்ட அலைச்சலில் உடம்பு கசகசவென்று இருந்தது. எதிரே சிமெண்ட் தொட்டியில் சில்லென்று இருந்த தண்ணீர் என்னை வரவேற்பது போல் தோன்றியது. கூந்தலை உயரே தூக்கி முடிச்சுப் போட்டுக் கொண்டு, மாற்று உடைகளை சுவற்றின் மீது வைத்து விட்டு மெதுவாக தொட்டிக்குள் இறங்கினேன்.
பத்து நிமிடங்கள் கழித்து, “அண்ணீ! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” வெளியிலிருந்து ராஜேஸ்வரியின் குரல் கேட்டது.
“குளித்துக் கொண்டிருக்கிறேன்.” பதில் குரல் கொடுத்தேன்.
“குளித்துக் கொண்டிருக்கிறாயா? பத்து நிமிடங்களாக இங்கேயே நிற்கிறேன். ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றிக் கொண்ட சத்தமே வரவில்லை. நான் உள்ளே வரட்டுமா?”
“வேண்டாம்… வேண்டாம்.”
“முதுகு தேய்த்து விடட்டுமா?”
“ஊஹ¤ம், வேண்டாம். என்மீது ஆணை. உள்ளே வராதே.” பதற்றத்துடன் கத்தினேன்.
“வரமாட்டேன். பயப்படாதே.” ராஜேஸ்வரி சிரித்துக் கொண்டே அங்கிருந்து போன சத்தம் கேட்டது.
குளிர்ந்த நீரில் குளித்ததும் களைப்பு நீங்கியதோடு இதமாகவும் இருந்தது. புடவையும், பிளவுசும் அணிந்துகொண்டிருந்த போது ராஜேஸ்வரி குரல் கொடுத்தாள்.
“இப்போ உள்ளே வரலாமா?”
“வாயேன்.”
உள்ளே வந்த ராஜேஸ்வரி சோப்பு நுரையுடன் இருந்த தொட்டியை, என்னை மாறி மாறி பார்த்தாள்.
“என்ன நடந்தது? ஏன் அப்படி பார்க்கிறாய்?” என்றேன்.
“அது வந்து…. புழங்குவதற்காக நிரப்பி வைத்திருந்த தண்ணீர் அது. பரவாயில்லை. நான் மறுபடியும் இரைத்து நிரப்பி விடுகிறேன்” என்றாள்.
சோப்பு தண்ணீரை வெளியேற்றி விட்டு தொட்டியை சுத்தம் செய்து, கையோடு கிணற்றிலிருந்து நீர் இரைத்து ராஜேஸ்வரி நிரப்பினாள். என் முட்டாள்தனத்தை நினைத்து என்மீதே எனக்கு கோபம் வந்தது. தண்ணீர் குடம் தூக்குவதில் நானும் உதவி செய்வதாக சொன்னபோது அத்தையும், ராஜேஸ்வரியும் கூடவே கூடாது என்று தடுத்து விட்டார்கள். இங்கே இருக்கப் போகும் நாட்களில் இதுபோல் முட்டாள்தனமாக நடந்துகொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.

(தொடரும்)

Series Navigation